கண்டனம் : விஜயபாரதமே…

ஜனவரி 01-15 2020

திமிர் யாருக்கு?

கார்த்திகைத் தீபத் திருவிழாவை “சனியன்’’ என்று கூறி, கோடிக்கணக்கான மக்களைப் புண்படுத்திவிட்டார்கள் தி.க.வினர் என்று கொதிக்கிறார் “விஜயபாரதம்’’ இதழின் ஆசிரியர் வீரபாகு! பாகு அல்லவா? அதுதான் கொதிக்கிறது போலும்!

பெரியார் கற்பனையாக எதையாவது சொல்லி விட்டாரா? உங்கள் புராணங்களில் எழுதி வைத்துள்ளதை எடுத்துக்காட்டி மக்களைச் சிந்திக்கும்படி கேட்டுக் கொள்கிறார்.

“நாட்டுச் செல்வத்திற்குச் ‘சனியன்’ பிடிப்பது வழக்கமாகவும், அவ்வழக்கம் தெய்வீகம் என்று சொல்லப்படுவதாகவும் மதத்தின் முக்கிய பகுதி என்று சொல்லப்படுவதாகவும் இருந்து வருகிறது. இப்பொழுது வரும் கேடான பண்டிகை கார்த்திகைத் தீபம் என்பது தான்.

வீடுகளுக்குள்ளும், வெளிப்புறங்களிலும், காடுகளிலும். மேடுகளிலும், குப்பைகளிலும், குளங்களிலும், எண்ணற்ற 100, 1000, 10000, 100000கணக்கான விளக்குகளைக் கொளுத்தி வைப்பதன் மூலம் செலவாகும் நெய், எண்ணெய்ச் செலவு எவ்வளவு! கோயில்கள் என்பவைகளுக்குச் சொக்கப்பனை கட்டி நெருப்பு வைப்பதற்காகச் செலவு செய்யும் நெய், எண்ணெய், விறகு முதலியவைகளுக்காகும் செலவு எவ்வளவு! கார்த்திகைப் பண்டிகைக்காக திருவண்ணாமலை முதலிய ஊர்களுக்குப் பயணஞ் செய்வதன் மூலமாகும் ரொக்கப் பணச் செலவு எவ்வளவு! அங்கு கூம்புக்கு (சொக்கப்பானை) செலவாகும் விறகு, கற்பூரம், வெண்ணெய், நெய் ஆகியவற்றுக்காகும் செலவு எவ்வளவு? இவ்வாறு பல வகையில் செலவு செய்யப்படும் கோடிக்கணக்கான பணத்தால் நமது நாட்டிற்குக் கடுகளவாவது பயனுண்டா என்று  ஆலோசித்துப் பாருங்கள்.

இன்னும் இப்பண்டிகையினால் மக்களுக்குண்டாகும் மூடநம்பிக்கையையும், அதனால் உண்டாகும் மூடப்பழக்க வழக் கங்களையும் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்! கார்த்திகையைப் பற்றி வழங்கும் புராணக்கதை இரண்டு. அவற்றுள் ஒன்று:-

ஒரு சமயம் அக்னி தேவன் (நெருப்பு) என்னும் கடவுள் சப்தரிஷிகளின் மனைவிமார்களைப் பார்த்து மோகங் கொண்டானாம். அதை அறிந்து  அவன் மனைவி சுவாகாதேவி என்பவள் அந்த ரிஷிகளின் மனைவிகளைத் தொந்தரவு செய்தால் அவர்களால் தன் கணவன் சபிக்கப்படுவான் என்று  என்று எண்ணினாளாம். அதனால் அவள் வசிஷ்டரின் மனைவியாகிய அருந்ததி உருவத்தை மாத்திரம் விட்டு விட்டு, மற்ற ஆறு ரிஷிகளின் மனைவிமார்களைப் போல் உருவங்கொண்டு தன் கணவன் ஆசையை நிறைவேற்றினாளாம்.  இவ்வாறு சுவாகாதேவி கொண்ட ஆறு உருவத்திற்கும் கார்த்திகை என்று பெயராம்.  இவைதான் கார்த்திகை நட்சத்திரங்களாகக் காணப்படுவதாம். இந்த நட்சத்திரப் பெண்கள் தான் சுப்பிரமணியன் என்னுஞ்சாமி குழந்தையாக இருக்கும்போது அதையெடுத்து வளர்த்தார்களாம்! என்பது ஒருகதை.

இக்கதையால்தான் கார்த்திகை நட்சத்திரத்திற்குப் பெருமை. இக்கதை நமது மக்களுக்குக் கற்பிக்கும் மூடநம்பிக்கையைப் பாருங்கள்; பிறர் மனைவி மேல் ஆசைப்பட்டு விபசாரம் பண்ணுவது குற்றம் என்பது ஒன்று; மனைவி தன் கணவன் எந்தத் தகாத காரியத்தை விரும்பினாலும் அதை எப்பாடு பட்டாவது பூர்த்தி செய்து கொடுக்கும் அடிமைக் கருவியாக இருக்க வேண்டுமென்பது மற்றொன்று.’’ 

“கார்த்திகையைப் பற்றிய இரண்டாவது கதையாவது:- ஒரு காலத்தில் பிரம்மா என்னும் கடவுளும், விஷ்ணு என்னும் கடவுளும் தாம் தாமே ஆதி மூலக்கடவுளர் என்று கூறிக்கொண்டதனால் இருவருக்கும் முதலில் வாய்ச் சண்டை உண்டாகி, பிறகு அது கைச்சண்டையாக மூண்டு ஒருவரோடு ஒருவர் அடிபிடி சண்டை செய்தனராம். அவர்களுடைய சண்டை சீக்கிரத்தில் ஒரு முடிவுக்கும் வரவில்லையாம். ஆகையால் அப்பொழுது பரமசிவன் என்னும் கடவுள் அவர்கள் மத்தியில் ஒரு பெரிய ஜோதி உருவத்தோடு, வானத்திற்கும் பூமிக்குமாக நின்றாராம். உடனே சண்டைக்காரக் கடவுள்கள் இருவரும் ஒன்றும் தெரியாமல் திகைத்து நின்றார்களாம், அப்பொழுது ஜோதி உருவாக நின்ற பரமசிவக் கடவுள், “ஏ, பிரம்ம விஷ்ணுகளே! இந்த ஜோதியின் அடி முடிகளை யார் முதலில் கண்டு வருகிறாரோ அவர்தான் உயர்ந்தவர்’’ என்று ஒரு அனாமதேய (அசரீரீ) வார்த்தை சொன்னாராம். உடனே விஷ்ணு பன்றி உருவம்கொண்டு அடியைக் காண பூமியைத் துளைத்துக் கொண்டு வெகுதூரம் சென்றும் காணமுடியாமல் திரும்பி வந்து விட்டாராம்.  பிரம்மன் அன்னப்பறவை உருவம் கொண்டு ஜோதியின் முடியைக் காணப் பறந்து மேலே செல்லும் போது வழியில் ஒரு தாழம்பூ வந்துகொண்டிருந்ததாம். அதைக் கண்டு பிரம்மன், “தாழம்பூவே, எங்கேயிருந்து எவ்வளவு காலமாக  வந்து கொண்டிருக்கிறாய்?’’ என்று கேட்க; அது, “நான் பரமசிவனுடைய முடியிலிருந்து கோடிக்கணக்கான வருஷங்களாக வந்து கொண்டிருக்கிறேன்’’ என்று சொல்லிற்றாம். உடனே பிரம்மன், “நான் சிவனுடைய முடியைப்பார்த்து விட்டதாக சிவனிடத்தில் எனக்காக சாட்சி சொல்லுகிறாயா?’’ என்று கேட்க, அதுவும் சம்மதிக்க, இருவரும், பரமசிவனிடம் வந்து முடியைக் கண்டு வந்ததாகப் பிரம்மன் கூற, தாழம்பூவும் அதை ஆமோதித்ததாம். அதுகண்ட சிவன் கோபங்கொண்டு, இருவரும் பொய் சொன்னதற்காக, பிரம்மனுக்கு இவ்வுலகில் கோயில் இல்லாமற் போகக் கடவது என்றும், தாழம்பூ இனிமேல் தனக்கு உதவாமல் போகக்கடவது என்றும் சாபம் கொடுத்தாராம். பிறகு பிரம்மாவும் விஷ்ணுவும் தங்கள் கர்வம் ஒழிந்து பரமசிவனே பெரியவர் என்று எண்ணி இருவரும் அவரை வணங்கி, எங்கள் வழக்கைத் தீர்த்து வைத்ததற்கு அடையாளமாக இந்த மலையின் மேல் ஒரு ஜோதி உருவாக இருக்கவேண்டும் என்று வேண்டிக் கொண்டார்களாம், பரமசிவனும் அதற்குச் சம்மதித்து ஒவ்வொரு வருடத்திலும் கார்த்திகை மாதத்தில், கார்த்திகை பண்டிகையில் நான் இந்த மலையின் உச்சியில் ஜோதியாகக் காணப்படுவேன் என்று சொன்னாராம். இதுதான் திருவண்ணாமலைப் புராணமாகிய அருணாசலப்புராணத்தில் சொல்லப் படும் கார்த்திகைப் பண்டிகைக் கதை.’’ என்று கார்த்திகைப் பண்டிகை பற்றி புராணங்கள் கூறும் கதைகளை பெரியார் எடுத்துக் கூறியுள்ளார்.

மக்களைப் பண்படுத்துவதற்காகப் பெரியார் கூறிய மேற்கண்ட கருத்துகள் புண்படுத்திவிட்டதாகப் புலம்புகிறார்.

‘விஜயபாரதம்’ ஏட்டில் (20.12.2019 பக்கம் 34)

‘உண்மை’ என்னும் பெயரில் திராவிடர் கழக மாதமிருமுறை பத்தி-ரிகை வெளிவந்து கொண்டிருக்கிறது. அன்றாடங் காய்ச்சியாக உள்ள ஒருவனுக்கு கோடீஸ்வரன் என்று பெயர் வைப்பது போன்று பெயருக்கும் அந்தப் பத்திரிகை தரும் செய்திகளுக்கும் துளிகூட சம்பந்தம் இல்லை. டிசம்பர் 1ஆம் தேதி இதழில் “முரண்பட்ட மூடநம்பிக்கைப் பண்டிகை கார்த்திகை தீபம்’’ என்னும் தலைப்பில் ஈ.வெ.ரா. பேசிய பேச்சு பிரசுரமாகியுள்ளது.

“தீபாவளிப் பண்டிகையின் ஆர்ப்பாட்டம் மறைந்து இன்னும் ஒரு மாதம் கூட ஆகவில்லை. அதற்குள் மற்றொரு “சனியன்’’ தொடர்ந்து வந்துவிட்டது என்று கார்த்திகைத் தீபத் திருவிழாவைக் குறிப்பிட்டுள்ளார். கிறிஸ்துமஸ், ரம்ஜான், பக்ரீத் போன்ற பண்டிகைகள் எல்லாம் இவர்களுக்கு அர்த்தமுள்ள பண்டிகைகளாகத் தெரிகிறதா? கோடிக்கணக்கான மக்கள் கொண்டாடும் ஒரு பண்டிகையை ‘சனியன்’ என்று சொல்வதற்கு இவர்களுக்கு எவ்வளவு தைரியம் இருக்கணும்.

ரம்ஜான், கிறிஸ்துமஸ், பக்ரீத் பண்டிகைகளைப் பற்றி தரக்குறைவாக விமர்சிக்க இவர்களுக்குத் தைரியம் உண்டா?

பெங்களூரில் ஒரு பத்திரிகை நபிநாயகம் பற்றி எழுதியது என்பதற்காக அந்தப் பத்திரிகை அலுவலகத்தையே கொளுத்திவிட்டார்கள். ஹிந்துக்கள் அதுபோன்று செயல்களில் ஈடுபட மாட்டார்கள் என்கிற தைரியம் இவர்களுக்கு! ஹிந்துக்கள் கோயிலுக்குப் போகிறோம், சாமி கும்பிடுகிறோம். ஆனால், தேர்தல் வரும்போது ஹிந்துக்களை அவமானப்படுத்துகிறவர்களுக்கு வாக்களிக்கிறோம். இந்நிலை மாற வேண்டும்.’’ என்று அந்த இதழின் ஆசிரியர் வீரபாகுவே எழுதியுள்ளார்.

“உண்மை’’ என்னும் பத்திரிகை அதன் பெயருக்கு உரியதல்ல. அது பொய்யையே கூறுகிறது என்பது இந்த யோக்கியரின் முதல் குற்றச்சாட்டு. “உண்மை’’ இதழ் 50 ஆண்டுகளைத் தொட்டு பொன்விழா காணவுள்ளது. இந்த அய்ம்பது ஆண்டுகளில் ஏதாவது ஒரு பொய்யான செய்தியை “உண்மை’’ இதழ் வெளியிட்டது என்று இவரால் எடுத்துக்காட்ட முடியுமா? முடியாவிட்டால் அறிவு நாணயத்தோடு மன்னிப்புக் கேட்க வேண்டும்! தைரியமிருந்தால் வழக்குப் போட்டுப் பார்க்கட்டுமே!

பெயரில் மட்டுமல்ல; பித்தலாட்டத்திலே பிறந்து, பித்தலாட்டத்திலேயே வளர்ந்து இன்று பி.ஜே.பி என்கிற பித்தலாட்டக் கட்சி வரை கைகளை விரிக்கும் ஆர்.எஸ்.எஸ். ஆக்டோபஸ் உண்மையின் உறைவிடமான “உண்மை’’யை விமர்சிப்பது உலகமகா மோசடி அல்லவா?

உண்மையில் இந்து மதத்தை இழிவுபடுத்தியுள்ளது யார்?

இந்து மதக் கடவுள் அக்கினி சப்தரிஷி மனைவிகள் மீது காமம் கொண்டு அலைந்தான் என்று கூறி அக்கினி பகவானை இழிவுபடுத்துவது நீங்களா? பெரியாரா?

அக்கினி பகவான் மனைவிதானே ரிஷி பத்தினிகளாய் மாறி அக்னியின் ஆசையை நிறைவேற்றினாள் என்கிற அசிங்கக் கதையைக் கூறி இழிவுபடுத்துவது நீங்களா? – நாங்களா?

சிவன் முடியைப் பார்த்து விட்டு வந்தேன் என்று பிரம்மா பொய் கூறினான் என்று பிரம்மா என்கிற கடவுளைக் கேவலப்படுத்துவது நீங்களா? – நாங்களா?

சிவனே உயர்ந்தவன், பிரம்மாவும், விஷ்ணுவும் மட்டம் என்று கூறி கேவலப்படுத்துவது நீங்களா? – நாங்களா?

உண்மை என்ன?

இமயமலையைவிட பழைய மலை திருவண்ணாமலை. அது எரிமலையாக முன்பு இருந்த ஒன்று.  இது அறிவியல் ஆய்வின் மூலம் உறுதி செய்யப்பட்டுவிட்டது. நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் எரிமலை வெடித்து வான்முட்ட தீப்பிழம்பு எழுந்தது. எரிமலை என்கிற உண்மை அறியா மக்கள் சிவஜோதி எழுந்துள்ளது என்று எண்ணி வணங்கினர். எரிமலைத் தீ வானுயர கொழுந்துவிட்டு எரிந்ததன் அடையாளமாகத்தான் அந்த மலை உச்சியில் பெரிய தீபம் ஏற்றுகிறார்கள். அதன் அடிப்படையில் புனையப்பட்டதே இந்த ஆபாசக் கதைகள். அதற்கு ஆயிரக்கணக்கில் மக்கள் செலவு செய்வது, ஏராளமான எண்ணெய், விறகு போன்றவற்றை வீணே எரித்து வீணாக்குவதும் எவ்வளவு பெரிய அறியாமை! என்று பெரியார் கேட்கிறார். இப்படிக் கேட்டால் அது திமிரா?

திமிர் யாருக்கு?

திராவிடர் கழகத்திற்கு என்றைக்கும் திராணியுண்டு; திமிர் கிடையாது. ஆனால், மத்தியில் அதிக எண்ணிக்கையில் ஆட்சி வந்தவுடன் மமதை கொண்டு திமிரின் உச்சத்தில் துள்ளிக் குதிப்பது ஆரிய பார்ப்பனர்கள்தானே! அதுதானே விஜயபாரதத்தில் வீரபாகு வழியாக வெளிப்பட்டுள்ளது?

மக்கள் பக்தர்களாக இருந்தாலும் பார்ப்பன சூழ்ச்சியைப் புரிந்தே வைத்துள்ளார்கள்! அவர்களை பெரியார் இயக்கத்திற்கு எதிர்ப்பாய்த் திருப்பிவிடலாம் என்கிற நப்பாசை வேண்டாம், வீரபாகு! அது உங்கள் மீதே திரும்பும். ஆரிய  பார்ப்பனர் அல்லாதார் கொதித்தெழுந்தால் 4% ஆரிய பார்ப்பனர் நிலை என்னவாகும்? விரல் உரல் ஆனால், உரல் என்னவாகும் வீரபாகு?

நாங்கள் எந்த மதப் பண்டிகைகளையும் ஏற்பதில்லை. வாழ்த்துக் கூறுவதில்லை. கபோதி ஏட்டிற்குத் தெரியுமா?

பெரும்பாலான உழைக்கும் மக்களைச் ‘சூத்திரர்களாக, பஞ்சமர்களாக’ இழிவுபடுத்துவது ஹிந்துமதப் பண்டிகைகளே! அப்படியிருக்க அந்தப் பண்டிகைகள் மீது சூத்திர இந்துக்கள் ஆத்திரப்படுவார்களே தவிர, எங்கள் மீதல்ல! அந்தப் பண்டிகைகளைக் கொண்டாடாத  எங்களுக்குச் சம்பந்தமில்லாத  பண்டிகைகளைத் தாக்கி எழுத வேண்டிய உள்நோக்கம் எங்களுக்கு இல்லை. எங்கள் மக்கள் மானத்தோடு, அறிவோடு இழிவு நீங்கி வாழ வேண்டும் என்பதற்காகச் சிந்திக்கச் சொல்கிறோம். பக்தியின் பிடியில் மீள முடியாமல் இருந்தாலும் மக்கள் இதை அறிந்தே உள்ளனர்.

எங்களை இழிவுபடுத்தும் மத மூடநம்பிக்கைகளைக் கண்டித்து நூல்கள் வெளியிட்டு பிரச்சாரம் செய்வதுதான் திராவிடர் கழகம்! எங்கள் துணிவு எல்லோருக்கும் தெரியும். நாங்களென்ன ‘மன்னிப்பு மன்னர்’ சாவர்க்கரா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *