தந்தை பெரியாரின் 45ஆம் ஆண்டு நினைவு நாளில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் தந்தை பெரியாரின் “பொதுவுடைமைச் சிந்தனைகள்’’ 3 தொகுதிகள் புத்தக வெளியீட்டு விழாவும், ‘பெரியார் விருது’ வழங்கும் விழாவும் நடைபெற்றது.
திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் வரவேற்புரை ஆற்றினார். கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் முன்னிலை வகித்தார். மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் இணைப்புரை வழங்கினார். விருது பெற்றவர்களின் பங்களிப்பும் விவரமும் :
டாக்டர் சோம.இளங்கோவன்
டாக்டர் சோம.இளங்கோவன் அவர்கள் தந்தை பெரியார் அவர்களின் தொண்டன் என்றும், ஆசிரியர் அவர்களின் மாணவன் என்றும் தன்னைப் பெருமையுடன் அறிமுகம் செய்து கொள்பவர்.
நண்பர்களுடன் இணைந்து “வீரமணி சமூகநீதி விருது” நிறுவியதோடு, அந்த விருதை, அமெரிக்காவின் தலைசிறந்த மனிதநேயப் பற்றாளர் பேராசிரியர் பால்கர்ட்ஸ் அவர்களை தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்து மாண்புமிகு கலைஞர் அவர்கட்கு சமூகநீதிக்கான வீரமணி விருதை வழங்கச் செய்து பெருமை சேர்த்தார். அவர்களின் பணிகளைப் பாராட்டி 2019ஆம் ஆண்டுக்கான “பெரியார் விருது” வழங்கப்படுகிறது.
மருத்துவர் நா.ஜெயராமன்
டாக்டர் நா.ஜெயராமனின் தந்தை நாகய்யா, குழந்தைப் பருவத்திலேயே தந்தை பெரியாரின் பகுத்தறிவுப் பாதையில் இவருக்கு நடக்கக் கற்றுக் கொடுத்திருக்கிறார். அந்தப் பயிற்சியின் பயனாக, பல் மருத்துவரான இவர் அடித்தட்டு மக்களின் மூளை மருத்துவராகவும் செயல்பட்டிருக்கிறார்.
காந்தியின் தீண்டாமை, மகனுக்கு மடல், ஆஷ் படுகொலை, புனைவும் வரைவும், அம்பேத்கர் இந்துமயப்படுத்த முடியாத தத்துவம், மேட்டுக்குடி தலித்துகளுக்கு ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.
அவருக்கு 2019ஆம் ஆண்டு தந்தை பெரியார் நினைவு நாளில் பெரியார் விருது வழங்கி சிறப்பிக்கப்படுகிறது.
திருமுருகன் காந்தி
2009இல் ஈழத்தில் நடந்த தமிழின அழிப்பு வேலையை உலகிற்கு உரக்கச் சொல்லியவர்களில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி முக்கியமானவர் ஆவார்.
ஈழத்தமிழர் இறுதிப்போரில், குரூரமாகவும், கொடூரமாகவும் கொன்று முடிக்கப்பட்ட தமிழ்ச் சகோதர, சகோதரிகளின் – போராளிகளின் நினைவு நாளான மே 29, 2017 அன்று அமைதியாக மெழுகுவத்தி ஏந்தி கண்டனம் தெரிவித்ததற்காக, இவர் மீது குண்டர் சட்டம் ஏவப்பட்டது.
அன்றிலிருந்து மே 17 இயக்கம் தொடங்கி, தொடர்ந்து நடத்தி வருகிறார்.
இவர் 2018ஆம் ஆண்டு பெரியாரியல் கூட்டமைப்பு சார்பில் திருச்சியில் நடைபெற்ற கருஞ்சட்டைப் பேரணிக்கு முக்கிய பணியாற்றிவர்.
2019ஆம் ஆண்டும் பெரியாரியக் கூட்டமைப்பு சார்பில் சென்னையில் திருக்குறள் மாநாடு நடத்தியதில் குறிப்பிடத்தக்கவர். 2019ஆம் ஆண்டுக்கான “பெரியார் விருது” வழங்கி பெருமைப்படுத்துகிறது பெரியார் இயக்கமாம் திராவிடர் கழகம்.
நிகழ்ச்சியின் இறுதியில் பொறியாளர் ச.இன்பக்கனி நன்றியுரையாற்றினார்.