சிந்தனை : சோதிடப் பொருத்தம் பார்ப்பதால் பொருத்தமானவர்கள் இணைய முடிவதில்லை!

ஜனவரி 01-15 2020

பல பெண்களுக்கு மண வாழ்க்கை அமையாமல் இருப்பதற்கான காரணங்கள் பல இருந்தாலும், மிக முக்கியமான காரணம் ஜோதிடம் ஆகும்.

“பொருத்தம் சரியில்லை’’, “செவ்வாய் தோசம்’’, “நாக தோசம்’’ என்றெல்லாம் கூறி ஜோதிடம் குறுக்கிடுவதால் அவர்களுக்கு அமைய வேண்டிய அருமையான வாய்ப்புகள் நழுவிப் போய்விடுகின்றன. மீண்டும் ஒரு வாய்ப்புக்கு அவர்கள் நீண்ட காலம் காத்திருக்க நேரிடலாம்.

ஜோதிடத்தின் மூலம் செவ்வாய் தோசம் என்பதும், பத்து பொருத்தங்கள் சரியாக இருந்தால்தான் திருமணம் என்பதெல்லாம் உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லை.

தங்கள் பிள்ளைகள் காதலித்து விட்டால் ஜோதிடத்தைக் கண்டு கொள்ளாத பெற்றோர் தாங்களாகப் பார்த்து ஏற்பாடு செய்யும் திருமணத்திற்கு மட்டும் ஜோதிடத்திற்கு மிக முக்கியத்துவம் தருவது சரியல்ல.

ஒரு பெண்ணும் ஆணும் மணம் புரிந்துகொண்டு வாழ வாய்ப்பு உண்டா இல்லையா என்பதை முடிவு செய்ய வேண்டிய மிக மிக முக்கியமான பொறுப்பினை பெற்றோர் ஒரு ஜோதிடரிடம் ஒப்படைக்கின்றனர்.

ஜோதிடத்தில் ஆழ்ந்த நம்பிக்கையுள்ள என் நண்பர் ஒருவர், ஜோதிடர் சொன்னபடியே தன் மகள் திருமணத்தை நடத்தினாராம். ஆனால், மணமான நான்கு மாதங்கள்கூட முடியாத நிலையில், அவர்கள் மண வாழ்க்கையில் விரிசல் ஏற்பட்டு பிரிந்து வாழ்கிறார்களாம். நண்பர், அந்த ஜோதிடரிடம் போய் நீங்கள் எல்லாம் சரியாக இருப்பதாக சொன்னதை வைத்துதானே திருமணம் செய்து வைத்தேன். இப்போது அவர்கள் பிரிந்து போகும் நிலை ஏற்பட்டுவிட்டதே என்று முறையிட்டாராம். அதற்கு ஜோதிடர் சொன்ன விளக்கம் இது:

“ஜோதிடம் என்பது ஒரு வழிகாட்டிதான்; ஒரு கணிப்புதான். மணம் புரிந்துகொள்பவர்கள் வாழ்க்கையில் விரிசல் எல்லாம் வரும் என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது. மண வாழ்க்கை நன்றாக அமைவதும், அமையாமல் போவதும் அவர்கள் கையில்தான் இருக்கிறது. வாழ்க்கை என்றால் சுக துக்கங்கள் இருக்கத்தான் செய்யும். அதையெல்லாம் ஜோதிடத்தால் நிறுத்த முடியாது.

எல்லாம் இறைவன் விதித்த விதிப்படிதான் நடக்கும் என்றால் ஜோதிடம், எண் கணிதம், பரிகாரம், அதிர்ஷ்டக்கல் என்பதெல்லாம் எதற்கு? இவையெல்லாம் மனித வாழ்க்கையில் மாற்றங்களைக் கொண்டுவரும் என்றால், இறைவன் வகுத்த விதி என்ன ஆவது?

தமிழகத்தில் புகழ்வாய்ந்த ஜோதிடர்களில் வித்வான் இலட்சுமணனும் ஒருவர். காலஞ்சென்ற இவர் “பாலஜோதிடம்’’ என்னும் இதழின் ஆசிரியராக இருந்தார்.

அவர் “பெரும்பாலும் நட்சத்திரத்தை அடிப்படையாகக் கொண்ட பத்து பொருத்தங்களை மட்டும் பார்ப்பார்கள். அவ்வாறு பார்க்கும்போது இந்த நட்சத்திரத்திற்கும் அந்த நட்சத்திரத்திற்கும் ஆகாது எனக் கூறி சேரவேண்டிய ஆணையும் பெண்ணையும் பிரித்தும், சேரக்கூடாத ஆணையும் பெண்ணையும் சேர்த்தும் விடுகின்றனர். ஒரு பெண் மூல நட்சத்திரத்தில் பிறந்திருந்தால் மாமனாருக்கு ஆகாதாம். எங்கோ பிறந்த பெண் எங்கோ உள்ள கணவனின் வீட்டுக்குச் செல்லும்போது கணவரின் அப்பா இறந்து போவார் என்றால் அதற்குப் பெயர் ஜோதிடமா? அல்லது குருட்டுத்தனமா?

இந்துக்கள் இடையே நிலவும் இன்னொரு பிரச்சனை செவ்வாய் தோசம். செவ்வாய் தோசம் என்றால் திருமணம் செய்யக்கூடாது என்கிறார்கள். செவ்வாய் தோசம் கழிப்பதாகச் சொல்லி பலரும் பணத்திற்காக ஏமாற்றுகிறார்கள். செவ்வாய் தோசம் கழிக்கப்பட்டும் திருமணம் ஆகாத பெண்கள் ஏராளம். இதையெல்லாம் அறியாத நம் மக்கள் பணத்தை வீணே அள்ளியிறைக்கின்றார்கள்.

ஜாதகத்தில் ஏழாம் வீட்டில் வலுத்திருந்து நல்ல கணவன் அமைவான். நீண்ட ஆயுளோடு இருப்பான் என்றிருந்தால் செவ்வாய் தோசம் என்ன செய்யும்?’’ என்று கூறுகின்றார் வித்வான் இலட்சுமணன். முப்பது ஆண்டுகளாக ஜோதிடத் தொழில் செய்து கொண்டிருக்கும் தேர்ச்சி பெற்ற ஜோதிடத்தை நன்கு அறிந்த ஒருவர் குறித்துக் கொடுத்த சுக்கில பட்சமும் துவாதசி திதியும் அசுவினி நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 10:15க்கு மேல் 11:50க்குள் கும்ப லக்கணத்தில்…

நடைபெற்ற திருமணம் தோல்வியில் முடிந்து தம்பதிகள் பிரிந்து விட்டனர். பல ஆண்டுகளாக ஜோதிடத் தொழில் புரிந்து வரும் ஒருவர் சரி பார்த்துக் கொடுத்த திருமணமே சரியாக வரவில்லை.

குழந்தை பிறந்த நேரம் என்பதை எந்தச் சூழ்நிலையை வைத்து முடிவு செய்வது என்பதிலும் ஒரே குழப்பம். அதாவது குழந்தையின் தலை வெளியே வந்துவிட்டது. ஆனால், குழந்தையின் பிற பகுதி தாமதித்து பிறகு முழுமையாக வெளியே வருகிறது. 

மனிதர்கள் வாழ்வில் கோள்கள் (கிரகங்கள்) ஆதிக்கம் செலுத்துகின்றன என்கிறது ஜோதிடம். இது குறித்து கருத்துரைக்கிறார் இந்திய அறிவியல் மாமேதை. இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் மதிப்புமிகு அப்துல் கலாம்:

“ஜோதிடம், அறிவியல் என்கிற போர்வையில் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு நான் வருந்தவே செய்கிறேன். இந்தக் கோள்கள், நட்சத்திரக் கூட்டங்கள் ஆகியவை மனித உயிர்கள் மீது ஆற்றல் செலுத்த இயலும் என்கிற கட்டுக்கதைகள் எவ்வாறு உருவாக்கப்பட்டன என்பதை நானறியேன். விண்வெளியில் உள்ள இவற்றின் சரியான இயக்கத்தைச் சுற்றி குழப்பம் மிகுந்த கணக்குகளை கற்பனையில் உருவாக்கி அவற்றிலிருந்து மக்களின் வாழ்க்கை நடைமுறைகள் பற்றிய முடிவுகளைப் பெறுவது என்பது சரியானதென எனக்குத் தோன்றவில்லை. நான் காணும் வரை பூமி ஒன்றே ஆற்றல் மிகுந்த சுறுசுறுப்புடன் இயங்கும் கோளாகும்.’’ என்று கூறுவதன் வழி மனிதர்கள் மீது கோள்களின் ஆதிக்கம் என்பதை கட்டுக்கதை என ஒதுக்குகிறார் மதிப்புமிகு அப்துல் கலாம்.

காலங்காலமாக தமிழர்களைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஜோதிடத்தோடு எண் கணிதமும் வாஸ்து சாஸ்திரமும், அதிர்ஷ்டக்கற்களும் அணி சேர்ந்துள்ளன. ஒரு 30 ஆண்டுகளுக்கு முன்பு வாஸ்து சாஸ்திரம், எண் கணிதம் என்றால் என்னவென்று பலருக்குத் தெரியாது. இன்று மட்டும் அவற்றின் தேவை (அவசியம்) என்ன?

இருந்த இடத்தில் இருந்தபடியே ஒரு சொட்டு வியர்வை சிந்தாமல் – உடல் உழைப்பு இல்லாமல் பணம் சம்பாதிக்க உதவும் இத்தொழில்களில் சமுதாயச் சிந்தனை என்று ஒன்று இருக்கவே முடியாது.

ஓர் இன்பமயமான மணவாழ்க்கைக்கு கணவன் மனைவி ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு வாழ்க்கையைத் தொடங்க வேண்டும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை கொண்டிருக்க வேண்டும். பெருந்தன்மையோடு பொறுத்துப் போகும் மனம் இருவரிடமும் இருக்க வேண்டும். பிரச்சனை வரும்போது வார்த்தைகளை கவனமாகக் கையாள வேண்டும். கோபத்தை இருவருமே தவிர்க்க வேண்டும். உண்மையான அன்பு, ஒருவர் மேல் ஒருவர் பொழியும் பாச உணர்வுகள் இவையெல்லாம் அடிப்படை மாறாக ஜோதிட பொருத்தம் அல்ல.

ஜாதகம் பொருத்தம் பார்த்து நடந்த திருமண வாழ்வு மணமுறிவில் முடிவது ஏன்? ஜாதகம் பொய் என்பதால்தானே?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *