பெண்ணால் முடியும் : தமிழகத்தின் முதல் தங்கம் அனுராதா!

ஜனவரி 01-15 2020

புதுக்கோட்டை மாவட்டம் நெம்மேலிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அனுராதா. ஒரு சிலர் மட்டுமே தேர்வு செய்யும் பளு தூக்கும் விளையாட்டை தேர்வு செய்து அதில் பயிற்சி பெற்று, இந்திய விளையாட்டு வீரர்களின் பயிற்சித்தளமான பாட்டியாலா விளையாட்டு பல்கலைக்கழகத்தில் பளு தூக்குதல் சம்பந்தமான ஓராண்டு பயிற்சியை பெற்ற அனுராதா காவல் உதவியாளராக பணியாற்றி வருகிறார்.

சமோவ் தீவில் ஜூலை 14 அன்று நடைபெற்ற காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் 221 கிலோ எடையைத் தூக்கி, மற்ற நாடுகளெல்லாம் வியக்கும் வகையில் இந்தியாவின் புகழை உச்சத்துக்குக் கொண்டுசென்றுள்ளார் அவர். தொடக்கக் கல்வியைத் தன் கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் படித்த அனுராதா, அதன் பிறகு அருகிலுள்ள பெருங்களூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் சேர்ந்தார். அவர் ஏழாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது தந்தை பவுன்ராஜ் இறந்துவிட்டார்.

பன்னிரண்டாம் வகுப்பு படித்துவந்த அனுராதாவின் அண்ணன் மாரிமுத்து படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டுக் கூலி வேலைக்குச் செல்லத் தொடங்கினார். அனுராதா படிப்பைத் தொடர்ந்தார்.

“என்னைப் படிக்கவைக்க அம்மா ஆடு மேய்ச்சாங்க. அண்ணன் கூலி வேலைக்குப் போனாரு. நாங்க கூரை வீட்டில்தான் இருந்தோம். அப்போ வீட்டில் சைக்கிள்கூட இல்லை. என்னோட விளையாட்டு ஆர்வத்தைப் புரிந்துகொண்ட அண்ணன், எதையும் பொருட்படுத்தாமல் என்னைப் பயிற்சிக்கு அனுப்பினார். பயிற்சி முடிஞ்சதும் வயிற்றை வாரிச் சுருட்டும் அளவுக்குப் பசியெடுக்கும். அப்போ உறவினர்களும் நண்பர்களும் உதவினாங்க’’ என்று சொல்லும் அனுராதா, பொருளாதார நெருக்கடியில் தங்கள் குடும்பம் தத்தளித்ததாகவும் சொல்கிறார்.

தன் விளையாட்டுத் திறமை நிச்சயம் தன்னைக் கரைசேர்க்கும் என்று உறுதியாக நம்பியிருக்கிறார். அந்த நம்பிக்கை இன்று அவரைத் தங்கத் தாரகையாக வலம்வரச் செய்திருக்கிறது. “பள்ளிக்கூடம் படிக்கும்போதே அனுவுக்குக் கபடி, வாலிபால் மேல் ஆர்வம் இருந்தது. அப்பப்ப நடக்கும் போட்டிகளிலும் வெற்றிதான். ஒருமுறை புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மைதானத்துக்கு அனுவைக் கூட்டிக்கிட்டுப் போனேன். அங்கே குழு விளையாட்டைவிடத் தனிநபர் போட்டியில் அனுராதாவுக்குத் திறமை அதிகமாக இருப்பதா சொன்னாங்க. பளுதூக்கும் போட்டியில் அனுராதாவோட திறமையைப் பரிசோதிச்சாங்க. எந்தப் பயிற்சியுமே இல்லாம 35 கிலோ எடையை ரொம்ப சுலபமா அனு தூக்கினா. அதைப் பார்த்து அங்கிருந்தவங்க ஆச்சரியப்பட்டாங்க. அதுதான் அனுராதாவைத் தொடர்ந்து பளுதூக்கும் போட்டியில் ஈடுபடவைத்தது’’ என்கிறார் அனுராதாவின் அண்ணன் மாரிமுத்து.

பளுதூக்குவதில் பள்ளி அளவில் ஏராளமான சாதனைகளைப் படைத்த அனுராதா, புதுக்கோட்டை மன்னர் அரசுக் கல்லூரியில் பி.சி.ஏ. படித்தார். பளுதூக்கும் போட்டி எங்கே நடந்தாலும் அதில் தனக்குப் பரிசு கிடைக்கும் என்கிற நிலையை எட்டினார். 2016இல் நடைபெற்ற காவல் துறைத் தேர்வில் விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீட்டில் காவல் உதவி ஆய்வாளராகத் தேர்வானார்.

இந்திய அளவில் நடைபெற்ற காவலர்களுக்கு இடையேயான போட்டிகளில் தொடர்ந்து அனுராதா தங்கப் பதக்கம் வென்றார். தமிழகத்தில் இருந்து காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்ற முதல் பெண் என்னும் சாதனையை அனுராதா படைத்துள்ளார்.

பல்வேறு இடங்களில் பெற்ற வெற்றியும் எஸ்.அய். வேலையும்தான் விளையாட்டோட மகத்துவத்தை எங்க ஊர் மக்களுக்குப் புரியவெச்சிருக்கு’’ என்று சிரிக்கிறார் அனுராதா.

தற்போது நடந்து முடிந்துள்ள தெற்காசிய தொடரிலும் பெண்களுக்கான 87 கிலோ எடைப் பிரிவில் ஸ்னேட்ச் முறையில் 95 கிலோவும், ‘கிளீன் அண்ட் ஜெர்க்’ முறையில் 117 கிலோ எடை என மொத்தமாக 212 கிலோவைத் தூக்கி தங்கம் வென்றுள்ளார். தொடரட்டும் அவரது சாதனைகள்.

(தகவல் : சந்தோஷ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *