ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கொள்கைப் “பிதாமகர்’’ எனப்படும் கோல்வால்கரின் சிந்தனைகளுக்கு செயல்வடிவம் கொடுப்பதை மட்டுமே ஒற்றை இலக்காகக் கொண்டு, அரசியல் கட்சியாக பி.ஜே.பி.யை உருவாக்கினார்கள்.
தங்களின் உண்மையான திட்டத்தைக் கூறினால் ஒருவரும் ஓட்டுப் போடமாட்டார்கள் என்பதை நன்கு அறிந்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் “வளர்ச்சி’’ என்கிற கவர்ச்சி காட்டி இளைய தலைமுறையை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தனர்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கோ, அதன் அரசியல் கிளையான பி.ஜே.பி. கட்சிக்கோ நாட்டின் வளர்ச்சி பற்றியோ, இளைஞர்களின் கல்வி, வேலைவாய்ப்பு பற்றியோ சிறிதும் அக்கறையில்லை. அவர்களின் முதன்மை இலக்கு _ கோல்வால்கரின் சிந்தனைகளைச் செயல்படுத்தி இந்தியாவை இந்து நாடாக்குவதுதான்; அதற்கு ஆதரவாக கார்ப்பரேட் முதலாளிகளைக் கைக்குள் போட்டுக்கொண்டு, அவர்களை வளர்த்து, அவர்கள் நிதி உதவியோடும், அவர்களின் ஊடகங்களின் பிரச்சாரப் பலத்தோடும், ஆட்சியைப் பிடிப்பதுதான்.
அவர்கள் திட்டப்படியே இளைய தலைமுறை, ‘வளர்ச்சி’ என்னும் கவர்ச்சியிலும், ‘மோடி’ என்ற மோகத்திலும் ஏமாந்து பி.ஜே.பி.யை ஆட்சியில் அமர்த்தியது.
ஆனால், எதிர்பார்த்து வாக்களித்த இளைஞர்களை ஏமாற்றி, ஆரிய , பார்ப்பன நலனுக்கும், கார்ப்பரேட்டுகளின் நலனுக்குமான ஆட்சியாக பி.ஜே.பி ஆட்சி செயல்பட்டதன் விளைவாக நாட்டின் வளர்ச்சியும், வேலைவாய்ப்பு, பொருளாதாரமும் அடிமட்ட வீழ்ச்சியடைந்தன.
பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தும் செயலிழந்தன. வேலையின்மை, விலைவாசி உயர்வு என சீர்கேடுகள் மலிந்தன.
இவற்றை மறைக்க இராமர் கோயில் போன்ற கவர்ச்சிகளைக் காட்டி திசைதிருப்பிக் கொண்டே தங்கள் அஜெண்டாக்களை ஒவ்வொன்றாகச் செயல்படுத்த முயற்சிக்கிறார்கள்.
அவர்களின் முக்கிய அஜெண்டாக்கள் எவை?
1. இந்தியாவை இந்து நாடாக்குவது.
2. வர்ணாஸ்ரம தருமத்தை நிலைநிறுத்தி நடைமுறைப்படுத்துவது.
3. சமஸ்கிருதத்தை ஆட்சி மொழியாக்குவது.
4. சனாதன சாஸ்திரங்களைச் சட்டமாக்குவது.
5. ஆரியக் கலாச்சாரத்தை இந்துக் கலாச்சாரம் _ இந்தியக் கலாச்சாரமாக்குவது.
6. அனைவருக்கும் ஒரே சிவில் சட்டம். அதாவது மனுதர்மச் சட்டம்.
7. இந்து ராஷ்டிரம் உருவாக்குவது.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கொள்கை கர்த்தா கோல்வால்கர் சிந்தனைகளில் இருந்தே இந்த நோக்கங்கள் திட்டமிடப்பட்டன.
“We (aryans) are the good, the enlightened people. We were the people who know about the laws of nature the law of the sprit. We had brought into actual life almost every thing that was beneficial to mankind. Then the rest of humanity was just bipeds and so no distinctive same was given to us. Sometimes in trying to distinguish our people from others, we were called the enlightened – the Aryas – and the rest the melachas.”
_ (ஆதாரம்: Bunch of Thoughts)
அதாவது, நாம் (ஆரியர்கள்) நல்லவர்கள், அறிவுத்திறன் கொண்டவர்கள். இயற்கையின் விதிகளையும், ஆன்ம விதிகளையும் அறிந்தவர்கள் நாம்தான். மனிதனுக்கு நன்மை பயக்கக் கூடியவற்றையெல்லாம் கொண்டு வந்தவர்களும் நாம்தான். அப்போது நம்மைத் தவிர மற்றவர்களெல்லாம் இரண்டு கால் பிராணிகளைப் போல் அறிவற்றவர்களாகவே இருந்தனர். எனவே, நமக்கென்று குறிப்பிட்ட பெயர் எதுவும் சூட்டப்படவில்லை. சில நேரங்களில் நம்மை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்ட நாம் அறிவுத்திறனுடைய ஆரியர்கள் என்று அழைக்கப்பட்டோம். நம்மைத் தவிர மற்றவர்களெல்லாம் மிலேச்சர்கள் (இழிமக்கள்) என்பதே கோல்வால்கர் கூறியது.
மொழிப் பிரச்சினையில் ஆர்.எஸ்.எஸ். கோல்வால்கர் என்ன கூறுகிறார் தெரியுமா?
“As a solution to the problem of ‘lingua fanca’ till the time Sanskrit takes that place, we shall have to give priority to Hindi on the score of convenience.”
– (Bunch of Thoughts 8ஆவது அத்தியாயம் – பக்கம் 113)
அதாவது, மொழிப் பிரச்சினைக்கு ஒரே தீர்வுதான் இருக்கிறது; சமஸ்கிருதம் ஆட்சிமொழியாக வருகின்ற வரை ஹிந்திக்கே நாம் முன்னுரிமை தந்து, நமது வசதிக்காக ஆட்சி மொழியாக்கிக் கொள்ள வேண்டும்’’ என்கிறார்.
மேலும், “ஹிந்துஸ்தானத்தில் வாழும் ஹிந்துக்களல்லாதார் ஹிந்துப் பண்பாடு, மொழி ஆகியவற்றை மேற்கொண்டு ஹிந்து சமயத்தை உயர்ந்த மதிப்பில் வைத்துப் போற்றி, ஹிந்து இனம், அதன் பண்பாடு, மொழி ஆகிய இரண்டின் புகழைத் தவிர வேறு எதையும் அவர்கள் வரவேற்கக்கூடாது. அதாவது அவர்கள் இந்த நாடு, அதனுடைய பழைமையான பாரம்பரியம் ஆகியவற்றைக் காணச் சகியாத தன்மையினையும், நன்றி கெட்ட தன்மையினையும் முற்றிலும் நீக்கிவிட்டு, உறுதியான எண்ணத்துடன், அன்பையும், பக்தியையும் அவைகளுக்குப் பதிலாகக் கொள்ளுதல் வேண்டும். ஒரே வார்த்தையில் கூற வேண்டுமானால், அவர்கள் அந்நியராக இருப்பதை விட்டொழிக்க வேண்டும். அவ்விதம் இருக்க அவர்கள் விரும்பவில்லை என்றால், அவர்கள் ஹிந்து சமுதாயத்திற்கு முற்றிலும் கீழ்ப்பட்ட மக்களாக, சலுகைகள் எதுவும் பெறத் தகுதியற்றவர்களாக, கண்ணியமாக நடத்தப் படுவதனையோ அல்லது பிரஜா உரிமை யினைக்கூட அடைய அருகதையற்ற வர்களாக, சுருங்கக் கூறுமிடத்து, எதனையும் கோர முடியாத மக்களாக வாழ்தல் வேண்டும். இவ்வழியினைத் தவிர அவர்கள் பின்பற்று வதற்கு வேறு வழியே கிடையாது.’’ என்கிறார்.
அதாவது, ஆரிய பார்ப்பனர்கள் மட்டுமே உயர்ந்தவர்கள், மற்றவர்கள் இழிமக்கள் என்பதன் மூலம் வர்ணாசிரம தர்மத்தை நியாயப்படுத்தி வலியுறுத்துகிறார்.
அடுத்து, சமஸ்கிருதம் ஆட்சிமொழியாக வேண்டும். அதுவரை இடைக்காலமாக இந்தி அந்த இடத்தில் இருக்க வேண்டும் என்கிறார்.
மூன்றாவதாக, இந்தியா _ இந்து நாடு. அதை ஏற்காதவர்கள் வெளியேற வேண்டும். ஹிந்துக்கள் அல்லாதவர்கள் இந்துக்களுக்குக் கீழ்ப்பட்டவர்களாக, குடியுரிமை அற்றவர்களாக வாழவேண்டும் என்கிறார். இந்த மூன்றையும் நடைமுறைப்படுத்தும் திட்டமாகத்தான் சமஸ்கிருதத் திணிப்பு, புதிய கல்விக் கொள்கை, ‘நீட்’ தேர்வு மூன்றையும் முதலில் கொண்டு வந்தவர்கள் தற்போது அடுத்த திட்டத்தை நிறைவேற்ற குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைக் கொண்டுவந்துள்ளனர். ஆக, குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது இந்துக்களைத் தவிர மற்றவர்களை குடியுரிமை அற்றவர்களாக, ஹிந்துக்களுக்கு அடங்கி, எதையும் பெற உரிமையற்றவர்களாக வாழ வேண்டியவர்கள் என்பதை நடைமுறைப்படுத்துவதற்கான முதல் நடவடிக்கையாகும்.
ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி ஆள்கள் ஆயிரம் ஏமாற்றுப் பேச்சுகள், விளக்கங்கள் தந்தாலும் அவர்கள் இறுதியில் நடைமுறைப்படுத்த விரும்புவது மேற்கண்ட திட்டத்தைத்தான்! இந்து ஆபத்தை உணராது, அ.இ.அ.தி.மு.க., பா.ம.க. தலைவர்கள் கூட்டணி தர்மத்திற்காக கூட்டு சேர்ந்து ஆதரித்தோம் என்பது கோடானுகோடி மக்களுக்குச் செய்த கொடுமை, துரோகம் ஆகும். இவர்கள் தங்கள் சுயநலத்திற்காக எந்தத் துரோகத்தையும் மக்களுக்குச் செய்யத் துணிந்தவர்கள் என்பதை இச்சட்டத்தை இவர்கள் ஆதரித்தமை உறுதிப்படுத்திவிட்டது.
பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையில் சொல்லப் பட்டதையெல்லாம் நிறைவேற்றிவருகிறார்கள். அந்தத் தேர்தல் அறிக்கையில் ‘கிறிஸ்துவர்கள்’ என்னும் வார்த்தையே இல்லை. ஆனால், இந்தச் சட்டத்தில் கிறிஸ்துவர்களையும் ஒன்றாக இணைத்துள்ளார்கள். இதுவும் பா.ஜ.க-.வின் தந்திரம்தான். கிறிஸ்துவர்களை இப்போது பகைத்துக்கொண்டால், காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்கா, அய்ரோப்பிய நாடுகள் இந்தியாவுக்கு எதிராக மூக்கை நுழைக்கும் என்கிற அச்சம் அவர்களுக்கு இருக்கிறது. நேபாளத்தில் இஸ்லாமியர்கள் சிறுபான்மையினர், இலங்கையில் தமிழர்கள் சிறுபான்மையினர்… அவர்களுக்கு ஏன் குடியுரிமை வழங்கவில்லை. காரணம், அவர்களுக்குத் தேவை இந்து இந்தியா மட்டுமே!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், மத அடிப்படையில், ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் மக்களுக்காகத்தான் இந்த மசோதாவே நிறைவேற்றப்படுகிறது என்றால், பாகிஸ்தான் அஹமதியா முஸ்லிம்கள், மியான்மர் ரோஹிங்கியாக்கள், இலங்கையில் சிங்கள பவுத்தப் பேரினவாதத்தால் பாதிக்கப்படுகிற தமிழர்களுக்கும் குடியுரிமை கிடைக்கும் வகையில்தானே இந்தச் சட்டத்திருத்தம் இருந்திருக்க வேண்டும்? ஆனால், அப்படி இல்லையே! அண்டை நாடுகளில் வாழ்ந்துவரும் இந்து மக்களுக்கு வெளிப்படையாக அழைப்பு விடுக்கும் இவர்கள் இஸ்லாமிய மக்களுக்கு மட்டும் குடியுரிமை கிடையாது என்று திட்டமிட்டு ஒதுக்குகிறார்கள். இதன்மூலம் உள்நாட்டில் உள்ள இஸ்லாமியர்களுக்கு நேரிடையான அச்சுறுத்தலைக் கொடுக்கிறார்கள் என்றது மிகச் சரியான கருத்து.
“மதத்தின் அடிப்படையில் காங்கிரஸ், தேசத்தை இரண்டாகப் பிரித்திருக்காவிட்டால் இந்தச் சட்டத் திருத்தத்துக்கே அவசியம் இல்லை’’ என்று நாடாளுமன்றத்தில் அமித் ஷா முன்வைத்த வாதத்தை எதிர்க்கட்சிகளும், வரலாற்றறிஞர்களும் மறுத்திருக்கிறார்கள். 1920களிலேயே சாவர்க்கர் முன்வைத்த வாதம் இது என்று அவர்கள் கூறியுள்ளனர். மூன்று நாடுகளிலும் இருந்து, முஸ்லிம் அல்லாத பிற மதத்தினர், மதத்தின் அடிப்படையில் துன்புறுத்தல்களுக்கு ஆளாகித்தான் இந்தியாவுக்கு வருகிறார்கள் என்பது பாஜக முன்வைக்கும் முக்கிய வாதம்.
ஆனால், பாகிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து ராஜஸ்தான், குஜராத் போன்ற மாநிலங்களுக்குச் சட்டவிரோதமாக இடம் பெயர்பவர்கள் அனைவருமே, மத ரீதியான துன்புறுத்தல்கள் காரணமாக வருவதில்லை என்பதைப் பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர். அங்கே கிடைப்பதைவிட ஓரளவு நல்ல வருமானம் இங்கு கிடைக்கும் என்று வருபவர்கள்தாம் அதிகம். திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.-யான டெரிக் ஓபிரையான் சொல்வதுபோல், கிழக்கு பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு ஓடிவந்தவர்கள் மத ரீதியாக அல்ல… மொழி ரீதியாக அடக்குமுறைக்கு உள்ளானவர்கள் என்றும் கூறியுள்ளனர்.
வடகிழக்கில் எதிர்ப்பு
வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த பெரும்பாலான எம்.பி.-க்கள் இந்த மசோதாவை ஆதரித்திருக்கிறார்கள் என்றாலும், அசாமில் கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. இன்னர் ‘லைன் பர்மிட்’ பாதுகாப்பு பெற்ற நாகாலாந்து, அருணாசல பிரதேசம், மிஸோரம் உள்ளிட்ட மாநிலங்களின் பகுதிகள், அரசமைப்புச் சட்டத்தின் ஆறாவது அட்டவணை மூலம் பாதுகாப்பு பெற்ற பழங்குடியினர் வசிக்கும் திரிபுரா, அசாம் ஆகிய மாநிலங்களின் பகுதிகள் ஆகியவை இந்தச் சட்டத்திருத்தத்திலிருந்து விலக்கு பெற்றிருக்கின்றன. மணிப்பூருக்கும் இன்னர் லைன் பர்மிட் நீட்டிக்கப்பட்டி ருக்கிறது. அதேசமயம், இந்தச் சட்டத் திருத்தத்தின் மூலம், 1971 மார்ச் 24-க்குப் பிறகு அசாமுக்குள் நுழைந்த அந்நியர்களை வெளியேற்றுவது தொடர்பாக, 1985இ-ல், கையொப்பமான அசாம் ஒப்பந்தம் காலாவதி ஆகிறது. இது அங்கே பதற்றத்தை அதிகரித்துள்ளது.
தங்கள் முன்னோர்களின் குடியுரிமையை நிறுவும் ஆவணங்களை வைத்திருப்பது என்பது எந்த மதத்தைச் சேர்ந்தவர்களுக்கும் அத்தனை எளிதில்லை எனும் சூழலில், இந்தச் சட்டத்திருத்தம் முழுமுதலாக முஸ்லிம்களை மட்டுமே குறிவைக்கிறது என்ற கருத்து சரியானது.
ஏற்கெனவே அசாமில் என்ஆர்சி பட்டியல் கொண்டுவரப்பட்டு 19 லட்சத்துக்கும் அதிகமானோர் குடியுரிமை இல்லாதவர்களாக ஆக்கப்பட்டிருக்கும் நிலையில், அவர்களில் முஸ்லிம்களைத் தவிர பிற மதத்தினர் அனைவரும் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் தகுதியைப் பெற இந்தச் சட்டத்திருத்தம் வழிவகுக்கிறது என்பது இஸ்லாமியருக்கு எதிரானதல்லவா?
எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு
இந்தச் சட்டத்திருத்தத்தைத் திமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக எதிர்க்கின்றன. இதை அமல்படுத்தப் போவதில்லை என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார். பாஜக அல்லாத பிற கட்சிகள் ஆளும் மாநிலங்களில் இந்த நிலைப்பாடு எடுக்கவிருக்கின்றன. பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் இதைப் பகிரங்கமாக அறிவித்துவிட்டார்.
அனைவரும் சமம்; சமயம், இனம், ஜாதி, பாலினம், பிறப்பிடம் காரணமாக வேற்றுமை காட்டுதல் கூடாது என்கிறது இந்திய அரசமைப்புச் சட்டம். அந்த அரசமைப்புச் சட்டம் இயற்றப்பட்டு 70 ஆண்டுகள் ஆகும் நிலையில், அதன் மிக முக்கிய உறுப்பான இந்தச் சமத்துவ உரிமைக்கு, இப்போது பா.ஜ.க அரசு வேட்டு வைத்திருக்கிறது.
“பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து, இந்தியாவை நோக்கிவரும் அனைவரையும் ஏற்றுக் கொள்வோம்!’’ என்று சொல்லி இருந்தால், அதுவே இந்தியாவின் சமத்துவ அடையாளத்துக்குச் சான்றாக இருக்க முடியும். ஆனால், சட்டத் திருத்தமோ முஸ்லிம் அல்லாத அனைவரையும் என்று சொல்லி ஒரு குறிப்பிட்ட மதத்தை மட்டும் விலக்கி வைக்கிறது. இது நமது அரசமைப்பின் அடிப்படையையே தகர்க்கிற செயல்.
அகதிகள் நலனுக்கான பன்னாட்டு ஒப்பந்தம் எதிலும் இந்தியா கையொப்பமிடவில்லை. அகதிகளுக்கான அய்.நா.வின் தீர்மானத்தையும் இந்தியா ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே, இந்தியாவை நோக்கிவரும் எந்த நாட்டு அகதிகளும் அகதிகள் அல்ல; சட்ட விரோதக் குடியேறிகள்தான். இதுவே இந்தியாவின் பார்வை.
இப்படியிருக்க, இந்தக் குடியுரிமை திருத்த மசோதா, சட்ட விரோதக் குடியேறிகளையே மதத்தின் அடிப்படையில் பிரித்து வகைப்படுத்துகிறது. மேலும், எங்கோ உள்ள ஆப்கானிஸ்தானில் இருந்துகூட இந்துக்கள் இங்கு வந்து குடியேறலாம்; ஆனால், அருகில் இருக்கும் இலங்கையில் இருந்து வந்தால் குடியுரிமை இல்லை என்பதும் முரண்பாடாக இருக்கிறது.
ஈழத் தமிழர்களுக்கு ஏன் குடியுரிமை இல்லை எனக் கேட்டால், அவர்கள் மத வழியில் ஒடுக்கப்படவில்லை! என்கிறது மோடி அரசு. அப்படியெனில், மத வழியில் ஒடுக்கப்பட்ட ரோஹிங்யாக்களுக்கு ஏன் குடியுரிமை இல்லை எனக் கேட்டால், அவர்கள் மியான்மார் அரசுக்கு எதிராகப் போராடினார்கள்! என்கிறது. சரி சீன அரசுக்கு எதிராகப் போராடும் திபெத்தியர்களைத் திருப்பி அனுப்பி விடுவீர்களா? எனக் கேட்டால், பா.ஜ.க அரசிடம் பதில் இல்லை.
முஸ்லிம்களையும் ஈழத் தமிழர்களையும் போலவே பா.ஜ.கவின் வெறுப்புப் பட்டியலில் உள்ளவர்கள்தான் கிறித்துவர்களும். ஆனால், கிறித்துவர்களை இந்தக் குடியுரிமை மசோதா விலக்கி வைக்கவில்லை. காரணம் அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் ஆர்.எஸ்.எஸ்.ஸின் கிளைகள் வேர் பரப்பி உள்ளன. “ஷாகா’’க்கள்கூட நடக்கின்றன. கட்டற்ற நிதி அங்கிருந்து இங்கு இவர்களுக்கு வந்தடைகின்றது. எனவே, அங்குள்ள தமது இருப்பை தற்காத்துக் கொள்ள பா.ஜ.க இச்சூழ்ச்சியைச் செய்துள்ளது.
அண்டை நாடுகளில் துன்புறுத்தலுக்கு ஆளாகி, இந்தியாவிற்கு அகதிகளாக வந்தவர்களுக்கு குடியுரிமை வழங்க, பல்வேறு காலகட்டத்தில் நம்முடைய அரசுகள் முயற்சிகளை எடுத்துள்ளன. ஆனால், சுதந்திர இந்தியாவில் அத்தகைய குடியுரிமையை வழங்குவதில், மதத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்டும் வகையில் இப்போதைய பா.ஜ.க. அரசு சட்டமியற்றி இருப்பது, அரசியல் சாஸனத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் மத்தியில் அதிர்ச்சியைத் தோற்றுவித்துள்ளது.
இந்தக் குடியுரிமைச் சட்டத்தை மட்டும் தனித்துப் பார்க்காமல், தேசிய குடிமக்கள் பதிவேட்டைத் தயாரிக்கும் மத்திய அரசின் மற்றொரு முடிவுடன் இணைத்துப் பார்க்க வேண்டியுள்ளது. ஏனென்றால், பா.ஜ.க தேசியத் தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித்ஷா, குடியுரிமை பதிவேட்டுக்கு முதற்கட்டம்தான் குடியுரிமைத் திருத்தச் சட்டம் என்று கூறியுள்ளார். உச்ச நீதிமன்ற ஆணையின் அடிப்படையில், அஸ்ஸாமில் குடியுரிமைப் பதிவேடு செயல்படுத்தப்பட்டபோது, அந்த மாநிலத்தில் மோசமான விளைவை அது தோற்றுவித்தது. அங்கே 18 லட்சம் பேர் நாடற்றவர்கள் என்கிற நிலைமைக்கு ஆளாகியுள்ளனர்.
மேற்கு வங்கத்தில் வங்காள மொழி பேசும் இந்துக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் பிளவை ஏற்படுத்தும் வகையில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் அமையும். அங்கே வங்காள மொழி பேசும் முஸ்லிம்களையும், பங்களாதேசிகளையும் எப்படிப் பிரித்துப் பார்க்க முடியும்? அங்கே இந்துக்கள் குடியுரிமையைப் பெறுவதற்கு ஆதாரங்களைக் காட்டிவிட முடியும். ஆனால், வங்காள மொழி பேசினாலும் இஸ்லாமியர்களால் அவ்வளவு சுலபமாக அது நடக்காது. அஸ்ஸாமில் ஆதார்கார்டு, வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட் வைத்திருந்தவர்கள் கூட, குடியுரிமை பெற முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டது. ஆகவேதான் மேற்கு வங்கத்தில் வங்கமொழி பேசக்கூடிய இஸ்லாமியர்களிடையே இன்று அச்சம் தோன்றியுள்ளது.
ஆகவே, இந்தச் சட்டம் மதத்தின் பெயரால் மக்களிடம் பிளவை ஏற்படுத்துவதோடு, கோடிக்கணக்கானவர்களை நாடற்றவர்களாக்கக் கூடிய அபாயத்துடன் கூடியதாக இருப்பதால், எதிர்காலம் குறித்து கவலை முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ளது. அதனால்தான் இது குறித்து பலமாக எதிர்ப்பு எழுந்துள்ளது.
குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை இந்துக்கள் ஆதரிப்பார்கள் என ஆர்.எஸ்.எஸ். கணக்குப் போட்டது. ஆனால், இந்துக்களே அதிக அளவில் இதை எதிர்ப்பதால் ஆப்பசைத்த நிலையில் ஆர்.எஸ்.எஸ்.ஸும் பி.ஜே.பி.யும் அதிர்ச்சியடைந்துள்ளன.
அண்டை நாடுகள் என்னும் வரையறையில் இலங்கை, நேபாளம், மியான்மர், பூட்டான் போன்றவை இடம்பெறாதது ஏன்? என்பது எதிர்க்கட்சிகளின் முக்கிய கேள்வியாக இருந்தது. 6 சமயத்தவரைக் குறிப்பிடும் நேரத்தில் அதில் இஸ்லாமியர் இடம்பெறாதது ஏன்? என்பதும் அவர்களின் கேள்வி. அரசியல் சாசன சட்டப் பிரிவு 14ஆனது, ‘சட்டத்தின் முன் அனைவரும் சமம்’ என்று கூறுகிறது. அப்படி என்றால் குடியுரிமை வழங்குவதற்கு மதத்தை ஒரு அளவுகோலாக எப்படி கொள்ள முடியும்?
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் கண்டனம்!
“பக்கத்து நாடுகளில் அச்சுறுத்தலுக்கு ஆளாவோர் என்று வருகிறபொழுது இதில் மதம் எங்கிருந்து வந்தது? அச்சுறுத்தல் பல வகைகளிலும் நிகழும் நிலையில், அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடைக்கலம் தருவது, பாதுகாப்புத் தருவது, குடியுரிமை தருவது என்பது அறிவு நாணயமும், மனிதாபிமானமும் பின்னிப் பிணைந்த ஒன்றாகும்.
முசுலிம்களை குடியுரிமைத் திட்டத்திற்குள் கொண்டு வரக்கூடாது என்கிற – பி.ஜே.பி. _- ஆர்.எஸ்.எசுக்கே உரித்தான மதவெறித்தனக் கோட்பாட்டின் அடிப்படையை விடையாக ஏற்கெனவே எழுதி வைத்துக்கொண்டு, அதற்கு ஒத்த கணக்கை மேலே போடுவதுதான் பி.ஜே.பி.யின் வஞ்சகத் திட்டம்!
சரியான வாதமல்ல!
முசுலிம்களை மத ரீதியாகத் துன்புறுத்தாததால், அவர்கள் குடியுரிமைக்குள் வரமாட்டார்களாம். அப்படியே பார்க்கப் போனாலும், பாகிஸ்தானில் அகமதியர்களின் நிலை என்ன? ஷியா பிரிவினர் படும் அவதிகள் பா.ஜ.க. பாசிசக் கண்களுக்கு ஊனமாகத் தெரியாதா?
மியான்மா நிலை என்ன?
மியான்மாவில் ரோகிங்கியா முசுலிம்கள் படுகொலைகளுக்கு ஆளாகவில்லையா? அல்லற்பட்டு ஆற்றாது இந்தியாவுக்குள் வந்த அந்த மக்கள் முசுலிம்கள் என்பதால், இந்துத்துவா கண்களில் கருணை பிறக்காதா?
பூடான் ஏன் ஒதுக்கப்பட்டது? அங்குள்ள கிறித்துவர்கள் துயரங்களை அனுபவிக்க வில்லையா? துரத்தப்படவில்லையா?
ஈழத் தமிழர்களைக் கழித்துக் கட்டியது ஏன்?
ஈழத் தமிழர்கள் இனவாதத்தால், மத வாதத்தால் பட்ட துயரத்திற்கும், படுகொலைக்கும் (ஜெனோசைடு) ஈடாக இன்னொன்றைச் சொல்ல முடியுமா? ஈழத் தமிழர்களைக் கழித்துக் கட்டியதற்குக் காரணம், அவர்கள் தமிழர்களாகப் பிறந்ததுதானா?
“தமிழன் மாமிசம் இங்கே கிடைக்கும்’’ என்று விளம்பரப் பலகை வைக்கப்பட்டதைவிட வேறு என்ன நடக்கவேண்டும் என்று இந்த இந்துத்துவாவாதிகள் எதிர்பார்க்கின்றனர்?
ஈழத் தமிழர்களைக் கொன்றதில் பவுத்தவாதம் இல்லை என்று சொல்ல முடியுமா?
அமித்ஷா
திருச்சி சிவா
தமிழர்களை வெட்டிக் கொன்று பவுத்த சிலைகளுக்கு ‘இரத்தாபிஷேகம்’ செய்யப் பட்டதெல்லாம் இந்தப் பார்ப்பனிய ஆதிபத்திய பா.ஜ.க.வுக்கு ஒரு பொருட்டா?
தமிழ்நாட்டின் முகாம்களிலும், வெளியிலும் வாழும் 95,122 ஈழத் தமிழர் அகதிகள் குடியுரிமையற்ற அனாதைகளா?
மாநிலங்களவையில் தி.மு.க. உறுப்பினர் தோழர் திருச்சி சிவா எழுப்பினாரே ஓர் அருமையான வினா! அதுபோல குடியுரிமை மறுக்கப்பட்ட முசுலிம்களும், ஈழத் தமிழர்களும் பாதுகாப்பு முகாம்களிலேயே அடைக்கப்பட்டு விடுவார்களா?
இந்தக் கேள்வி மிக முக்கியமானதாகும். சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு அனுப்பி, அவர்கள் ஏற்காத பட்சத்தில் அம்மக்களைக் கடலில் தள்ளிவிடுவார்களா? வேதனை! வேதனை!! வெட்கக்கேடு! வெட்கக்கேடு!!
இந்தியாவில் நடப்பது இந்து ராஜ்யமா? இராம ராஜ்யம் நடக்கிறதா? சூத்திரன் சம்பூகன் தவம் செய்தான் என்பதற்காகக் கொன்றானே இராமன், அந்தப் படலம் தொடங்கப்பட்டு விட்டதா?
இந்திய அரசமைப்புச் சட்டம் – இந்துச் சட்டமா?
ஆள்வது பா.ஜ.க. தலைமையிலான அமைப்பு என்றாலும், அதன் சட்ட விரோதமான கொள்கைகளை சட்டத்தைத் தூக்கி எறிந்து விட்டு நடைமுறைப்படுத்த முடியாது என்பது நினைவில் இருக்கட்டும்.
எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அதன் நடவடிக்கையும் அரசமைப்புச் சட்டம் கண்டிப்பாக வரையறுத்துள்ள மதச்சார்பின்மை அடிப்படையில்தான் இயங்க முடியும்.
அந்த வகையில் மிக முக்கிய பிரச்சினையில் மதத்தை முன்னிறுத்தி இந்த ஆட்சியினர் பேசுவது அப்பட்டமான சட்ட மீறல் அல்லாமல் வேறு என்ன?
சென்னையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி பேரணியில் தலைவர்களுடன் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
துயரத்தில்கூட மதக் கண்ணோட்டமா?
பாதிக்கப்பட்டவர்களுக்குக் குடியுரிமை! அதுவும் குறிப்பிட்ட காலம் இந்தியாவில் வசிப் போருக்குத்தானே!
இதில் மதம் _ எங்கிருந்து வந்தது?
மதத்தால் படுகொலை செய்யப்பட்டால்தான் கொலையா? இன வாதத்தால் கொலை செய்யப் பட்டால் அது பழக்குலையா?’’ என்று ஆசிரியர் கடுமையாகக் கண்டித்துள்ளார்.
திருத்தச் சட்டத்தைத் திரும்ப பெறுக!
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் கருத்து என்பது எந்தவித அரசியல் இலாபத்தையும் எதிர்பார்த்துக் கூறப்படுவதல்ல. அது மக்களின் நலன், பாதுகாப்பு, உரிமை, நீதி சார்ந்ததாகவே இருக்கும்!
நாட்டின் ஒற்றுமையும் நல்லிணக்கமும், அரசியல் அமைப்பு சாசனமும் காப்பாற்றப்பட வேண்டும், அதன் வழி அமைதியான, நிறைவான, சமூக நீதியுடன் கூடிய வாழ்வு அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே ஆசிரியரின் நோக்கம்.
எனவே, மத்தியிலும் சரி, மாநிலத்திலும் சரி ஆட்சியாளர்கள், ஆசிரியர் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு பிரச்சனையிலும் என்ன கூறுகிறார் என்பதை ஆழமாகக் கருத்தில் கொண்டு, நிதானமாகச் சிந்தித்து, தங்கள் முடிவுகளைச் சரி செய்துகொள்ள வேண்டும். அப்படிச் செய்வது ஆட்சியாளர்களுக்கும் நல்லது; மக்களுக்கும் நல்லது.
எனவே, உள்நோக்கத்துடன், ஒருதலைச் சார்பாகக் கொண்டுவரப்பட்ட இச்சட்டத் திருத்தத்தை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டியது பி.ஜே.பி. அரசின் கட்டாயக் கடமையாகும். இல்லையேல் அதற்குரிய விளைவைச் சந்திக்கவும், விலையைக் கொடுக்கவும் வேண்டி வரும் என்பதை எச்சரிக்கையாகக் கூற விரும்புகிறோம்!
– மஞ்சை வசந்தன்