முன்பு ஒரு சமயம் அரக்கர்கள் வலிமை மிகுந்து விளங்கினார்கள். அவர்கள் தேவர்களைத் துன்புறுத்தி அவர்களைப் பல கொடுமைகளுக்காளாக்கினார்கள். தேவர்கள் ஒன்றுகூடிப் பிரம்மதேவனைச் சரண் அடைந்தார்கள்.
“பிரபோ, தாங்கள்தான் எங்களை ரக்ஷிக்க வேண்டும். அரக்கர்கள் நாளுக்கு நாள் வலிமை கொண்டு எங்களை விரட்டி வருகிறார்கள். எங்கள் காரியங்களுக்கு அவர்களால் இடையூறுகள் பல நேருகின்றன. அவர்களை எதிர்த்துத் தாக்கும் சக்தி எங்களுக்கு இல்லை. எங்கள் மீது கருணை கொண்டு அரக்கர்களை வெல்லும் சக்தியும், அழிவில்லாத வாழ்வையும் அளிக்க வேண்டும்’’ என்று வேண்டினர்.
“தேவர்களே, உங்கள் கோரிக்கையை நிறைவேற்ற என் ஒருவனால் மட்டும் முடியாது. பாற்கடலில் சயனித்திருக்கும் விஷ்ணுவையும் கேட்போம்’’ என்று சொல்லி பிரம்மதேவன் அவர்களை விஷ்ணுவிடம் அழைத்துச் சென்றார்.
அவர்கள் வேண்டுகோளைக் கேட்ட விஷ்ணு, “தேவர்களே, அரக்கர்களை வெல்லும் சக்தியும், நித்தியத்துவமும் பெறுவதற்கு ஓர் உபாயமிருக்கிறது. கடலில் உள்ள அமிர்தத்தை வெளிப்படுத்தி அதைப் பருகினால் உங்களுக்கு அழிவு என்பதே இல்லாது போய்விடும். ஆயினும் உங்களால் மட்டுமே இக்காரியத்தைச் செய்ய முடியாது. உங்கள் சகோதரர்களாகிய அசுரர்களும் பரிபூரணமாக ஒத்துழைக்க வேண்டும்’’ என்றார்.
தேவர்களின் முகம் வாட்டமடைந்தது. ‘பிரபோ, அசுரர்களைக் கூட்டாகச் சேர்த்துக்கொண்டால் அவர்களும் அமிர்தத்தில் பங்கு கேட்கக் கூடுமே. அழிவற்ற வாழ்வை அசுரர்களும் அடைந்துவிட்டால் அப்புறம் எங்கள் கதி?’’ என்றனர் வேதனையோடு.
“நீங்கள் அவர்களையும் உதவிக்கு அழைத்து வாருங்கள்’’ என்றார் நாராயணன்.
தேவர்கள் ஆனந்தத்தோடு அசுரர்களிடம் ஓடினர்.
“அன்புமிக்க சகோதரர்களே, வாருங்கள். நாம் அழிவற்ற வாழ்வை அடைய சமுத்திரத்திலிருந்து அமிர்தத்தைக் கடைந்து எடுப்போம்’’ என்று அழைத்தனர்.
அழிவற்ற வாழ்க்கையை அடையும் மார்க்கத்தைக் கேட்டதும் அசுரர்கள் தேவர்களோடு தாங்கள் கொண்டிருந்த விரோதத்தை மறந்தனர். அவர்கள் விடுத்த அழைப்பை ஏற்று வந்தனர்.
மந்தர மலையைக் கொண்டு வந்து மத்தாக நிறுத்தினர். வாசுகி தாம்புக் கயிறாக மாறியது. தேவர்கள் பாம்பின் வால் பக்கத்திலே நின்றார்கள். அசுரர்கள் தலைப்பக்கத்தில் நின்று வாசுகியைப் பிடித்துக் கொண்டனர். வால் பக்கத்தில் நிற்பதை அவர்கள் விரும்பவில்லை. மதிப்புக் குறைவு என்று தலைப்பக்கமே தங்களுக்கு வேண்டுமெனக் கேட்டனர்.
இருதரப்பினரும் மலையைக் கடையத் தொடங்கினர். நீரிலே மலை சரியாக நில்லாது அடிக்கடி சாய்ந்தது. விஷ்ணு கூர்மமாக (ஆமையாக) உருவெடுத்து மலையின் கீழ் சென்று அதை தமது முதுகிலே தாங்கிக் கொண்டார். அதன்பின் மலை சாயாது நின்றது.
தேவர்களும் அசுரர்களும் உற்சாகமாக மாறி மாறி வாசுகியை இழுத்துக் கடைந்தனர். நாள்கள் நகர்ந்தனவே தவிர, கடலிலிருந்து அமிர்தம் வெளிவரவில்லை. தேவர்கள் அசுரர்களை உற்சாகப்படுத்தினர். தற்போது சிரமமாக இருந்தாலும் அமிர்தம் கிடைத்துவிட்டால் அப்புறம் அழிவே இல்லையே. ஆகவே, அவர்களும் சிரமத்தைப் பொருட்படுத்தாது மலையைக் கடைந்தனர். கடலிலிருந்து லக்ஷ்மி தோன்றினாள். ஜகஜ்ஜோதியாகப் பிரகாசிக்கும் முகக் காந்தியோடு சர்வாபரண பூஷிதையாக வெளிப்பட்ட அவளை விஷ்ணு ஏற்றுக்கொண்டார். அடுத்தாற்போல் தன்வந்திரி வெளிப்பட்டார். அவர் அனைவருக்கும் மருத்துவனாக ஆனார்.
அதன் பின்னர் சந்திரசூரியர், கல்பகத்தரு, உச்சை சிரவசு, காமதேனு, கௌஸ்துபம் ஆகியவை வெளிவந்தன. காமதேனு, பாரிஜாதம் எனப்படும் கல்பகத்தரு, உச்சை சிரவசு எனப்படும் வெள்ளைக் குதிரை ஆகிய மூன்றையும் தேவர்களுக்கு அதிபதியான இந்திரன் எடுத்துக் கொண்டான். கௌஸ்துபம் விஷ்ணுவை அடைந்தது.
முதலில் வருவதை தேவர்கள் எடுத்துக் கொள்ளட்டும். அமிர்தம் வந்ததும் தாங்கள் எடுத்துக் கொள்ளலாம் எனத் திட்டமிட்டிருந்தனர் அசுரர்கள். தங்கள் திட்டத்தைத் தேவர்கள் அறிந்து கொள்ளாதிருக்கவே, அவர்களிடம் பிரியம் கொண்டவர்கள் போல், முதலில் வெளிப்பட்டவற்றைத் தேவர்களே எடுத்துக்கொள்ள அனுமதித்தனர்.
அனைவரும் எதிர்பார்த்திருந்த அமிர்தம் வெளிப்பட்டது. அப்போது அதன் சில துளிகள் நாற்புறமும் சிந்தவே அவற்றிலிருந்து அழகிய ரூபலாவண்யமுள்ள மங்கையர்களாக அப்சரசுகள் தோன்றினர்’’ என்கிறது இந்து மதம்.
மேற்கண்ட செய்திகளை சிந்தித்துப் பாருங்கள். கடலைக் கடைந்தால் அமிர்தம் வரும் என்பது அறிவியல்படி சரியா? கடலைக் கடையத்தான் முடியுமா? கடல் என்பது பரந்து விரிந்த நீர்நிலை. அதைக் கடைந்தால் உப்பு வேண்டுமானால் வருமே தவிர, அமிர்தம் எப்படி வரும்?
அமிர்தம் உண்டால் இறக்க மாட்டார்கள் என்பதும் அறிவியலுக்கு முரணான கருத்து. காரணம், பிறந்த எந்த ஒருவரும் இறந்தே ஆக வேண்டும். எந்தவொரு உணவுப் பொருளாலும் இறக்காமல் இருக்கச் செய்ய முடியாது. அடுத்து, ஒரு மலையைப் பெயர்த்து வந்து கடலைக் கடைவது என்பது அறிவுக்கு ஏற்புடையதா? அது நடக்குமா? அதுவும் அந்த மலையை உருட்ட பாம்பைக் கயிறாகப் பயன்படுத்துவது என்பது பைத்தியக்காரத்தனம் அல்லவா?
மேலும் கடல் கடையப்பட்டபோது அதிலிருந்து லட்சுமி, தன்வந்திரி ஆகியோரும், சூரியன், சந்திரன், காமதேனு என்று பல வந்தன என்பது அடிமுட்டாள்தனமல்லவா? இப்படி அப்பட்டமான மூடக் கருத்துகளைக் கூறும் இந்து மதம்தான் அறிவியலுக்கு அடிப்படையா?
சிகரம்
(சொடுக்குவோம்)