தலையங்கம் : அண்ணா பல்கலைக்கழகத்தை அபகரிக்க முயலும் மத்திய அரசு! துணை நிற்கும் அ.தி.மு.க. அரசு!

ஜனவரி 01-15 2020

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தைப் பிரித்து இரண்டு நிறுவனங்களாக உருவாக்குவது தொடர்பான சாத்தியக் கூறுகளை ஆராய

5 அமைச்சர்கள் கொண்ட குழு அமைக்கப் பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டின் அறிவு அடையாளமாக விளங்கும் அண்ணா பல்கலைக்கழகத்தை சிறப்பு அந்தஸ்து பெற்ற நிறுவனம் (Institute of Eminence)  என்னும் பெயரில் மத்திய அரசிடம் தாரை வார்ப்பதற்கான முயற்சியை தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ளது.

தமிழ்நாட்டின் புகழ்பெற்ற நிறுவனமாக விளங்கிய கிண்டி பொறியியல் கல்லூரியை மய்யப்படுத்தி, எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழகம், பின்னர் தமிழ்நாட்டின் அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் இணைப்பை ஏற்படுத்தி  (Affiliation) ஒருங்கிணைக்கக் கூடிய முக்கியமான பல்கலைக்கழகமாகத் திகழ்ந்துவருகிறது.

தமிழக அரசின் ஒப்புதல் – ஏற்க முடியாத ஒன்று!

பொறியியல் துறையில் உலக அளவில் சிறந்த மாணவர்களை உருவாக்கும் நிறுவனமாகப் புகழ்பெற்று விளங்கும் அண்ணா பல்கலைக்கழகம், முற்றிலும் தமிழ்நாட்டின் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட ஒன்றாகும். ஏழை, எளிய மாணவர்களும் மிகத் தரமான, புகழ்வாய்ந்த இப் பல்கலைக்கழகத்தில் படிக்கும் வாய்ப்பைத் தமிழ்நாடு அரசு ஏற்படுத்தி வைத்திருக்கிறது. இத்தகைய சூழ்நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தை சிறப்பு அந்தஸ்து என்கிற பெயருக்காக மத்திய அரசிடம் ஒப்படைப்பதற்கு, தமிழ்நாட்டை ஆளும் அதிமுக ஒப்புதல் தருவதற்கான வேலைகளைத் தொடங்கியிருப்பது ஏற்க முடியாத ஒன்றாகும். (ஏறத்தாழ அதற்கான பணிகளை முடித்துவிட்டார்கள் என்று தெரிகிறது).

அண்ணா பல்கலைக்கழகத்தை பறிக்க நினைப்பது எத்தகைய மோசடி!

அப்படி சிறப்பு அந்தஸ்து’ பெற்ற நிறுவனமாக மாற்றப்பட்டு மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டால், 1000 கோடி ரூபாய் நிதி வழங்கப்படும் என்பதெல்லாம் அண்ணா பல்கலைக்கழகத்தினை விழுங்குவதற்காகச் செய்யப்படும் பம்மாத்து வேலையே! நிதி ஒதுக்கீடு செய்து பல்கலைக்கழகத்தை வளர்க்க வேண்டுமென்றால், தாராளமாக நிதி வழங்கட்டும். அதற்காக தன் அதிகாரத்துக்குள் கொண்டுவர முயற்சிக்கலாமா? அதன் நோக்கம் என்ன? உலகத் தரமான புதிய கல்வி நிறுவனத்தை மத்திய அரசே நிதி வழங்கி, மாநில அரசை உருவாக்கச் செய்யலாமே? அதை விடுத்து அண்ணா பல்கலைக்கழகத்தைப் பறிக்க நினைப்பது எத்தகைய மோசடி!

முழுமையாக அண்ணா  பல்கலைக் கழகத்தை அபகரிப்பதற்காக இப்படி சிறப்பு அந்தஸ்து, ரூ.1000 கோடி நிதி என்றெல்லாம் மிட்டாய்களைக் காட்டி ஏமாற்றலாம் என்கிற நினைப்பா?

மத்திய அரசின் வாக்குறுதி நம்பகத்திற்குரியதா?

அண்ணா பல்கலைக்கழகம் மத்திய அரசின் கைகளுக்குப் போனால், அதனால் துளியேனும் தமிழக மக்களுக்குப் பயனுண்டா?

இந்த சந்தேகத்தால்தான், ‘தமிழ்நாட்டில் பின்பற்றப்படும் இடஒதுக்கீட்டு முறையைப் பின்பற்ற முடியுமா?’ என்று மீண்டும் மீண்டும் தமிழக அரசு கேட்டுக்கொண்டிருந்த போது, மவுனமாக இருந்த மத்திய அரசு, இம்மாதம் தமிழக அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில், மாநில அரசு உருவாக்கியுள்ள சட்டப்படி இடஒதுக்கீட்டைப் பின்பற்றலாம் என்று விளக்கமளித்திருப்பதாகத் தெரிவிக்கிறது தமிழ்நாடு அரசின் ஆணை.

ஆனால், இது நம்பகத்திற்குரியதா?

எப்படி அவர்களால் இடஒதுக்கீடு தர முடியும்?

தமிழ்நாட்டில் 69% இடஒதுக்கீடு பிற் படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கும், அதில் உள்ஒதுக்கீடுகளாக இஸ்லாமியருக்கும், அருந்ததியர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசின் கைகளுக்குப் போன பிறகு, இந்த இடஒதுக்கீட்டு முறையை எப்படி அவர்கள் பின்பற்றுவார்கள்? இப்போது கடிதத்தில் விளக்கமளித்தாலும், அதை நடைமுறைப் படுத்தும்போது எப்படி அவர்களால் இடஒதுக்கீடு தர முடியும்?

“பெருமளவில் வெளிநாட்டு மாணவர் களுக்கு இடம் தரவேண்டும்; தரத்தின் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்பட வேண்டும்; வெளிநாட்டுப் பேராசிரியர்கள் அல்லது வெளிநாட்டில் படித்தோரை பணியில் அமர்த்த வேண்டும்‘’ என்று விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளே மிகத் தெளிவாக சூழலை விளக்குகின்றன _- ஒருபோதும் அங்கே இட ஒதுக்கீட்டுக்கு வழியில்லை என்பதை!

மாய்மாலம் அல்லாமல் வேறு என்ன?

இன்று எந்த நுழைவுத் தேர்வும் இல்லாமல், அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்க வாய்ப்பு பெறும் தமிழக மாணவர்கள் மீது, நுழைவுத் தேர்வு திணிக்கப்படும். நீட்டுக்குப் பிறகு மருத்துவக் கல்லூரிகளில் என்ன நிலைமையோ, அதுதானே அடுத்து அண்ணா பல்கலைக் கழகத்துக்கும்!  JEE, NEET போன்ற நுழைவுத் தேர்வுகள் வந்தாலே ஏழை, எளிய மக்களுக்கும், உயர் கல்விக்கும் தொடர்பு அறுந்து போகுமே! இதில் இடஒதுக்கீடு பின்பற்றப்படும் என்று சொல்வதெல்லாம் மாய்மாலம் அல்லாமல் வேறு என்ன?

நீட்’ வந்தாலும் மருத்துவக் கல்லூரிகளிலும் 69% இடஒதுக்கீட்டுக்கு பாதிப்பு இருக்காது என்றுதான் சொன்னார்கள். ஆனால், இன்று அதனால் நம் மக்கள் பயனடைகிறார்களா? இல்லை; இல்லவே இல்லை என்பது மிக வெளிப்படையாகத் தெரிகிறதே!

உயர் மருத்துவப் படிப்புகளுக்கு தமிழ் நாட்டில் நாம் உருவாக்கிய கல்லூரிகளில்கூட பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு இல்லை என்கிற நிலையை இன்று மத்திய அரசு உருவாக்கியிருக்கிறதே! இதுதானே நாளை அண்ணா பல்கலைக்கழகத்துக்கும்!

அப்பட்டமான அராஜகம் அல்லவா?

“நீ அரிசி கொண்டுவா! நான் உமி கொண்டு வருகிறேன். இரண்டு பேரும் ஊதி ஊதித் தின்போம்!’’ என்பதைப் போன்ற ஏமாற்று வித்தையைத்தானே அண்ணா பல்கலைக்கழக விசயத்தில் மத்திய அரசு பயன்படுத்த நினைக்கிறது? அண்ணா பல்கலைக் கழகத்தின் முக்கிய வளாகமான கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா பொறியியல் கல்லூரி, குரோம்பேட்டையிலுள்ள ‘மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி’ உள்ளிட்ட நான்கு நிறுவனங்களை ‘இன்ஸ்டிடியூட் ஆஃப் எமினென்ஸ்’ என்னும் பெயரில் அப்படியே மத்திய அரசுக்குத் தந்துவிட்டு, அந்த இடத்தைக் காலி செய்துவிட்டு, புதிய இடத்தில், புதிய பல்கலைக்கழகத்தை உருவாக்கிக்கொண்டு, அதற்கு அண்ணா பல்கலைக்கழகம் என்று பெயரை வைத்துக்கொண்டு, குடியேறுங்கள் என்று சொல்வது அப்பட்டமான அராஜகம் அல்லவா?

யார் வரிப்பணத்தில், யாருக்காக உருவாக்கப்பட்ட நிறுவனங்களை, யார் எடுத்துச் செல்வது?

‘நடக்காது’ என்று தெரிந்தே சொல்லப்படும் ஏமாற்றுப் பேச்சுகள் தானே!

சிறப்பு அந்தஸ்து பெற்ற நிறுவனம் என்று மாறினால், வெளிநாட்டு மாணவர்களுக்கும், உள்நாட்டு மாணவர்களுக்கும் கட்டணத்தை, முற்றிலும் தன்னாட்சி பெற்ற அந்த பல்கலைக்கழகமே முடிவு செய்துகொள்ளலாம் என்று மத்திய அரசின் பல்கலைக்கழக மானியக்குழு  (UGC) 2017-இல் செய்த அறிவிப்பு சொல்கிறது. அப்படியென்றால் இன்று ஏழை, எளிய மாணவர்களும் படிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகத்தில் நுழையும் வாய்ப்பு முற்றாகப் பறிக்கப்படப் போகிறது என்றுதானே அர்த்தம்? எவ்வளவு வேண்டுமானால் கட்டணத்தை உயர்த்திக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு, அதனால் மாணவர்கள் பாதிக்காத வண்ணம் அவர்களுக்கு கடன்களை அள்ளி வழங்குங்கள் என்று அறிவுரை சொல்கிறது அந்த அறிவிப்பு! அப்பப்பப்பா… எவ்வளவு அக்கறை? உள்ளே நுழைய நுழைவுத் தேர்வு, அதற்குப் படிக்க இலட்சக்கணக்கில் செலவு, கட்டணமாக பல இலட்சங்கள், அதற்குக் கடன் வாங்கிக் கொள்ளுங்கள் என்பதெல்லாம், ‘நடக்காது’ என்று தெரிந்தே சொல்லப்படும் ஏமாற்றுப் பேச்சுகள்தானே!

பார்ப்பனர்களைப் பணியமர்த்துவதற்கான ஏற்பாடு

பணியாளர்கள், பேராசிரியர்கள் நியமனத்திலும் இட ஒதுக்கீடு இருக்காதே! வெளிநாட்டில் வேலையில்லாமல் திரும்பும் பார்ப்பனர்களைப் பணியமர்த்துவதற்கான ஏற்பாடுதானே – ‘வெளிநாட்டிலிருந்து வருவோரைப் பணியமர்த்து’ என்னும் ஆணை.

தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியைத் தடுக்க இன்னும் இன்னும் எத்தனை சூழ்ச்சிப் பொறிகள்? அத்தனைக்கும் வளைந்து கொடுத்து, ஆணைக்கு அடிபணிந்து, ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறதே அதிமுக அரசு, இதைவிட வெட்கக்கேடு வேறு வேண்டுமா?

பார்ப்பன ஆதிக்கம் நிறைந்த இன்னொரு அய்.அய்.டி.யாக்கி, அண்ணா பல்கலைக் கழகத்தை அபகரிக்க முயற்சி செய்கிறார்கள் என்பது அப்பட்டமான உண்மையாயிற்றே!

உலகம் முழுக்க சிறப்புப் பெற்றிருக்கும் நிறுவனம்தான் அண்ணா பல்கலைக் கழகம்!

ஒரு நிறுவனம் ‘சிறப்பு அந்தஸ்து’ பெறுவதும், உலக அளவில் மதிக்கப்பெறுவதும் மத்திய அரசு தருகிற ‘சிறப்பு அந்தஸ்து’ என்னும் பெயரை வைத்து அல்ல. அது தருவதாகச் சொல்கிற நிதியைப் பொறுத்தும் அல்ல. அண்ணா பல்கலைக்கழகம் நீண்ட காலமாகவே உலகப் புகழ்பெற்ற நிறுவனம்தான்; ஏழை, எளிய மாணவர்களை சிறந்தவர்களாக்கி, உலகம் முழுக்க சிறப்புப் பெற்றிருக்கும் நிறுவனம்தான். இதில் மத்திய அரசு வந்து பெயர் தருவதற்கு என்ன இருக்கிறது?

இதைத்தான் அண்ணா பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் ஒருவரும், பிற கல்வியாளர்களும் கூறுகின்றனர்.

ஏமாற்று வித்தைகள் தமிழ்நாட்டில் பலிக்காது!

நிருவாக வசதிகளுக்காக அண்ணா பல்கலைக்கழகம் பிரிக்கப்படுவதைப் பற்றி யாரும் மறுப்புச் சொல்லப் போவதில்லை; முன்பே அது நடந்ததுதான். புதிய பல்கலைக்கழகங்கள் உருவானால், அவையும் வரவேற்கத்தக்கவையே! ஆனால், இப்போது செய்யப்படும் நடவடிக்கை அத்தகைய ஒன்றல்ல. மாறாக, அண்ணா பல்கலைக்கழகத்தை முழுவதும் பறித்துக் கொண்டு, அந்தப் பெயரை மட்டும் எடுத்துக் கொண்டு போலியாக ஒன்றை மாநில அரசிடம் உருவாக்கச் சொல்வது.

எப்பாடு பட்டேனும் அண்ணா பல்கலைக்கழகத்தைக் காப்போம்!

இத்தகைய ஏமாற்று வித்தைகள் தமிழ்நாட்டில் பலிக்காது; நடக்காது! தமிழக மாணவர்களின் மருத்துவர் கனவை ‘நீட்’டைக் கொண்டு பறித்த மத்திய அரசு, தமிழ்நாட்டின் பொறியியல் கல்விக் கட்டமைப்பையும் தகர்க்க முனைவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. கடுமையான மாணவர் போராட்டம் வெடிக்கும் என்று எச்சரிக்கை செய்கிறோம்.

எப்பாடு பட்டேனும் அண்ணா பல்கலைக்கழகத்தைக் காப்போம்!

– கி.வீரமணி,

ஆசிரியர்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *