தமிழ்மொழி குறித்தும் _ தமிழ்நாட்டுக்கு அப்பால் பரவி வாழ்ந்து வருகின்ற தமிழ் இன மக்கள் குறித்தும் ஆராய்ச்சி செய்து வருகின்ற அப்பாசாமி முருகையன் அவர்கள் பன்மொழிகளில் புலமை வாய்ந்தவர், பல நூல்களின் படைப்பாளர்.
உலகின் பல நாடுகளில் வாழ்ந்து வருகின்ற தமிழ் இன மக்களிடையே மாறி வருகின்ற நிலைமைகள் குறித்துக் கண்டறியும் ஆராய்ச்சி செய்து வருகின்றார்.
அவர், “ரீயூனியன் தீவு’’ மற்றும் சில நாடுகளில் தமிழ்மொழியின் நிலை குறித்து குறிப்பிட்டுள்ளது வருமாறு:
“பிரெஞ்சு அதிகாரம் படைத்த ரீயூனியன் தீவில் மாரியம்மன் கோவில்களும், மதுரைவீரன் கோவில்களும் உள்ளன. அக் கோவில்களில் தற்போது சமஸ்கிருதப் பார்ப்பனப் புரோகிதர்களால் தமிழ் மொழியானது புறக்கணிக்கப்படுகிறது. சமஸ்கிருத மொழி அடிப்படையிலான வழிபாடுகள் மட்டுமே நடத்தப்படுகின்றன. அது மட்டுமல்லாது _ கோவில்களிலும் சைவ _ அசைவக் கடவுளர் கோவில்கள் எனத் தனித்தனியாகப் பிரிக்கப்படுவதும் அதிகரித்து வருகின்றது.
ரீயூனியனின் பக்கத்திலுள்ள தீவுகளிலிருந்து அந்த தீவுப் பகுதியில் பரப்பப்பட்டு ஊடுருவுகின்ற வழிமுறைக் கோட்பாடுகள் என்பன பார்ப்பனரல்லாதார் வழமையாகக் கொண்டுள்ள நடைமுறை வழிகளுக்கு எதிரானதாக அமைந்துள்ளன.
டிரினிடாட் தீவிலிருந்து அங்கு பயிற்சி எடுத்து வந்துள்ள பார்ப்பன புரோகிதர்கள் ரீயூனியன் தீவில் உள்ள தமிழர் கோவில்களின் அன்றாட நிகழ்வுகளைக் கேலி செய்து கேள்விக்குள்ளாக்கி வருகின்றனர். இவ்வாறு, தமிழ்மொழியின் அடிப்படையிலான தமிழன் என்னும் அடையாளமானது, ரீயூனியனில் சிதைக்கப்படும் முயற்சிகள் வேகமாக அரங்கேறி வருகின்றன. உலக அளவில் ஓர் இன அடையாளம் நிலைப்பதற்கு முக்கிய கருவியாகவும், அடிப்படையாகவும் விளங்குவது தாய்மொழியே ஆகும். மலேசியா, சிங்கப்பூர், மொரிசியஸ், ரீயூனியன், குவாடிலோப், மார்ட்டினி க்யூ ஆகிய நாடு _ தீவுகளில் தமிழ் மொழியின் நிலையை உயர்த்திட வேண்டியதும், தமிழ் மொழியின் பயன்பாடு தமிழர்களிடையே அதிகரிக்கச் செய்ய வேண்டியதும் கட்டாயமாகும்.
தமிழ் இன வழிவந்த மக்கள், இந்தியாவிற்கு வெளியே அதிக எண்ணிக்கையில் வசிக்கின்றனர். தமிழர் பண்பாட்டு _ கலாச்சார நடைமுறைகளிலிருந்து அவர்கள் வெகு தொலைவுக்குச் சென்றுவிட்டனர். தமிழர் பண்பாடுகளை அவர்களிடையே நிலைபெறச் செய்வதற்கு இது எதிராக உள்ளது. தென் ஆசியா தழுவிய தமிழர்கள் மத்தியில், மதம் என்பது அவர்களது நம்பிக்கையின் குறியீடாக மட்டுமே உள்ளது. அது தமிழ்மொழியின் மீது தாக்கம் எதையும் கொண்டிருக்கவில்லை.
தமிழ் மொழியைப் படிப்பது, தமிழில் எழுதுவது என்பதும் மாறிவிட்டது; இல்லாமல் போய்விட்டது. உதட்டளவில் பேசப்படும் மொழியாகத் தமிழ் உள்ளது. அன்றாட நடப்புகளில் தமிழின் பயன்பாடு மிகவும் குறைந்துள்ளது மட்டுமின்றி, பலருக்கும் தமிழைப் படிக்கவும், தமிழில் பேசவும் தெரியவில்லை.
மொரிசியசில், மாரியம்மன் கோவில் மற்றும் பிற கோவில் விழாக்களிலும், இறுதி நிகழ்வுகள், குடும்ப விழாக்கள் போன்ற சமூக _ மத அடிப்படையிலானவற்றில் தமிழ்மொழிக்கு முக்கியத்துவம் தரப்படுகின்றது. இந்த வகையில்தான் தமிழ்மொழிக்கு அங்கு சிறப்புத் தன்மை நிலவுகிறது. பல நாடுகளில் வசித்து வரும் தமிழர்களால் தமிழ் இனம் சார்ந்தவர் என்பதற்கான பல அடையாளக் குறியீடுகளில் ஒன்றாக மட்டுமே தமிழ் மொழி பயன்படுத்தப்பட்டு வருகின்றது.’’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
– முகில், சென்னை-11
(நன்றி : “Times of india” 2.11.2019)