நன்றிக்கு நல்முத்தாய்
“அய்யாவின் அடிச்சுவட்டில்” ….
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார் (குறள் 104)
நான் அறிந்த வரை அதை வாழ்க்கையில் கடைப்பிடிப்பவர்கள் தந்தை பெரியார் அவர்களும், அவரது உண்மையான மாணவர் ஆசிரியர் வீரமணி அவர்களும் ஆவார். ஒரு முறை கோவையில் ஒரு கூட்டம் முடிந்ததும் ஒரு வீட்டிற்கு வண்டியை விடச் சொல்லியுள்ளார் பெரியார். அங்கு சென்றதும் வீட்டுக்காரரிடம் அவருடைய வாழ்விணையரை வரச் சொல்லியிருக்கின்றார். அவர் வந்ததும் “அம்மா! மிக்க நன்றி! வெங்காயத்தில் இத்தனை விதமாகச் சட்டினி செய்ய முடியும் என்று எனக்குத் தெரியாது. ஒவ்வொன்றும் நன்றாக இருந்தது. நல்லா சாப்பிட்டேன். நன்றி சொல்லத்தான் வந்தேன்!” என்று சொல்லிவிட்டு, அவருடைய துணைவரிடம், “அம்மாவை நன்கு பார்த்துக் கொள்ளுங்கள்!” என்றாராம். அந்த வீடு சிகாகோ கண்ணகி விசுவநாதன் அவர்கள் வீடுதான்!
பேராசிரியர் நன்னன் எழுதியுள்ளார். கூட்டம் முடிந்ததும் அவர் போன்று ஏற்பாடு செய்தவர்கள் குறிப்பு கொடுப்பார்களாம். அவர் அனைவர்க்கும் நன்றி சொல்வார், தெரிவித்து ‘விடுதலை’யில் எழுதுவார். ஒருமுறை நன்னனிடம் கோபித்துக் கொண்டாராம். பல பெயர்களை எழுதிக் கொடுத்தவர்கள் கூட்டத்திற்கு மின்சாரம் வழங்கியவர் பெயரை எழுத மறந்து விட்டார்களாம்.
அதே போல மானமிகு ஆசிரியர் அவர்கள் சிறு நன்றியைக் கூட மறக்க மாட்டார். இந்த முறை மாநாட்டுக்கு வந்தபோது – இரண்டு நாள் மாநாடு – மூச்சு விடக்கூட நேரமில்லை. மாநாடு முடிந்த மறுநாள் காலை நிறைய வேலை. இருந்தாலும் அவருடைய பழைய உபசரிப்பாளர் – முதுமையானவர் – அய்யா தில்லைராஜாவை ஈழத்து நண்பரை – உடல் நலம் விசாரித்தே ஆக வேண்டும் என்று திருமதி. புசுபராணியுடன் சென்று விசாரித்தார். அதேபோல சிகாகோவில் அவரை முதன்முதல் வந்தபோது தங்கவைத்து விருந்தோம்பிய (அப்போது நான் தாயகத்தில் இருந்தேன்) திரு.இராம்மோகன் அவர்கள் உடல் நலம் குன்றியுள்ளதை அறிந்து சென்று பார்த்தார். அவரின் வாழ்விணையர் மீனா அவர்களே மறந்துவிட்ட பலவற்றை நினைவு கூர்ந்தார்.
எனக்கு மிகவும் கோபம் வந்தபோது ஒரு முறை ஆசிரியரிடம் கேட்டேன், “இவர்கள் எல்லாம் கொஞ்சங்கூட நன்றியில்லாமல் இருக்கின்றார்களே, அவர்களிடம் ஏன் பேசுகின்றீர்கள் – பார்க்கின்றீர்கள் – அவர்களுக்கு உதவுகின்றீர்கள்’’ என்று! அவர், தந்தை பெரியார் சொன்னதைத்தான் என்னிடம் சொன்னார்:
“நாம் செய்ததற்காக அவர்கள் நம்மிடம் நன்றியுடன் இருப்பார்கள் என்று செய்தால் அது கீழ்த்தரம். நன்றி பெற்றவர்கள் அவர்களாக நினைத்தால் சரி; செய்தவர் எதிர்பார்த்தல் தவறு’’ என்றார்.
சுமார் 28 ஆண்டுகட்கு முன்னர் நடந்த அவரது இதய அறுவை சிகிச்சை பற்றி அவர் தொடர்ந்து எழுதி வரும் “அய்யாவின் அடிச்சுவட்டில்…” என்கிற வாழ் சுய சரிதையில் எழுதியுள்ளதைப் படித்துப் பாருங்கள்! அனைத்தையும் குறிப்பெடுத்து, பெயர்களையும் மறக்காமல் எழுதியுள்ளார்.
எந்தக் கெட்டப் பழக்கமும் இல்லாத ஒருவரின், ‘நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்’ என்கிற நன்றிமிக்க வரிகள் நன்றித் திருவிழாவின் நல்முத்தாய் வெளியிடப் பட்டிருக்கின்றது – “உண்மை” டிசம்பர் 1-15 2019 இதழில்.
வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!
– மருத்துவர் சோம .இளங்கோவன்,
அமெரிக்கா
அத்தனையும் முத்துக்கள்!
ஆசிரியருக்கு வணக்கம். ‘உண்மை’ நவம்பர் 1-15 இதழ்களைப் படித்தேன். இதழில் இடம்பெற்று இருந்த கதை, கட்டுரைகள் யாவும் மிகவும் சிறப்பாக இருந்தன. சாமியார்களைப் பற்றிய கட்டுரையில் அவர்களின் உண்மையான முகம் தோலுரித்துக் காட்டப்பட்டுள்ளது. ‘அசுரன்’ திரைப்பட விமர்சனம் மிக அருமை, கதையும் படிக்கப் படிக்க இனிமையாக இருந்தது. ‘சிறந்த நூலிலிருந்து சில பகுதிகள்’ இம்முறை மாறுபட்ட கோணத்தில் சிந்திக்கத் தூண்டியது. தங்களுடைய பணி சிறக்க வாழ்த்துகள்!
– ப.கார்த்திக், உலகபுரம்,
உலகப்பன் அருமையிலும் அருமை!
மதிப்புமிகு ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம். ‘உண்மை’யின் தலையங்கம் படித்தேன். இலங்கையின் இன்றைய அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் கோரமான கொலைகளை உலகமே மறந்தாலும் தமிழ்நாட்டு மக்கள் மறக்கவும் மாட்டார்கள்; மன்னிக்கவும் மாட்டார்கள். உலகின் முதல், இரண்டாம் போரைப் பற்றிப் படித்துத்தான் தெரிந்துகொண்டோம். கோத்தபயவோ, மூன்றாம் உலகப் போரை தமிழர்கள் மீது நடத்தினார் என்றால் அது மிகையில்லை. எஞ்சியிருக்கும் ஈழத்தமிழர்கள் இனிமேலும் அஞ்சி அஞ்சி வாழ்வதைத் தடுக்க வேண்டும்.
உலகப்பன் “அருமையிலும் அருமை. கட்டுரையாளர் திருமாவேலன் எழுதிய கட்டுரைகளை, பிற தமிழ் இதழ்களில் படித்த ஞாபகம் எனக்கு. இந்த வயதிலும், வயதை வெறும் எண்ணாகக் கருதி, பெரியாரின் எண்ணங்களை, கருத்துகளை உலகெங்கும் உரக்கச் சொல்லி வருபவர் ஆசிரியர். உலகப்பன் பெயர்ப் பொருத்தம் அருமை. (இந்த உலகப்பன் முன், அம்மை, அப்பன் எல்லாம் காணாமல் போய்விடுவர்! நான் கடவுள் – அவரின் மனைவியைத்தான் குறிப்பிடுகிறேன்.)
நேயனின் கேள்வி – பதில் சிந்திக்க வைக்கின்றன.
மருத்துவரின் ‘கண் மருத்துவம்’ மீண்டும் மீண்டும் படிக்க வைத்தது. அதேபோல ‘உணவே மருந்தும்’ தொடர்ந்து நல்ல நலமான செய்திகளைத் தருகிறது. (திரு.ப.திருமாவேலன் ஊடகவியலாளர் என அறிந்தேன்) “நக்கீரன்’’ கட்டுரையும் ஆசிரியரின் மான உணர்வினை மட்டுமல்ல; வீரத்தையும் விளம்பியது.
என்றென்றும் நன்றியுடன்,
– ஞா.சிவகாமி, 5.12.2019
போரூர்
பகுத்தறிவுக் கடல் பெரியார் திடல்!
ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம். பள்ளிப் படிப்பில் கவனமாகவும் பெரியாரின் சிந்தனைகள், கொள்கைகள் இவற்றை உள்வாங்கும் அளவிற்கு திறமையுடையவராகவும் படித்துக் கொண்டே 1000 வினா விடைப் போட்டியிலும் கலந்து, எட்டாவது போட்டியாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட நான், சாதாரண குடும்பத்தில் பிறந்தவன். என்னுடைய அப்பா பேருந்து ஓட்டுநர். எனது கருத்துக்குச் செவி சாய்ப்பவராகவும் ஊக்குவிப்பவராகவும் உள்ளார்.
பல மாதங்களாக ‘உண்மை’, ‘பெரியார் பிஞ்சு’ முகவராக உள்ள கருப்புச் சட்டை தாத்தா அவர்கள் கொடுத்து வருகிறார்கள். தொடர்ந்து வாசகர்களாகவும் இருந்து வருகிறோம். இந்த உலகில் எவ்வளவு ஆன்மிக நூல்களும் பக்தி நூல்களும் பக்தியின் விளைவால் ஏற்படுகிற போதைகளும் ‘சாமி’யார்?களின் கொடுமைகளையும், ஆண் கடவுள் பெண் கடவுள் இவர்களின் ஒழுக்கமற்ற லீலைகளும், கடவுள் பெயரால் சாமியின் பெயரால், மதத்தின் பெயரால், சடங்குகள் பெயரால், மூடநம்பிக்கைகள், பெண் கொடுமைகள், கொலைகள் நடக்கும் காலகட்டத்தில் சமூகத்தில் மனித ஒழுக்கத்திற்கும் வளர்ச்சிக்கும் விதைபோடும் நூலாகவும் உள்ளது.
திருப்பாற்கடல் எங்கே இருக்கிறது? என்று தேடும் பக்த கே(£)டிகளுக்கும், பித்தர், எத்தர்களுக்கும் பகுத்தறிவுக் கடல் ஈரோட்டையும் பெரியார் திடலையும் நோக்கி வாருங்கள் என்று உறுதிபடக் கூறக் கடமைப் பட்டுள்ளேன். ‘உண்மை’, ‘பெரியார் பிஞ்சு’ ஆசிரியருக்கும், ‘அர்த்தமற்ற இந்துமதம்’ நூலை எழுதிய ஆசிரியருக்கும், இதுபோன்ற பகுத்தறிவு நூல்களை என்னைப் போன்ற இளைய சிந்தனையாளர்களுக்கு தொய்வின்றி வழங்கிவரும் முகவருக்கும், தொடரும் தொய்வில்லாப் (உங்களுடைய) பணிகளுக்கும், “பகுத்தறிவுக் கடல் பெரியார் திடலே’’ உந்துசக்தி எனக் கொண்டு இயங்கும் உங்களைப் போன்ற அறிவாசான்களுக்கும் வாழ்த்தும், பாராட்டும், சிறப்பும், உரித்தாகும். நன்றி, வணக்கம்! வாழ்த்துகள்!
இப்படிக்கு,
– மீராவாஞ்சி சண்முகி,
சிங்கிபுரம், வாழப்பாடி – 636115