சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்…. : திருக்குறள் சாஸ்திரங்களின் சாரமா?

டிசம்பர் 16-31 2019

நூல்: திருக்குறள் சாஸ்திரங்களின் சாரமா?

ஆசிரியர்:       மஞ்சை வசந்தன்

வெளியீடு:    திராவிடர் கழக (இயக்க) வெளியீடு,

                     பெரியார் திடல்,

                     84/1 (50), ஈ.வெ.கி.சம்பத் சாலை,

                     வேப்பேரி, சென்னை – 600 007. 

                     தொலைபேசி: 044-26618163

 

விலை: ரூ150. பக்கங்கள்: 196

 

 

 

‘பொருள் செயல் வகை’ என்னும் அதிகாரத்திலிருந்து,

பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்

பொருளல்லது இல்லை பொருள் (751)

என்னும் குறளை எடுத்துக்காட்டி, இக்குறள் இராமாயணத்திலிருந்து (யுத்தகாண்டம்) எடுத்து எழுதப்பட்டது என்கிறார் நாகசாமி.

இவர் எடுத்துக்காட்டும் இராமாயணக் கருத்து என்ன?

“செல்வம் உடையவன் நண்பர்கள், சுற்றத்தார் சூழ இருப்பான். உலகில் மதிப்பும் பாண்டித்துவம் உடையவனாவான். அவன் அறிவும் வீரமும் உடையவனாவான். நல்ல குணங்கள் உடைய சிறந்த மனிதனும் ஆவான்.’’

ஆனால், மேற்கண்ட குறளின் கருத்து, “மதிப்பற்ற மனிதனையும் செல்வம் மதிப்புடையவனாக்கும். எனவே, பொருளைத் தவிர ஒருவனுக்கு வேண்டிய பொருள் வேறெதுவும் இல்லை’’ என்பது.

மகாபாரதம் கூறும் கருத்துக்கும் குறள் கூறும் கருத்துக்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா? ஒப்பிட்டுச் சிந்தித்துப் பாருங்கள்.

பொருள் மனிதனுக்கு மதிப்பைத் தரவல்லது. எனவே, பொருளே முதன்மையானது என்கிறது குறள்.

ஆனால், இராமாயணம் பொருள் (செல்வம்) உடையவன் வீரம், நற்குணங்கள், புலமை, அறிவு, சுற்றம், நட்பு உடையவன் என்கிறது.

இரண்டும் வேறு வேறு கருத்துகள். அது மட்டுமல்ல. குறள் கூறுவது உலக உண்மை. பொருள்தான் எல்லாவற்றிற்கும் ஆதாரம்.

ஆனால், இராமாயணம் கூறுவது உலகில் இல்லாதது. செல்வந்தனெல்லாம் கற்றவனாயும், புலமையுள்ளவனாயும், வீரம் உள்ளவனாயும், நற்குணங்கள் உடையவனாயும் இருப்பதில்லை. எனவே, இல்லாத கருத்தைக் கூறும் இராமாயணக் கருத்திலிருந்து இக்குறள் எழுதப்பட்டது என்பது அசல் மோசடி.

மேலும், இந்த அதிகாரத்தில் உள்ள மற்ற 8 குறள்களில் வள்ளுவர், செல்வம் பற்றி பல அரிய கருத்துகளைக் கூறியுள்ளார். அவையெல்லாம் எந்த சாஸ்திரத்திலிருந்து எழுதப்பட்டவை என்று நாகசாமி எடுத்துக்காட்டி உறுதி செய்யாது, இந்த அதிகாரத்தின் கடைசி குறளான,

ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள்

ஏனை இரண்டும் ஒருங்கு (760)

என்னும் குறளை எடுத்துக்காட்டி, இது காமசூத்திரத்திலிருந்து (மி.மிமி.15 tஷீ 17) கருத்து எடுத்து எழுதப்பட்டது என்கிறார் நாகசாமி.

காமசூத்திரம் கூறும் கருத்து என்ன?

“பொருள் உயர்ந்தது. பொருள் வழியே உலக வாழ்வு, காமம் உணரப்படுகிறது’’ என்பது.

ஆனால், மேற்கண்ட குறளின் கருத்து என்ன?

“நல்ல பொருளை அதிகம் ஈட்டியவர்களுக்கு அறம், இன்பம் இரண்டும் மிக எளிமையானவை.’’

இக்கருத்துக்கும் மேற்கண்ட குறளின் கருத்துக்கும் ஏதாவது தொடர்போ, ஒப்புமையோ உள்ளதா? ஒப்பிட்டுப் பாருங்கள்.

பொருள் இருந்தால் இன்பம் கிடைக்கும் என்கிறது காமசூத்திரம்.

ஆனால், அறம், பொருள், இன்பம் என்னும் மூன்றினுள் பொருள் மிகுதியாக ஈட்டப்படின் அறச் செயல்களும், இன்பம் துய்த்தலும் எளிது என்கிறது குறள். இரண்டும் வேறு வேறு கருத்துகள்.

“பொருள் உள்ளவர்களைப் புகழ்ந்து போற்றுவதும் இல்லாதவர்களை இகழ்ந்து தூற்றுவதும்தான் இந்த உலக நடப்பாக உள்ளது.’’ (752)

“பொருள் என்னும் அணையா விளக்கு மட்டும் கையில் இருந்துவிட்டால் நினைத்த இடத்துக்குச் சென்று இருள் என்னும் துன்பத்தைத் துரத்தி விட முடிகிறது.’’(753)

“தீய வழியை மேற்கொண்டு திரட்டப்படாத செல்வம்தான் ஒருவருக்கு அறநெறியை எடுத்துக்காட்டி, அவருக்கு இன்பத்தையும் தரும்.’’(754)

“பெரும் செல்வமாக இருப்பினும் அது அருள் நெறியிலோ அன்பு வழியிலோ வராதபோது அதனைப் புறக்கணித்துவிட வேண்டும்.’’(755)

“வரியும், சுங்கமும், வெற்றி கொள்ளப்பட்ட பகை நாடு செலுத்தும் கப்பமும் அரசுக்குரிய பொருளாகும்.’’(756)

“அன்பு என்கிற அன்னை பெற்றெடுக்கும் அருள் என்கிற குழந்தை, பொருள் என்கிற செவிலித் தாயால் வளரக் கூடியதாகும்.’’(757)

“தன் கைப்பொருளைக்கொண்டு ஒரு தொழில் செய்வது என்பது யானைகள் ஒன்றோடொன்று போரிடும் போது இடையில் சிக்கிக் கொள்ளாமல் அந்தப் போரை ஒரு குன்றின் மீது நின்று காண்பதைப் போன்று இலகுவானது.’’(758)

“பகைவரின் செருக்கை அழிக்கும் தகுதியான கருவி பொருளைத் தவிர வேறொன்றும் இல்லாததால் அதனைச் சேமிக்க வேண்டியுள்ளது.’’(759)

“அறம் பொருள் இன்பம் எனும் மூன்றினுள் பொருந்தும் வழியில் பொருளை மிகுதியாக ஈட்டியவர்களுக்கு ஏனைய இரண்டும் ஒன்றாகவே எளிதில் வந்து சேரும்.’’(760)

இப்படி, பல கோணங்களில், பல்வேறு கருத்துகளை செல்வம் (பொருள்) பற்றிக் கூறும் திறன் படைத்த வள்ளுவர், இராமாயணக் கருத்திலிருந்து குறள் எழுதினார் என்பது உளறலிலும் கேவலமான உலக மகா உளறல் அல்லவா? மோசடியிலும் முதல் தர மோசடியல்லவா?

அடுத்து, படைமாட்சி, நட்பு, நட்பு ஆராய்தல், பழைமை, தீ நட்பு, கூடா நட்பு, பேதமை, புல்லறிவாண்மை, இகல் ஆகிய அதிகாரங்களை அப்படியே விட்டுவிட்டு (90 குறள்களை விட்டுவிட்டு),

படைமாட்சி என்னும் அதிகாரத்திற்குச் சென்று,

வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா

மெலியார்மேல் மேக பகை (861)

என்னும் குறளை எடுத்துக்காட்டி, இது அர்த்தசாஸ்திரத்திலிருந்து எடுத்து எழுதப்பட்டது என்கிறார் இந்த நாகசாமி.

ஆனால், அர்த்தசாஸ்திரத்தில் எந்தப் பாகம், எத்தனையாவது அத்தியாயத்தில் சொல்லப்படுகிறது என்று குறிப்பிடாமல் பொத்தாம் பொதுவாக கவுடில்யர் கூறுகிறார் என்று ஏமாற்றுகிறார்.

நாகசாமி கூறும் அர்த்தசாஸ்திரக் கருத்து, அரசன் தன்னை ஒத்த, தன்னினும் வலிமையானவர்களிடம் சமாதானமாகச் செல்ல வேண்டும். தன்னைவிட பலம் குறைந்த மன்னனிடம் போர் தொடுக்க வேண்டும் என்பது. நாகசாமி கூறுவதுபோல, இக்கருத்து அர்த்தசஸ்திரத்தில் இருப்பதாகக் கொண்டாலும் குறள் கூறும் கருத்து வேறானது.

அதாவது மேற்கண்ட குறள், தன்னைவிட வலிமையுடைய மன்னனிடம் போரைத் தவிர்க்க வேண்டும். தன்னை எதிர்க்கும் வலிமை குறைந்த மன்னரிடம் போர்தொடுக்க வேண்டும் என்கிறது.

அர்த்தசாஸ்திரக் கருத்தும், குறளின் கருத்தும் வேறு வேறானவை.

அர்த்தசாஸ்திரம் கூறுவது, அரசன் பிற நாட்டைக் கைப்பற்றுதலும், தன் நாட்டை காப்பதற்கும் உரிய வழி.

ஆனால் குறள், தன் நாட்டின் இழப்பு, அழிவு, தவிர்க்கப்படவும், தனக்கு அவமதிப்பு, வலிய போர் வரும்போது அதை எதிர்கொள்ள வேண்டிய வழிமுறை பற்றியது.

அர்த்தசாஸ்திரத்தைப் போல, வலிமை குறைந்த நாட்டைக் கைப்பற்ற வேண்டும் என்று குறள் கூறவில்லை.

அது மட்டுமல்ல; படைமாட்சி அதிகாரத்தில், மேலும் ஒன்பது குறள்களில் கீழ்க்கண்ட கருத்துகளை வள்ளுவர் கூறியுள்ளார்.

”மெலியோரை விடுத்து, வலியோரை எதிர்த்துப் போரிட விரும்புவதே பகைமாட்சி எனப் போற்றப்படும்.’’(861)

“உடனிருப்போரிடம் அன்பு இல்லாமல், வலிமையான துணையுமில்லாமல், தானும் வலிமையற்றிருக்கும்போது பகையை எப்படி வெல்ல முடியும்?’’(862)

“அச்சமும், மடமையும் உடையவனாகவும், இணைந்து வாழும் இயல்பும், இரக்க சிந்தையும் இல்லாதவனாகவும் ஒருவன் இருந்தால், அவன் பகைவரால் எளிதில் வெல்லப்படுவான்.’’(863)

“சினத்தையும் மனத்தையும் கட்டுப்படுத்த முடியாதவர்களை, எவர் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் எளிதில் தோற்கடித்து விடலாம்.’’(864)

“நல்வழி நாடாமல், பொருத்தமானதைச் செய்யாமல், பழிக்கு அஞ்சாமல், பண்பும் இல்லாமல் ஒருவன் இருந்தால் அவன் பகைவரால் எளிதில் வெல்லப்படுவான்.’’(865)

“சிந்திக்காமலே சினம் கொள்பவனாகவும், பேராசைக்காரனாகவும் இருப்பவனின் பகையை ஏற்று எதிர் கொள்ளலாம்.’’(866)

“தன்னோடு இருந்துகொண்டே தனக்குப் பொருந்தாத காரியங்களைச் செய்து கொண்டிருப்பவனைப் பொருள் கொடுத்தாவது பகைவனாக்கிக் கொள்ள வேண்டும்.’’(867)

“குணக்கேடராகவும், குற்றங்கள் மலிந்தவராகவும் ஒருவர் இருந்தால், அவர் பக்கத் துணைகளை இழந்து பகைவரால் எளிதாக வீழ்த்தப்படுவார்.’’(868)

“அஞ்சிடும் கோழைகளாகவும், அறிவில்லாக் கோழைகளாகவும் பகைவர்கள் இருப்பின் அவர்களை எதிர்ப்போரை விடுத்து வெற்றியெனும் இன்பம் விலகாமலே நிலைத்து நிற்கும்.’’(869)

“பழமையான நண்பர்கள் தவறு செய்த போதிலும், அவர்களிடம் தமக்குள்ள அன்பை நீக்கிக் கொள்ளாதவர்களைப் பகைவரும் விரும்பிப் பாராட்டுவார்கள்.’’(870)

இந்தக் கருத்துகள் எல்லாம் எந்த சாஸ்திரத்திலிருந்து எடுக்கப்பட்டவை என்று நாகசாமி நாணயமாக ஆதாரத்தோடு கூறாது ஏமாற்றுகிறார்.

அடுத்து ஒரே தாவு தாவி வரைவின் மகளிர் அதிகாரத்தில் உள்ள 920ஆவது குறளை எடுத்துக்காட்டி, இது அர்த்தசாஸ்திரத்தின் கருத்திலிருந்து எழுதப்பட்டது என்கிறார் நாகசாமி.

“இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்

திருநீக்கப் பட்டார் தொடர்பு’’ (920)

இன் பொருள், பொருளை விரும்பி விருப்பமில்லா ஆணுடன் உடலுறவு கொள்ளும் இருமனப் பெண்டிர் (விலைமகளிர்) கள்ளும், சூதும் போல பொருளிழக்க வழியாகும் என்பது. ஆனால், அர்த்தசாஸ்திரம் பாகம் எட்டு, அத்தியாயம் 3 கூறுவது என்ன?

அர்த்தசாஸ்திரம் பாகம் -8, அத்தியாயம்-3

மூலம்:

அவித்யாவிநய: புருஷவ்யஸநஹேது: அவிநீதோ

ஹி வ்யஸந தோஷாந்த பஷ்யதி.

தாசுபதேக்ஷ்யாம:, கோபஜ: த்ரிவர்க:, காமஜ: சதுர் வர்க:

தயோ: கோபோகரீயாந். ஸர்வத்ர ஹிகோப: சரதி.

ப்ராயஷஷ்ச கோபவஷா ராஜாந: ப்ரக்ருதி கோபை:

ஹதா: ஷ்ரூயந்தே. காமவஷா: க்ஷயவ்யயநிமித்தம்

அர்வியாதிபி: இதி.

விளக்கவுரை:

சாஸ்திரஞானம் பெறாது விநயமற்றிருப்பதே விசனங்களுக்கெல்லாம் காரணம். சாஸ்திரங்களைப் படிக்காதவன் விசனங்களால் ஏற்படும் தீங்குகளைப் புரிந்துகொள்ள மாட்டான்.

கோபத்தால் மூன்று விசனங்கள் ஏற்படும். திட்டுவது, அடிப்பது, தூஷிப்பது. காமத்தால் நான்கு விசனங்கள் ஏற்படும். வேட்டை, சூதாட்டம், மது, மாது, இவற்றில் கோபம் மிகவும் கொடியது. ஏனென்றால் எல்லா விஷயங்களிலுமே கோபம் ஏற்படுவதற்கான வழிகள் உண்டு. பொதுவாக கோபத்துக்கு இடம் கொடுத்த மன்னர்கள், பிறகு நாட்டுக்குள்ளேயே எதிர்ப்புக்காளாகி கொல்லப்பட்டதாக சம்பவங்கள் உண்டு.

காமத்துக்கு வசமான மன்னர்கள் க்ஷயம், வியயங்களால் எதிரிகளிடம் அகப்பட்டும், வியாதிகள் வந்தும் இறப்பார்கள்.

மூலம்:

த்வேஷதா, ஷத்ருவேதநம், து:காஸம்கஷ்ச கோப:,

பரிபவோ, த்ரவ்யநாஷ:, பாடமச்சரத்யூதகாரலுப்தக

காயநவாதனகஷ்சாநர்த்யை: ஸம்யோக: காம:

விளக்கவுரை:

பிறருடைய துவேஷத்துக்கு ஆளாதல், எதிரிகள் உருவாதல், துயரத்துக்குள்ளாதல் முதலானவை கோபத்தால் ஏற்படுபவை.

அவமாநம், தனநாசம், தீயவர்களான திருடர்கள், சூதாடிகள், வேட்டைக்காரர்கள், பாடுபவர்கள், வாத்தியம் வாசிப்பவர்கள் முதலானவர்களுடன் சம்பந்தம் காமத்தால் ஏற்படும்.

மூலம்:

அஸதாம் ப்ரக்ரஹ: காம: கோபஷ்சாவக்ரஹ: ஸதாம் !

வ்யஸநம் தோஷபாஹுல்யாதத்யஸ்தமுபயம் மதம் !!

தஸ்மாத் கோபம் சகாமம் ச வ்யஸநாரம்பரமாத்மவாந் !

பரித்ய ஜேந் மூலஹரம் வ்ருத்தஸேவீ ஜிதேந்த்ரிய: !!

விளக்கவுரை:

காமம் தீயவர்களின் சேர்க்கைக்குக் காரணம். கோபம் நல்லவர்களைத் துன்புறுத்துவதற்குக் காரணம். பலவகையான தோஷங்கள் இருப்பதால் இவை இரண்டும் கொடிய விசனங்களாகக் கூறப்பட்டுள்ளன.

எனவே, அறிவாளியான மன்னன், இந்திரியங்களை வென்றவனாகவும், பெரியோர்களைச் சேவித்திருப்பவனாகவுமிருந்து, மூலத்தையே நிர்மூலப்படுத்தக்கூடிய காமத்தையும், கோபத்தையும் விட்டுவிட வேண்டும் என்கிறது அர்த்தசாஸ்திரம். அர்த்தசாஸ்திரக் கருத்துகளுக்கும் குறள் கூறும் கருத்துக்கும் ஏதாவது ஒப்புமை உள்ளதா? ஒப்பிட்டுப் பாருங்கள். இரண்டும் வேறு வேறு கருத்துகள். அப்படியிருக்க அர்த்தசாஸ்திரத்திலிருந்து இக்குறள் எழுதப்பட்டது என்பது மோசடியா? இல்லையா?

அடுத்து, ‘வாழ்க்கைத் துணைநலம்’ அதிகாரத்திற்கு வருகிறார் நாகசாமி. இவரது இந்த நூல், பைத்தியக்காரன் பேனா பிடித்ததுபோல்தான் அமைந்துள்ளது. ஒரு ஒழுங்கோ, ஒரு கோவையோ, சீரமைந்த நிரலோ கிடையாது. மனம் போன போக்கில் நினைத்ததையெல்லாம் எழுதியுள்ளார்.

அவர் இவ்வாறு செய்திருப்பது ஒழுங்குற செய்யத் தெரியாததால் அல்ல. ஒழுங்காகச் செய்யக் கூடாது என்று திட்டமிட்டே இவ்வாறு செய்துள்ளார். மோசடிப் பேர்வழிகள் கையாளும் தந்திரங்களில் இதுவும் ஒன்று.

இந்த நூலை விமர்சிக்கின்றவர்களுக்கே ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி, அவர்களின் ஆய்வை சிக்கலாக்க வேண்டும் என்பதற்காகவே இப்படி எழுதியுள்ளார்.

அறத்துப்பாலைப் பற்றி அங்கொன்று இங்கொன்று என்று குறள்களை எடுத்துக்காட்டி எழுதிவிட்டு, பின் பொருட்பாலை எடுத்துக்கொண்டு அதிலும் அங்கொன்று என்று எடுத்துக்காட்டி ஏமாற்றிய நாகசாமி, மீண்டும் அறத்துப்பாலில் வரும் ‘வாழ்க்கைத் துணைநலம்’ அதிகாரத்திற்குச் செல்கிறார்.

“மங்கலம் என்ப மனைமாட்சி மற்றுஅதன்

நன்கலம் நன்மக்கட் பேறு’’

என்னும் குறள் மனுதர்மத்திலிருந்து (மிஙீ-137, 138) கருத்துகளிலிருந்து எடுத்து எழுதப்பட்டது என்கிறார்.

மேற்கண்ட இரண்டு மனுதர்ம சுலோகங்களும் என்ன கூறுகின்றன?

“மனிதர்களுக்கு பிள்ளை பிறந்தால் சுவர்க்கம் முதலிய புண்ணிய லோகத்தை அடைகிறான். பிள்ளைக்குப் பிள்ளை பிறந்தால் அப்புண்ணிய லோகத்தில் நீண்ட காலம் வாழ்வான். பிள்ளைக்குப் பேரன் பிறந்தால் சூரியலோகத்தையும் அடைகிறான். (ஆதலால் புத்திர சந்ததியிருக்கையில் பெண் சந்ததிக்கு அதிகாரமில்லை’’ என்கிற கருத்து – 137

“மகன் தந்தையை ‘புத்’ என்னும் நரகத்திலிருந்து காப்பாற்றுகிறபடியால் புத்திரனென்று சாட்சாத் பிரமனாலே சொல்லப்படுகிறான்.’’ – 138

இவைதான் மனுதர்மம் கூறும் கருத்துகள்.

ஆனால், மேற்கண்ட குறளின் கருத்து என்ன?

“இல்லறம் என்பது மாண்புடைய பண்பாட்டின் உறைவிடம். அதில், மக்கட்பேறு என்பது மேலும் சிறப்பளிப்பது.’’

இந்தக் குறளின் கருத்துக்கும், மனுதர்மக் கருத்துகளுக்கும் ஏதாவது ஒப்புமையோ, தொடர்போ உள்ளதா? ஒப்பிட்டுப் பாருங்கள்.

புத்திரனைப் பெறுவது புண்ணியம் தரும் என்பது. அதுவும் பெண் குழந்தைக்கு அவ்வுரிமையும் வாய்ப்பும் இல்லை என்கிறது மனுதர்மம். ஆனால், குறள் ஆண், பெண் என்னும் வேறுபாடு காட்டாது, இரண்டும் பிள்ளைதான் என்கிறது. திருக்குறள் புண்ணிய லோகம் அடைய பிள்ளை உதவும் என்று சொல்லவில்லை. குடும்பம் மேலும் சிறப்புற பிள்ளைப் பேறு உதவும் என்கிறது.

மனு கூறுவது பெண்ணடிமை, ஆணாதிக்கம் சார்ந்த புண்ணியம் பற்றியது. ஆனால், குறள் கூறும் கருத்து பண்பாட்டையும், மாண்பையும், சிறப்பையும் பற்றியது.

இப்படி ஒன்றுக்கொன்று முற்றிலும் வேறுபட்டவை இரண்டும். அப்படியிருக்க மனுவின் கருத்திலிருந்துதான் இக்குறள் எழுதப்பட்டது என்பது மோசடியா _ இல்லையா என்று சிந்தித்துப் பாருங்கள்!

மோசடியின் மொத்த வடிவம் நாகசாமி!

1. மோட்சம் பற்றியே பேசாத திருக்குறள் சாஸ்திரங்களின் சாரம் என்பது மோசடியல்லவா?

இந்து சாஸ்திரங்கள் மோட்சம் (வீடு) பற்றியே அதிகம் பேசுகின்றன. வாழ்வின் நோக்கமே மோட்சம் அடைவதே என்கின்றன. ஆனால், திருக்குறள் மோட்சம் பற்றியே பேசவில்லை. அறம், பொருள், இன்பம் என மூன்றை மட்டுமே குறள் பேசுகிறது.

ஆக, இந்து சாஸ்திரங்களின் அடிப்படையையே திருக்குறள் தகர்த்து எறிந்துவிட்ட நிலையில், திருக்குறள் சாஸ்திரங்களின் சாரம் என்று கூறுவதைப் போல ஒரு பித்தலாட்டம், மோசடி, ஏமாற்று வேறு இருக்க முடியுமா?

2. பிறப்பொக்கும் எனக் கூறும் திருக்குறள் எப்படி சாஸ்திரங்களின் சாரமாகும்?

‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்பதை அடிப்படையாகக் கொண்டு, பிறவி பேதம் மறுக்கும் திருக்குறள் வர்ண தர்மத்தை ஏற்று எழுதப்பட்டது என்று நாகசாமி கூறுவது மோசடியிலும் முதல் நிலை மோசடியல்லவா?

3. மூன்று குறள்களில் மட்டுமே சாஸ்திரக் கருத்துகள் ஒத்துள்ளன

1330 குறள்களில் 100 குறள்களை மட்டுமே நாகசாமி எடுத்துக்காட்டி இவை சாஸ்திரங்களின் கருத்தைக் கொண்டு எழுதப்பட்டவை என்கிறார். மீதமுள்ள 1230 குறள்கள் எந்த சாஸ்திரக் கருத்துகளை எடுத்து எழுதப்பட்டது என்று எடுத்துக்காட்டி ஒப்பிட்டு உறுதி செய்யவில்லை.

அவர் எடுத்துக்காட்டி சாஸ்திரங்களோடு ஒப்பிடும் 100 குறள்களில் 3 குறள்கள் மட்டுமே சாஸ்திரக் கருத்துகளோடு ஓரளவிற்கு ஒப்புமை உடையதாய் உள்ளன. மற்ற 97 குறள்களும் சாஸ்திரக் கருத்துகளோடு ஒத்துப் போகாதவை.

சாஸ்திரங்களோடு ஒத்த கருத்துடைய 3 குறள்களின் கருத்துகளும் உலகில் பொதுவாக எல்லோரும் கூறும் கருத்துகள் உலகப் பொதுக் கருத்து என்பதால் அவை திருக்குறளிலும் உள்ளன. சாஸ்திரங்களிலும் உள்ளன என்பதே உண்மை. உண்மை இப்படியிருக்க திருக்குறள் சாஸ்திரங்களின் சாரம் என்பது ஒரு மோசடிப் பிரச்சாரம்! ஆதாரமற்ற ஏமாற்றுப் பிரச்சாரம்!

4. சுலோக மோசடி

அடுத்து சுலோகங்களின் எண் சரியாகக் கொடுக்காமலும் மோசடி செய்துள்ளார். எடுத்துக்காட்டு: அவர் நூலில் 14ஆம் பக்கத்தில் இவர் காட்டும் மனு சுலோகம்.

5. நூல் தயாரிப்பிலே நூதன மோசடி

தொடர்பில்லா, ஒப்புமையில்லாக் கருத்துகளை எடுத்துக்காட்டி, திருக்குறள் சாஸ்திரங்களின் கருத்துகளைக் கொண்டு எழுதப்பட்டது என்று மோசடியாக நாகசாமி கூறியவற்றை ஒவ்வொன்றாகப் பார்த்தோம். கருத்துகள் கூறியதில் மட்டுமல்ல; தன் நூலை ஒரு பெரிய ஆய்வு நூல் போல் காட்டுவதிலும் நாகசாமி மோசடி செய்துள்ளார்.

நாகசாமியின் இந்த நூல் மொத்தம் 248 பக்கங்கள். இதில் நூலின் தலைப்பை ஒட்டி அவர் எழுதியவை 100 பக்கங்கள் மட்டுமே. மீதியுள்ள 148 பக்கங்கள் நூலின் தலைப்புக்குத் தேவையில்லாச் செய்திகள்.

13 முதல் 44ஆம் பக்கம் வரை-    32 பக்கங்கள்

97 முதல் 123ஆம் பக்கம் வரை – 27 பக்கங்கள்

165 முதல் 184ஆம் பக்கம் வரை -20 பக்கங்கள்

191 முதல் 245ஆம் பக்கம் வரை -55 பக்கங்கள்

இடையிடையே      –                    14 பக்கங்கள்

                                                    —————–

                                                     148 பக்கங்கள்

                                                    —————–

ஆக 100 பக்கங்களில் அடக்கக்கூடிய புத்தகத்தை 248 பக்கங்கள் கொண்ட புத்தகமாகக் காட்டி, ஒரு பெரிய ஆய்வே செயதுவிட்டது போன்று ஒரு பொய்த் தோற்றத்தை உருவாக்கிக் காட்டியுள்ளார்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *