இயக்க வரலாறான தன் வரலாறு(240) : குயில்தாசன் – அற்புதம்மாள் மகளின் திருமணத்தை நடத்திவைத்தேன்!

டிசம்பர் 16-31 2019

அய்யாவின் அடிச்சுவட்டில் …..

கி.வீரமணி

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் சார்பில் திருச்சியில் இயங்கிவரும் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்தில் கைக்குழந்தைகள் முதல் வளர்க்கப்பட்டு, பி.ஏ., பி.எட்., பட்டம் பெறும் அளவில் கல்வி போதிக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளனர். அப்படி உருவாக்கப்பட்டவர்களுள் ஈ.வி.ஆர்.எம்.குணவதியும் ஒருவர். அவரின் இணை ஏற்பு விழா 24.7.1991 அன்று சென்னை பெரியார் திடலில் சிறப்புடன் நடைபெற்றது. மணமக்களை உறுதிமொழி கூறச்செய்து வாழ்க்கைத் துணை ஒப்பந்தத்தை நடத்தி வைத்தேன்.

 

 ஈ.வி.ஆர்.எம்.குணவதி – பெ.குமாரசாமி ஆகியோர் இணையேற்பு விழாவில் ஆசிரியர் கி.வீரமணி

மற்றும் நீதிபதி பெ.வேணுகோபால்.

அப்போது நான் உரையாற்றுகையில், “அய்யா, அம்மா மறைவுக்குப் பிறகு புலவர் இமயவரம்பன் அவர்கள் அப்பணியில் முழுமையாகத் தன்னை ஒப்படைத்துக் கொண்டு பணியாற்றிக் கொண்டு வந்தார்.

இன்றைய தினம் திராவிடர் கழகம் என்ன சமுதாயப் பணி செய்துவிட்டது என்று பார்ப்பன ஏடுகள் எழுதுகின்றன. அவற்றுக்கெல்லாம் இதுபோன்ற எங்களின் பணிகள் கண்களுக்குத் தெரிவதில்லை. விளம்பரம் இல்லாமல், ஆர்ப்பாட்டம் இல்லாமல், இத்தகைய சமுதாயப் பணிகளை நாம் செய்துகொண்டுதான் வருகிறோம். யாருடைய பாராட்டுதலுக்காகவும் அல்ல; இந்த சமுதாயத்திற்கு நாங்கள் ஆற்ற வேண்டிய பணி என்கிற முறையில்தான் செய்துகொண்டு வருகிறோம். தொடர்ந்து இதுபோன்ற பணிகளைச் செய்வோம்’’ என்று குறிப்பிட்டு என்னுரையை நிறைவு செய்தேன். விழாவில் நீதிபதி பெ.வேணுகோபால் அவர்கள் உள்பட பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

நாகை கே.முருகேசன்

தமிழ்நாட்டின் முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவரும் சுயமரியாதை வீரரும், சீரிய பொதுத் தொண்டருமான அருமைத் தோழர் நாகை கே.முருகேசன் அவர்கள் இயற்கை எய்தினார் என்கிற செய்தி நம்மை மிகவும் வேதனைப்பட வைத்தது. இறப்புச் செய்தியைக் கேட்டு  ‘விடுதலை’யில் 17.8.1991 அன்று கழகத்தின் சார்பில் நமது வீரவணக்கத்தையும் இரங்கல் அறிக்கையும் வெளியிட்டிருந்தோம்.

தந்தை பெரியார், அன்னை நாகம்மையார் ஆகியோரது அன்புக்குப் பாத்திரமான சுயமரியாதை வீரராக சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பே திகழ்ந்தவர் அவர். பொதுஉடைமை முன்னோடிகளில் ஒருவரான சமதர்ம வீரர் சிங்காரவேலர் அவர்களின் உற்ற தோழராக விளங்கியவர். அன்று முதல் மறையும் வரை அதே கொள்கைக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்த இலட்சிய வீரர்.

சென்னை பெரியார் திடலிலுள்ள பெரியார் பகுத்தறிவு ஆய்வு நூலகத்தில் தனது நேரத்தைச் செலவிடுபவர் -_ திராவிடர் கழகத்திற்கும், கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கும் அவர் ஓர் அன்புப் பாலம் எனலாம். எப்பொழுதும் புத்தகக் கட்டுகளுடன் காணப்படுவார். தனக்கு மாதந்தோறும் வந்த தியாகிகளின் ஓய்வூதியத் தொகையை புத்தகங்கள் வாங்கவே அதிகம் செலவிட்டார்.

இவர் போன்ற லட்சியத் தொண்டர்கள் மறைவு இன்றைய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் தொழிற்சங்க உலகத்திற்கும் மட்டும் இழப்பு அல்ல; திராவிடர் கழகத்திற்கும் சுயமரியாதை உலகுக்கும் மாபெரும் இழப்பு ஆகும்.

கா.மா.குப்புசாமி

21.8.1991 அன்று தஞ்சையில் கழகப் பொருளாளர் கா.மா.குப்புசாமி அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் _சுந்தரம்மாள் மற்றும் பாலசுப்பிரமணியம்_சாந்தி ஆகியோருக்கு வாழ்க்கைத் துணை ஒப்பந்த விழாவினை நடத்தி வைத்து உரை நிகழ்த்தினேன். அப்போது, “நம்முடைய நீடாமங்கலம் சுப்பிரமணியம் அவர்கள் சொன்னதுபோல, கழகப் பொருளாளர் அவர்கள் இந்த இயக்கத்திற்குக் கிடைத்த ஒரு பெரிய சொத்தாவார். அது மட்டுமல்ல; எங்களுடய அன்புக்கும், நம்பிக்கைக்கும் பாத்திரமாக இருந்ததோடு, அய்யா அவர்களுடைய நம்பிக்கைக்கும், அன்புக்கும் பாத்திரமாக இருந்தவர்கள்’’ என்றேன். இத்தகைய செயலில் அவர்களுடைய சிறப்புகள் அடங்கிவிட்டன.

இந்த இயக்கம் தந்தை பெரியார் அவர்களுக்குப் பிறகும் வளர்ந்து தழைத்து மக்களுக்குத் தொண்டாற்றுகிறது என்றால், அது இவர்களைப் போன்றோரின் தியாகத்தால் என்று குறிப்பிட்டேன்.

01.09.1991 அன்று வடஆர்க்காடு அம்பேத்கர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக எழுத்தாளர் மன்ற அமைப்பாளர் சோலையார்பேட்டை கவிஞர் குயில்தாசன்_அற்புதம்மாள் ஆகியோரின் செல்வி அன்புமணிக்கும், காவேரிப்பட்டணம் வையூர் சின்னப்பிள்ளை அம்மாள்_வேடி ஆகியோரின் செல்வன் வே.ராசாவுக்கும் வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த விழா கிருட்டினகிரி சாமுண்டீஸ்வரி திருமண மண்டபத்தில் என் தலைமையில் நடைபெற்றது. விழாவில் அனைவரையும் தருமபுரி மாவட்ட தி.க. செயலாளர் மு.துக்காராம் வரவேற்றுப் பேசினார்.

மணமக்களுக்கு வாழ்க்கைத் துணை நல ஒப்பந்தம் நிறைவேற்றி வைத்து மணமக்களை வாழ்த்தி உரை நிகழ்த்தினேன். “இன்றைக்கு இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கக்கூடிய நிலையில், ஒரு சங்கடம் இருந்து கொண்டிருக்கிறது என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. மணமகளுடைய சகோதரன் இந்த மணவிழாவிலே கலந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு இல்லையே என்கிற சங்கடம் உங்களுக்கு ஏற்பட்டிருப்பது இயல்பு.’’ அவரும் தன்னுடைய தந்தைக்கு ஒரு கடிதத்தைத் துணிச்சலோடு எழுதியிருக் கின்றார்கள்: “நான் வரவில்லை என்பதற்காக நீங்கள் கவலைப்படாதீர்கள். நீங்கள் எல்லாம் அமைதியாக இருந்து மகிழ்ச்சியாக இந்த மணாவிழாவினை நடத்துங்கள்’’ என்று சொல்லியிருக்கின்றார்கள். நிச்சயம் இதுபோன்ற இலட்சியத்தை வைத்திருக்கின்ற குடும்பங்களுக்கு துன்பங்கள் வருவது என்பது இயல்பு. அதை நீங்கள் பகுத்தறிவுவாதி என்கிற முறையிலே _ சரியான கோணத்திலே எடுத்துக்கொள்ள வேண்டும். அதற்காக நீங்கள் அளவுக்கு மீறி வேதனை அடைய வேண்டிய அவசியமில்லை.

நான் அன்புமணி செல்வத்திற்கு சொல்லுகின்றேன், “உங்களுடைய சகோதரன் உங்களோடு – நம்மோடு இல்லாமல் இருக்கலாம். ஆனால், இங்கே இருக்கின்றனர். ஆயிரக்கணக்கான சகோதரர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள். இந்த இயக்கத்தை அடக்குவதற்கும், அழிப்பதற்கும் எத்தனையோ பேர் வந்தார்கள். ஆனால், அது நடக்கவில்லை. இந்த இயக்கம் அடக்கப்பட வேண்டும் என்று சொன்னவர்கள், நீண்ட காலம் எங்கே இருக்கிறார்கள் என்று யாருக்கும் தெரியாத சூழ்நிலைகளிலே _ எத்தனையோ அடக்குமுறைகளை இந்த இயக்கம்  சந்தித்துள்ளது. இந்த இயக்கத்திலே ரகசியம் கிடையாது’’ என்று எடுத்துரைத்தேன்.

தருமபுரி மாவட்ட தி.க. தலைவர் எஸ்.கே.சின்னப்பன் மற்றும் கழகப் பொறுப்பாளர்கள், திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் கோ.சாமிதுரை ஆகியோர் மணமக்களைப் பாராட்டி வாழ்த்துரை நிகழ்த்தினார்கள்.

விழாவில் என் துணைவியார் மோகனா,  கர்நாடக மாநில தி.க. செயலாளர் பாண்டியன், பொருளாளர் ரெங்கநாதன், பெரியார் மாவட்ட தி.க. துணைத் தலைவர் சிற்றரசு, ஈரோடு நகர தி.க. செயலாளர் கருணாகரன், சண்முகம், பழனி புள்ளையண்ணன், கெடார் சு.நடராசன், சேலம் ப.கந்தசாமி, மாநில அமைப்புச் செயலாளர் ஆ.வந்தியத்தேவன், வடசேரி ஜெகதீசன், கே.கே.சின்னராசு, மாவட்ட தி.க. இளைஞரணி தலைவர் கே.கே.சி.வீரமணி, வடசென்னை மாவட்ட தி.க. தலைவர் க.பலராமன் உள்ளிட்ட ஏராளமான கழகத் தோழர்கள், தோழியர்கள்,  பொதுமக்களும் பெருந்திரளாக மாநாடு போல் கலந்து கொண்டார்கள்.

10.9.1991 அன்று மேலத்தஞ்சை மாவட்ட திராவிடர் கழக செயலாளர் ராசகிரி கோ.தங்கராசு_அஞ்சம்மாள் ஆகியோரின் செல்வன் பூவானந்தம் அவர்களுக்கும், மதுரையைச் சார்ந்த பொ.பிச்சை_ முத்துலெட்சுமி ஆகியோரின் மகளும் மதுரை மாநகர் மாவட்ட திராவிடர் கழக செயலாளர் பி.வரதராசன் அவர்களுடைய சகோதரியுமான மதுரவள்ளிக்கும், அதேபோல மேலத்தஞ்சை மாவட்ட தி.க. செயலாளர் ராசகிரி கோ.தங்கராசு_அஞ்சம்மாள் ஆகியோரின் செல்வி திலகவதிக்கும் புதுக்கோட்டையைச் சார்ந்த பெரியதம்பி_ கோகிலத்தம்மாள் ஆகியோரின் செல்வன் ஞானசேகரன் அவர்களுக்கும் நடைபெற்ற வாழ்க்கை ஒப்பந்த விழாவில் கலந்துகொண்டு வாழ்க்கை ஒப்பந்தம் நிறைவேற்றி மணமக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து உரை நிகழ்த்தினேன்.

சுயமரியாதையோடு வாழ்வது, பகுத்தறிவோடு தேவையற்ற ஆடம்பரத்தை ஒதுக்குவது, சிக்கனத்தோடு வாழ்வது இப்படிப்பட்ட நெறிமுறைகளை தந்தை பெரியார் அவர்கள் உருவாக்கினார்கள். அந்த வகையில் சுயமரியாதையோடு மகிழ்ந்திருங்கள்; மற்றவர்களுக்குத் தொண்டு செய்யுங்கள் என்று எடுத்துக் கூறினேன்.

 தந்தை பெரியார் பிறந்த நாளில் மரியாதை செலுத்தும் முதல்வர் ஜெயலலிதா, ஆசிரியர் கி.வீரமணி, நாவலர் நெடுஞ்செழியன் மற்றும் ஆர்.எம்.வீரப்பன் ஆகியோர்.

17.9.1991 அன்று “மீண்டும் நூலகங்களுக்கு ‘விடுதலை’! முதல்வருக்கு நன்றி’’ என்று அறிக்கை வெளியிட்டிருந்தேன். அதில் கடந்த 9.9.1991 அன்று நூலகங்களில் ‘விடுதலை’க்குத் தடை ஏன்? என்னும் தலைப்பில், நிறுத்தப்பட்டதற்குக் காரணம் என்ன என்று வினவியிருந்தேன். அதுபற்றி குறிப்பாக முதல்வரின் கவனத்திற்குச் சென்ற நிலையில், அதன் மீது முதல்வர் அம்மையார் உடனே நடவடிக்கை எடுத்ததற்காகவும், அப்படி நிறுத்துவது சரியான செயல் அல்ல; ‘விடுதலை’ ஏட்டினை மீண்டும் நூலகங்களுக்குப் போட வேண்டும் என்று மாநில நூலக இயக்குநரகத்துக்கு ஆணை பிறப்பித்ததற்கும் லட்சக்கணக்கான ‘விடுதலை’ வாசகர்கள் சார்பில் முதல்வர் ஜெயலலிதா அம்மையார் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்’’ என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தேன்.

17.9.1991 அன்று தந்தை பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு  சென்னை அண்ணா மேம்பாலம் அருகே அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வந்த அன்றைய முதல்வர் செல்வி ஜெயலலிதா, நாவலர் நெடுஞ்செழியன் மற்றும் அமைச்சர்களுடன் கலந்துகொண்டேன்.

அன்று மாலையில் தமிழக அரசின் சார்பில் தந்தை பெரியார் 113ஆம் பிறந்த நாள் விழா செப்டம்பர் 17 அன்று சென்னை கலைவாணர் அரங்கில் சிறப்புடன் நடைபெற்றது. அரசின் அழைப்பை ஏற்று அந்த விழாவில் பங்கேற்று உரையாற்றினேன். முதல்வர் ஜெயலலிதா அவர்கள் சிறப்புரை ஆற்றினார். நிதியமைச்சர் நாவலர் நெடுஞ்செழியன் தலைமையில் நடந்த இந்த விழாவில் அமைச்சர் ராசாராம், ஆர்.எம்.வீரப்பன், எஸ்.டி.சோமசுந்தரம், கே.ஏ.கிருஷ்ணசாமி ஆகியோர் உரையாற்றினர். பேரவைத் தலைவர் சேடப்பட்டி முத்தையா முன்னிலை வகித்தார்.

 தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவில் ஆசிரியருக்கு நினைவுப் பரிசு வழங்கும் முதல்வர் ஜெயலலிதா அம்மையார் உடன் நாவலர் நெடுஞ்செழியன், பேரவைத் தலைவர் சேடப்பட்டி முத்தையா.

 விழாவில் உரையாற்றும்போது, கழகத்தின் சார்பில் முதலமைச்சரிடம் மூன்று கோரிக்கைகளை முன்வைத்தேன். அதில், மண்டல் பரிந்துரையை ஆதரித்து சட்டசபையில் தீர்மானம், பாட நூல்களில் தந்தை பெரியார் கருத்துகள், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் உரிமை வழங்குதல் _ ஆகிய மூன்று கோரிக்கைகளை முன்வைத்ததும், முதல் கோரிக்கையை முதலமைச்சர் உடனடியாக ஏற்றுக் கொண்டார். ஏனைய இரண்டு கோரிக்கைகளை அரசு பரிசீலித்து நல்ல முடிவை அளிக்கும் என்று உறுதி அளித்தார்.

தந்தை பெரியார் கொள்கைகளை அரசு நிறைவேற்றினால் கருஞ்சட்டைப்படை அதைத் தயங்காமல் ஆதரிக்கும் என்றும் கூறினேன். பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு அ.இ.அ.தி.மு.க. சார்பில் ரூ.5 லட்சம் நன்கொடையாக முதலமைச்சர் என்னிடத்தில் வழங்கினார். நிதியைப் பெற்றுக்கொண்டு, “அறக்கட்டளைத் தொண்டுக்கு அரசு தந்துள்ள அங்கீகாரமாக இதைக் கருதி மகிழ்கிறோம்’’ என்று தெரிவித்தேன்.

முதல்வர் ஜெயலலிதா அவர்கள் உரையாற்றும்போது, “தலைவர்களுக்கு எல்லாம் தலைவர் என்கிற தகுதியும், தமிழக வரலாற்றில் ஒரு சகாப்தமாகவும், பகுத்தறிவுப் பகலவனாகவும், சமுதாய மேம்பாடு, முற்போக்கு எண்ணங்கள், புரட்சிகரமான சிந்தனைகள் ஆகியவற்றை தனது வாழ்நாள் முழுவதும் கட்டிக்காத்து, வளர்த்து வெற்றி கண்ட ‘தந்தை பெரியாரின்’ பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்டு உங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன் என்றும், நமது நாட்டில் தலைவராகவே ஒருவர் மறைந்தார் என்றால் அவர் தந்தை பெரியார் ஒருவர்தான்!

வைக்கம் வீரரின் வரலாற்று உண்மைகளையும் தியாகத்தையும் நினைவில் நிறுத்தும் வகையில் இந்த சரித்திர நிகழ்ச்சியை எதிர்கால சந்ததியினர் அறிந்து கொள்வதற்காகவும், தமிழ்நாடு அரசு ஒரு நினைவுச் சின்னத்தை உருவாக்கவும் முயற்சிகள் எடுக்கும்’’ என்று முதல்வர் தெரிவித்தார்கள். விழாவில் அமைச்சர் பெருமக்கள், கழகத் தோழர்கள், தோழியர்கள் பெருமளவில் பங்கேற்றனர்.

17.9.1991 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் நடந்த “பெரியார் கலையகம்’’ திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில்,  உடல்நலம் பெற்று கலந்துகொள்கிற முதல் பொது நிகழ்ச்சியாகக் கருதும்போது மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். இந்தத் திடலிலே அய்யா அவர்களுடைய பணிகளை நாம் அடக்கத் தோடும் உறுதியோடும் செம்மையோடும் செய்ய வேண்டும் என்று விரும்புகிற அந்தச் செயல்கள் நடைபெறும் என்றும், ஒளிப்படங்கள், வீடியோ கேசட்டுகள் வெளிவரக்கூடியதாக இருக்கும் என்று தெரிவித்து இருந்தேன். விழாவில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.வேணுகோபால் அவர்களும் கலந்துகொண்டார்.

21.9.1991 அன்று வடலூரில் தந்தை பெரியார் சிலை திறப்பு விழாவும், எனக்கு எடைக்கு எடை நாணயம் வழங்கும் நிகழ்ச்சியும் மிக எழுச்சியோடு நடைபெற்றன. வெள்ளம்போல் தமிழர் கூட்டம் வீறுகொண்டு கூடியிருந்தனர். விழாவுக்குப் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமை தாங்கினார். நான் உரையாற்றும்போது, “அறிவு ஆசான் தலைவர் தந்தை பெரியார் அவர்களுடைய 113ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவும், அய்யா சிலை திறப்பு விழாவும் இணைந்த இந்த நிகழ்ச்சி அனைத்துக் கட்சியினரும் அனைத்துத் தமிழரும் சேர்ந்து நடத்துகின்ற விழாப்போல நடைபெற்றது.

இந்த விழாவின் தலைவர் டாக்டர் அவர்களுடைய நல்லெண்ணம், அவர்கள் அன்போடு கூறிய வார்த்தைகள் உள்ளத்தின் அடித்தளத்திலிருந்து கூறிய வார்த்தைகள். இவையெல்லாம், எனக்கு நல்ல மருந்தாக _ டானிக்காக அமைந்தன. அதேபோல், இங்கே டாக்டர் ராமதாஸ் அவர்கள் சொன்னார்கள் _ “ஓட்டுக் கேட்பது என்பதுகூட எங்களுக்குக் கடைசிதான். எங்களுக்குக் கொள்கைதான் முக்கியம்’’ என்று சொன்னார். இது பாராட்ட வேண்டிய அறிவிப்பு’’ என்று விழாவில் உரை நிகழ்த்தினேன்.

வடலூரில் ஆசிரியர் எடைக்கு எடை ரூபாய் நாணயம் வழங்கப்படுகிறது, உடன் கோ.சாமிதுரை கா.மா.குப்புசாமி, கவிஞர் கலி.பூங்குன்றன் மற்றும் கழகப் பொறுப்பாளர்கள்

டாக்டர் ராமதாஸ்

 விழாவில், தலைமை வகித்துப் பேசிய டாக்டர் இராமதாஸ் அவர்கள், “தந்தை பெரியார் அவர்களுடைய இடஒதுக்கீட்டுக் கொள்கைக்காவும்   மண்டல் கமிஷன் அறிக்கை உச்சநீதிமன்றத்திலே முடக்கப்பட்டதை எதிர்த்தும் நாம் தொடர்ந்து போராடி வருகின்றோம். ஆசிரியர் அவர்கள் இதற்காக எடுத்துக் கொண்ட முயற்சிகள், போராட்டங்கள் ஆகியவற்றை இந்திய துணைக் கண்டம் அறியும். திராவிடர் கழகத்தைவிட மண்டல் கமிஷன் அமல்படுத்து வதற்காகப் போராடிய இயக்கம் வேறு இருக்க முடியாது’’ என்று கூறினார்.

பின்பு விழாவில் எனக்கு எடைக்கு எடை நாணயம் வழங்கும் விழா நிகழ்வும் நடைபெற்றது.

எம்.ஏ.எம்.இராமசாமி

27.9.1991 அன்று டாக்டர் எம்.ஏ.எம். இராமசாமி அவர்களது மணிவிழாவிற்கு வாழ்த்துக் கடிதம் எழுதியிருந்தேன். அதேபோல் “விடுதலை’’யில் அதற்காக சிறப்பிதழ் 26.9.1991 அன்று வெளியிட்டிருந்தோம். அவர்களுக்கு எழுதிய வாழ்த்துக் கடிதத்தில், “அறிவு ஆசான் தலைவர் தந்தை பெரியார் அவர்களால் பெரிதும் நேசிக்கப்பட்ட ஓர் குடும்பம் _ ஏன், அவரது குடும்பமாகவே அந்தக் குடும்பத்தைக் கருதிய குடும்பம் இணைவேந்தரது குடும்பமாகும்.

தண்ணார் தமிழ் வளர்க்கும் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் கண்டது முதல் தமிழுக்கும், தமிழருக்கும் இக்கல்வி வள்ளல்களின் கூட்டுக் குடும்பம் ஆற்றியுள்ள அறிவு வழங்கும் திருப்பணி மற்ற திருப்பணிகளுக்கு எல்லாம் சிகரம் வைத்த ஈடுஇணையற்ற மனிதநேயப் பணியாகும்’’ என்று அந்த வாழ்த்துக் கடிதம் எழுதிருந்தேன். பிறகு நேரில் சென்று பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசினை வழங்கினேன்.

11.10.1991 அன்று திருவாரூரில் நடைபெற்ற, கீழத்தஞ்சை மாவட்ட தி.க. தலைவர் எஸ்.எஸ்.மணியம்_ராஜலட்சுமி பவள விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வாழ்த்தி உரை நிகழ்த்தினேன். அப்போது, “திராவிடர் கழகத் தோழர்களுக்கு மற்றவர்கள் புகழ்ந்து பேசி அதைக் கேட்பது என்பது கொஞ்சம் கடினமான வேலை; தாக்கிப் பேசியதைக் கேட்பது அது உற்சாகமான பணி.’’ தந்தை பெரியார் அவர்களே பிறர் புகழ்ந்து பேசும்போது சொல்வார்கள், “எனக்கு இதைவிட கடுமையான தண்டனை வேறு கிடையாது’’ என்று.

“தொண்டு அறம்’’ என்று சொல்லக்கூடிய தந்தை பெரியார் அவர்களுடைய வழி என்ன?  இல்லறம் என்பது _ குடும்ப நலம், குடும்ப வாழ்க்கை. துறவறம் என்பது அதை வெறுத்து விட்டுப் போவது. இந்த இரண்டைத்தான் இதுவரையிலே நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், மூன்றாவதாக ஒன்றை தந¢தை பெரியார் அவர்கள் இந்த நாட்டிலே தன்னுடைய வாழ்க்கையின் மூலமாக, தன்னுடைய இயக்கத்தின் மூலமாக உருவாக்கிக் காட்டினார்கள். மூன்றாவதான அந்த அறம் என்ன என்று சொன்னால், அதுதான் தொண்டு அறம் என்று சொல்லுகிறோம்.

தந்தை பெரியார் அவர்கள் ஒருமுறை சொன்னார்கள்: “கறுப்புச் சட்டைக்காரனாக இருக்கக்கூடிய என்னுடைய தொண்டர்கள் எப்படிப்பட்டவர்கள் என்றால், அவர்கள் துறவிக்கும் மேற்பட்டவர்கள்’’ என்று தன்னுடைய தொண்டர்களைப் பற்றிச் சொன்னார்கள். “பெருமைக்காக நான் சொல்லவில்லை; என்னுடைய தோழர்களைப் புகழ வேண்டும் என்பதற்காக நான் சொல்லவில்லை. உண்மையை நான் எடுத்துச் சொல்லுகின்றேன்’’ என்று அய்யா அவர்கள் சொன்னார்கள். அந்த வகையிலே அய்யா எஸ்.எஸ்.மணியம் அவர்கள் ஒரு கொள்கை வீரராக ஓங்கி வளர்ந்து இருக்கிறார்.

எஸ்.எஸ்.மணியம்

எஸ்.எஸ்.மணியம் அவர்கள் ஒருமுறை கூறும்போது, “முருகன் வரம் பெற்று’’ பிறந்த நான் வறுமையில் சிக்கித் தவித்தேன். பின்னர் ரூ.21 கடன் பெற்று, டிக்கெட் வாங்கிக் கொண்டு கப்பலில் சிங்கப்பூர் சென்றேன் _ “காசுக்கடை முதலாளியாக அல்ல; கூலித் தொழிலாளியாக.’’ இதிலே எவ்வளவு நாசூக்காக அவருடைய வாழ்க்கைச் சம்பவத்தைச் சொல்லி, உண்மையைச் சொல்லியிருக்கிறார் என்பதை நீங்கள் நினைத்துப் பார்க்க வேண்டும். “உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ’’ என்பதன் அடையாளமாக அவர்கள் திகழ்ந்தார்கள் என்று எடுத்துரைத்தேன்.

தமிழக அரசின் சார்பாக புதிதாகத் துவக்க இருக்கும் வேத ஆகமக் கல்லூரிகளில் இடஒதுக்கீடு அடிப்படையில் 18 சதவிகிதம் ஆதிதிராவிடர்களையும் சேர்த்து அவர்கள் அர்ச்சகர்களாகத் தக்க பயிற்சி அளிக்கப்படும் என்றும், 17.10.1991 மற்றும் 18.10.1991 ஆகிய நாள்களில் சென்னை, நாகை ஆகிய ஊர்களில் இரண்டு நிகழ்ச்சிகளில் உரையாற்றுகையில் மாண்புமிகு தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அம்மையார்  குறிப்பிட்டுள்ளார்கள்.

ஜாதி ஒழிப்புக்காகவும், சமூக நீதிக்காகவும் தம் வாழ்வினையே அர்ப்பணித்துக் கொண்டுள்ள லட்சோப லட்ச பெரியார் தொண்டர்கள் சார்பாக, முதல்வரின் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பிரகடனத்தினை நாம் மனப்பூர்வமாக வரவேற்கிறோம்;

உளப்பூர்வமாகப் பாராட்டுகிறோம் என்று 19.10.1991 அன்று முக்கிய அறிக்கையை வெளியிட்டோம்.

தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அம்மையார் இதனை அறிவித்திருப்பதன் மூலம் அய்யாவின் இறுதி நாள் விருப்பத்தினை செயலாக்க முன் வந்துள்ளார்கள். அதற்காக நாம் நமது உளமார்ந்த நன்றியை முதல்வருக்கும் அவரது அரசுக்கும் தெரியப்படுத்திக் கொள்கிறோம் என்று தெரிவித்தேன்.

யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி தீபாவளி வாழ்த்து அட்டையில், 1983இல் காயத்திரி மந்திரம் வெளியிட்டது. இதனை நாம் மதசார்பின்மைக் கொள்கைக்கு விரோதமானது என்று கழகத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு, வழக்கின்மீது நீதிபதி கொடுத்த தீர்ப்பை ஒட்டி,  முக்கிய அறிக்கையை 17.10.1991 அன்று “விடுதலை’’யில் வெளியிட்டிருந்தோம்.

அதில் நீதிபதி வழங்கியுள்ள தீர்ப்பிற்கு நாம் எந்தவித உள்நோக்கமும் கற்பிக்க விரும்பவில்லை. ஆனால், அதே நேரத்தில் வகுப்புரிமை வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பைப் பற்றி அன்றைய சட்ட அமைச்சர் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் கூறியது எனக்கு நினைவுக்கு வருகிறது.

“I am bound by the decision but I am not bound to respect the same” – “நான் அத்தீர்ப்புக்குக் கட்டுப்பட்டவன்; ஆனால், அத்தீர்ப்புக்கு மரியாதை காட்ட என்னால் முடியாது.’’ என்பதே அவரது வாசகங்கள்.

“மதச்சார்பின்மை’’ _ செக்யூலரிசம் என்பதற்கு அண்மைக் காலங்களில் சில நீதிபதிகள் மேலெழுந்தவாரியாக ஏதோ ஒரு வியாக்யானத்தைத் தருகிறார்கள்.

“காயத்ரி மந்திரம்’’ பார்ப்பனர்களுக்கு மட்டும் உரியதல்ல என்கிறார். இத்தீர்ப்பில், தற்போது அரசியல்வாதிகள், நீதிபதிகள், உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் எல்லாம் மாதந் தவறாமல் படையெடுத்து மண்டியிட்டு ஆசி வாங்கப் போட்டியிடும் காஞ்சி சங்கராச்சாரியாரின் “தெய்வத்தின் குரல்’’ என்கிற     நூல் தொகுப்பில் ‘காயத்ரி மந்திரம்’ எப்படி “பிராமணரின்’’ சொத்து என்பதை விளக்கியுள்ளார்.

அதை இவர்கள் படிக்க வேண்டும். வேதத்தைக் கேட்கிற சூத்திரனது காதுகளில் ஈயத்தையும், மெழுகையும் உருக்கி விடவேண்டும் என்றும், வேதத்தைச் சொல்லுகின்ற சூத்திரனது நாக்கை அறுக்க வேண்டும் என்றும், வேதம் எல்லோருக்கும் சொந்தம் என்பதன் லட்சணம் இதுதான் என்று மிகவும் கண்டித்து, “நீதிபதிகளே கவனிக்கத் தவறினால் வேறு யார்தான் கவனித்துக் கூற முடியும்?’’ என்று அறிக்கையில் வினா எழுப்பினோம்.

(நினைவுகள் நீளும்…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *