சிறுகதை : வழி

டிசம்பர் 16-31 2019

அன்று அலமிக்குத் தூக்கம் வரவில்லை. நினைவுகள் குவிந்தன. சொல்லமுடியாத சோகம் நெஞ்சையடைத்தது. மனக்குரங்கு கட்டுக்கடங்காமல் ஓடியது.

தன்னருகில் இருந்த ஒற்றை விளக்கைச் சற்று தூண்டினாள். உடல் வியர்க்கிறது. தேகம், என்னமோ ஒருமாதிரியாக, சொல்ல முடியாதபடி தவித்தது.

அவள் விதவை.

நினைவு அய்ந்து வருஷங்களுக்கு முன்பு ஓடியது. ஒரு வருஷம் சென்றது தெரியாதபடி வாழ்க்கை, இன்பத்தின் முன்னொளி போலத் துரிதமாகச் சென்றது. பிறகு அந்த நான்கு வருஷங்களும் பிணிவாய்ப்பட்ட கணவனின் சிச்ருஷை என்கிற தியாகத்தில், வாழ்க்கையின் முன்னொளி செவ்வானமாக மாறி, வைதவ்யம் என்கிற வாழ்க்கை  அந்தகாரத்தைக் கொண்டு வந்தது.

அன்று முதல் இன்றுவரை வாழ்க்கை என்பது நாள் _ சங்கிலி. கணவன் தேகவியோகச் சடங்குகள், சம்பிரதாயங்கள் இவை துக்கத்தைத் தந்தாலும் பொழுதையாவது போக்கின. அப்படிச் சென்றது ஒரு வருஷம்.

அன்று அவர் இறந்தபின் பதினாறு நாள்களும் இவளைப் பிணம் போல் அழும் யந்திரமாகக் கிடத்தி, சுற்றியிருந்து அழுதார்கள். அவள் உயிர்ப்பிணம் என்கிற கருத்தை உணர்த்தவோ, என்னவோ!

அலமி பணக்காரப் பெண்தான். பாங்கியில் ரொக்கமாக ரூ.20,000 இருக்கிறது. என்ன இருந்தாலும் இல்வாழ்க்கை அந்தகாரந்தானே? அவள் நிலை _ உணவு இருந்தும் உண்ண முடியாது இருப்பவள் நிலை.

அவளுக்குத் தாயார் கிடையாது. தகப்பனார் இருந்தார். அவர் ஒரு புஸ்தகப் புழு. உலகம் தெரியாது அவருக்கு. வாழ்க்கை இன்பங்கள் _ புஸ்தகமும் பிரசங்கமும். சில சமயம் அலமியையும் கூட அழைத்துச் சென்றிருக்கிறார்.

மரண தண்டனையனுபவிக்கும் ஒருவன் சார்லி சாப்ளின் சினிமாப்படத்தை அநுபவிக்க முடியுமா? வைதவ்ய விலங்குகளைப் பூட்டிவிட்டு சுவாரஸ்யமான பிரசங்கத்தைக் கேள் என்றால் அர்த்தமற்ற வார்த்தையல்லவா அது?

அன்று அவளுக்குத் தூக்கம் வரவில்லை. துக்கம் நெஞ்சையடைத்தது. தொண்டையிலே ஏதோ ஒரு கட்டி அடைத்திருப்பது மாதிரி உணர்ச்சி. உதடுகள் அழவேண்டுமென்று துடித்தன.

உறக்கம் வரவில்லை.

எழுந்து முந்தானையால் முகத்தின் வியர்வையைத் துடைத்துக் கொண்டு வெளியிலிருந்த நிலா முற்றத்திற்கு வருகிறாள்.

வானமாத்யந்தமும் கவ்விய இருட்டு. உயர இலட்சியங்களை அசட்டுத்தனமாக வாரி இறைத்தது மாதிரி கண்சிமிட்டும் நட்சத்திரங்கள். அவளுக்கு அவை சிரிப்பன போல் _ தன்னைப் பார்த்துச் சிரிப்பன போல் குத்தின. மணி பன்னிரண்டாவது இருக்கும். இந்த இருட்டைப் போல் உள்ளமற்றிருந்தால், தேகமற்றிருந்தால் என்ன சுகமாக இருக்கும்!

இந்த வெள்ளைக்காரன் ஒரு முட்டாள். ‘சதி’யை நிறுத்திவிட்டதாகப் பெருமையடித்துக்கொள்கிறான். அதை இந்த முட்டாள் ஜனங்கள் படித்துவிட்டுப் பேத்துகிறார்கள். முதலில் கொஞ்சம் துடிக்க வேண்டியிருக்கும். பிறகு ஆனால், வெள்ளைக்காரன் புண்ணியத்தால் வாழ்க்கை முழுவதும் சதியை, நெருப்பின் தகிப்பை அநுபவிக்க வேண்டியிருக்கிறதே! வைதவ்யம் என்றால் என்ன என்று அவனுக்குத் தெரியுமா? ஒவ்வொரு நிமிஷமும் நெருப்பாகத் தகிக்கும் சதியல்லவா வைதவ்யம்?

அவர் இருந்திருந்தால்…

அதை நினைத்தவுடன் மனம் அய்ந்தாறு வருஷங்களைத் தாண்டிச் சென்றுவிட்டது. பழைய நினைவுகள், எட்டாத கனவுகள் அதில் முளைக்க ஆரம்பித்தன.

அவள் உடல் படபடத்தது. நெஞ்சில் சண்டமாருதமாக, பேய்க்கூத்தாக எண்ணங்கள் ஒன்றோடொன்று மோதின.

எதிரே விசாலத்தின் வீடு. இன்னும் தூங்கவில்லையா? அவளுக்கென்ன, மகராஜி கொடுத்து வைத்தவள்!

அப்பொழுது…

‘கட்டிக் கரும்பே! தேனே!…’ என்ற பாட்டு. கிராமபோனின் ஓலம். பாட்டு கீழ்த்தரமான சுவையுடைய பாட்டுத்தான்.

அன்று அவளுக்கு மூண்டெழுந்த தீயிலே எண்ணெய் வார்த்ததுபோல் இருந்தது. அவளுக்குப் பாட்டு இனிமையாக இருந்தது. கேட்பதற்கு நாணமாக இருந்தது. இருட்டில் அவள் முகம் சிவந்தது. இனி இப்படி யாராவது அவளையழைக்க முடியுமா?

இவ்வளவுக்கும் காரணம் இயற்கையின் தேவை.

இதிலே ஒரு முரட்டுத் தைரியம் பிறந்தது. ஏன், அந்தக் கோடித்தெருச் சீர்திருத்தக்காரர் திரு. குகன் சொல்லிய மாதிரி செய்தால் என்ன? அப்பாவிடம் சொல்ல முடியுமா? அவர் அந்நியர். மேலும் நான் விதவை என்று தெரியும். போனால் அவருக்குத் தெரியாதா?

திரு.குகன் செய்த பிரசங்கத்தின் வித்து வேகமாகத் தழைத்து ஆட்சி செய்ய ஆரம்பித்தது. ஊரிலுள்ளவர்கள் தூற்றுவார்கள்! அவர்களுக்கு வேறு என்ன தெரியும்?

நினைத்தபடி நடக்க ஹிந்துப் பெண்களுக்குத் தெரியாது. ‘இயற்கையின் தேவை’ என்கிற ஈட்டி முனையில் அவள் என்னதான் செய்ய முடியாது? மேலும் தாயார் இருந்தால் ஓர் ஆறுதல், கண்காணிப்பு இருந்திருக்கும். இதுவரை தனக்கு வேண்டியதை அவளே செய்து கொண்டவள். அவளுக்குக் கேட்டுச் செய்ய ஆள் கிடையாது. மனம் சீர்திருத்தவாதியை அணுகிவிட்டால் உலகமே மோட்ச சாம்ராஜ்யமாகிவிடும் என்று சொல்லுகிறது. சீ! போயும் போயும், மூளையில்லாமல், ஆண்பிள்ளையிடம் போய் என்ன! கத்தரிக்காய்க் கடையா, வியாபாரம் பண்ண? அவளுக்குச் சீர்திருத்தவாதி உள்பட இந்த உலகமெல்லாவற்றையும் கொன்று துடிப்பதைப் பார்க்க வேண்டுமென்று படுகிறது. சீ, பாவம்! உலகமாவது மண்ணாங்கட்டியாவது! நெருப்பில் போட்டுப் பொசுக்கட்டுமே! மார்பு வெடித்துவிடுவது போலத் துடிக்கிறது. இருளில் கண்ட சுகம், அந்தச் சங்கீத ஓலத்தில் போய்விட்டது. அவளுக்கு விசாலத்தின் மீது ஒரு காரணமற்ற வெறுப்பு. அவளையும், அவள் புருஷன், கிராமபோன் எல்லாவற்றையும் நாசம் செய்யவேண்டுமென்று படுகிறது. காதைப் பொத்திக்கொண்டு உள்ளே வந்து படுக்கையில் பொத்தென்று விழுகிறாள்.

அசட்டுத்தனமாகத் தலையணைக்கடியில் வைத்திருந்த கொத்துச் சாவியில் இருந்த முள்வாங்கி முனை ‘விர்’ரென்று மார்பில் நுழைந்துவிட்டது.

அம்மாடி!

உடனே பிடுங்கிவிடுகிறாள். இரத்தம் சிற்றோடைபோல் பீறிட்டுக்கொண்டு வருகிறது. முதலில் பயம். அலமி இரத்தத்தைப் பார்த்ததில்லை. அதனால் பயம். ஆனால், இத்தனை நேரம் நெஞ்சின் மீது வைக்கப்பட்டிருந்த பாரங்கள் எடுக்கப்பட்ட மாதிரி ஒரு சுகம். இரத்தம் வெளிவருவதிலே பரம ஆனந்தம்; சொல்ல முடியாத, அன்றிருந்த மாதிரி ஆனந்தம். அதையே இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கிறாள். இரத்தம் பிரவாகமாகப் பொங்கி மேலுடையை நனைக்கிறது. இரத்தத்தின் பிசிபிசுப்பு தொந்தரவாக இருந்ததனால் மேலுடையை எடுத்துவிட்டாள். இரத்தம் வெளிப்படுவதில் என்ன சுகம்! நேரமாக, நேரமாக பலம் குன்றுகிறது. ‘அவரிடம் போவதற்கு என் உயிருக்கு ஒரு சின்னத் துவாரம் செய்து வைத்திருக்கிறேன்! இன்னும் கொஞ்ச நேரத்தில் போய்விடும்! ஏன் போகாது? போனால் இந்த உடல் தொந்தரவு இருக்காது…’

அலமியின் தகப்பனார் புஸ்தகப் புழு. அன்று வெகு நேரமாயிற்று _ கையிலிருந்த புஸ்தகத்தை முடிக்க. முடித்துப் போட்டுவிட்டு வராந்தாவிற்கு வந்தார். அலமியின் அறையில் வெளிச்சம் தெரிகிறது. “இன்னும் தூங்கவில்லையா?’’ என்று உள்ளே சென்றார்.

என்ன!

அலமி மார்பில் இரத்தமா? அவள் ஏன் இம்மாதிரி அதைச் சிரித்தவண்ணம் பார்த்துக் கொண்டிருக்கிறாள்?

“அலமி, நெஞ்சில் என்னடி?’’ என்று கத்திக்கொண்டு நெருங்கினார்.

“நெஞ்சின் பாரம் போவதற்குச் சின்ன வாசல்!’’ என்றாள் ஈனஸ்வரத்தில். குரல் தாழ்ந்திருந்தாலும் அதில் கலக்கமில்லை. வலியினால் ஏற்படும் துன்பத்தின் தொனி இல்லை.

“இரத்தத்தை நிறுத்துகிறேன்!’’ என்று நெஞ்சில் கையை வைக்கப் போனார் தகப்பனார்.

“மூச்சுவிடும் வழியை அடைக்க வேண்டாம்!’’ என்று கையைத் தள்ளிவிட்டாள் அலமி.

“பைத்தியமா? இரத்தம் வருகிறதேடி!’’ என்று கதறினார்.

“இந்த இரத்தத்தை அந்தப் பிரம்மாவின் மூஞ்சியில் பூசிடுங்கோ! வழியையடைக்காதீர்கள்!’’ என்றாள்.

தலை கீழே விழுந்துவிட்டது.

(“மணிக்கொடி”, 6.1.1935)

(புதுமைப்பித்தன் கதைகள் தொகுப்பிலிருந்து…)

– புதுமைப்பித்தன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *