ஆசிரியர் பதில்கள் : சட்டம் குறட்டை விட்டுத் தூங்குகிறது!

டிசம்பர் 01-15 2019

கே:       தமிழன் வீட்டுப் பிள்ளைகளுக்கு தமிழில் பெயரில்லை! இதனை மாற்றியமைக்க ‘இயக்கம்’ நடத்தப்படுமா?

                – ஈ.வெ.ரா. தமிழன், சீர்காழி

ப:           உண்மைதான். நாமும் பேசுகிறோம் _ தொடர்ந்து வற்புறுத்துகிறோம் _ நிச்சயம் தமிழ் உணர்வாளர்களை இணைத்து ஒரு தனி இயக்கம் _ வேண்டுகோள் இயக்கமாக நடத்தலாம். விரைவில் மலேசிய நாரணதிருவிடச்செல்வன் அவர்களது “தமிழில் பெயரிடுவோம்’’ நூலின் புதிய பதிப்பையும் வெளியிட்டுப் பரப்ப உள்ளோம்.

கே:       ‘நம்பிக்கை’ அடிப்படையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது சரியா? இது பின்னாளைய தீர்ப்புகளுக்குத் தப்பான வழிகாட்டுதலாகாதா?

                – பா.கோவிந்தசாமி, திருத்தணி

தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள்

ப:         சரியான மிலியன் டாலர் கேள்வி! தவறான அளவு கோல். அறிவியல் மனப்பான்மையைப் பெருக்கச் செய்வது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமை என்ற 51A பிரிவும் உள்ளடக்கிய அரசியல் சட்டத்தின் மீது காப்புறுதி எடுத்த நீதிபதிகளைக் கொண்ட உச்சநீதிமன்றம் இப்படி ஒரு தீர்ப்பளித்தது ஏற்கத்தக்கதல்ல.

                எதிர்காலத்தில் உச்சநீதிமன்றக் கட்டடம், நாடாளுமன்றக் கட்டடம்கூட இப்படி நம்பிக்கை அடிப்படையில் வழக்கு, வம்பு தும்பு வரலாமே!

பாத்திமா லத்தீப்

கே:       சென்னை அய்.அய்.டி.யில்  மாணவர்களின் இறப்புச் செய்தி, உயர் கல்வித் துறையில் பார்ப்பனரல்லாத மாண வர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குரியாக்கி உள்ளதே?

                – தே.வேல்விழி, தாம்பரம்

ப:           இந்த தொடர்கொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க காவி நிழலிலிருந்து அய்.அய்.டி.கள் விடுவிக்கப்படல்தான் அடிப்படைத் தேவை.

கே:       தங்களின் இந்தப் பிறந்த நாளில் இளைஞர்களுக்குச் சொல்லும் முக்கிய செய்தி என்ன?

                – மகிழ், சைதை

ப:           நம் இனத்தின் கல்விக் கண்ணைக் குத்தும் தொடர் முயற்சிகளைத் தடுக்க _ அழிக்க _ கழகப் போராட்டங்களில் களத்தில் கரம் கோத்து நிற்றலும் வெல்லலும் என்பதே!

 திருவள்ளுவர்

கே:       நாட்டைப் பற்றிச் சற்றும் கவலைப்படாமல் காவிக் கொள்கையை நிறைவேற்றுவதில் முனைப்பு காட்டும் மத்திய அரசின் செயல்வினை எங்கு போய் முடியும்?

                -முகம்மது, மாதவரம்.

ப:           துவக்கம் இருக்கும் எதற்கும் முடிவும் உண்டு. இருட்டு _ இரவு _ விடியல் _ பகல் தொடருவது போல! நம்பிக்கையைத் தளரவிடாதீர்கள்!

நிர்மலா சீதாராமன்

கே:       சாமியார்களுக்கு வங்கிகள் கடன் வழங்க வேண்டுமென்கிறாரே  மத்திய நிதியமைச்சர் நிர்மலா   சீத்தாராமன்?

– நெய்வேலி க.தியாகராசன்,

கொரநாட்டுக் கருப்பூர்

ப:           அப்படியா பலே! பலே! ஏற்கெனவே அவர்கள் தங்கள் ஆஸ்ரமத்தில் பல வகையான மருத்துவமனைகளைக் கட்டி விட்டு இப்போது ஜெயிலில் நிஷ்டையிலிருப்பது போதாது என்று நினைக்கிறார் போலும் நிதி அமைச்சர்!

அய்.அய்.டி பேராசிரியர்கள்

கே:       அய்.அய்.டி.யில் படித்த பாத்திமா லத்தீப் மரணத்தில் சந்தேகத்துக்குரிய, ஆர்.எஸ்.எஸ்க்கு நெருக்கமான மூன்று பேராசிரியர்களைக் கைது செய்ய அரசு தயங்கும் நிலையில் நீதிமன்றத்தைதான் நாடவேண்டுமா? 

– சோமு, கூடுவாஞ்சேரி

ப:           நாடாளுமன்றத்தில் தி.மு.க. உறுப்பினர் கவிஞர் கனிமொழி கருணாநிதி அவர்களும்கூட இதைச் சுட்டிக்காட்டியுள்ளார்; நீதி கேட்டுள்ளார். கேரள எம்.பி.க்களும் முழங்கியிருக்கிறார்கள். தமிழக அரசு சரியாகச் செயல்படாவிட்டால் அதன் தலையில் அதுவே கொள்ளிக் கட்டையை வைத்துச் சொறிந்த கதை ஆகும்!

கே:  துணைவேந்தர்  அறைக்குள் அரசியல் கட்சிப் பிரமுகர் கலந்து ரையாடல் நடத்தியதற்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியாதா?

– சசிக்குமார், வாணியம்பாடி

ப:           நியாயப்படிதான் செய்ய முடியும். சட்டப்படி செய்வதற்கு வழியின்றி -_ சட்டம் குறட்டை விட்டுத் தூங்குகிறதே!    

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *