உணவே மருந்து

டிசம்பர் 01-15 2019

காலிஃபிளவர்

புற்றுநோயைத் தடுக்க உதவும் உணவுப் பொருள்களில் மிக முக்கியமானது காலிஃபிளவர். இதில் உள்ள குளுக்கோசினோலேட்டுகள் (Glucosinolates) உடலுக்கு உறுதியைத் தரும் சேர்மங்களான சல்ஃபராபேன் (Sulforphane) மற்றும் அய்சோதியோசயனைட்டுகள்(Isothiocynates) இண்டோல் 3 கார்பினாலாக மாற்றம் அடைகின்றன.

இந்தச் சேர்மங்கள் புற்று செல்களின் வளர்ச்சியைத் தடை செய்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. காலிஃபிளவரை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் நுரையீரல், மார்பகம், சிறுநீர்பை, சிறுநீர்த் தாரை, கருப்பை, கருப்பை வாய் போன்ற உடலின் பாகங்களில் வரும் புற்றுநோய்களைத் தவிர்க்கலாம். ஆண்களுக்கு வரக்கூடிய பிராஸ்டேட் புற்றுநோயையும் தடுக்க வல்லது.

வைட்டமின் ‘சி’ எலும்புகள் மற்றும் தசைகளின் இணைப்பிற்குக் காரணமான கொலாஜன்கள் உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்த கொலாஜன்கள் மூட்டுகள் மற்றும் எலும்புகளை அழற்சி நோயிலிருந்து பாதுகாக்கிறது.

இதில் உள்ள பீட்டா கரோட்டின், குவர்செட்டின், சின்னமிக் அமிலம், பீட்டா கிரிப்டோசேந்தின் போன்ற சத்துகள் அதிகம் நிறைந்திருக்கின்றன. இவை ரத்தத்தில் பிராண வாயு உட்கவர்வதை அதிகரித்து உடலின் நோயெதிர்ப்பு சக்தியை வலுவாக்குகிறது. காலிஃபிளவர், ப்ரோக்கோலி போன்ற மாவுச்சத்து இல்லாத இலைக் காய்கறிகளில் >15 கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளதால், இது ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கிறது. காலிஃபிளவரில் காணப்படும் அய்சோதியோசயனைட்  (Isothiocynates)  உடலில் சீரான ரத்த ஓட்டம் ஏற்படுத்தி இதய நலத்தினைப் பாதுகாக்கிறது. காலிஃபிளவரில் காணப்படும் வைட்மின் ‘சி’   கண் தசை அழற்சி நோயைக் குணப்படுத்துகிறது.

‘ஏ’, ‘பி’ வைட்டமின்கள், தாது உப்புகள், நார்சத்து ஆகியவை கர்ப்பிணிகளின் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல், கருவிலுள்ள குழந்தையின் ஆரோக்கியத்திலும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

நரம்புக் கோளாறால் ஏற்படும் அல்சைமர், பார்கின்சன் நோய்களால் நரம்புகளில் ஏற்படும் வீக்கம், விஷத்தன்மையை நீக்குகின்றன. காலிஃபிளவரை அதிக அளவு உணவில் எடுத்துக்கொள்ளும்போது தைராய்டு சுரப்பியில் வீக்கத்தை உண்டாக்கி தைராய்டு சுரப்பினை குறைக்கும் என்பதால், தைராய்டு குறைபாடு உள்ளவர்கள் மட்டும் தவிர்ப்பது நல்லது.

பீட்ரூட்

பீட்ரூட் கிழங்கு வகையைச் சேர்ந்தது. சிவப்பு அல்லது நாவல் நிறத்தில் உள்ள இதனை செங்கிழங்கு என்றும் குறிப்பிடுகிறார்கள். பீட்ரூட்டில் பல வகை நன்மைகள் உள்ளன. இதனை சமையல் செய்தும் சாப்பிடலாம் அல்லது பச்சையாகவும் சாப்பிடலாம். இதன் கீரையில் வைட்டமின் ‘ஏ’, இரும்புச்சத்து, ரிபோஃபிளேவின் இவை அதிகமாக இருக்கின்றன. பீட்ரூட்டினை மட்டும் சாப்பிடாமல் அதன் கீரையையும் சேர்த்துச் சமைத்து சாப்பிட்டு வந்தால் ரத்தம் தினமும் புதுப்பிக்கப்படும். கண் பார்வை சிறப்பாக இருக்கும்.

பித்தப்பை, சிறுநீரகம் ஆகியவற்றில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றி உடலுக்கு நன்மை செய்கிறது. ரத்தசோகை உள்ளவர்கள் பீட்ரூட் கிழங்கை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் மூலநோய் குணமாகும். பித்தக் கோளாறு அகலும். கல்லீரல் பலம் பெற்று மஞ்சள் காமாலை நோய் வராமல் தடுக்கும்.

நாள்தோறும் பீட்ரூட் சாற்றைப் பருகி வந்தால், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு குறைந்து செரிமானப் பிரச்சினை நீங்கும். பீட்ரூட் சாறுடன் வெள்ளரிக்காய்ச் சாறு கலந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரகம் மற்றும் பித்தப்பையில் தங்கி இருக்கும் அழுக்குகளை வெளியேற்றும்.

இதில் உடலுக்குத் தேவையான மெக்னீசியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம், நைட்ரேட், கால்சியம், காப்பர், செலினியம், ஜிங்க், இரும்புச்சத்து மற்றும் மாங்கனீசு போன்ற சத்துகள் நிறைந்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *