ஆச்சாரியப்படாதீர்! ஆதாரம் இதோ!
நம் நாட்டில் கல்லையெல்லாம் கடவுளாக்கிவிடுவான்! கடவுள்கள் வந்ததே இப்படித்தான் என்று கூறிவிட்டு, மைல் கல்லை மைல்சாமி என்றும் பர்லாங் கல்லை பர்லாங்சாமி என்றும் ஆக்கிவிடுவான் என்றார் தந்தை பெரியார்.
பெரியார் சொன்னது எல்லாமே நடந்திருக்கும்போது இது மட்டும் நடக்காமல் போகுமா? நடந்துவிட்டதற்கான ஆதாரங்கள் இதோ!
மைல்கல் முனியசாமி
விருதுநகரில் உள்ள செந்திவினாயகர் தெருவில் ‘விருதுபட்டி 1 மைல்’ என்று தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதப்பட்ட அந்தக் கால மைல் கல் ஒன்றுக்கு பீடம் எழுப்பப்பட்டு “முத்து முனியசுவாமி’’ கோவிலாக மாறப்பட்டு இருக்கிறது. அந்தப் பகுதி மக்களால் வழிபடும் சாமியாகவும் அந்த மைல்கல் மாற்றப்பட்டுவிட்டது.
இன்றைய விருதுநகரின் பழங்காலப் பெயர் விருதுபட்டி. செந்தி வினாயகபுரத்திலிருந்து விருதுபட்டிக்கு தூரம் 1 மைல் என்பதால் செந்திவினாயகபுரத்தில் இந்த மைல்கல் நடப்பட்டது. நாளடைவில் விருதுபட்டி வளர்ச்சியடைந்து செந்தி வினாயகபுரத்தையும் இணைத்துக் கொண்டு விருதுநகராக மாறியது. அதன் பிறகு இந்த மைல்கல் தேவைப்படாத அடையாளமாகப் போய்விட்டாலும், அப்பகுதி மக்கள் மைல்கல்லுக்குப் பீடம் அமைத்து முனியசுவாமியாக வழிபட்டு வருகிறார்கள்.
மைல்கல் மைலேசுவரன்
தருமபுரி மாவட்டம் மெனசியிலிருந்து தோழனூர் வரை தார்ச்சாலையில் மைல்கல்லை ‘மயிலேசுவரன்’ கடவுளாக்கி வணங்கி வருகிறா£கள். அண்மையில் அந்தச் சாலை அமைக்கும் பணிக்காக பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி தலைமையில் மைல் கல்லுக்கு (மைலேசுவரன்) பொட்டிட்டு பூ வைத்து அர்ச்சகர் மந்திரம் ஓத, பூஜை புனஷ்காரம் செய்து வழிபட்டனர்.