மக்களுடைய அன்றாட வாழ்க்கையில், நடத்தையில் அவர்களிடம் நிலவுகிற மூடப்பழக்க வழக்கங்களும், மடைமை எண்ணத்தை அடிப்படையாகக் கொண்ட செய்கைகளும் அறவே நீக்கப்பட்டு புதிய அறிவுக்குப் பொருத்தமான செய்கைகள் இடம் பெறுவதுதான் சீர்திருத்தமாகும்.
- பகுத்தறிவுக்குக் கொஞ்சமும் பொருந்தாத கண்மூடிப் பழக்கங்கள் எப்படியோ நம் சமூகத்தில் புகுந்து, நாட்டையும் நாட்டு மக்களையும் பாழ்படுத்துகின்றன. இத்தகைய பழக்கங்கள் சமூக முன்னேற்றத்திற்குத் தடையாக உள்ளன. எனவே, அவை நீக்கப்பட வேண்டும்.
- தொழிலின் தேர்ச்சியும் முதிர்ச்சியும் பொருளைக் கொண்டுவந்து குவிக்க வேண்டும் என்று கருதும் தருவாயில் அங்கே கலை மறைகிறது.
- நல்லாச் சிரிச்சிட்டா வியாதி வராது. டாக்டருக்குப் பில்கூடக் கொடுக்க வேண்டியதில்லை. சிரிப்பு ஒரு மருந்து; நம் வாழ்க்கைத் துயரத்திற்கெல்லாம் தக்க மருந்து.
- மனிதன் உயர்ந்தவன் என்றால் அது அழகால் அல்ல; மனிதன் சிரிக்கத் தெரிந்தவன், ஆகவே உயர்ந்தவன். மற்ற பிராணிகளுக்கும் சந்தோசம் உண்டு. ஆனால் சிரிக்கத் தெரியாது.
- யார் எதைச் சொன்னாலும் அதை அப்படியே நம்பி தன்னிஷ்டப்படியே காரியமாற்றுகின்ற மனப்போக்கு மாற்றப்பட்டு யார் சொல்வதையும் கேட்டு, சிந்தித்துச் சீர்தூக்கி, பின் செயல்புரிகிற நிலைக்கு மக்களைக் கொண்டு வருவது, ஒரு மகத்தான மாற்றத்தை உண்டுபண்ணுவதே சீர்திருத்தமாகும்.
- எனது என்ற வார்த்தையே மனிதர்களிடமிருந்து பெரும்பாலும் நீங்க வேண்டும். எனது என்ற வார்த்தையை உபயோகிப்பதில் மேலோட்டமாகத்தான் ஏதாவது நன்மை இருப்பதாகத் தோன்றுகிறது. கூர்ந்து நோக்கினால் தீமைகள்தான் அதிகம்.
- எனது என்ற சொல்லை உபயோகித்துக் கொண்டிருப்பவர்கள் நமது என்ற சொல்லை மட்டும் மாற்றிக் கொண்டால் போதாது. சொல் மாறுமுன் இதயம் நமதாக வேண்டும். புண்ணுக்கு வெறும் துணி கட்டிப் பயனில்லை. போட வேண்டிய மருந்தைப் போலத்தான் முதலில் இதயம் நமதாக வேண்டும். அப்புறம் பேச்சு நமதானால் போதும்.
- ஈரமில்லாதவன் வீரமாகப் பேசினாலும் நம்பக்கூடாது. வீரமில்லாதவன் ஈரமாகப் பேசினாலும் நம்பக் கூடாது. அவர்கள் விழிக்கண் குருடர்கள். கண் இருப்பது போலிருக்கும். பயன் இருக்காது. அதை மூடி வைக்கவும் ஒரு கூலிங் கிளாஸ் தேவை. வீரம் – வெல்லும் ஆற்றல். ஈரம் – இரங்கும் பண்பு.
- அநேகக் கலைஞர்கள் கலையைக் கலைக்கண் கொண்டே வளர்ப்பதில்லை. வியாபாரக் கண்கொண்டே வளர்க்கிறார்கள். இன்னும் சில கலைஞர்கள் கலையை ஒரு பொழுதுபோக்கு அம்சமாக மட்டுமே கருதுகிறார்கள். இன்னும் சிலர் கலையின் மூலம் தான் ஒரு பெரிய மனிதராகப் பவனி வரலாம் என்ற துராசையின் காரணமாகவே கலையை வளர்க்கிறார்கள். போராட்டம் என்ற வார்த்தை ஒரு வகையில் புனிதமானதுதான். அதாவது, ஒருவருக்கு மற்றொருவர் தரவேண்டிய உரிமைகளைத் தராதிருக்கும்போது நிகழுகிற ஒரு நிகழ்ச்சிதான் போராட்டம்.
- எத்துறையில் உழைத்தாலும் சரி, அறிவுக்குத் தடை போடும் பூட்டை உடையுங்கள்.
- பொங்கல் என்ற வார்த்தை அடுப்பிலே பொங்கும் பால்பொங்கலை நோக்கி எழுந்ததுதான் என்கின்றனர் பலர். உழவனின் உள்ளம் அந்த நாளில் மகிழ்ச்சியினால் பொங்குகிறது. அதைக் கண்டு அனைவரின் மனமும் மகிழ்ச்சியினால் பொங்குகிறது. இதைக் கண்டுதான் நமது தமிழறிஞர்கள் உழவனது உள்ளம் உவகையால் பொங்கும் இந்த நாளுக்குப் பொங்கல் திருநாள் என்று பெயர் சூட்டியிருக்கலாமென யூகிக்கிறேன்.
- மக்கள் பசுவைப் பூஜிக்கிறார்கள், வணங்குகிறார்கள். ஆனால், அதை எப்படி வளர்ப்பது என்பதை மட்டும் அறியவில்லை.
Leave a Reply