நூல்: கொஞ்சம் டார்வின்
கொஞ்சம் டாக்கின்ஸ்!
ஆசிரியர்:மனநல மருத்துவர் ஷாலினி
வெளியீடு:கருஞ்சட்டைப் பதிப்பகம், சென்னை – 87.
கிடைக்குமிடம்: 122/130 என்.டி.ஆர் தெரு,
ரங்கராஜபுரம், கோடம்பாக்கம்,
சென்னை – 24.
தொலைபேசி: 044 – 42047162
விலை: ரூ80. பக்கங்கள்: 132
ஆருயிர் முறை
பிழைப்பு என்பது பெரும்பகுதி மரபணு வீரியத்தைச் சார்ந்தது. அதனால் இந்த மரபணுக்களின் தரத்தை அபிவிருத்தி செய்ய இயற்கை சில விதிகளை உபயோகிக்கிறது. அதில் முதலாவது: அதே மரபணுக்கள் இருக்கும் நபர்கள் புணர்ந்து குட்டி போடக் கூடாது. உதாரணத்திற்கு, தாய்க்கும் பிள்ளைக்கும் கிட்டத்தட்ட 50% அதே மரபணுக்கள்தான் இருக்கும். அதைப் போலவே ஒரே தாய் தந்தைக்குப் பிறந்த அனைத்துக் குட்டிகளுக்கும் அதே 50% மரபணு ஒற்றுமை இருக்கும். அதனால்தான் தன் சொந்தத் தாய் தந்தையோடோ, அல்லது உடன் பிறந்தவரோடோ புணர்வது ஆகாது என்கிற வலிமையான விதியை இயற்கை எல்லா விலங்குகளுக்கும் மனதில் முன்பதிவு செய்துள்ளது.
இதைப் போய் எப்படி முன்பதிவு செய்ய முடியும் என்றுதானே யோசிக்கிறீர்கள்? கவர்ச்சிக்கான ரசாயனங்கள் சிலது உண்டு. அவற்றை ஜீலீமீக்ஷீஷீனீஷீஸீமீs என்போம். இந்த ஃபிரமோன்கள் வேற்று மரபணுகொண்ட தன் இனத்தின் எதிர்பாலினத்தைக் கண்டால் அதிகமாகச் சுரக்கும்படிதான் இயற்கை எல்லா உயிர்களையும் படைக்கிறது. அதனால் சொந்த மரபணு கொண்டவர்களின் மீது பாசமும், வேற்று மரபணு கொண்டவர் மீது இனக் கவர்ச்சியும் அதிகமாய்த் தோன்றுகிறது.
ஆக, மரபணு ஒற்றுமை அதிகம் இருக்கும் நபர்கள் கூடிக் குட்டி போடுவது தடுக்கப்பட்டு, வேற்று மரபணுக் கலவையை இயற்கை ஆதரிக்கிறது. இதுதான் இரண்டாவது புணர்ச்சி விதி.
ஏன்?
நெருங்கிய உறவுக்குள் உறவு கொண்டு பிள்ளை பெறும்போது, அதே பழைய மரபணுக்கள்தான் மீண்டும் மீண்டும் கூடி ஈனப்படுகின்றன. இதனால் மரபணு ரீதியாய்ப் பரவும் கோளாறுகள் அதிகரிக்கும், அதனால் பிறக்கும் குழந்தைகளுக்கு உடல்/மனநோய்கள் வருவதற்குச் சாத்தியக் கூறுகள் அதிகம்.
உதாரணத்திற்கு, பண்டைக் கால எகிப்தின் மரபின்படி சாம்ராஜ்ஜியத்தை வெளியாள்கள் கைப்பற்றிவிடக் கூடாதென்று, பட்டத்து இளவரசனுக்கு அவனுடைய சொந்தச் சகோதரியையே மணமுடிக்கும் வழக்கம் இருந்தது. இப்படி எல்லாம் மிகுந்த முன் யோசனையுடன் செயல்பட்டதால் எகிப்திய சாம்ராஜ்ஜியம் பல்கிப் பெருகிப் பல காலம் தழைத்ததா என்று பார்த்தால், இல்லை. சில தலைமுறைகளுக்கு அப்புறம் இருந்த சுவடே இல்லாமல் அழிந்தே போயிற்று.
ஏன் தெரியுமா?
ஒரே பெற்றோருக்குப் பிறந்த அண்ணன் தங்கை என்றால் இருவருக்கும் 50% ஒரே மரபணுக்கள்தானே, இந்த 50 + 50% ஒன்று கூடும்போது, திரும்ப அவை 100% அதே மரபணுக்கள்தானே? பழைய மாவிலேயே வார்த்த தோசை போல, புதுப்பிக்கப்படாத பழைய மரபணுக்கள் பாழாகின்றன.
அதனால் எகிப்திய அரசனுக்கும் அரசிக்கும் முதலில் ஒருவர் மீது மற்றவருக்குக் கலவியில் கவர்ச்சியே இருந்திருக்காது. அரசனுக்கு வெளிக் காதல்களும், அரசிக்கு வெளிக் காதல்களும் ஏற்பட்டுக் குடும்ப வாழ்க்கை சண்டை சச்சரவாக இருந்திருக்கும். ஆனால், வெளி உறவில் பிறக்கும் பிள்ளைகளுக்கு முடிசூட்ட மாட்டார்கள். அதனால் கடமைக்காக அரசனும் அரசியும் புணர்ந்தே ஆக வேண்டும். இப்படிப் புணர்ந்து பிறக்கும் பிள்ளைகளுக்கோ, மரபணு வீரியம் இருக்காது. பழுதான மரபணுக்களே இரட்டை அளவில் கிடைத்திருக்கும் என்பதால் இவர்கள் நோய்வாய்ப்பட்டு, உடனேயே, அற்ப ஆயுளிலோ இறந்து போக வாய்ப்பு அதிகம். இப்படி, பட்டத்து இளவரசன் இறந்துபோனால் நாடு என்ன ஆகும்? கூட்டிக் கழித்துப் பார்த்தால், இந்த யுக்தி அதிக மகசூல் தருவதா? முதலுக்கே மோசம் ஏற்படுத்துவதா?
இப்படித்தான் எகிப்தின் பெரிய சாம்ராஜ்ஜியங்கள் அழிந்தன.
இது கிட்டத்தட்ட மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் நடந்த வரலாற்றில் பழைய பிழை என்றே வைத்துக் கொண்டாலும், போன நூற்றாண்டிலும் இதே போல அரச குடும்பங்களில் மரபணு ரீதியான தவறுகள் நடக்கத்தான் செய்தன. அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் சாதாரண மனிதரைத் திருமணம் செய்தால் அந்தஸ்து குறைந்துவிடும் என்று நம்பிய சென்ற நூற்றாண்டினர், இங்கிலாந்து, ஃபிரான்ஸ், ஜெர்மனி, ருஷ்யா மாதிரியான நாடுகளின் அரச குடும்பங்கள் மட்டும் தமக்குள்ளேயே திருமண உறவுகளை மேற்கொண்டார்கள்.
இப்படி அரசு உட்குடும்பத் திருமண முறையில் பிறந்த ஆண் குழந்தைகளுக்கு எல்லாம் ஒரு விசித்திர நோய் பாதிக்க ஆரம்பித்தது. ஆண் குழந்தைகளுக்கு மட்டும் சிறு காயம் பட்டாலும், உதிரப் போக்கு நின்று போகாமல் உடம்பில் உள்ள எல்லா ரத்தமும் வெளியேறி மரணம் கூட சம்பவிக்கும்படியாகும் அந்தத் தீவிரமான நோயை ஹீமோஃபீலியா என்போம். அய்ரோப்பிய அரச குடும்பங்களில் பெரிய பாதிப்பு ஏற்படுத்தியதால் இதனை அரச நோய் ‘Royal illness’ என்றும் அழைத்த காலம் இருந்தது.
தாயின் X குரோமோசோம் வழியே மட்டும் பரவும் இந்த நோய், அம்மாவிடமிருந்து தலைமுறை தலைமுறையாகப் பரவும். அரச பாரம்பரியம் விட்டுப் போய்விடக் கூடாது என்று தொடர்ந்து அரச குடும்பங்களுக்குள் திருமணம் செய்ததனால், ஆண் வாரிசுகளுக்கு இப்படியே நோய் ஏற்பட்டு, இறந்து போனதால் அய்ரோப்பிய சாம்ராஜ்ஜியங்கள் கிட்டத்தட்ட அழிந்தன.
இங்கிலாந்தின் ராணி விக்டோரியாவின் மரபணுக்களில் இருந்த இந்த நோய் அவருடைய வம்சாவழியினர் அனைவருக்கும் இப்படியே பரவி, உயிர்ச் சேதம் ஏற்படுத்திக் கொண்டிருந்தது.
அதன் பிறகுதான் இது பரம்பரை நோய் என்று கண்டுபிடிக்கப்பட்டது. மரபணு மூலம் பரவுவது என்று தெரியவந்தது. அப்போதி லிருந்துதான் அரச குடும்பங்கள் வேற்று ஆள்களைத் திருமணம் செய்வதே மேல் என்கிற முறை புதிதாய் ஏற்படுத்தப்பட்டு, அதன் பின், தொடர்ந்து இங்கிலாந்தின் ராஜ குமாரர்கள் சாதாரணக் குடும்பத்தின் பெண்களையே மணப்பதை நாம் பார்க்கலாம்.
மரபணுக்களால் நம் வாழ்வின் மொத்தப் போக்கையே மாற்றிவிட முடியும் என்கிற விஷயம் அவர்களுக்குத் தெரிந்து பல காலம் ஆகியும், இதே தவறைத்தான் நம்மூர்களில் இன்னமும் செய்கிறார்கள். அத்தை மகன், மாமன் மகள், தாய்மாமன், அக்காள் மகள், இஸ்லாமியர்களில் பெரியம்மா பையனும், சித்தியின் மகளும் என்று சொந்தத்திற்குள் திருமணம் செய்கிறார்கள். இப்படிச் செய்வது ஆபத்தானது. பிறக்கப்போகும் குழந்தைகளுக்குப் பரம்பரை நோய்கள் வரும், ஊனமாய்ப் பிறக்க வாய்ப்பு அதிகம் என்று மருத்துவர்கள் என்னதான் ஜெனடிக்ஸ் பற்றிச் சொல்லித் தடுத்தாலும், “அப்படி எல்லாம் எதுவும் ஆகாது. எங்க குடும்பங்கள்ல இது ஒண்ணும் புதுசு இல்ல, பல தலைமுறையாக இதே வழக்கம்தான், என்ன கெட்டுப்போச்சு? எல்லாம் கடவுள் பார்த்துப்பார்’’ என்று வியாக்கியானம் பேசித் திருமணம் செய்வார்கள். சில ஆண்டுகள் கழித்து, குழந்தைக்கு மூளை வளர்ச்சி சரியில்லை, படிப்பு வரவில்லை, வலிப்பு நோய் இருக்கிறது, முக அமைப்பில் கோளாறு இருக்கிறது, இதயத்தில் ஓட்டையாம் என்பது மாதிரியான புகார்களுடன் வந்து நிற்பார்கள். ஆனால், இம்மாதிரியான மரபணு ரீதியான நோய்களுக்குத் தற்போது பெரிய சிகிச்சைகள் ஏதும் இல்லை.
இதற்கு நேர் எதிராய், வெளி ஆள்கள் திருமணம் செய்யும்போது, புது வகை மரபணுக்கள் ஒன்று சேர்வதால், ஒட்டுவீரியம் hybrid vigour அதிகரித்து, உதாரணத்திற்கு, ஒரு குடும்பத்தில் ஆல்பினிஸம் எனும் தோலில் பழுப்பு நிறம் அறவே இல்லாமல் போகும் நோய் ஏற்பட்டிருக்கிறது என்றால், அப்பாவின் மரபணு பாதி நோய்த் தாக்கம், அம்மாவின் மரபணுவின் மீதி பாதி நோய்த் தாக்கம் = குழந்தைக்கு 100% நோய்த் தாக்கம் இருக்கிறது. அடுத்த தலைமுறையில் இவர்கள் வெளியில் திருமணம் செய்தால் 50% நோய் விலகும், அதற்கு அடுத்த தலைமுறையில் இன்னொரு 75% நோய் தீரும். அதற்கு நான்காம் தலைமுறையிலும் இதே போல வேற்று மரபணு கலந்தால் 87.5% நோய் தீரும். இப்படியே தொடர்ந்து அய்ந்தாம் தலைமுறையில் 93.75, ஆறாம் தலைமுறையில் 96.87, ஏழாம் தலைமுறையில் 98.37, எட்டாம் தலைமுறையில் 99.12%.
ஒரு நோயைக் கிழித்து முழு ஆரோக்கியம் பெற எத்தனை தலைமுறைகளாகும்?
இப்படியே இந்த நோயுண்டாக்கும் மரபணுக்களைக் கழுவி அகற்றிவிட எத்தனை தலைமுறைகள் ஆகின்றன என்பதைக் கவனியுங்கள். எட்டாவது தலைமுறை வரை வேற்றுக் குடித் திருமணம் செய்தால்தான் நோயின் தாக்கம் 1%க்கும் குறைவாகிறது.
பதினோராவது தலைமுறையும் வெளித் திருமணம் செய்தால்தான் 99.99% நோயிலிருந்து விடுபட முடிகிறது.
100% நோயிலிருந்து விடுதலை என்கிற நிலைமை கிட்டத்தட்ட இல்லவே இல்லை! முப்பத்து அய்ந்தாம் தலைமுறையில் வேற்றுக் குடி உறவு கொண்டாலும்கூட 99.992947% மட்டுமே நோயிலிருந்து தப்பிக்க முடிகிறது!
மேற்சொன்னவை எல்லாமே ஒரே ஒரு நோய்க்கு உண்டான புள்ளிவிவரம். மனிதர்களுக்கு என்று ஆயிரக்கணக்கான மரபுவழி பரவும் நோய்கள் உண்டு என்பதையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.
ஆக, நோயில்லாத சமூகமாய் மனிதர்கள் வாழ வேற்றுக் குடி உறவு முக்கியம் என்பதே பிழைப்பிற்கு உகந்த யுத்தி.
ஆனால், ஒரே காலத்தில் வாழும் எல்லா மனிதர்களுமே இதே யுத்தியைக் கையாள்வதில்லை. இது 2019. இப்போது வாழும் பல மனிதர்கள் வேற்று மரபணு மனிதர்களோடு தங்கள் வீட்டுப் பிள்ளைகள் கூடுவதை ஆதரிப்பதில்லை.
காரணம் அந்தஸ்து, கவுரவம், ஜாதி, இனத்தூய்மைக் கோட்பாடு.
ஆனால், நீங்கள் கூர்ந்து கவனித்தால் தெரியும் _ இனத் தூய்மையும் நோயற்ற வீரியமும் நேர் எதிரான கோட்பாடுகள். இனத்தூய்மை வேண்டும் என்று ஒரே குடியில் உறவைத் தொன்று தொட்டுத் தொடர்ந்தால், நோய்கள் பெருகத்தான் செய்யும். அதனால்தான் எல்லாக் காலத்திலும் இனத் தூய்மை பேசிய மனிதர்கள் மரபணு ரீதியாகத் தோற்றுத்தான் போயிருக்கிறார்கள்.
உதாரணத்திற்கு அஷ்கெனாட்ஸி யூதர்கள்.
சென்ற நூற்றாண்டின் மிகப் பெரிய கொடூரங்கள் என்பன உலகப் போர்கள். அதிலும் இரண்டாம் உலகப் போரின் போது, ஜெர்மானிய நாஜிப் படையினர் செய்த அட்டூழியங்கள் மிகக் கொடுமையானவை. யூதர்களை அவர்கள் முழுவதும் அழித்துவிட முயன்றார்கள். அதனால் அய்ரோப்பாவிலிருந்து அமெரிக்காவுக்குத் தப்பிப் போன யூதர்கள் ஏராளம். அமெரிக்கா சென்ற பிறகும் தத்தம் உட்பிரிவுகளை இனம் கண்டு அவரவர் வம்சாவழியினரும் தனித் தனிக் கூட்டமாய்ச் சேர்ந்து வாழ ஆரம்பித்தார்கள். இதில் ஒரு பிரிவான அஷ்கெனாட்ஸி யூதர்கள் அனைவரும் ஒரே குழுவாய்ப் பல காலம் ஒற்றுமையாய், ஒரே ஊரில் வாழ்ந்தார்கள். ஆஹா! என்ன ஒற்றுமை என்று பாராட்டத் தோன்றுகிறதா?
மிகவும் சிறுபான்மையினர் ஆதலால், இந்த யூதர்கள் தங்கள் சொந்த பந்தங்களோடே கூட்டாய்த் தங்கி இருந்தார்கள், சொந்தத்திற்குள்ளேயே திருமண உறவு மேற்கொண்டார்கள். இதனால் அவர்களுக்குள் பல விதமான பரம்பரை நோய்களின் தாக்குதல் ஏற்பட்டு, அவர்கள் எண்ணிக்கையிலும் வீரியத்திலும் குறைந்துபோக ஆரம்பித்தார்கள்.
இப்போதும் சில வகை மரபுக் கோளாறுகள் முழுக்க முழுக்க அஷ்கெனாட்ஸி மாதிரி சின்னஞ்சிறு யூதக் கூட்டங்களில்தான் காணப்படுகின்றன. இதனைத் தடுத்துத் தங்கள் இனத்தை அபிவிருத்தி செய்ய முடிவு செய்தார்கள் இந்தச் சிறுபான்மையினர். மரபணுவியல் ரீதியான துணைநலப் பொருத்தம் கண்டறியும் ஓர் ஆராய்ச்சிக் கூடத்தை இவர்கள் நிறுவினார்கள். திருமணத்திற்கு முன்பே ஆணுக்கும் பெண்ணுக்கும் மரபணு பரிசோதனை நடத்தி, பொருத்தமான மரபணு ஜோடிகளுக்கு மட்டுமே இவர்கள் திருமணம் செய்து வைத்தார்கள். இந்த யுக்தியினால் சில காலம் கழித்து, அவர்களுக்குள் மிக அதிகமாய்ப் பரவி இருந்த மரபணுக் கோளாறுகள் மெல்ல மெல்லக் குறைய ஆரம்பித்தன!
ராஜிக்கு திருமணமாகி எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. இதுவரை நான்கு முறை கருவுற்றிருக்கிறாள். நான்கு முறையும் சிசுவிற்கு மூளைப் பகுதி வளராமலேயே இருப்பது ஸ்கேனில் தெரியவர, மூன்றாம் மாதத்தில் மருத்துவக் காரணத்திற்காகக் கருக்கலைப்புச் செய்யப்பட்டது. ஏன் இப்படி நடந்தது என ராஜி ஜெனிடிக் ஆலோசனையின் போது கேட்டாள். “இத்தனைக்கும் சொந்தத்தில் கூடத் திருமணம் செய்யவில்லையே?’’. ஆனால், ஆராய்ந்து பார்த்த போது தெரிந்தது என்னவென்றால், கிட்டத்தட்ட இருநூறு, முன்னூறு ஆண்டுகளாய் ஒரே ஊரில் வாழ்ந்த ராஜியின் மூதாதையர்கள் அதே ஜாதிக்குள் மட்டும் திருமணம் செய்து வந்திருக்கிறார்கள்.
அவள் கணவன் அவளுக்கு நேரடியான உறவுக்காரர் இல்லை என்றபோதும், அதே ஊரில் புழங்கிய அதே மரபணுக்கள்தான் என்பதால் மூளை வளர்ச்சியைத் தடை செய்யும் பழுதான மரபணுவின் பாதி அவளுக்கும் மீதிப் பாதி அவள் கணவனுக்கும் இருந்திருக்கிறது. இவர்கள் இருவரும் கூடிப் பெற்ற எல்லா சிசுக்களுக்கும் இந்த இரட்டிப்பு ஆபத்து தாக்கியதால் எல்லாப் பிள்ளைகளுக்கும் அதே நோய் தாக்கியிருப்பது தெரியவந்தது.
இயற்கைக்குத் தனி மனிதர்களைப் பற்றியோ, அவர்களது கருத்துகளைப் பற்றியோ கவலை இல்லை. அதற்கு இருக்கும் ஒரே அளவுகோல் _ பிழைக்கத் தோதா, இல்லையா என்பது மட்டும்தான்.
பிழைப்பிற்கு உதவாத கருத்துகளை யார் கொண்டிருந்தாலும், அவர் எத்தனை பெரிய சமூக அந்தஸ்து கொண்டவராக இருந்தாலும், அல்லது எத்தனை கோடி மனிதர்கள் ஒரே சமயத்தில் அந்தக் கருத்தைக் கொண்டிருந்தாலும், பிழைக்க உதவாத கருத்துகளைப் பின்பற்றுவோர் கொத்துக் கொத்தாய் மாண்டுதான் போயிருக்கிறார்கள்.