சுவடுகள் : திருக்குறளில் கடவுள் வாழ்த்தா?

டிசம்பர் 01-15 2019

தந்தை பெரியார் கூறும் முடிவு!

கி.வீரமணி

தந்தை பெரியார் அவர்கள் ஓர் முழுப் பகுத்தறிவுவாதி. எதையும் தனது பகுத்தறிவுக்கேற்ப சிந்தித்து, தெளிந்து, அனுபவ முத்திரைகளோடு, சுயசிந்தனைக்கேற்ப எதையும் மக்களுக்கு எடுத்துக் கூற அவர்கள் தயங்கியதே இல்லை.

ஒரு கருத்தினைக் கூறும்போது, ஆசாபாசங்களுக்கு அடிமையாகாமல், ஒரு விஞ்ஞானியின் பார்வையோடு கூறும் அவர்கள், அதன் விளைவு எதிர்ப்பாக இருக்கும் என அஞ்சிப் பின் வாங்கும் பழக்கமுடையவர் அல்லர். எதிர் நீச்சலுக்கு ஆளாக நேரிடுமே என்கிற அச்சத்துக்கு அவர்கள் என்றும் ஆளாகாதவர் ஆவார்கள்.

தமிழ் இலக்கியங்களில் அய்யா அவர்களது கண்ணோட்டத்தில் பெரும் அளவுக்கு (முழு அளவுக்கு என்று கூற முடியாவிட்டாலும்) தப்பித்தது வள்ளுவரின் திருக்குறள் மட்டும்தான்.

திருக்குறளில் ‘கடவுள் வாழ்த்து’ என்று முதல் அதிகாரம் தொடங்குகிறதே என்கிறபோது, பகுத்தறிவாளர்கள் அதனை எப்படி நோக்குகிறார்கள் என்பது ஒரு நியாயமான சந்தேகமே ஆகும்.

‘கப்பல் ஓட்டிய தமிழன்’ வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள், குறளை ஆராய்ச்சி செய்த அறிஞர்களில் ஒருவர். பழுத்த கடவுள் நம்பிக்கையாளர்.

அவர்கள், ‘திருக்குறளில் உள்ள கடவுள் வாழ்த்து’ என்பது இடைச்செருகலாக இருக்க வேண்டும் என்று எழுதியுள்ளார்.

தந்தை பெரியார் அவர்கள் எதையும் தனது சுயசிந்தனையோடு சிந்தித்துப் பேசக் கூடியவர் _ எழுதக் கூடிய பகுத்தறிவாளர் _ என்பதால், திருக்குறளின் அவரது கருத்து _ குறிப்பாக கடவுள் வாழ்த்து பற்றி அவரது கருத்து _ என்னவென்பதை முதலில் தெரிந்து கொள்வோம்.

(ஈரோட்டைச் சேர்ந்த மேனாள் ‘விடுதலை’ உதவி ஆசிரியர் திரு.ராமானுஜம் அவர்கள் தந்த ஒரு பழைய கட்டுரை)

24.11.1948 “விடுதலை’’யில் “திருவள்ளுவர் ஆஸ்திகரா? _ நாஸ்திகரா?’’ என்னும் தலைப்பில் தந்தை பெரியார் அவர்களால் எழுதப்பட்டது. அதனைப் படியுங்கள்.

தந்தை பெரியார் கட்டுரை

திருவள்ளுவர் ஆஸ்திகரா? – நாஸ்திகரா ?

– தந்தை பெரியார்

ஆஸ்திகர் என்றால், கடவுள் உண்டு என்பவர். நாஸ்திகர் என்றால் கடவுள் இல்லை என்பவர்.

“கடவுள் என்றால் என்ன?’’

“இரு! இரு!! அங்கேதான் பிரேக் போட்டிடுச்சி!’’

“என்னப்பா கடவுள், கடவுள் என்று உலகிலே அறிவாளி, மடையன் எல்லோருமே பேசுகிறார்கள், கடவுள் என்றால் என்ன என்று கேட்டால் பிரேக் மாட்டிக்கிச்சி என்கின்றாயே!’’

“சரி சொல்லுகிறேன் கேள்! கடவுள் என்றால் கடவுள்தானே?’’

“கடவுள் என்றால் கடவுள்தான்’ என்று சொல்லுகிறாயே! இது உனக்காவது புரிகிறதா?’’

“அட! என்னப்பா! நீ சுத்த சூனாமானாவாய் இருக்கிறே! அதுதான் கடவுள் என்றால் ஒருத்தருக்கும் விளக்க முடியாது, எவராலும் புரியாது, யாராலும் தெரிந்து கொள்ள முடியாது, எவருக்கும் எட்டாது என்றெல்லாம் கூடை கூடையாய்ச் சொல்லியிருக்கிறார்களே _ பெரியோர்கள்! கடவுள் போன்றவர்கள்! அப்படி இருக்க நீ கடவுள் என்றால் என்ன என்று கேட்கிறாயே! உனக்குக் கொஞ்சமாவது புத்தியிருக்கிறதா? சூனா மானா என்கிறது சரியாய் இருக்கிறதே’’

“சரி, கோபித்துக் கொள்ளாதே! கடவுள் சங்கதி இப்படி இருக்கும்போது, நீ என்னை வந்து, “திருவள்ளுவர் கடவுள் உண்டு என்பவரா? இல்லை என்பவரா?’’ என்று கேட்கிறாயே, நீ திருவள்ளுவரை மடையன் என்று நினைத்தது மாத்திரமல்லாமே என்னைக்கூட மடையன் என்று நினைத்துக் கொண்டுதானே இப்படிக் கேட்கிறாய்?’’

“எப்படிக் கேட்கிறேன்?’’

“அப்படியா? நாம் இப்படி கடவுள் உண்டா, இல்லையா என்று கேட்டால் இவன் ஏதாவது ஒரு பதில் சொல்லுவான். கடவுள் இருக்கிறது என்றாலும் மாட்ட வைத்துக் கொள்ளலாம். அதாவது காட்டு என்று கேட்கலாம்.  இல்லை என்றாலும் மாட்ட வைத்துக் கொள்ளலாம். அதாவது எதை இல்லை என்று சொன்னாய் என்று மாட்ட வைத்துக் கொள்ளலாம் என்றுதானே இப்படிக் கேட்டாய்?’’

“இல்லேப்பா! நான் அப்படி ஒன்றும் நினைக்கவில்லை; உண்மையாகவே கேட்டேன்.’’

“அப்போ நீ என்னை மடையன் என்று நினைத்துக்கொண்டு கடவுள் உண்டா _ இல்லையா என்று கேட்டிருக்காவிட்டால், பிறகு நீ ஒரு மடையனாக இருந்து இந்தக் கேள்வி கேட்டிருக்க வேண்டும்.’’

“நானா மடையன்? ஜாக்கிரதையாகப் பேசு’’

“நீ சும்மா வெறும் மடையனல்ல; அடி மடையனாக இருக்க வேண்டும்.’’

“அடி மடையன் என்றால் என்ன?’’

“அடி மடையன் என்றால் அஸ்திவாரத்திலேயே மடையன் என்று அருத்தம்.’’

“என்னப்பா இப்படி பேசிறே? உலகமெல்லாம் அடிபடும் இந்தக் கடவுள் என்கிற சங்கதி பற்றி திருவள்ளுவர் கருத்து என்ன என்று கேட்டதற்கு, எனக்கு இத்தனை மடையன் பட்டம் கட்டி விட்டாயே? இதுதானா தெரியாதவனுக்குத் தெரியப் பண்ணுகிற மாதிரி?’’

“சரி, அப்படிக் கேளு; சொல்லுகிறேன். திருவள்ளுவர் குறள் 1330 பாட்டுக் கொண்டது. அதில் அவர் ஒரு பாடலில்கூட கடவுள் என்கிற வார்த்தையை  _ சொல்லை உபயோகப்படுத்தவே இல்லை.’’

‘நிஜமாவா?’

‘ஆம் நிஜமாகத்தான்’

“கடவுள் வாழ்த்து என்று ஒரு அதிகாரம் இருக்கிறதே’’

“ஆம்; முதல் அதிகாரத்துக்குக் கடவுள் வாழ்த்து’’ என்ற தலைப்புதான் கொடுக்கப் பட்டிருக்கிறதே ஒழிய, அந்த அதிகாரத்திலுள்ள 10 பாட்டுகளிலும் ஒரு அதிகாரத்தில்கூட கடவுள் என்ற வார்த்தையே காணக் கிடையாது!

“பொறு பொறு சற்று ஞாபகப்படுத்திப் பார்க்கிறேன் _ சரி கடவுள் என்கிற சொல் குறளில் இல்லை என்பது சரிதான். ஆனால், தெய்வம் என்கிற வார்த்தைகள்தான் பல இருக்கின்றனவே. அப்போது அவர் தெய்வத்தை ஒப்புக் கொண்டார் என்று ஆகவில்லையா?’’

“1330 குறள் பாட்டுகளில் தெய்வம்  என்ற வார்த்தைகள் ஆறே ஆறு இடங்களில் காணக் கிடக்கின்றன. அதாவது 43, 50, 55, 619, 702, 1023 ஆகிய ஆறு எண்கள் கொண்டவைகளில். ஆனால், அவைகள் கடவுளைக் குறிக்கின்றனவா என்பது கவனிக்கப்பட வேண்டியதாகும். அதாவது இன்று இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள், சைவர், வைணவர், ஸ்மார்த்தர், மாத்துவர், பார்ப்பனர் முதலியோர் கருதிக் கொண்டிருக்கும் கடவுள்களைக் குறிக்கின்றனவா அல்லது வேறு எதையாவது குறிக்கின்றனவா என்று பார்க்க வேண்டும்’’

“கடவுளைக் குறிக்கின்றன என்பதில் சந்தேகம் உண்டா?’’

“சந்தேகமாய் இருக்கலாம். நான் காரணம் சொல்லுகிறேன், கேள்:!’’

திருவள்ளுவர் குறளில் உள்ள முதலாவது பெருமை என்னவென்றால், அவை பெரிதும் கூடுமான வரை தூய தமிழ் மொழியில் அதுவும் உயிர் எழுத்துகளை அதிகமாகக் கொண்டு ஆக்கப்பட்டிருப்பதாகும்.

அப்படிப்பட்ட தமிழ்ப் பற்றுள்ள அந்த நூலில் காணப்படும் தெய்வம் என்ற சொற்கள் கடவுளைக் குறிப்பதானால் கடவுள் என்றே வள்ளுவர் குறிப்பிட்டிருப்பார். தெய்வம் என்ற சொல் தமிழாக இருக்க முடியாது. ஏனெனில் அச்சொல்லின் முதல் எழுத்தாகிய ‘தெ’ என்பது வடமொழி ஒலி கொண்ட சொல் ஆகும். அந்தத் தொடர் வரவேண்டிய சொல்லுக்குத்தான் அவர் பயன்படுத்தி இருப்பார்.

அன்றியும் 43ஆவது குறளில் தென்புலத்தார் என்ற சொல்லோடு சேர்ந்து வரும் தெய்வம் என்ற சொல்லுக்குப் பிதிர்கள் _ தேவர்கள் என்கிற பொருள் காணப்படுகிறது. இதுவும் இல்வாழ்க்கைக்காரனுக்குத்தான் முக்கியமாகக் கொள்ளப்படுகிறது.

50ஆவது குறளில் தெய்வம் என்ற சொல் ‘வானுறையும்’ என்ற சொல்லை அடைமொழியாகக் கொண்டு வானவர்களைக் குறிக்கும் தன்மையில் வழங்கப்பட்டிருக்கிறது.

55ஆவது குறளில் “தெய்வம் தொழா அள்’’ என்றதில் தெய்வம் கணவனைவிட தாழ்ந்தது என்ற கருத்தில் கையாளப்பட்டிருக்கிறது.

619ஆவது குறளில் “தெய்வத்தால் ஆகாதெனினும்’’ என்றதில் தெய்வம் மனிதனுடைய முயற்சியைவிட தாழ்ந்தது என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

702ஆவது குறளில் “தெய்வத் தோடொப்பக் கொளல்’’ என்ற தொடரில் தெய்வம் என்ற சொல் அறிவாளிக்குச் சமம் என்ற உவமையில் சொல்லப்பட்டிருக்கிறது.

1023ஆவது குறளில் “தெய்வம் மடிதற்றுத் தான்முந்துறும்’’ என்று இயற்கைக்கு ஒப்பிட்டுச் சேர்க்கப்பட்டிருக்கிறது. அதாவது நல்ல காரியம் செய்தால் கண்டிப்பாய் வெற்றி கிடைக்கும் என்ற கருத்தில். அன்றியும் தெய்வம் என்ற சொல் மேலும், தேவர், தேவன், வானோர் என்பன போன்ற ஆரியர் கூறும் காரணங்கள் எதற்கும் உருப்பொருளாக பிரதிப்  பொருளாகவே பெரிதும் காணப்படுகிறது-.

மற்றும் இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது என்னவென்றால், திருக்குறளில் முதலாவது அத்தியாயமாகிய கடவுள் வாழ்த்து என்ற தலைப்பைக் கொண்ட அத்தியாயத்துப் 10 குறள்களிலும் கடவுள் என்ற சொல் காணப்படவில்லை என்றாலும், தெய்வம் என்ற சொல்லும் காணப்படவில்லை என்பதாகும்.

எனவே, வள்ளுவர் கடவுளை ஏற்றுக் கொண்டவராகக் காணப்படவில்லை என்பதோடு, அவர் கையாண்டிருக்கும் தெய்வம் என்ற சொல் கடவுளைக்  குறிக்கும் பிரதிச் சொல்லாகவும் கருத முடியாது என்பதும் கூறப்பட்டுள்ளது’’ என்று முடிவு கூறுகிறார் தந்தை பெரியார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *