கவிதை : ஆசிரியருக்குப் பிறந்த நாள் வாழ்த்து!

டிசம்பர் 01-15 2019

 பேராசிரியர், முனைவர் இரா.மணியன்

பள்ளியிலே அய்ந்தாவது படிக்கும் போழ்தே

                பகுத்தறிவுப் பாசறையில் பயிற்சி கொண்டார்;

துள்ளிவிளை யாடுகின்ற பருவம் தொட்டே

                தொண்டாற்றும் பேராற்றல் தோற்றம் பெற்று

வெள்ளையுள்ளம் கொண்டவராம் பெரியார் போற்றும்

                வீரம்கொள் வீரமணி யாகி விட்டார்;

உள்ளத்துள் பெரியாரை விதைத்துப் போற்றி

                உயர்கொள்கை உரமிட்டு வளர்த்துக் கொண்டார்.

 

பெருங்கூட்டம் கூடிநிற்கும் பேர வைக்குள்

                பேராற்றல் கொண்டவீர இளைஞர் சூழ

கருஞ்சட்டைப் படையினரின் வாழ்த்தைக் கேட்டு

                களிப்புடனே கருத்துமழை பொழிவ தற்காய்

கருப்புநிறச் சட்டையுடன் கழுத்துப் பக்கம்

                கருங்கரைகொள் துண்டொன்று தோளில் தொங்க,

கருப்புக்கரை வேட்டிகட்டி அவையில் தோன்றும்

                காட்சியினைக் காணக்கண் கோடி வேண்டும்.

 

எண்ணுகின்ற செயல்களெல்லாம் தமிழர் வாழ்வில்

                ஏற்றமுற்று இருக்கவேண்டும் என்ப தொன்றே;

மண்ணுலகில் தமிழ்மக்கள் மானத் தோடு

                வாழவேண்டும் என்பதுதான் அவரின் கொள்கை;

விண்ணளாவப் பறக்கின்ற பறவை கள்போல்

                விடுதலையைப் பெறுவதுதான் விவேகம் என்பார்;

அண்ணாவைப் போன்றபெரும் அறிஞர் கூட

                அண்ணாந்து நோக்குகின்ற அளவுக் கானார்.

ஆசிரியப் பெருமக்கள் நூறு லட்சம்

                அளவுக்கும் மேலிருப்பர்; எனினும் நாட்டில்

ஆசிரியர் என்றாலே நாமெல் லோரும்

                அறிவார்ந்த வீரமணி என்றே கொள்வோம்;

ஆசிரியர் என்றசொற்கு மாசை நீக்கும்

                அறிவுடையார் என்றேதான் அர்த்தம் சொல்வார்;

ஆசிரியர் வீரமணி மனிதர் மாசை

                அகற்றிமனித நேயர்எனும் விருதை வென்றார்.

 

பாராளும் பதவிகளில் நாட்டம் இன்றிப்

                பாமரரைப் பகுத்தறிவு வாதி யாக்கப்

போராடும் ஒருதலைவர் உள்ளார் என்றால்

                புவியிலேயே வீரமணி ஒருவ ரேதான்;

யாரிடத்துப் பழகினாலும் தமது கொள்கை

                எதிலேயும் மாறாத உறுதி மிகும்

வீரியத்தை ஆசிரியர் அவரிடம் கண்டு

                வியக்காதார் யாருமிந்த நாட்டில் இல்லை.

 

செந்தமிழில் ஆசிரியர் பேசு கின்ற

                சீர்திருத்தக் கொள்கைகளைக் கேட்ப தற்காய்

எந்தநாட்டின் இளைஞர்களும் கூடி நிற்கும்

                எழுச்சிமிக்க காட்சியினை எங்கும் காண்போம்!

எந்தவொரு ஏமாப்பும் காட்டிடாமல்

                எளிமையுடன் தொண்டர்களை நாடிச் சென்று

பந்தபாச உணர்வுடனே பரிவைக் காட்டும்

                பண்பாட்டை ஆசிரிய ரிடம்தான் பார்ப்போம்.

 

எண்பத்தா றாண்டுகளை நிறைவு செய்து

                எண்பத்தே ழாமாண்டை எதிர்வு கொள்ளும்

பண்பாட்டு நிலைக்கலனாய் விளங்கு கின்ற

                பார்போற்றும் ஆசிரியர் இஞ்ஞா லத்தில்

வெண்தாடி வேந்தரின் வழியில் வாழ்ந்து

                வீரச்சொற் பொழிவுகளால் வெற்றி கொண்டு

மண்ணுலகில் மக்களின் மானம் மீட்டு

                மகிழ்வுடனே பல்லாண்டு வாழ்க! வாழ்க!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *