சா.முகமது உஸ்மான்
அவர்களுடன் நேர்காணல்
திரு.சா.முகமது உஸ்மான் அவர்கள் ஓய்வு பெற்ற சென்னை மாநகராட்சி அலுவலர். ஆசிரியரின் கல்லூரிப் பருவத் தோழர் அதே நட்போடு இன்றும் எழுபது ஆண்டுகாலமாக நட்பில் இருவரும் தொடர்கின்றனர். பல்வேறு காலகட்டத்தில் ஆசிரியரோடு நெருங்கிப் பழகி ஆசிரியருக்கு நல்ல தோழராக அன்பும், அக்கறையும் கொண்டவர். பெரியார் பற்றாளர். அண்ணாவின் மீது மதிப்பும் நெருங்கிப் பழகும் வாய்ப்பும் பெற்றவர். சென்னை மாநகராட்சியில் கடைநிலை ஊழியராக இருந்து தன் ஆற்றலால் பதவி உயர்வு பெற்று வருவாய்த் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இன்றும் அதே அன்போடு நட்பைத் தொடர்பவர். அவரது நேர்காணலில் ஆசிரியரின் மேன்மையும், ஈர்ப்பையும் பற்றிக் கூறுகிறார்.
ஆசிரியருக்கும் உங்களுக்குமான முதல் சந்திப்பு எப்போது நிகழ்ந்தது?
கல்லூரியில்தான் முதன்முதலில் ஆசிரியர் அவர்களின் அறிமுகம் கிடைத்தது. கடலூரிலிருந்து தொடர்வண்டியில் வருவார். வெளியே எங்காவது அமர்ந்து சாப்பிடுவார். அப்போது நான்தான் அவரை என் அறைக்கு அழைத்துச் சென்று, “தாங்கள் இந்த அறையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் வந்து படிக்கலாம், ஓய்வெடுக்கலாம்’’ என உரிமையோடு அவருடன் பழக ஆரம்பித்தேன். பிறகு நான் சென்னைக்கு வந்தேன். அவரும் சட்டக்கல்லூரியில் படித்தார். இருவரும் வெவ்வேறு பாதை சென்றாலும் பெரியாரின் சிந்தனையில் ஒன்றுபட்ட நண்பர்களாய்த் தொடர்கிறோம்.
ஆசிரியரிடம் பிடித்த குணம்?
கல்லூரிக் காலத்திலிருந்தே படிப்பது, எழுதுவது என முழுமையாகச் செயல்படத் துவங்கினார். நாங்கள் எல்லாம் அந்தக் காலத்தில் வெளியே சுற்றினாலும் இவர் அந்த அரட்டைகளில் கலந்துகொள்ள மாட்டார். அவருக்கு வாசிப்புப் பழக்கம் அந்த வயதிலேயே துவங்கி விட்டது. இன்னும் அந்தப் பழக்கத்தைத் தொடர்ந்து செய்துவருகிறார். ஏன்? எத்தனையோ அரசியல்வாதிகளை நான் பார்த்திருக்கிறேன். ஆனால், ஆசிரியர் போல வாசிப்பு, எழுத்து என தமிழ்நாட்டில் ஒருத்தரும் இல்லை எனலாம். எதையும் உடனே படித்துத் தெரிந்துகொள்ள வேண்டும் என்னும் அவருடைய குணம் அனைவருக்கும் பிடித்த ஒன்று.
தந்தை பெரியாரிடம் தங்களது அறிமுகம் பற்றி கூறுங்கள்?
தந்தை பெரியார் நடத்திய மாநாட்டில் கலந்துகொண்டேன். அப்போது எனக்கு தந்தை பெரியார் பற்றி அதிகம் தெரியாது. ஆனால், அங்கு பேசப்பட்ட பெண்ணுரிமை, ஜாதி ஒழிப்பு, பார்ப்பனியம் பற்றிய பேச்சுகளால் கவரப்பட்டேன். நல்லதுதானேஇவர்கள் கூறுகிறார்கள் என எண்ணத் தோன்றியது. அப்போது எனக்கு பெரியார் அறிமுகம் கிடையாது. ஆனால், “விடுதலை’’, “குடிஅரசு’’ வாங்குவேன்.
கல்லூரியில்தான் ஆசிரியரின் அறிமுகம் கிடைத்தது. எனக்கு அண்ணா அவர்களிடம் மிகுந்த ஈடுபாடு உண்டு. அண்ணாவின் தமிழ்ப் பேச்சு மாதிரி யாரும் பேசியதில்லை எனலாம். கல்லூரியில் ஆரம்பிக்கப்பட்ட இலக்கியக் கழகத்தில் செயலாளராக இருந்த போது, கல்லூரி அளவில் அண்ணாவை அழைத்துப் பேசச் செய்தேன். அதன் பிறகு ஆசிரியருடன் தொடர்பு ஏற்பட்டது. எனது வீட்டின் வாசலுக்கு மேல் பெரியார் படம் இருக்கும். நான் பெரியார் பற்றாளன் என்பதில் பெருமை கொள்கிறேன்.
விருது பெற்ற ஆசிரியரை வாழ்த்தி மகிழும்
சா.முகம்மது உஸ்மான்
ஆசிரியரின் தலைமைப் பண்பாக தாங்கள் நினைப்பது?
அவருடைய அன்புதான் முக்கியமானது. எல்லா வகையிலும் மற்றவர்களை அனுசரித்துச் செல்லும் குணம் கொண்டவர். மற்றவர்கள் கூறுவது ஏற்கெனவே அவருக்குத் தெரிந்திருந்தாலும் அதனை மிகவும் பொறுமையாகக் கேட்கக் கூடியவர். அதன் பிறகே அவர் கருத்தைச் சொல்வார். அரசியலில் இருந்திருந்தால் அவர்தான் இன்று முதலமைச்சராக இருப்பார். அந்த அளவுக்கு ஆற்றல் கொண்டவர். மற்றவர்களின் குறிப்பறிந்து உதவும் குணம் கொண்டவர். என்றும் பெரியாரின் உண்மைத் தொண்டராய் கழகப் பணி செய்துவருவதே தலைமைப் பண்புக்கான சிறந்த உதாரணமாகும். தலைவர்களுக்கு இவர் ஓர் எடுத்துக் காட்டானவர். இளைஞர்களுக்கு இவர் பாடமானவர். அவருடைய குடும்பத்தினரும் சிறந்த பண்பாளர்கள். என்னிடம் அன்புடன் பழகக் கூடியவர்கள். அசோக் மற்றும் வெளிநாட்டில் உள்ளவர்களும் என்னிடம் பேசக் கூடியவர்கள்தாம். கழக வளர்ச்சியில் ஆசிரியரின் காலம் ‘பொற்காலம்’ எனலாம்.
ஆசிரியர் எழுதிய புத்தகங்களில் தங்களுக்குப் பிடித்த புத்தகமாக எதை நினைக்கிறீர்கள்?
அவருடைய ‘கீதையின் மறுபக்கம்’ முக்கியமானது. அப்படி ஒருவர் எழுத முடியுமா? _ அதுவும் இயக்கப் பணிகள் மற்றும் அரசியல் பணிக்கு இடையில். அதனை அந்த அளவு படித்து ஆராய்ச்சி செய்த பகுத்தறிவாளர்களைப் பார்ப்பது கடினம். ஏன்? இல்லை என்றேகூடக் கூறலாம். அவருடைய ‘வாழ்வியல் சிந்தனை’ புத்தகமும் முக்கியமானது. அது பல திருமணங்களில் அன்பளிப்பாக நான் கொடுத்துள்ளேன். பல டாக்டர்களுக்கும் கொடுத்துள்ளேன். ஆசிரியர் சிறந்த நிருவாகி, சிறந்த ஆய்வாளரும்கூட! பல்துறை ஆற்றலாளர்(Versatile Genius). தந்தை பெரியார் அவர்கள் தனக்கான வாரிசாக ஆசிரியரைத் தேர்வு செய்தது நூறு சதவிகிதம் சரியானதுதான்.
ஆசிரியருக்கு கோபம் வந்து நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?
உண்மையில் இதை அறிவாளிக்கும் முட்டாளுக்கும் உள்ள வித்தியாசமாகப் பார்க்கலாம். ஆசிரியருக்கு நிறைய கோபம் வரும். ஆனால், அந்தக் கோபம் என்பது ஒரு வழியில் நம்மை மேம்படுத்தக்கூடியதாக இருக்கும். அவருக்கு பலவிதமான வேலை இருப்பதால் சில நேரங்களில் கோபப்பட வேண்டிய சூழலும் உண்டு. அதெல்லாம் நன்மைக்கானதாக இருக்கும்.
ஆசிரியரின் பேச்சாற்றல் பற்றி?
ஆசிரியர் தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் பேசக்கூடிய ஆற்றல் கொண்டவர். அவருடைய ஆங்கிலம் அருமையாக இருக்கும். பேசுவது போலவே எழுதுவதிலும் வல்லவர். ஏராளமாய் எழுதி வருகிறார். இது எப்படிச் சாத்தியமாகிறது என பலமுறை கண்டு வியந்திருக்கிறேன். நாவலரை நாம் நடமாடும் பல்கலைக்கழகம் என்போம். ஆசிரியரும் அதுபோல நடமாடும் பல்கலைக்கழகம்தான்.
ஆசிரியரின் இணையர் மோகனா அம்மாள் பற்றி கூறுங்களேன்?
அந்த அம்மா பெரிய குடும்பத்திலிருந்து வந்தவங்க. இருப்பினும் ஆசிரியரின் அனைத்துப் பணிகளிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு கழகத்திற்கு தன் வாழ்நாளை அர்ப்பணித்த இணையர் அவர். ஆங்கிலத்தில் சொல்வதைப் போல அவர்கள், “Made for each other” என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தே இருக்காது. எல்லோரையும் விடவும் அவர்களுக்குள் நல்ல புரிதல் உள்ளது என்பது சிறப்பு.
அண்மையில் ஆசிரியருக்கு அமெரிக்க மனிதநேய அமைப்பு “மனிதநேய வாழ்நாள் சாதனை’’ விருது கொடுத்ததைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
ஆசிரியருக்கு இந்த விருதெல்லாம் ஒன்றுமில்லை. அவருடைய சமூக சீர்திருத்த மக்கள் பணிக்கு ‘பாரத் ரத்னா’ விருதைக் கொடுக்கலாம். ஆனால், உண்மையில் ஆசிரியருக்கு இதிலெல்லாம் ஆர்வமில்லை. அவர் எப்போதும் பெரியாரின் வழியில் மக்கள் பணியாற்றவே நினைப்பார். உண்மையில் ஆசிரியர் அரசியலுக்குச் சென்றிருந்தால் அவர் முதலமைச்சராகக் கூட முடிந்திருக்கும். ஆனால், அவர் அய்யாவின் வழியில் சென்று மக்கள் பணி செய்யவே விரும்பினார்.
69% இடஒதுக்கீட்டிற்கு ஆசிரியரின் சட்ட ஆலோசனை வழிகாட்டுதல் பணியினைப் பற்றி சொல்லுங்கள்?
அந்தப் பணியினை அவரால் மட்டுமே செய்ய முடியும். 69% இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தியதில், அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் ஆதரவுடன் அதனை யாரும் எதுவும் செய்ய முடியாத வகையில் சட்டப் பிரிவு 9ஆவது அட்டவணையில் இணைக்கச் செய்தது ஆசிரியருடைய சட்ட அறிவுக்கு சிறந்த உதாரணம். ஜெயலலிதா அம்மையாரும் ஆசிரியரிடம் அளவுகடந்த மரியாதை கொண்டவர். நான் இதை நேரிடையாகவே பார்த்திருக்கிறேன். ஆசிரியர் ஜெயலலிதா அம்மையாரைச் சந்திக்கச் சென்றால் மற்ற அமைச்சர்களெல்லாம் எழுந்து நின்று அவருக்கு மரியாதை தருவர். ஆசிரியர் இதனை வெளியே காட்டிக்கொள்ள மாட்டார்.
ஆசிரியர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது உங்கள் அறைக்கு வருவது வழக்கம். அதில் மறக்கமுடியாத நிகழ்வைக் கூறுங்களேன்?
ஆசிரியர் தொடர்வண்டியில் வந்து படித்தாலும் எப்போதாவது எங்கள் அறைக்கு வருவார். அங்கு என்ன கொடுத்தாலும் வாங்கிச் சாப்பிடுவார். நிறைய நேரம் அமைதியாகப் படிப்பார். எந்தவிதமான வீண் அரட்டையும் அவரிடம் இருக்காது. மதிய உணவை வீட்டிலிருந்து கொண்டு வரும் அவர் எனது அறையில்தான் வைத்து உண்பார். நான் இஸ்லாமியராய் இருந்தும் சைவ உணவுதான் உண்பேன். என்னை அவர் கேலியாக ‘உஸ்மான் அய்யர்’ என்று நட்போடு அழைப்பார். அந்த எளிமை, அன்பு, பாசம், பற்று இன்றும் எங்களுக்குள் உள்ளது. நான், ராஜசேகரன், ஆசிரியர் மூவரும் சேர்ந்து அய்யா புகைப்படங்களை விற்போம். அப்போது ஒரு நாள் அய்ம்பது ரூபாய் விற்று அதனை ஆசிரியரிடம் கொடுத்தோம். அது கழக வளர்ச்சிக்கு உதவியது என்பதில் பெரும் மகிழ்ச்சி கொள்வேன் நான்.
ஆசிரியரின் 87ஆம் பிறந்த நாள் வாழ்த்தாக தாங்கள் கூற விரும்புவது?
ஆசிரியரின் உடல்நலத்தைக் கருத்தில் கொண்டு அவருடைய வெளிப் பயணத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும். நான் சந்திக்கும் போதெல்லாம் இதைப் பற்றி அவருக்கு எடுத்துக் கூறுவேன். ஆயினும், அவரால் சமூகப் பணி செய்யாமலிருக்க முடியாது. அதுதான் அவருக்கு உற்சாகம் அளிக்கக் கூடியது. எனக்கு இவரைப் போல நெருங்கிய நண்பர்கள் யாருமில்லை. இயல்பாகவே எனக்கு அமைந்த நட்பு ஆசிரியருடையது. எத்தனையோ நண்பர்கள் பல பேர் இருந்தாலும் ஆசிரியரின் நட்பு எனக்கு மிகச் சிறப்பானது.