வரியியல் அறிஞர் ச.இராஜரத்தினம்
அவர்களுடன் நேர்காணல்
ச.இராஜரத்தினம் அவர்கள் இந்திய வருவாய்த் துறையில் (IRS) வருமானவரி அலுவலர். உதவி ஆணையர் மற்றும் ஆணையராகப் பணி புரிந்தவர். வருமானவரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் உறுப்பினராக இருந்து, 1985ஆம் ஆண்டு பணி ஓய்வு பெற்றவர். தற்போது வழக்கறிஞராகவும், வருமானவரி ஆலோசகராகவும் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் இணைவேந்தராகவும் செயல்பட்டு வருகிறார். ஆசிரியரின் நட்புக்கும் அன்புக்கும் உரியவர்.
ஆசிரியருடன் உங்களின் முதல் சந்திப்பு?
ஒரு முக்கியமான காலகட்டத்தில் ஆசிரியருக்கும் எனக்குமான தொடர்பு ஏற்பட்டது. 1976இல் பெரியார் அறக்கட்டளையின் மீது வரி கணக்கீட்டு வழக்கு நடைபெறும்போது, நான் விசாரணை தீர்ப்பாயத்தில் உறுப்பினராக இருந்தேன். அந்த அய்வர் குழு விசாரணையில் மூன்றுபேர் பார்ப்பனர்கள், மற்ற இருவரில் நானும் ஒருவன், அறக்கட்டளையின் கணக்கு வழக்கு சரியாக இருந்தது. அந்த நிலையில் மற்ற மூவரும் அறக்கட்டளையை முடக்கப் பார்க்க, அவர்களின் கோபம் எல்லாம் தந்தை பெரியார் பிராமணருக்கு எதிராகப் பேசியும், எழுதியும் இருக்கிறார் என்பதாக இருந்தது. நான் அதற்கும் கணக்கு வழக்குக்கும் சம்பந்தமில்லை. ஒரு நல்ல தொண்டு நிறுவனத்தை இதற்காக பழிவாங்கக் கூடாது எனக் கூறி அந்த வழக்கிலிருந்து விலக்கு அளித்தேன். அப்போது ஆசிரியர் கி.வீரமணி என்னிடம் வந்து நன்றி தெரிவித்தார். அதுமுதல் எங்கள் நட்பு தொடர்கிறது. அதன்பின் எனக்கு ‘ராஜமாணிக்கம்’ என்னும் பெயரில் “விடுதலை’’யை அனுப்பி வந்தார். ஏன் அந்தப் பெயரில் அனுப்பினார் என்றால், அப்போது நான் அரசு அலுவலகத்தில் பணியில் இருந்ததால் என்னுடைய நலனுக்காக அந்தப் பெயரில் அனுப்பினார். எனக்கு எந்தவிதமான இடையூறும் வந்துவிடக் கூடாது என்பதில் ஆசிரியர் அந்தளவுக்குக் கவனமாக இருந்தார் என்றால் இது ஒன்றே போதும் அவருடைய நட்பு இன்னும் தொடர்வதற்கு.
விருது பெற்ற ஆசிரியரை வாழ்த்தி
மகிழும் ச.இராசரத்தினம்
உங்களுக்கும் பெரியார் அறக்கட்டளைக்குமான தொடர்பு எத்தகையது?
எனக்கு மிகுந்த மனநிறைவு தந்த பணி. சில அறக்கட்டளை நிறுவனங்களோடு நான் தொடர்பு கொண்டிருந்தபோதிலும், “பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்’’ என்ற பெயரில் பெரியார் நிறுவிய கல்வி நிறுவனங்களோடும் பெரியார் மணியம்மை பொறியியல் கல்லூரியோடும் நெடுங்காலமாக நான் கொண்டிருந்த உறவு குறிப்பிடத்தக்கதாகும். புகழ்பெற்ற கல்வியாளரான திரு.நெ.து.சுந்தரவடிவேலு அவர்கள் பெரியார் நிறுவனங்களோடு நெருங்கிய நெருங்கிய தொடர்பு கொண்டவர். அவர்கள் அன்போடு அழைத்த அழைப்பிலிருந்து இந்த நிறுவனங்களோடு என்னுடைய தொடர்பு தொடங்கியது.
அப்போது, தொடங்கப்பட்ட அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., பயிற்சி வகுப்பு மாணவர்களுக்குப் பயிற்சியளிப்பதில் விருப்பம் உள்ளதா என்று என்னிடம் தற்செயலாக நெ.து.சு. கேட்டார். அப்பயிற்சி மய்யத்தை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் மேனாள் பொருளியல் துறை பேராசிரியர் டாக்டர் ராமசாமி அவர்கள் கவனித்துவந்தார். “விடுதலை’’ இதழின் ஆசிரியரும், பெரியாரின் உண்மைத் தொண்டருமாகிய திரு.கி.வீரமணி அவர்களின் கல்லூரிப் பேராசிரியர்தான் டாக்டர் ராமசாமி அவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. நான் அங்கு வரும் மாணவர்களுக்குப் பொருளாதாரம், அரசியல், பெரியார் நிறுவனங்களோடு மற்ற செயற்பாடுடனான நிதி மேலாண்மையுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறேன். அங்கு அறக்கட்டளை நிறுவனங்களுக்கான வருமான வரிச் சட்டத்தோடு இவை பொருந்தி வருமாறு பணிகளைக் கவனித்துக் கொண்டேன். தந்தை பெரியார் நிறுவனங்களோடு நான் கொண்ட அன்புத் தலைவர் டாக்டர் கி.வீரமணி அவர்களின் அன்புரிமையின்பாற்பட்டதாகும்.
பெரியாருக்கும் உங்களுக்குமான சிந்தனைத் தொடர்பு எப்படிப்பட்டது?
சமூகச் சீர்திருத்தவாதியான தந்தை பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்கள் தத்துவத்தின் மீது உயர்ந்த மதிப்பு வைத்திருப்பவன் நான். அவர் உலகறிந்த நாத்திகர். மூடநம்பிக்கைகளைத் தகர்த்தவர். தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ் என உலக நாடுகளின் கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பால் (ஹிழிணிஷிசிளி) பாராட்டப்பட்டவர். சிக்மண்ட் ஃபிராய்டு கூறுவதைப் போல கடவுளைப் பற்றிய சிந்தனையே அச்சத்தினால் வருவதுதானே! என்னுடைய அனுபவம் என்னைப் பகுத்தறிவுப் பாதைக்கு அழைத்துச் சென்றது. அனைத்துச் சிக்கல்களுக்கும் அங்கேதான் விடையும் இருக்கிறது. பெரியார் மிகுந்த துணிச்சல்காரர். கடவுள்மீது கொண்ட குருட்டு நம்பிக்கைகளை எதிர்த்து அவர் கடுமையாகப் பேசினார். ஏராளமான எதிர்ப்புகள் எழுந்தன. அவர்மீது கற்களும் காலணிகளும் குப்பைகளும் வீசப்பட்டன. தற்போது கடவுள் நம்பிக்கை யில்லாதவர்களின் எண்ணிக்கை உலகில் அதிகரித்துக் கொண்டே வருகிறதே அதற்கு பெரியாரின் சிந்தனைதான் காரணம்.
திராவிடர் கழகம் இன்னும் தேவைப்படுவதாக நீங்கள் கருதக் காரணம் என்ன?
திராவிடர் கழகத்தின் பகுத்தறிவுப் பணி என்பது மிகப் பெரிய சாதனைகளில் ஒன்று. தந்தை பெரியாரின் பகுத்தறிவு, சுயமரியாதை, தன்மானம் ஒவ்வொரு மனிதனுக்கும் வேண்டிய ஒன்று. அதுதான் மனிதனையும் விலங்குகளையும் பிரித்துக் காட்டும் செயலாகும். இன்று நாட்டில் ‘கல்கி பகவான்’ போன்ற சாமியார்கள் மக்களை ஏமாற்றி பல கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்து வருமான வரி கட்டாமல் ஏமாற்றியும், பல குடும்பங்களை அழித்தும் உள்ளனர். சாமியார்களின் மடம் என்பது இன்று மக்களை ஏமாற்றிப் பணம் சேர்க்கும் இடமாக மாறியுள்ளது. இதற்கு திராவிடர் கழகத்தினரின் விழிப்புணர்வுப் பணி இன்னும் தேவையாகிறது. ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு நல்ல வகையான தொண்டர்கள் உண்டு. அவரைப் பின்பற்றி பெரியார் பாதையில் நடக்கும் பல கோடி தொண்டர்கள் மக்களை அறியாமையிலிருந்து மீட்பர். அதற்கு நான் ஒவ்வொரு கூட்டத்திற்கும் ஆசிரியரிடம் எவ்வளவு மக்கள் வந்தனர் எனக் கேட்பேன். அதற்கு ஆசிரியர், பெரிய கூட்டம் வந்ததெனக் கூறுகையில் நான் பெரும் மகிழ்ச்சி அடைவேன். மக்களுக்கு ஆசிரியரைப் போன்றவர்கள் எடுத்துக் கூறினால்தான் புரியும்.
ஆசிரியர் எப்போதாவது கோபப்பட்டு தாங்கள் பார்த்ததுண்டா?
ஆசிரியருக்கு பொதுவாகக் கோபம் வரும். அந்தக் கோபம் என்பது பணிகளைத் துரிதமாகவும், நல்லபடி செய்யவும் கூடிய வகையில் ஊக்கப்படுத்துவதாக இருக்கும். ஆசிரியர் என்னிடம் எதற்கும் கோபப்பட்டதில்லை. ஆனால், ஆசிரியர் கூறும் முன்பே அங்குள்ள அச்சக மேலாளர் சரவணன் போன்றவர்கள் குறிப்பறிந்து அந்தப் பணியினை சிறப்பாகச் செய்து முடித்துவிடுவார்கள்.
ஆசிரியரும் தாங்களும் தங்கள் துறையை விட்டு பேசிக் கொள்ளும் விஷயமாக எது இருக்கும்?
ஆசிரியரும் நானும் பல நேரம் போனில் பேசிக்கொள்வோம். ஆசிரியரிடம் உள்ள படிக்கும் பழக்கத்தினால் அவர் படித்த நல்ல புத்தகங்களைப் பற்றி என்னிடம் பேசுவார். அவர் வெறும் அரசியல் மட்டும் படிக்க மாட்டார். அதைத் தவிர்த்து எப்போதும் பொது அறிவுச் செய்திகள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் அதை ஒட்டிய செய்திகளை விரைவாகப் படித்து உள்வாங்கிக் கொள்வார். எப்போதும் நல்ல புத்தகங்களை எனக்கு அறிமுகப்படுத்துவார். அவ்வகையில் நான் எழுதிய “அறக்கட்டளை வரியியல்’’ பற்றிய புத்தகத்தை அவரிடம் கொடுத்தேன். அதனை உடனே படித்துவிட்டுப் பாராட்டினார். இத்தனைக்கும் அந்தப் புத்தகம் ஆரம்பகால அறக்கட்டளை நிறுவனம் தொடங்குவது பற்றிய புத்தகம். அதை விடாமல் உடனே படித்துவிட்டு கருத்துக் கூறியது எனக்கு ஆச்சரியமான ஒன்று. ஆசிரியரின் நற்சான்றே எனக்கு பெரிய அங்கீகாரமாகக் கருதுகிறேன்.
வரியியல் நிபுணரான தாங்கள் வரி ஏய்ப்பு செய்பவர்கள் பற்றி கூற விரும்புவது?
நாட்டில் பல பெரும்பணக்காரர்கள் அவர்களுக்கே தெரியாமல் சில தவறுகளைச் செய்கின்றனர். உண்மையாக வரி கட்டினால் கொஞ்சம்தான் வரும். ஆனால், சிலர் அதனை கட்டத் தயங்கி ஆடிட்டர், வக்கீல் என வீண் செலவு செய்கின்றனர். சில நேரங்களில் பெரிய சிக்கலிலும் மாட்டிக் கொள்கின்றனர். அதைப் போல் தற்சமயம் மத்திய அரசு பெரிய நிறுவனங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வரிச் சலுகை கொடுக்கின்றனர். இதைவிட அரசு சிறு தொழிலுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் சிறப்பாக இருக்கும். அவர்களால் பொருளாதாரத்தைச் சீர்தூக்க முடியும். இதில் “காந்தியத் திட்டம்’’ சிறந்தது எனலாம். அவர் கூறிய கிராமப் பொருளாதாரத்தைச் சீர்செய்தால் நாட்டில் வளர்ச்சி ஏற்படும்.
தங்களுக்குத் தெரிந்து தந்தை பெரியார், மணியம்மையாருக்குப் பிறகு திராவிடர் கழகத்தின் வளர்ச்சி எப்படி உள்ளது?
தற்போது உண்மையாக ஆசிரியர் காலத்தில் பெரிய உச்சத்தை திராவிடர் கழகம் கண்டுவருகிறது. முன்னவர்கள் நிருவாகத்தில் சில தொய்வு இருந்தாலும் ஆசிரியரின் அயராத உழைப்பால் கழகத்தின் வளர்ச்சி நேர்த்திசையில் சென்று கொண்டு இருக்கிறது. ஆசிரியருக்கு பல துறை வல்லுநர்களின் தொடர்பு உண்டு. அதன் மூலம் உலகளவில் இயக்கத்தை வளர்த்தெடுக்க பெரும் முயற்சி செய்து வருகிறார்.
பெரியாரை நேரில் பார்த்த அனுபவம் உங்களுக்கு உண்டா?
சத்தியேந்திரன் கல்யாணம் நடந்தது. அப்போது பெரியார் திடலில் அவரை நேரில் பார்த்தேன். அதில் பெரியாரின் பேச்சைக் கேட்டேன். அது எனக்கு சரிவரப் புரியவில்லை. ஆனால், அவருடைய பேச்சில் அவர் பயன்படுத்தும் வார்த்தைகள் அதில் பரிச்சயம் உள்ளவர்களுக்குத்தான் புரியும் என மற்றவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன். அவர் சாக்ரடீஸ் மாதிரி கேள்விகளைக் கேட்டுக் கேட்டு அதன் முடிவில் உண்மையைக் கண்டுபிடிக்கும் தன்மையைக் கொண்டவர். அவர் மிகப் பெரிய ‘ஜீனியஸ்’தான் என்பது இப்போது எல்லோருக்கும் புரியும்.
ஆசிரியர் நட்பில் உங்களால் மறக்க முடியாத நிகழ்வு?
ஆசிரியரிடம் ஆச்சரியமான செய்தி அவருடைய வாசிப்புத் தன்மைதான். அவர் தொடர்ந்து கழகத்திற்கு அப்பால் உள்ள பல துறை சார்ந்த புத்தகங்களை வாசிப்பார். ஏதாவது புதிதாகப் படித்தால் அதை உடனே மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்வார். அதைப்போல மற்றவர்கள் கூறும் நல்ல புத்தகங்களை வாசிப்பார். அவர் தம்மைச் சுற்றி நல்ல கெட்டிக்காரத்தனமான ஆள்களைச் சேர்த்துக் கொள்வார்.
ஆசிரியருக்குக் கொடுக்கப்பட்ட ‘மனிதநேய சாதனையாளர் விருது’ பற்றிக் கூறுங்கள்?
ஆசிரியருக்கு உலகம் முழுவதும் உள்ள பல்வேறு மனித நல ஆர்வலர்களுடன் நல்ல தொடர்பு உள்ளது. அவருக்கு விருது பொருட்டல்ல. அவர் பல உயரிய விருதுகளுக்கு உரியவர். முன்னைவிட தற்போது அவருடைய கருத்துகளை கேட்க நிறையப் பேர் வருவதை நானும் பார்த்திருக்கிறேன். இந்த விருது அவருக்கு உற்சாகம் கொடுத்து, இன்னும் தந்தை பெரியாரின் பகுத்தறிவுப் பணியைச் செய்ய ஊக்குவிக்கும்.