சல்மான் ருஷ்டி
இந்தியாவில் பிறந்து இங்கிலீசில் எழுதிய, எழுதும் எழுத்தாளர்களில் பகுத்தறிவாளர்கள் எனக் கருதப்படக்-கூடியவர்கள் சிலரே. அவர்களில் குறிப்பிடத்தகுந்தவர் டாக்டர் முல்க் ராஜ் ஆனந்த். பஞ்சாப்காரர். மற்றவர் குஷ்வந்த் சிங். இவரும் பஞ்சாபிதான். மூன்றாவதாகக் குறிப்பிடக்கூடியவர் சல்மான் ருஷ்டி. பம்பாய்க்காரர். 1947 ஜூன் 19 ஆம் நாளில் பிறந்தவர். இந்திய சுதந்திரமும் இவரும் ஒரே வயதுக்காரர்கள். இருவருமே புகழ் பெற்றவர்கள் வெவ்வேறு வகையில்.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்து வழக்குரைஞர் பட்டம் பெற்ற அனீஸ் அகமது ருஷ்டி வணிகராக மாறியவர். நெகின்பட் எனும் ஆசிரியையை அவர் மணந்து பெற்றெடுத்த பிள்ளைதான் சல்மான் ருஷ்டி. பம்பாயில் தொடக்கக் கல்வியைக் கற்று, கேம்பிரிட்ஜ் பல்கலைக்-கழகத்தின் மன்னர் கல்லூரியில் வரலாறு படித்துப் பட்டம் பெற்-று எழுத்-தாளரானவர். பட்டம் பெற்றவுடன் இரு விளம்பர நிறுவனங்களில் சிறிதுகாலம் பணியாற்றி, பிறகு எழுத்தையே தம் முழு நேரத் தொழிலாகக் கொண்டார்.
ஓர் இசுலாமியக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் என்றாலும், தாம் என்றுமே இசுலாமிய மார்க்கப்படி வாழ்ந்தவரில்லை என அவரே தெளிவாக்கியுள்ளார். அவரது எழுத்துகளில் மதங்களின் மோதல், மதக் கொள்கைகளின் இடையே நிலவும் முரண்கள், மோதல்கள் விரிவாக அலசப்-படும். மத நம்பிக்கை கொண்டோரின் எண்ணங்களுக்கும், மத நம்பிக்கை இல்லாதவர்களின் கருத்துகளுக்குமிடையே உள்ள முரண்பாடுகள் வெளிச்சத்திற்கு வரும் வகையில் அவரது எழுத்துகள் அமைந்துள்ளன. மத நம்பிக்கையற்றவர் கருத்து என்று அவரே தம் கருத்துகளைப் பதிவு செய்துள்ளார். இந்த வகையில் அவர் கையாளும் பாணி பலராலும் பாராட்டப்-படுகிறது. அன்னியில், அவரை அடையாளமும் காட்டுகிறது.
வெளிப்படையாகவே, தன்னை ஒரு நாத்திகர் என்று அறிவித்துக் கொண்டவர் சல்மான் ருஷ்டி. பிரிட்டன் மனித நேய அமைப்பின் ((BRITISH HUMANIST ASSOCIATION) புகழ்பெற்ற ஆதரவாளர். அதேபோல, அமெரிக்காவின் மதச்சார்பற்ற கூட்டமைப்பின் (SECULAR COALITION FOR AMERICA) ஆலோசனைக் குழுவின் உறுப்பினராகவும் உள்ளார். அமெரிக்க நாட்டில் உள்ள வாஷிங்டனில் தலைமையிடமாகக் கொண்டு அமெரிக்காவிலுள்ள எல்லா நாத்திக அமைப்புகள், மனித நேய அமைப்புகள் ஆகியவற்றிற்கு வாதாடும் போர்க்குணமிக்க கூட்டமைப்பாகும் இது. அதன் ஆலோசகராக உள்ளார் என்பது இவரைச் செயல்வீரராகவும் அடையாளம் காட்டுகிறது.
உலகின் மூன்று பெரிய மதங்களின் பொருந்தாக் கூற்றுகளைத் தோலுரித்து எழுதுகிறார். ஆழ்ந்த படிப்பறிவு மட்டு-மல்லாமல், நேரடி அனுபவ அறிவும் சேர்ந்தவர். இசுலாமிய மதக்கல்வி கற்பிக்கப்பட்டவர். இவரைத் தாதியாக இருந்து வளர்த்தவர் கிறித்துவப் பெண் செவிலி. தொடக்கநிலைப் பள்ளிப் பாடங்கள் படித்தது கிறித்துவ மிஷினரிப் பள்ளிகளில். வாழ்ந்தது இந்துக்களின் மத்தியில்.
18 நூல்களுக்குமேல் எழுதிப் புகழ் பெற்ற சல்மான் ருஷ்டி 1975 இல் எழுதிய முதல் நாவலான கிரிமஸ் (GRIMUS) இவருக்கு எதையும் தரவில்லை. பத்தோடு ஒன்றாகப் படிப்போர் மனதில் இருந்தது. ஆனால், 1981 இல் இவர் எழுதிய நள்ளிரவுக் குழந்தைகள் (MIDNIGHT’S CHILDREN) உலகப் புகழைப் பெற்றுத் தந்தது. வெளிவந்த ஆண்டின் சிறந்த நூலுக்கான புக்கர் பரிசைப் பெற்றது. கடந்த 100 ஆண்டுகளில் வெளிவந்த நாவல்களிலேயே சிறந்த நாவலாகக் கருதப்படுகிறது. 1993, 2008 ஆகிய ஆண்டுகளில் புக்கர் பரிசு பெற்ற நாவல்களிலேயே சிறந்த நாவல் எனும் பரிசுகளை ஈட்டியுள்ளது. நள்ளிரவில் சுதந்திரம் பெற்ற ஒரே நாடு இந்தியாதான். அதற்குக் காரணம் மூடநம்பிக்கை. ஆகஸ்ட் 15 நல்ல நாள் இல்லை, வானுலகக் கிரகங்களின் நிலை நாட்டுக்கு நன்மை பயப்பதாக இல்லை என்றெல்லாம் ஜோசியர்கள் பயமுறுத்தவே, பயந்துபோன இந்திய தேசியக் காங்கிரசுத் தலைவர்கள் நள்ளிரவைத் தேர்ந்தெடுத்தனர். சூரியன் மறைந்து மறுநாள் உதயம் ஆகும்வரை உள்ள 12 மணி நேரத்திற்குப் பஞ்சாங்கப் பலன்கள் கிடையாது. நல்ல நேரம் கெட்ட நேரம் கிடையாது. ஆனால், அவர்கள் குறிப்பிட்ட கிரகங்கள் இரவு நேரமானாலும் அங்கேயே-தானே இருக்கும்? கிரகங்கள் படுக்கைக்கா போய்விடும்?
இந்தியாவுக்கு விடுதலை வழங்கப்பட்ட நள்ளிரவில் பிறந்த சலீம் சினாய் எனும் குழந்தையின் கதையைக் கூறும் நாவல் இது. அற்புத சக்திகள் கொண்டு பிறந்த சலீம் சினாய் தனது தொலைஅறிவு (டெலிபதி) எனும் ஆற்றலைக் கண்டு ஏனைய நள்ளிரவுக் குழந்தை-களுடன் தொடர்பு வைத்ததாகக் கற்பனை போகும். கற்பனைக் கதைகளினூடே கடவுள், மதப் பொய்மைகள் அலசப்படும். குறிப்பாக இசுலாம், பவுத்தம், கிறித்துவம் ஆகிய மூன்று மதங்களின் ஸ்தாபகர்களைத் தோல் உரிக்கும்.
மதக் கதைகளில் அளக்கப்பட்ட நம்பமுடியாத கற்பனைகளை, அற்புதங்களை, கதா பாத்திரங்-களின் செயல்பாடுகளாகக் காட்டி நையாண்டி செய்யும் நேர்த்தி பாராட்டுக்குரியது. கதைப் பாத்திரங்களின் பெயர்கள், சம்பவங்கள் நடக்கும் இடங்கள் எல்லாமே இசுலாமிய, கிறித்துவ மதங்களில் குறிப்பிட்டிருப்பவைகளை ஒத்ததாக இருக்கும். சலேம் என்று ஓர் இடம் கதையில் வரும். இன்றைய ஜெருசலத்தின் அன்றைய பெயர் சலேம் (SALEM) என்பதுதான். பத்துக் கட்டளைகளைக் கர்த்தர் வெளிப்படுத்தியதாக பைபிளின் பழைய ஏற்பாடு குறிப்பிடும் சினாய் மலை கதாநாயகனின் பெயரிலேயே அமைந்-திருக்கும். கதாநாயகன் தாயின் பெயர் ஆமினா என்பது. முகமது நபியின் தாயின் பெயரும் அதுவே. கதாநாயகனின் பிறப்புபற்றி இந்துமதச் சாமியார் முன்னதாகவே தீர்க்க தரிசனம் கூறுவார் எனக் கதை. முசுலிம்களின் கொலை வெறித் தாக்குதலுக்குப் பயந்த இந்து ஒருவர் ஆமினாவின் வீட்டுக்குள் புகுந்து விடுகிறார். அவரைக் காட்டிக் கொடுக்க விரும்பாத ஆமினா, தான் பிள்ளைத்தாய்ச்சியாக இருப்பதைக் கூறி கும்பலை விரட்டிவிடுகிறார். இந்தச் சம்பவத்தைக் கதாநாயகன், தன் அவதாரம் ஓர் உயிரைக் காப்பாற்றியது என்று பீற்றிக் கொள்வான் என்பது கதை. கிறித்துவத்தில் அவதாரம் சிறப்பாகக் கருதப்படுகிறது. கன்னிமேரியின் அவதாரதினம் (ANNUN CIATION) மார்ச் 25 இல் கிறித்துவ மதத்தவரால் இன்றளவும் கொண்டாடப்படுகிறது. இதனை நையாண்டி செய்திட இந்த வாசகத்தை நாவலில் இடம்பெறச் செய்துள்ளார்.
இறைவசனம் தம் மூலம் இறக்கப்பட்டதை முகமது நம்பவில்லை. தனக்கு மூளை சரியில்லை என்றே எண்ணினார். கதீஜாவும், அபுபக்கரும் இறை அழைப்பை உறுதி செய்து கூறியபின் அவர் நம்பினார்…… கல்லறையிலிருந்து கிறித்து உயிர்த்து எழுந்தாரா? …. உலகம் மாயை என்பதை இந்துக்கள் ஏற்றுக்கொள்ள மறுதலிக்கின்றனரா? என்றெல்லாம் நாவலின் வரிகள் அமைந்து மும்மதங்களையும் விமர்சிக்கின்றன.
இத்தகைய நள்ளிரவுக் குழந்தைகள் திரைப்படமாகத் தயாரிக்கப்படுகிறது. இந்திய இயக்குநர் தீபா மேத்தா தயாரிக்கிறார். தனது தீ (FIRE), நீர் (WATER) போன்ற திரைப்-படங்களுக்காக இந்து மதச் சனாதனிகளால் கண்டிக்கப்பட்டவர், தாக்கப்பட்டவர்; இந்தியாவில் படப்பிடிப்பு நடத்திட அனுமதி மறுக்கப்பட்டவர். ஆனால் என்ன? அவர் உலகப் புகழ் பெறுவதை இவர்களால் தடுக்க-முடியவில்லை. புகழ்பெற்ற ஷப்னா ஆஸ்மி, நந்திதாதாஸ், சீமா பிஸ்வாஸ், இர்ஃபான்கான் முதலியோர் நடிப்பில் படம் உருவாகிறது. சல்மான் ருஷ்டியே திரைக்கதை எழுதி வருகிறார்.
சல்மான் ருஷ்டியின் மூன்றாவது நாவல் வெட்கம் (SHAME) என்பது பாகிஸ்தானின் பின்னணியில் எழுதப்பட்டது, அந்நாட்டின் தலைவர்களான புட்டோ, ஜியாவுல்ஹக் ஆகியோர்பற்றிய செய்திகள் கதாபாத்திரங்கள் மூலம் வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்படும் கற்பனை. பிரான்சு நாட்டின் வெளிநாட்டு நூலுக்கான உயர்ந்த இலக்கியப் பரிசு பெற்றது இது.
அவருடைய நான்காவது நாவல்தான் சாத்தானின் கவிதை (THE SATANIC VERSES) எனும் நூல். இந்தியாவில் தடை செய்யப்பட்ட நூல். 1988 இல் வெளிவந்தது. இசுலாமிய வழக்கத்தில் நம்பப்படும் ஒன்றைப்பற்றி சர்ச்சைக்கு இடமான வகையில் இவர் எழுதியிருக்கிறார் என்பது இவர் மீது கூறப்படும் குற்றச்சாற்று.
இதனை முதலில் கூறி அவரைக் கொலை செய்ய வேண்டும் என்று மதக் கட்டளை பிறப்பித்தவர் ஈரானின் மதத் தலைவர் காலஞ்சென்ற அயாதுல்லா கொமேனி என்பவர். இதனால், பெரும்பாலான இசுலாமிய நாடுகளிலும் இசுலாமியர்கள் அதிகம் வாழும் நாடுகளிலும் இந்நூல் தடை செய்யப்பட்டு-விட்டது. இந்தியா, வங்காளதேசம், சூடான், தென்ஆப்பிரிக்கா, சிறீலங்கா, கென்யா, தாய்லாந்து, தான்சானியா, இந்தோனேஷியா, சிங்கப்பூர், வெனிசுலா ஆகிய 11 நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், உலகில் 200க்கும் மேற்பட்ட நாடுகள் உள்ளன.
1989 பிப்ரவரி 14 இல் ஈரான் நாட்டு டெஹரான் வானொலி நிலையம் மதக் கட்டளையை ஒலிபரப்பியது. வாலன்டைன் டே எனப்படும் காதலர் தினமான அந்நாளில் வாழ்த்து அட்டைபோல, புதுப்பிக்கப்பட்ட மதக் கட்டளை இன்றளவும் அவருக்கு ஈரானிலிருந்து அனுப்பப்படுகிறது. இந்த மதக் கட்டளையின் காரணமாக பிரிட்டனுக்கும் ஈரானுக்கும் ராஜீய உறவே முறிந்துபோனது. சல்மான் ருஷ்டி பலத்த காவலில் இருக்கும் இடம் தெரியாமல் பிரிட்டிஷ் அரசால் வைக்கப்பட்டுக் காப்பாற்றப்-பட்டார். அந்தத் தலைமறைவு வாழ்க்கையால் வெறுப்புற்ற அவர் மனைவி அவரை விவா-கரத்து செய்துவிட்டார். வேறென்ன சோகம் வேண்டும்? ஆனாலும், அவர் மன்னிப்புக் கேட்கவுமில்லை; தம்மை மாற்றிக் கொள்ளவும் இல்லை.
– (தொடரும்)