தலையங்கம் : ஒத்த கருத்துள்ளோர் ஒன்றுசேர்ந்து ஈழத்தமிழர் உரிமை காக்க வேண்டும்!

டிசம்பர் 01-15 2019

இலங்கை அதிபர் தேர்தலில், முன்னாள் அதிபர் மகிந்தே ராஜபக்சேவின் தம்பியான கோத்தபய ராஜபக்சே தேர்வாகியுள்ளார்;  அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சஜிதா பிரேமதாசா தோல்வி அடைந்துள்ளார்.

வெற்றி பெற்ற கோத்தபய ராஜபக்சே முந்தைய ராஜபக்சே அரசு ஆட்சியிலிருந்தபோது, இன அழிப்பு வேலையில் ஈடுபட்டவரே! இந்த தமிழர் இன ஒடுக்கல் – இன அழிப்பு வேலையை வரலாறு ஒருபோதும் மறைத்துவிட முடியாது.

அவருடைய அண்ணன், முன்னாள் அதிபர் ராஜபக்சேவையே மிஞ்சும் அளவுக்கு – இந்தப் புதிய அதிபர் – இராணுவத் துறை செயலாளராக இருந்தபோது ஈடுபட்ட மனித உரிமை மீறல்கள், பறிப்புகள் உள்பட, உலக மக்களின் கண்டனத்திற்காளானவையே!

அய்.நா.வின் விசாரணைக் கமிஷன் கேள்விக் குறியே!

அய்.நா. விசாரணைக் கமிஷன் என்பதும் ஒன்றுமில்லை, ஈரமான பட்டாசு கொளுத்துவதுபோலவே ஆகிவரும் நிலையில், அங்குள்ள தமிழினம் மீண்டும் ஒரு கடும் சோதனையைச் சந்திக்கும் அவலமான அபாயகரமான தர்பார் அமைந்துள்ளது – வேதனையிலும், வேதனையாகும்!

‘ஓநாய் ஒருபோதும் சைவமாகாது’ என்பது எப்படியோ, அப்படித்தான் இப்புதிய தலைமையின் போக்கும் இருக்கக் கூடும்.

போராட்டம் கூடாதாம்! அதிபரின் உரையில் எச்சரிக்கை!

கோத்தபய ராஜபக்சே இலங்கையின் அனுராதபுரத்தில் உள்ள ஜயசிறீ மகா போதி பவுத்த விகாரை அரங்கில் பதவியேற்றுக்கொண்டார். அப்போது அவர் நாட்டு மக்களுக்கு நீண்ட உரையாற்றினார். அதில் முக்கியமாக, நாட்டின் வளர்ச்சியே தற்போது நமக்கு மிகவும் முக்கியமானது; “நாட்டில் தேவையற்ற முடிவில்லாத போராட்டங்கள் என்று கூறிக்கொண்டு போராடி வருகின்றனர்; இவர்களால் நமது நாட்டின் வளர்ச்சிக்குத் தடையேற்படும்’’ என்று பேசியுள்ளார்.

இலங்கையின் கிழக்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் போரின்போதும் அதற்கு முன்பும் காணாமல்போன தமது உறவுகளின் நிலை என்ன? அவர்கள் உயிருடன்  உள்ளனரா  அல்லது கொல்லப்பட்டார்களா என்கிற கேள்விக்கு விடை தெரியாமல் தொடர்ந்து  அமைதியான முறையில் போராட்டம் நடத்திவருகின்றனர். இவர்களது போராட்டத்திற்கு உலகெங்கிலும் இருந்து ஆதரவு கிடைத்து வருகிறது. இந்த நிலையில் இதுபோன்ற போராட்டங்களை மனதில் வைத்து தனது உரையில் எச்சரிக்கை செய்துள்ளார் என்பது கவனிக்கத்தக்கதாகும்.

பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன நியமிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதியானவுடன் முதலாவது நியமனம் இதுவாகும். மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, இறுதிப் போரின்போது, இராணுவத்தின் 53ஆவது படையணிக்குத் தலைமை தாங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இறுதிப் போரில் தமிழர்களைக் கொன்று குவித்த பாதுகாப்புத் துறை செயலாளர் இப்பொழுது ஜனாதிபதி. இறுதிப் போரின்போது இராணுவத்தின் 53ஆவது படையணிக்குத் தலைமை வகித்தவர் பாதுகாப்பு அமைச்சகத்தின் புதிய செயலாளர்.

எப்படி இருக்கிறது?

இதன் விளைவு என்னவாகும் என்கிற அச்சம் நம்மை உலுக்குகிறது.

தொப்புள்கொடி உறவுள்ள நம் ஈழத் தமிழரின் வாழ்வுரிமைகளுக்கு – கேள்விக் குறிகளாக மாறிடும் இருண்ட அரசியல் சூழல் வந்துள்ளது.

மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசும், பிரதமர் மோடியும் ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைகளை நியாயமான வகையில் பாதுகாப்பதை அதன் முக்கிய கடமையாகக் கொள்ளவேண்டும்.

இந்தியாவின் வெளியுறவுத் துறை கவனிக்க வேண்டியது:

இந்தியாவின் வெளியுறவுத் துறை மிகவும் கவனம் செலுத்தவேண்டும். இலங்கை எப்படி நடந்துகொள்ளும்  என்பது துல்லியமாகக் கண்காணிக்கப்படவேண்டிய ஒன்றாகும்.

சிறுபான்மையினராகிய ஈழத் தமிழ்ச் சொந்தங்களும் சரி, இஸ்லாமிய சிறு பான்மையினராக இருப்பவர்களும் சரி, அந்நாட்டுக் குடிமக்கள் என்கிறபோது, அவர்களது உரிமைகள் மனிதநேய அடிப்படையில் பாதுகாக்கப்படவேண்டும் என்று இந்திய அரசால், தமிழக அரசால் வற்புறுத்தப்படவேண்டும்!

ஈழத் தமிழர் பாதுகாப்பு அமைப்பு ஒன்று தேவை!

தமிழ்நாடும், தமிழ்நாட்டுக் கட்சிகளும், அமைப்புகளும் – ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு அமைப்பு ஒன்றினை புதிதாக ஒத்த கருத்துள்ளவர்களைக் கொண்டு, சட்டப்பூர்வ முறைகளில் – அய்.நா.வின் மனித உரிமைகள் காப்புரிமையின்படி – காக்க உறுதி பூண்டு, ஈழத் தமிழர்கள் அனாதைகள் அல்லர்; எந்த நிலையிலும் எங்கள் சொந்தங்கள் – தொப்புள்கொடி உறவுகள் – என்பதை, இன அடிப்படைகளையும்கூட தாண்டி, மனிதநேயத்தோடு பாதுகாக்க முன்வர வேண்டும். இது மிகவும் அவசியமாகும்.

– கி.வீரமணி,

ஆசிரியர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *