செய்திச் சிதறல்கள்

நவம்பர் 16-30 2019

விண்வெளியில் நடந்த பெண்கள்!

விண்வெளி வரலாற்றிலேயே முதல்முறையாக நாசா விண்வெளி ஆராய்ச்சி மய்யத்தைச் சேர்ந்த இரு பெண் விஞ்ஞானிகள் பராமரிப்புப் பணிகளுக்காக விண்வெளி ஆய்வு மய்யத்தின் மேற்பரப்பில் ஆண்கள் துணை இல்லாமல் நடந்து சாதனை படைத்துள்ளனர். அமெரிக்காவைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை கிறிஸ்டினா கோச் (40), ஜெசிகா மேர் (42) இருவரும் இந்தச் சாகசப் பயணத்தை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளனர். சர்வதேச விண்வெளி ஆய்வு மய்யத்தில் பழுதான பேட்டரிகள், உதிரி பாகங்களை மாற்றுவதற்கான பணிகளை அந்தரத்தில் மிதந்தபடியே செய்தனர்.

 ******

1820ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட அண்டார்டிகா கண்டம் எப்பொழுதும் பனிக் கட்டியால் மூடப்பட்டுள்ளதால் அதனை வெள்ளைக் கண்டம் என அழைக்கின்றனர்.

சிலந்திகளில் 30 ஆயிரம் இனங்கள் உள்ளன. எல்லாவிதமான காலநிலைகளிலும் தாக்குப் பிடித்து வாழும்.

உலகின் மிகச் சிறிய நாடு வாடிகன். வாடிகன் நகரத்தின் மொத்தப் பரப்பளவு 108.7 ஏக்கர் ஆகும்.

******

மருந்து எதிர்ப்பு பேக்டீரியா ஆய்வில் புதிய தொடக்கம்

ஸ்டபைலோகாக்கஸ் ஆரியஸ் எனும் பேக்டீரியா நமது உடலில் மூச்சுக்குழாயின் மேல் பகுதியில் தோலிலும் காணப்படுகிறது. இதனால் தோல் கொப்புளங்கள் மற்றும் உணவு நச்சு (food poisoning) போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. இந்த பேக்டீரியாவில் சிலவகை மருந்துகளினால் அழிக்க முடியாத எதிர்ப்பு சக்தி கொண்டவை. இவற்றை அழிக்கும் புதிய மூலக்கூறுகளை புனேவிலுள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆய்வு நிறுவனம் (IISER) கண்டறிந்துள்ளது. பேக்டீரியாவின் வளர்ச்சிக்கும் பிழைத்திருப்பதற்கும் முக்கியமான புரதத்தை இந்த மூலக்கூறுகள் பிணைத்து அவற்றின் செயல்பாட்டை முடக்கிவிடுகின்றன. எனவே பேக்டீரியா அழிவதுடன் மருந்து எதிர்ப்பு சக்தியுள்ள வகைகளாக மாறுவதையும் (mutations) தடுக்கிறது. பேக்டீரியாவின் செல் சுவர்களின் தடையை மீறி உள்ளே புகும் விதமாக குனோன் ஈபாக்சைடு (quinone epoxide) என்னும் சிறிய மூலக்கூறுடன் இண்டோல் எனும் வேதிப்பொருளை சேர்த்து இந்த ஆய்வாளர்கள் பயன்படுத்தியுள்ளார்கள்.

விலங்குகளில் செய்யப்பட்ட சோதனைகளில் இந்த மூலக்கூறு அவ்வளவு சக்திமிக்கதாக காணப்படவில்லை. ஆனால் காலப்போக்கில் பல மருந்து எதிர்ப்பு சக்தி கொண்ட பேக்டீரியாவை அழிக்கும் மருந்தை தயாரிப்பதற்கு இது ஒரு நல்ல தொடக்கம் என்கிறார் இந்த நிறுவனத்தின் உயிரியல் பேராசிரியரும் ஆய்வறிக்கையின் இன்னொரு ஆசிரியருமான முனைவர் சித்தேஷ் எஸ்.காமத்.

 ******

 மூளையை பாதிக்காமல் காக்கும் மருந்துகள்

ரத்தம் உறைவதையும், ரத்தக் கொதிப்பையும், கொஞ்சம் ரத்தக் கொழுப்பையும் தடுக்க  பூண்டை வேகவைத்தும், வெங்காயத்தைப் பச்சையாகவும் தினம் சாப்பிட, மூளைக்கு நல்லது. பூண்டு 10 பற்களும், வெங்காயம் 10 துண்டுகளும் உண்ண வேண்டும்.

செம்பருத்தி, வெள்ளைத் தாமரை இதழ் ஆகிய இரு பூவிதழ்களும் இதயத்துக்கும் மூளைக்கும் மருந்தாகும். ரத்தக்கொதிப்பைக் குறைப்பதற்கும், பக்கவாதத்தைத் தடுப்பதற்கும் இப்பூக்களின் தேநீர் பங்காற்றுகிறது.

 ******

கொசுக்களை விரட்டும் ‘மோஸ்கார்டு எல்.இ.டி.’ பல்பு

டெங்கு காய்ச்சல் முக்கியமாக கொசுக்களால் பரவுவதாக மருத்துவத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொசுக்களை விரட்டும் காயில்கள், ரெபலென்ட் போன்றவை பலருக்கு சுவாசக் கோளாறை ஏற்படுத்துகின்றன. இரவில் தூங்கும்போது கொசுவலை கட்டிக் கொண்டு தூங்கினாலும், டி.வி. பார்க்கும்போதோ அல்லது வேறு வேலை செய்யும்போதோ கொசுக்கடி தவிர்க்க முடியாததாகிறது. இத்தகைய சூழலிலிருந்து தப்பிக்க உதவுகிறது சிஸ்கா நிறுவனத்தின் எல்.இ.டி. பல்பு.

‘மோஸ்கார்டு எல்.இ.டி.’ என்னும் பெயரில் வந்துள்ள இந்த பல்பின் விலை சுமார் ரூ.699 ஆகும். இந்த பல்பில் கொசுவை ஈர்க்கும் அம்சம் உள்ளது. இது 1350 லூமென் வெளிச்சம் தரும். இது வழக்கமான சாக்கெட்டில் பொருந்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த பல்பில் எவ்வித ரசாயனமும் சேர்க்கப்படவில்லை. இதில் பர்ப்பிள் நிறத்திலான ஒளியை உமிழும் சிறிய அறைகள் உள்ளன. இந்த நிறத்தால் ஈர்க்கப்பட்ட கொசுக்கள் இதனுள் சென்று உயிரிழக்கும். வேதிப்பொருள் கலப்பு இல்லாமல் வெளிச்சத்தை தரக்கூடிய இந்த பல்பை வாங்கி பயன்படுத்தி பார்க்கலாமே!

 ******

ஏர்னெஸ்ட் வின்சென்ட் ரைட்ஸ் என்னும் எழுத்தாளர் 1939இல் காட்ஸ்பி என்னும் நாவலை எழுதினார். 50,110 சொற்கள் இருந்த அந்த நாவலில் ஒரு சொல்லில் கூட E என்ற எழுத்து இல்லை.

 ******

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *