அய்யா, வணக்கம். உண்மை அக்டோபர் 16-31 இதழினைப் படித்தேன். இதழ் மிகவும் சிறப்பாக இருந்தது. நான் இதுவரை கேள்விப்படாத – அறிந்திராத பலவற்றை இதில் தெரிந்துகொண்டேன். இன்றைய தினம் ‘சனாதன சக்திகள்’ பெரிய உருவம் எடுத்து ஆடிக் கொண்டுள்ளது. இவைகள் தங்களது வேலைகளுக்கும், களத்தில் இறங்கி கலவரம் விளைவிப்பதற்கும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களை பயன்படுத்திக் கொள்கிறது. ஆனால், இதனால் விளையும் பலன் முழுதும் உயர்ஜாதியினர்க்கே செல்கிறது. இதனை அறியாமல் இவர்கள் இவ்விதமான மோசமான இந்துத்துவ அமைப்புகளில் களமாடிக் கொண்டுள்ளனர். இவர்களை முதலில் மோசமான இந்த அமைப்பிலிருந்து நீக்கி எது உண்மையில் அவர்களுக்கும், அவர்களது தலைமுறைக்கும் வாழ வைக்கும், எது அவர்களை பாராட்டுவது போல் சீரழிக்கும் என்பதை உணர்த்த வேண்டும். இதை செய்வதற்கு இந்திய சூழலுக்கே ஆசிரியர்தாம் பொருத்தமாக இருப்பார். பல சாதனைகளைச் செய்து வரலாறு படைத்த இவ்வியக்கம் நாடு முழுவதுமுள்ள ஜனநாயக சக்திகளை ஒரே அணியில் சேர்த்து இப்பணியில் தீவிரமாகக் களமிறங்க வேண்டும். இவ்விதமிறங்கி களப்பணியாற்றுவதன் மூலமாகவே
__________________________________________________________________________________________
மக்களை ஆதிக்க சக்திகளிடமிருந்து விடுவிக்க இயலும்.
– கார்த்தி.ப., உலகபுரம், ஈரோடு
‘உண்மை’ இதழின் மதிப்பு எடை போட முடியாதது!
அய்யா, அவர்களுக்கு வணக்கம். நான் வாழப்படி பேரூராட்சியில் பணியில் உள்ளேன். 45 வயது உள்ள நான், பல புத்தகங்கள் பத்திரிகைகள் படித்துள்ளேன். சாதி பேதம், சமய பேதம், மத பேதம், கடவுள் இவை பற்றித்தான் படித்துள்ளேன். அறிவுக்கோ, ஆராய்ச்சிக்கோ இடமில்லாமல் செய்துவிட்டது. ஆனால், தற்போது இரண்டு மூன்று மாதங்களாக சிங்கிபுரம் ‘உண்மை’, ‘பெரியார் பிஞ்சு’ முகவர் மூலமாக உண்மை, பெரியார் பிஞ்சு, கடவுளர் கதைகள், இந்துமதப் பண்டிகைகள் போன்ற நூல்களை அவரிடம் வாங்கிப் படித்தேன். பயனுள்ள மனிதநேயக் கருத்துகள் பெரியாரின் கொள்கைகள் எனது சிந்தனையை தூண்ட வைத்துவிட்டது. அது மட்டுமல்ல; அந்தப் புத்தகங்களை பக்கத்து வீட்டு படிப்போரிடம் கொடுத்தேன். ஆச்சர்யப்பட்டார்கள். மனித வாழ்க்கைக்குத் தேவையான கருத்துகள் உள்ளதென்றும் என்னிடம் கூற இரட்டிப்பு மகிழ்ச்சி. உண்மை இதழின் மதிப்போ எடைபோட முடியாத அளவுக்கு உள்ளது. ஆசிரியருக்கு எனது பணிவான பாராட்டுகள். வாழ்த்துகள். வணக்கம்.
இப்படிக்கு,
மூர்த்தி,
பேரூராட்சி பணியாளர்,
வாழப்பாடி.
Leave a Reply