எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (48) : 20 கேள்விகளுக்கு எமது பதில்கள்!

நவம்பர் 16-30 2019

நேயன்

பெரியார் சிலைக்கு மாலை போடுவது ஏன்?

கேள்வி 6: தேர்தலில் கட்சிகளுக்கு ஆதரவு கொடுக்கும் திராவிடர் கழகம், கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் இந்தத் திராவிடக் கட்சிக்கு ஆதரவு கொடுக்க வேண்டாம் என்றும், உங்களை நம்பி நாங்கள் இல்லை என்றும் கடவுள் நம்பிக்கை இல்லாதவர் மட்டும் இந்தக் கட்சிக்கு ஆதரவு கொடுங்கள் என்றும் பிரச்சாரம் செய்ய தைரியமுண்டா?

பதில் 6:  அறியாமையின் உச்சத்தில் கேட்கப்படும் கேள்வி; அரைவேக்காட்டுத் தனமான கேள்வி இது.

முதலில் நாங்கள் தேர்தலில் போட்டியிடுபவர்கள் அல்லர்; எனவே, நாங்கள் எங்களுக்காக வாக்கு கேட்க வேண்டிய கட்டாயம் இல்லை.

ஆனால், அரசியலில் பங்குகொண்டு வாக்கு கேட்கும் எக்கட்சியும் கடவுள் மறுப்பைக் கொள்கையாகக் கொண்ட கட்சியல்ல. அதனால், அதை ஒரு நிபந்தனையாக வைத்து வாக்குக் கேட்க முடியாது. தேர்தல் கடவுளுக்காக நடப்பது அல்ல.

தேர்தலும் வாக்கெடுப்பும் மக்களுக்கான அரசை, மக்கள் மேம்பாட்டை, நாட்டின் வளர்ச்சியை உருவாக்குவதற்காகவே. மாறாக, கடவுள் உண்டா இல்லையா என்பதற்கு வாக்கெடுப்பு நடத்தப்படுவதில்லை.

கடவுள் இல்லை என்பது அறிவியல் உண்மை. அறிவியல் மனப்பான்மையை, பகுத்தறிவை, அறிவியல் உண்மைகளை மக்களுக்குச் சொல்லி விழிப்பூட்ட வேண்டும் என்பது ஒரு குடிமகனின் கடமை என்கிறது நமது அரசமைப்புச் சட்டம். அதை நாங்கள் பொறுப்போடு செய்கிறோம். இதில் யாரையும் கட்டாயப்படுத்த முடியாது. நம்பிக்கை, விழிப்புணர்வு அவர்களாகத் தெரிந்து விழிப்புப் பெற்று வரவேண்டியது. கட்டாயப்படுத்தி உருவாக்குவது அல்ல. இதுவே எங்கள் கொள்கையைப் பரப்பும் நெறி! வாக்குரிமைக்கும் கடவுள் நம்பிக்கைக்கும் தொடர்பு உண்டா? கடவுள் நம்பிக்கையற்றவர்களுக்கு வாக்குரிமை மறுக்கப்படுகிறதா? கடவுளை நம்புபவர்களுக்கு கூடுதலாக வாக்குரிமை உண்டா?

கேள்வி 7:  கடவுள் வழிபாட்டையும் சடங்குகளையும் எதிர்க்கும் நீங்கள் ஈ.வெ.ரா சிலைக்கு பிறந்த நாள் அன்று மாலை போடுவதையும் இறந்த நாளன்று மலர் தூவி மாலை போடுவதையும் நிறுத்த முடியுமா? அல்லது அண்ணாதுரை, காமராஜர், எம்.ஜி.ஆர் சிலைகளுக்கு மாலை போடுவதையும் மலர் அஞ்சலி செய்வதையும் கேலி பேசியும் கண்டிக்கவும் உங்களிடம் திராணி இருக்கிறதா?

பதில் 7 :  இது நீண்டகாலமாகக் கேட்கப்படும் கேள்வி. இதற்குப் பலமுறை பதில் கூறியிருக்கிறோம். கடவுள் என்பது இல்லாதவொன்று. கற்சிலைக்குப் பாலும், தேனும் ஏன்? உண்ணும் பொருளை ஏன் பாழாக்க வேண்டும். அதை ஏழைக்குக் கொடுக்கலாமே என்றுதான் கேட்கிறோம்.

பூ என்பது அன்றைக்குப் பூத்து மாலை வாடக்கூடியது. தலைக்கு வைத்தாலும் சிலைக்கு வைத்தாலும் அதுதான் நிகழும்.

பெரியார் சிலைக்கு மாலை போடுவது, சமாதிக்கு மாலை வைப்பது பெரியார் அதை விரும்புகிறார் என்பதற்காக அல்ல. பெரியார் உயிருடன் இருக்கும்போதே மாலையை விரும்பியதில்லை. மாலைக்குப் பதிலாய் பணமாய்க் கொடுங்கள் கட்சி வளர்ச்சிக்கு உதவும் என்று கூறி அதன்படி நடந்த பகுத்தறிவுவாதி.

பெரியார் போன்ற தலைவர்களுக்கு பூமாலை வைப்பது அதை அழுகுபடுத்தவே. பிறந்த நாளில், நினைவு நாளில் அச்சிலை, நினைவிடம் அன்றைய நிகழ்வுக்காக அடையாளப் படுத்தப்படுகிறது; அழகுபடுத்தப்படுகிறது அவ்வளவே.

பிறந்த நாள், நினைவு நாள் நிகழ்வுகள்கூட சடங்குகளல்ல. அவை பிரச்சார வழிமுறைகள். மக்களுக்கு அவர்களது கொள்கையை, பணியை அறியச் செய்வதற்கான செயல்திட்டம் மட்டுமே இது. தலைவர்கள் சிலை, நினைவிடம் கொள்கையின் அடையாளம் மட்டுமே. அதில் பக்திக்கும் சடங்குக்கும் வேலையில்லை.

அந்த நாள்களில் நாடெங்கும் கொள்கைப் பிரச்சாரங்கள் செய்யப்படுகின்றன. எதிர்கால தலைமுறைக்கு ஒப்பற்ற தலைவர்களை அறிமுகம் செய்யவும், அறியத் தூண்டவும் இதுபோன்ற விழாக்கள், மாலை மரியாதைகள் எல்லாம் செய்யப்படுகின்றன.

கோயில், கடவுள் சார்ந்த சடங்குகள், விழாக்கள் பொருள் விரயம், பொழுது விரயம் உண்டாக்கி, மக்களை மடையர்களாக்கி, மூடநம்பிக்கையில் மூழ்கச் செய்து, அறிவிழக்கச் செய்கிறது.

ஆனால், பெரியார் போன்ற தலைவர்களின் பேரால் ஆக்கப் பணிகளும், அறிவுப் பணிகளும், சமுதாய சமத்துவப் பணிகளும், விழிப்பூட்டும் பணிகளுமே செய்யப்படுகின்றன.

பால், தேன், பருப்பு, பழம், எண்ணெய், ஆடையென்று மக்களுக்குப் பயன்படக் கூடியவற்றைப் பக்தியின் பேரால் பாழாக்குவது போல் நாங்கள் பாழாக்குவதில்லை. பாழாக்குவதையே நாங்கள் கண்டிக்கிறோம், எதிர்க்கிறோம். அதை அனைவரும் எதிர்க்க வேண்டும்.

கேள்வி 8: ‘பிராமணனை’ மட்டும் எதிர்க்கும் பழக்கத்தை உடைய நீங்கள் ‘பிராமணனை’த் தவிர மற்றவர்கள் முட்டாள்கள், அறிவில்லாதவர்கள், மட்டமானவர்கள் என்று நினைக்கிறீர்களா? அல்லது கூறுகிறீர்களா?

பதில் 8 : பார்ப்பன (பிராமண)  எதிர்ப்பு என்பது தனிநபர் விரோத எதிர்ப்பல்ல என்பதை நீங்கள் முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். எந்த தனிப்பட்ட பார்ப்பனரும் எங்களுக்கு எதிரிகள் அல்ல. பெரியார் இராஜாஜியோடு நண்பராக இருந்தார். கமலகாசன், ஞாநி போன்றவர்களை நாங்கள் மதிக்கிறோம்; பாராட்டுகிறோம். சோ, சுப்பிரமணியசாமி போன்றவர்களையே நாங்கள் எதிர்க்கிறோம். இதிலிருந்து எங்கள் நிலைப்பாட்டை எவரும் அறியலாம்.

தந்தை பெரியார் அவர்கள் பார்ப்பனர் எதிர்ப்பு பற்றி மிகத் தெளிவாக 1953லே,

“பார்ப்பனர்கள் இந்த நாட்டில் வாழக் கூடாது என்றோ, இருக்கக் கூடாது என்றோ திராவிடர் கழகம் வேலை செய்யவில்லை. திராவிடர் கழகத்தின் திட்டமும் அதுவல்ல. திராவிடர் கழகமும் நானும் சொல்வது எல்லாம், விரும்புவது எல்லாம் நாங்களும் கொஞ்சம் வாழ வேண்டும் என்பதுதான். இந்த நாட்டில் நாங்களும் கொஞ்சம் மனிதத் தன்மையோடு சமத்துவமாக இருக்க வேண்டும் என்பதுதான். அவர்கள் அனுசரிக்கிற சில பழக்க வழக்கங்களையும், முறைமைகளையும் நாங்கள் எதிர்க்கிறோம். இது அவர்கள் மனம் வைத்தால் மாற்றிக் கொள்ளலாம். விஞ்ஞானம் பெருக்கம் அடைந்துவிட்டது. நமக்குள் பேதங்கள் மாறி, நாம் ஒருவருக்கொருவர் சமமாகவும், சகோதர உரிமையுடன் இருக்க வேண்டும் என்பதற்காகவே பாடுபடுகிறேன்’’ என்று கூறியுள்ளார்.

எனவே, பார்ப்பன எதிர்ப்பு என்பது தனிமனித வெறுப்பின் விளைவல்ல. பார்ப்பனிய (பிராமணிய) செயல்பாடுகள், சாஸ்திரங்கள் பெரும்பாலான மக்களின் இழிவுக்கும், தாழ்வுக்கும் காரணமாகி, தமிழ்மொழியின் இழிவுக்கும், இனமான, சுயமரியாதை உணர்வுகளுக்கும் எதிராய் இருப்பதால் அதை எதிர்க்கிறோம்.

மற்றவர்கள் தாங்கள் எப்படி வளர்வது என்பதைப் பற்றி சிந்திக்கிறார்கள். பார்ப்பனர்கள் மற்றவர்கள் வளரக் கூடாது என்றும், தனக்குக் கீழே இருக்க வேண்டும் என்றே முயற்சிக்கிறார்கள். இதுவே வேறுபாடு.

அவர்கள், மற்றவர்களையும் சமமாக ஏற்று, சுயமரியாதைக்கு கேடில்லாமல் செயல்பட்டால் அவர்களை நாங்கள் ஏன் எதிர்க்கப் போகிறோம். திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரை உலக மக்களை ஒப்பாக எண்ணுகிறோம்; நேசிக்கிறோம் என்பதே உண்மை.

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’’, “யாதும் ஊரே யாவரும் கேளிர்’’ என்பதே திராவிடர் கழகத்தின் அடிப்படைக் கொள்கை. இக்கொள்கையின் சுருக்கமே “சுயமரியாதை’’ உணர்வு. சுயமரியாதை என்பது மனிதநேய மலர்ச்சி.

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *