முரசொலி மாறன்
திராவிட இயக்க எழுத்தாளர்களுள் குறிப்பிடத்தக்கவர். முரசொலி பத்திரிகையின் ஆசிரியராக இருந்தவர். மூன்றுமுறை நடுவண் அமைச்சராக இருந்தவர். பல திரைப்படங்களுக்கு வசனம் எழுதியுள்ள இவர் பல நூல்களையும் படைத்துள்ளார்.
“மானாட மயிலாட, மங்கை நீ ஆடக் கண்டிருந்த நான் பேயாடும் இரணகளத்தில் போராடும் நேரம் வந்துவிட்டது. முக்கனியும் முத்தமிழும் சுவைத்து, முக்கலையின் வளர்ச்சிக்கு எத்தனையும் தருவோம் _ என வக்கணை பேசி வாழ்ந்தோமே; அது வாலறுந்த நரிகளாம் தஞ்சைக் காவலன் ரகுநாத நாயக்கனுக்கும், அவன் தளபதியாம் வாள் பிடிக்கத் தெரியாத வீரன் கோவிந்த தீட்சதருக்கும் பிடிக்கவில்லை! போர் தொடுத்திருக்கிறார்கள், புரட்டர்கள்! நான் காமியாம். கண்ட கண்ட பெண்களின் கற்பைக் கொள்ளையடிக்கும் கொடியவனாம்! _ கதைகட்டி விட்டிருக்கிறார் கோவிந்த தீட்சதர்! குன்று போல அன்னம் குவிந்திருக்கிறது என் எதிரில், குலக்கொடி உன் வடிவில்! அதை விட்டு, எறும்பு கொள்ளும் எச்சல் பண்டத்தைப் போல, கொள்ளிடக் கரையில் குளிக்கவரும் கோமள வல்லிகளை மலரணையில் சந்தித்தேனாம்; சம்மதிக்காதவர்களை சித்திரவதையும் செய்கிறேனாம் _ பொய்மையின் எல்லையையே தாண்டி விட்டார்கள்; வாய்மைக்கு வாய்க்கரிசி போட்டு அனுப்பி விட்டார்கள்; வல்லூறு போல நம் பூமியை வளைத்துவிடப் பார்க்கும் வளைந்த செங்கோலினர்! வீரர் குடும்பத்து விளக்குகளே! உங்கள் தினவு கொண்ட தோள்களுக்கு உணவு கிடைத்து விட்டது…’’
“கோவிந்த தீட்சதன் _ கோபுரம் போல் நிமிர்ந்து நிற்கும் தமிழர் குலத்தைக் குட்டிச்சுவராக்கும் கொலைகாரன்; எட்டிக்காய்போல் நினைத்து, அவன் தலையை வெட்டி யெறியாவிட்டால் _ கட்டிக் கரும்பாம் தமிழர் நாகரிகம் பட்ட மரமாகி விடும். சங்கம் வளர்த்த தமிழை சதிகாரன் ஒருவன் சாய்த்துவிட அனுமதிப்பதா? வங்கம், கலிங்கம், கடாரம் வென்றவன் _ ஆடுமாடு மேய்க்க வந்தவனால் பங்கம் பெறுவதா? கூடாது; கூடாது! ஆடாமல் அசையாமல் வாழ்வு தேடும் அந்தணர் கூட்டம். வாடா மலராம் நம் அன்னையின் முடியை அபகரிக்கக் கூடாது. அறவழி நடக்கும் காளைகளே! போர் நாமாகத் தேடிக் கொண்டதல்ல நம்மீது திணிக்கப்பட்டிருக்கிறது. தீட்சதரின் ஆதிக்கத்தை எதிர்த்தோமாம்; அதற்காக எதிர்க்கிறார்கள், ஆணவக்காரர்கள்! நம்மைப் படுகளத்திலே சந்திக்கப் போகிறவர் சமானியமானவரல்ல; தஞ்சை பூபதி _ அவர் கையிலே தொகை தொகையாய்ப் பட்டாளம் குவிந்திருக்கிறது. நம் படையோ சாதாரணம். மான வுணர்ச்சியைத் தவிர நம்மிடம் வேறு மூலதனமில்லை. எனவே தற்காப்புக்காகவே போர் செய்யுங்கள்; தருக்கர்களின் தலை தேங்காய்க் குலைகளைப் போல அறுந்து தரையிலே விழும்வரை போர் செய்து கொண்டே இருங்கள்!’’
சோழகன் என்று பெயர் படைத்த சிங்கம் தன் படை வீரர்கள்பால் இப்படிக் கர்ஜனை புரிந்தான். கால் நுனிபட்டுப் பாய்ந்தோடும் பந்தினைப் போல், சோழகன் பேச்சுக் கேட்டு வீராவேசம் கொண்டு அந்தத் தமிழர் பட்டாளம் புழுதி கிளப்பிப் புறப்பட்டது. கோட்டையைக் காக்க!
சோழகன் கொள்ளிட நதிக்கரையிலே அமைந்திருக்கும் தீவுப் பட்டினத்துக்கு அதிபதி.
தீவுப் பட்டினம் அல்லது தீவுக்கோட்டை என்று அழைக்கப்படும் அந்த நகரே புதிய பாணியில் அமைந்திருந்தது.
சுற்றிலும் ஆழமான அகழி! கடலைப் போன்ற ஆழமென்பர்; முடியையும் அடியையும் காட்டாமல் ஒளியுருக் கொண்டானே பரமன், அவனால்கூட கடக்க முடியாதென்பர் _ அவ்வளவு புகழ் பெற்றதாம், அந்த நீர் அரண்!
அதிலே எண்ணிறந்த முதலைகள் வட்டமிட்டுக் கொண்டிருக்கும். இதில் விநோதம் என்னவென்றால், அந்த முதலைகள் பகுத்தறிவுள்ள பிராணிகளைப் போல நடந்து கொள்வதுதான்! சோழகனின் ஆணைப்படி யெல்லாம் நடக்கும் நாய்க் குட்டிகளாகி விடும், அந்த முதலைகள்! தீவுப் பட்டினத்துக்கு இதைவிட வேறு பாதுகாப்பு என்ன வேண்டும்?
ஆனால் தஞ்சையின் கதை இதனினும் மாறுபட்டது. அங்கே முதலைகள் தண்ணீரிலே நீச்சல் போடவில்லை. தரையிலே எழுந்து நடமாடின; தமிழர் வம்சத்தைத் தரைமட்டமாக்கிவிட தவம் கிடந்தன!
தஞ்சைக் காவலன் ரகுநாதநாயக்கன் பெயருக்குத்தான் மன்னன்; உண்மையில் அவன் குல குரு கோவிந்த தீட்சதருக்குக் கால் பிடிக்கும் அடிமையைப் போல நடந்து கொண்டிருந்தான்!
வேதியரின் ஆணைப்படியே அரசியல் படகு திருப்பப்பட்டு வந்தது. வடமொழி அப்போது மகுடம் புனைந்திருந்தது! அந்தணன் எதிரிகள் அரசாட்சியின் எதிரிகளாகக் கருதப்பட்டார்கள்!
காவிரி மண்டலம் தலைவிரி கோலம் கொண்டிருந்த இந்த நேரத்திலேதான் ஆரியத்தின் எதிரியாக தீவுப்பட்டினத்துச் சோழகன் தோன்றினான்.
அந்த எதிர்ப்புணர்ச்சியை முளையிலேயே கிள்ளிவிட எண்ணினான் கோவிந்த குருக்கள்!
தீட்சதரல்லவா; குள்ள நரிக்குணம் அவர்கள் பரம்பரைச் சொத்தாயிற்றே!
அதன் விளைவுதான் சோழகன் ஆட்சியிலிருந்த சின்னஞ்சிறு தீவுப் பட்டினத்தைச் சுற்றி அபலைப் பெண்களைக் கற்பழித்த போலிக் குற்றச்சாட்டுகளும், தஞ்சைப் பேரரசின் படைகளும் குவிந்தன!
கோவிந்த தீட்சதன் படைத்தலைமை தாங்கிப் புறப்பட்டான்; ஆமாம்; எத்துவேலை எக்காளம் ஊதிப் புறப்பட்டது. நயவஞ்சகம் நல்லவர்களை எதிர்த்து நடைபோட்டது! மறைந்து தாக்குவதையும், புறமுதுகிலே பாணம் பூட்டுவதையும் தொழிலாகக் கொண்டுவிட்ட புல்லேந்திகளின் தலைவன் வில்லேந்திகளின் விலாப்புறத்தை ஒடித்தெறிய புரவியிலேறிப் புறப்பட்டான்!
தீவுப்பட்டினம் தஞ்சை வீரர்களால் சூழப்பட்டது. மரப் பொந்தினில் கூடுகட்டிக் குஞ்சு பொறித்து, குடித்தனத்தோடு வாழும் பச்சைக்கிளியை வாயில் போட்டுக்கொள்ள பூனைக் குட்டிகள் காத்திருப்பதைப் போல, சோழகனின் சிரம் வாங்க வேதியர் ஆணைப்படி வீரர்கள் காத்திருந்தனர்.
தீவுப் பட்டினம், என்ன சாமான்யமா? சுலபத்தில் பஸ்பமாகும் தன்மை கொண்டதா?
அல்லவே; அந்த முதலைகளைக் கடப்பதென்றால் முக்கண்ணனாலும் முடியாதே!
படகுப்பாலம் அமைத்துக் கடக்க முயன்றனர்; தஞ்சை வீரர்கள்! முடியவில்லை; அடியற்ற மரம்போல அவர்கள் எல்லாம் முதலைகளின் வயிற்றுக்குள்ளே சாய்ந்தனர்!
இந்தக் காட்சிகளை யெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த ரகுநாத நாயக்கன் கண்கள் சிவப்பேற தீட்சதரைப் பார்த்தான்.
“குருநாதா! நம் வீரர்கள் சவங்களாகச் சாய்ந்து விழுவதைத் தடுக்க முடியாதா? உங்கள் தவ வலிமையால் அதற்கொரு ஏற்பாடு செய்ய முடியாதா?’’
தீட்சதர் மூக்கின்மேல் விரல் வைத்தார்.
“ரகுநாதா! ஆண்டவனை அழைத்தால்தான் படமெடுத்தாடும் இந்தப் பாம்புக் குட்டியை நாம் அழிக்க முடியும். அதோ அந்தக் காட்டிலே நான் சிறிது நேரம் ஆபத்பாந்தவனை நினைத்து; நினைத்ததைச் செய்து முடிக்கும் வல்லமை பெறும் வரை எனக்கு அவகாசம் கொடு!’’
கொற்றவனுக்கு அபயம் அளித்து விட்டு, தீட்சதர் காட்டை நோக்கிப் புறப்பட்டார்.
வேதியருக்கு வேதம் ஓதுவதற்கு மட்டுமல்ல; மருத்துவமும் சிறிது தெரியும். அதுவும் விஷ மூலிகைகளின் விபரம் அவருக்கு மனப்பாடம். ஏனெனில் தஞ்சையில் வேலும் வாளும் முப்புரி நூலுக்கு அடிபணிய அந்த அஸ்திரம்கூட எத்தனை நேரங்களில் பயன்பட்டிருக்கிறது! வீராதி வீரர்களும், இரணகளச் சூரர்களும் ஆரியத்தை எதிர்த்த காரணத்துக்காக _ விபூதியில் கலந்து கொடுக்கப்பட்ட விஷத்தால் எத்தனையோ தடவை பிணமாக விழுந்திருக்கிறார்களே!
தீட்சதர் காய்ந்து போன சில விஷ மூலிகைகளை எடுத்து சிஷ்ய கோடிகளின் கையிலே கொடுத்துப் பொடியாக்கச் சொன்னார். அதை நன்றாக விபூதியுடன் கலந்து கையிலெடுத்துக் கொண்டார்.
“ரகுநாதா! மாட்டிறைச்சியை உருண்டை-களாக்கி இங்கே கொண்டுவரச் சொல்!’’
தீட்சதரின் உத்தரவு பிறந்ததுதான் தாமதம்; பறந்து வந்தது மாட்டிறைச்சி!
கோவிந்த குருக்கள் பிறகு ஏதோ மந்திரத்தை ஜபித்தார்.
“சேவகா! அந்த இறைச்சி உருண்டைகளை என் கையிலே கொடு’’
“சுவாமிகள் மாமிசத்தைத் தீண்டக் கூடாதே!’’
“ஹஹ்ஹா! என் அப்பன் அணிந்திருப்பதே மானைக் கொன்று அதன் சதையைக் கிழித்தெடுத்த தோல்தானே! மன்னவா; இதனால் தோஷமில்லை; நாளை நாம் தஞ்சாபுரி சென்றதும் ஆயிரம் பிராமணர்களுக்கு அக்காரவடிசிலுடன் பத்து நாள் போஜனத்துக்கு ஏற்பாடு செய்தால் பாபம் பறந்துவிடும்…’’
என்று சொல்லிக் கொண்டே தீட்சதர் விஷம் கலந்த திருநீற்றை மாமிசத்தோடு கலந்தார். பிறகு அவற்றை வீரர்களிடம் தந்து ஆண்டவனின் பெயர் சொல்லி அகழியிலே எறியச் சொன்னார்.
அவ்வளவுதான்! மாமிச உருண்டைகளைக் கண்ட முதலைகள் அவற்றை விழுங்கத் தொடங்கின! பாவம், தஞ்சைத் தலைவன் ரகுநாதனுக்கே விஷம் எது; வேஷம் எது _ என்று புரியாதபோது வாயில்லா ஜீவன்களுக்கு அது எங்கே புரியப் போகிறது!
மாமிசத்தை விழுங்கிய மறு வினாடி முதலைகள் யாவும் நீர் மட்டத்தில் மிதக்கத் தொடங்கின _ பிணங்களாக!
பிறகு கேட்க வேண்டுமா? சிப்பாய்கள் அனைவரும், கையிலே இருந்த வில், வேல், வாள், ஈட்டி போன்ற வீராயுதங்களைத் தரையிலே போட்டு விட்டு, ஆகாயத்தை நோக்கிய வண்ணம் ‘சிவ சிவா!’ _ என்று கன்னத்தில் போட்டுக் கொண்டனர்; கோவிந்த தீட்சதரை நோக்கி சிரம் தாழ்த்தி வணங்கினர்!
வணங்கி வணங்கித்தான் அவர்கள் முதுகே வளைந்து விட்டதே; இப்போது வணங்காமுடி சோழகனையும் வணங்க வைப்பதற்காக ரகுநாதன் படைகள் தீவுப்பட்டினத்துக்குள்ளே நுழையத் துவங்கின!
சவங்களாய் மாறித் தண்ணீரில் மிதக்கும் முதலைகளின் உடலைக் கொண்டே படகுப் பாலம் அமைத்து கோட்டைக் கதவுகளைத் தட்டினர்!
தஞ்சாபுரிப் படைகள் கடலைப் போல பெருகி நிற்பன! சோழகன் கோட்டையைக் காத்திருந்ததோ முதலைகள்; அவற்றை நம்பித்தான் அவன், போர்ச்சுக்கீசியரிடமிருந்து கூட அதிகமான படைகளைக் கேட்காமல் தற்காப்புப் போர் புரிந்து வந்தான்.
இப்போது ஆபத்து அணுகி வருவதைக் கண்டதும் சோழகனின் கண்கள் எரிமலையாயின.
கோட்டைக்குள்ளே எதிரிகள் புகுந்து விட்டால் எந்தத் தமிழன்தான் வீட்டுக்குள்ளே இருப்பான்!
உருவிய வாளுடன், அரபி நாட்டுக் குதிரையிலேறிக் காவலன் களத்துக்கு ஏகினான்!
“ரகுநாதா! தீட்சதர் தட்டும் மேளத்துக் கெல்லாம் நெளிந்து கொடுக்கும் மண் புழுவே! என் உன்னத நோக்கமறியாது என் மீது பாய்ந்து விட்டாய்! பரவாயில்லை; உறை கழற்று உன் உடைவாளை!’’
சோழகனின் சூளுரை கேட்ட ரகுநாதன் சித்தம் சோர்ந்தான்!
அவன் இருப்பதோ யானையின் மீது; அம்பாரியில்!
சோழகன் பரியிலிருந்தே பாணம் பூட்டினான்!
ரகுநாதனால் சமாளிக்க முடியவில்லை; திணறினான்!
பக்கத்திலிருந்த தீட்சதர் இதைப் பார்த்தார். இனி அறம் வெற்றி தேடித் தராது; குறுக்கு வழியில் சென்றால்தான் குருகுலம் நிலைக்குமென்பதை நினைத்தார்.
யானைப் பாகனுக்குக் கண் ஜாடை காட்டினார்!
அவ்வளவுதான்; மதம் கொண்டதைப் போல அந்த யானை குதிரையிலிருந்து சோழகனை _ சூழ்ந்து வரும் ஈட்டிகள் அனைத்தையும் தனியொருவனாக எதிர்த்து நிற்கும் எஃகு மார்பனை _ ஆகாயத்தில் தூக்கி யெறிந்தது!
தீட்சதர் சும்மாயிருப்பாரா? உடன் பக்கத்திலிருந்த வீரனின் கையிலிருந்து வாளை வாங்கிக் கொண்டு, உயரே யிருந்து கீழே விழுந்து கொண்டிருக்கும் சோழகன்பால் வீசினார். அய்யகோ! துண்டிரண்டாய்த் தரையில் வீழ்ந்தான் அந்த மறத்தமிழன்!
“அஹ் ஹ ஹா!……’’
அதிர்வேட்டு போல சிரித்தார், தீட்சதர்!
“இரணியனும், இராவணனும் செய்ய முடியாத காரியத்தைச் செய்து முடிக்க நினைத்த சிற்றெறும்பே! இனி இந்த தீட்சதனை எதிர்க்க ஒரு துரும்புகூட இந்தத் தமிழ் நாட்டில் அசைய முடியாதடா; அசைய முடியாது!’’
மீண்டும் சிரித்தார், அந்த மகானுபாவர்! ரகுநாதனும் சேர்ந்து சிரித்தான்!
குற்றுயிரும், குலையுயிருமாய்க்கிடந்த சோழகன் பேச முயன்றான்.
“சிரிக்காதேடா, ரகுநாதா, சிரிக்காதே! மாண்டது நான்; என் படையில் பலர்; உன் படையில் சிலர். தஞ்சாபுரியின் பூபதியே! சிந்தித்துப்பார். தீட்சதரைச் சேர்ந்தவர்கள் ஒருவராவது இங்கு வீழ்ந்து கிடக்கிறார்களா? இங்கு உடைப்பெடுத்தோடும் இரத்த வெள்ளத்தில் ஒரு துளியாவது அந்த வர்க்கத்து இரத்தம் என்று கருதுகிறாயா? இல்லையடா இல்லை; ஆடுகள் நாம்; நம்மை மோதவிட்டு, வழிந்தோடும் குருதியைக் கோப்பையிலே வாரிக் குடிக்கிறது, அந்தக் குள்ளநரி! இனிமேலாவது, உன் சித்தம் மாறுமா? ரகுநாதா! இனிமேலாவது சிண்டு வைத்திருக்கும் அந்தக் கொடியவனின் சிலந்திப் பின்னல் உனக்குப் புரியுமா?….. யோசித்துப் பாரடா; பாராண்ட இனம் பழுதையாய் ஆகியிருப்பது யாரால் என்று சிந்தித்துப் பாரடா! அது போதும் எனக்கு; உன் சிந்தனை வேலை செய்தால் என் சாவுக்குச் சரியான காரணம் கிடைத்து விடும்! நான் சந்தோஷத்தோடு கண்களை மூடுவேன்!’’ _ சோழகன் முணகினான்!
அதற்குமேல் அவனால் பேச முடியவில்லை; தீட்சதரின் ஆணைப்படி ரகுநாதனின் யானை சோழகனின் தலையை மிதித்துத் துவைத்தது!
‘ஓ’வென்று அலறி உயிர்விட்டான் உத்தமன்; உடன் தீவுப் பட்டினத்து நெடுமதில்களும் படபட வென்று சாய்ந்து விழுந்தன!
(‘வால்நட்சத்திரம்’ சிறுகதை தொகுப்பிலிருந்து)