விழிப்புணர்வு : அதிகம் செல்போனைப் பயன்படுத்துவோர் அவசியம் அறிய வேண்டியவை!

நவம்பர் 16-30 2019

உலகமே டிஜிட்டல் புரட்சியில் புதுப்பொலிவுடன் இயங்கும்போது இந்தியாவில் மட்டும் செல்பி மோகம், பேஸ்புக் நட்பில் ஏமாற்றுதல், மாணவிகளை தொல்லைப் படுத்தும் மாணவர்கள் என இதனை ஒட்டிய மரண நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. இப்படி தகவல் தொழில்நுட்ப சாதனங்களுக்கு அடிமையாகி வருபவர்களை அடையாளம் காண புது வார்த்தை உருவாகி உள்ளது. அதுதான் இணைய அடிமை.

அண்மையில் ‘அவுட்லுக்’ நிறுவனம் சமூக பொருளாதார மாற்றங்களால் மாறி வரும் மக்கள், உடல் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வுடன் இருக்கின்றார்களா என சென்னை, பெங்களூரு, மும்பை, டெல்லி, கல்கத்தா உள்ளிட்ட ஒன்பது நகரங்களில் ஆய்வு நடத்தியது.

ஆய்வு முடிவில், 47 சதவிகித மக்கள் செல்போனில் அதிக நேரம் செலவிடுவதாகத் தெரிவித்துள்ளனர். 62 சதவிகித பேர் உணவருந்தும்போதுகூட செல்போனுடன் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். அய்ந்தில் ஒருவர் அதிக அளவில் சமூக வலைத்தளங்களை உபயோகிப்பதால் எப்போதும் அசதியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

கணினி, செல்போன் பயன்பாட்டால், ஒரு நாளில் 7 முதல் 10 மணி நேரம் வரை குனிந்துகொண்டே இருப்பதால் முதுகு வலி மிகப் பெரிய பிரச்சினையாக மாறி, ஒன்பதில் ஒருவர் வலி குறைக்கும் மாத்திரைகள் உட்கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர்.

மன அழுத்தம், படபடப்பு, கோபம், குற்றவுணர்ச்சியால் 28% பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 64% பேர் தங்களுக்கு பாலியல் உறவில் ஈடுபட நேரமில்லை என்றும் அதைப் பற்றி சிந்திக்கவும் விருப்பமில்லை என்றும் தெரிவித்துள்ளனர். அதேநேரம், 45% மக்கள் செல்போனுடன் செலவிடும் நேரத்தைக் குறைக்கவும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

ஒரு சராசரி இந்தியர் தன்னுடைய மொபைலை ஒரு நாளில் 150 முறை எடுத்து பயன்படுத்துகிறார். பாடல்கள் கேட்பதற்கு 1.29 மணி நேரமும், வீடியோ பார்ப்பதற்கு 52 நிமிடங்களுக்கு மேல் செலவிடுகிறார். வாரத்தில் 23 மணிநேரம் மெசேஜ் அனுப்புவதற்கு மட்டும் செலவிடுகிறார். இதில், மூன்றில் ஒரு மெசேஜ் வண்டி ஓட்டிக்கொண்டிருக்கும்போது அனுப்புகின்றனர் என்றும் அதிர்ச்சியளிக்கிறது அந்த ஆய்வு.

இரண்டில் ஒருவர் அய்ந்து மணி நேரத்திற்கு மேல் தங்களால் இன்டர்நெட் இல்லாமல் இருக்க முடியாது என்றும், செல்போனே தங்கள் உயிர்நாடி என்றும் தெரிவித்துள்ளனர் என்று அடுத்தடுத்த அதிர்ச்சிகரமான முடிவுகளுடன் நீள்கிறது அந்த ஆய்வறிக்கை.

செல்லால் வரும் பாதிப்புகள்:

“இந்தியா தொழில்நுட்பத்தை இருகரம் கொண்டு வரவேற்றாலும் மக்களின் குணநலன்களில் ஏற்படும் மாற்றங்களில் கவலைக்குரிய விஷயம் படபடப்பு. எரிச்சலுடன் இருப்பது, தூக்கமின்மை, முக்கியமான விஷயங்கள் மறந்துபோதல், குடும்பத்தார் மற்றும் நண்பர்களுடன் நேருக்கு நேர் பேசுவதைத் தவிர்த்தல், பாலியல் உறவுகளில் நாட்டமின்மை போன்றவை அதிகரித்துள்ளன.

இதுபோன்ற காரணிகள் பெரிய அளவில் பாதிப்பு நடந்து கொண்டிருக்கின்றன. எனினும், இந்நிலை தொடர்ந்தால் கடைசிக் கட்டத்தில் நாம் நிதானத்தை இழந்து முடிவெடுக்கும் திறனை இழந்துவிடுவோம். இணைய அடிமை குறைபாடுகள் என வரையறை செய்யப்பட்டுள்ள நோய்கள் இன்று சர்வசாதாரணமாகக் காணப்படுகிறது’’ என எச்சரிக்கிறார் மனோதத்துவ பேராசிரியரான டாக்டர் மனோஜ் குமார். இவர் இந்தியாவில் முதன்முதலாக ‘ஷிபிஹிஜி’ எனப்படும் தொழில்நுட்பத்திற்கு அடிமையானவர்களை மீட்கும் ஓர் அமைப்பைத் தொடங்கியவர்.

எம்.ஜி.எம். மருத்துவக் கல்லூரியின் சமூக மருத்துவத்தின் தலைவர் சஞ்சய் தீக்ஷித் பத்து ஆண்டுகளுக்கு முன்பே இது தொடர்பான ஓர் ஆய்வை 150 மருத்துவ மாணவர்களிடம் நடத்தினார். அதில் 10இல் 9 பேர் இதில் ஏதேனும் ஒன்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 56% பேர் தங்கள் செல்போனை தங்களுடனேயே வைத்துக் கொள்ள விழைவதாகவும், 93% தங்களுக்கு குறுந்தகவல்கள் வரவில்லையெனில் பயம் கொள்வதாகவும், 19% பேர் அதிக அளவில் குறுந்தகவல்கள் அனுப்புவதால் தங்கள் கட்டை விரல் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

உளவியல் ஆலோசகர் டாக்டர் ராஜேஷ் சாகர், ‘திளிவிளி’ என்று அழைக்கப்படும் விடுபட்டு போய்விடுவோமா என்கிற பயம், ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியில் சில ஆண்டுகளுக்கு முன்பே சேர்க்கப்பட்டது. நம்மை விட்டுவிட்டு நமது நண்பர்கள் மகிழ்ச்சியுடன் ஏதோ ஒன்று செய்கின்றனர் என்னும் மாயை இதில் ஒன்று’’ என்று இது தொடர்பாக முதன்முதலில் ஆராய்ச்சியில் ஈடுபட்ட சமூக மனோ தத்துவவியலாளரும் ஆக்ஸ்போர்டு இணைய ஆராய்ச்சியின் தலைவருமான ஆண்ட்ரூ விவரிக்கிறார்.

செல்போன்களும் சமூக வலைத்தளங்களும் மக்களை மன அழுத்தமான சுற்றுச்சூழலில் தள்ளுகின்றது. தங்களின் தனிப்பட்ட வாழ்வில் நடக்கும் விஷயங்களை ஒருவர் சாதனையாக சமூக வலைத்தளங்களில் பதிவிடும்போது, அதனால் பலர் மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர்’’ என்கிறார் அவர்.

வன்முறை, பாலியல் சீண்டல், கொடுமைப்படுத்துதல் போன்றவை இணைய விளையாட்டுப் பயன்பாடுகளில் நிறைய கிடைக்கின்றன. இந்த வகையில் புளூவேல், மோமோ சேலஞ்ச், பப்ஜி என ஆபத்தான சவால்களை மேற்கொள்ள வைக்கும் இணைய விளையாட்டுகளின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.

எப்படித் தவிர்க்கலாம்:

“நமது செல்போனை நீண்ட நேரம் அணைக்க முடியுமா? முடியாது. சமூக வலைதளங்களை உபயோகிக்காமல் இருக்க முடியுமா? முடியாது. செல்ஃபி எடுக்காமல் இருக்க முடியுமா? முடியாது. ஆனால், இவை அனைத்தையும் வாகனம் ஓட்டும்போதோ குடும்பத்தாருடன் நேரம் செலவிடும்போதோ அல்லது நிகழ்ச்சிகள், அலுவலகங்களில் இருக்கும்போதோ பயன்படுத்தாமல் இருக்க முடியும்.

மேலும், சமூக வலைத்தளங்களை அலைப்பேசியில் உபயோகப்படுத்தாமல் மடிக்கணினியில் ஒரு குறிப்பிட்ட நேரம் மட்டும் பயன்படுத்தலாம். இணையம்/மொபைலில் வாசிப்பதைக் குறைத்து, புத்தக வாசிப்பில் கவனம் செலுத்தலாம்.

நமது மூளை மாற்றத்திற்கு ஏற்ப தன்னைத் தானே வடிவமைத்துக்கொள்ளும் ஆற்றல் படைத்தது. செல்போனால் ஏற்படும் பாதிப்புகளை உணர்ந்து அதிலிருந்து விலகி ஆக்கப்பூர்வமாக நேரம் செலவிடுதல் குறிப்பாகத் தியானம், முகத்திற்கு நேரே பேசிப் பழகுதல், உடற்பயிற்சி, சுற்றுலா என நேரத்தைச் செலவழிக்க வேண்டும். அப்போதுதான் மூளை சுறுசுறுப்பாக இயங்கும். தொழில்நுட்பம் என்பது நாம் அவற்றை பயன்படுத்துவதற்குதானே தவிர, அவை நம்மைப் பயன்படுத்திக் கொள்ள அல்ல’’ என்கிறார் மனோதத்துவ பேராசிரியர் டாக்டர் மனோஜ் குமார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *