இயக்க வரலாறான தன் வரலாறு(238) : “வி.பி.சிங்கை வரவேற்கவோ வேடிக்கை பார்க்கவோ வராதீர்!”

நவம்பர் 16-30 2019

அய்யாவின் அடிச்சுவட்டில்…

டாக்டர் இராமதாஸ் அறிக்கை!

கி.வீரமணி

மேலத்தஞ்சை மாவட்டம் கும்பகோணத்திற்கு அருகிலுள்ள நாச்சியார் கோவிலில் 28.10.1990 அன்று இரவு தந்தை பெரியார் வெண்கல உருவச் சிலை திறப்பு விழா  நிகழ்ச்சி பேருந்து நிலையம் அருகில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

சிலையைத் திறந்து வைத்து  உரையாற்றுகையில், “பார்ப்பனர்கள் பி.ஜே.பி.யை தூக்கிப் பிடிக்கின்றனர். சமூகநீதிக் கொடியை தூக்கிப் பிடித்திருக்கின்ற வி.பி.சிங் அவர்கள் ஒருவேளை முதுகிலே குத்தப்பட்டு ஆட்சியிலே இருந்து அகற்றப்படும் வேளையில், அவர் பிடித்திருக்கின்ற சமூகநீதிக் கொடியை மீண்டும் பலமாக செங்கோட்டையிலே ஏற்ற வேண்டிய பொறுப்பு இந்த நாட்டிலே இருக்கின்ற கோடானுகோடி தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உண்டு’’ என்று எடுத்துரைத்து உரை நிகழ்த்தினேன்.

நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா

20.11.1990 அன்று ‘விடுதலை’யின் முதல் பக்கத்தில், எனது முக்கிய அறிக்கையில்,  “பெண்களை அவமதிக்கும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா பதவி விலகட்டும்’’ அவர் பதவியில் நீடிக்கவே கூடாது என்றும், கண்டனப் பேரணிகளை நடத்தி தீர்மானங்கள் குவிய வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம்.

‘இந்து’ நாளேட்டின் 4ஆம் பக்கத்தில் வெளிவந்துள்ள பெட்டிச் செய்தியை அப்படியே சுட்டிக்காட்டி, பெண்கள் ஆண்களோடு பணியாற்றுவதற்கு வேலைவாய்ப்பில் போட்டியிடக்கூடாதாம்! வீட்டிற்குச் சென்று அடுப்பு ஊதும் பணிகளை மாத்திரம் பார்க்க வேண்டுமாம்! எல்லாவற்றிலும் ‘சமம் சமம்’ என்று கூக்குரலிடக் கூடாதாம்!

சமத்துவம் பேசினால் அன்பு போய்விடுமாம்! எவ்வளவு கடைந்தெடுத்த பத்தாம் பசலித்தனமான பாசி பிடித்த மனப்போக்கு!

இவர்தான் இந்தியாவின் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி! சமூகநீதி, பொருளாதார நீதி, அரசியல் நீதியை அனைத்து குடிமக்களுக்கும் அளிக்க வேண்டிய சமதர்ம ஜனநாயக, மதச்சார்பற்ற குடியரசு ஆகிய இந்திய அரசியல் சட்டத்தினைப் பாதுகாக்கும் காவல் அரணான உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா இப்படிக் கூறுகிறார் என்றால், நாடே வெட்கத்தால் தலைகுனிய வேண்டாமா?

உத்தரப்பிரதேசப் பார்ப்பனர் எவ்வளவு பிற்போக்குவாதி _ அசல் இந்துமத வர்ணாசிரம தர்மத்தின் காவலர் என்பது கடந்த 8.11.1990 அன்று அவர் “பிரம்மகுமாரிகள்’’ சங்கத்தில் பேசிய பேச்சின் மூலம் வெளிப்படையாக விளங்கி விட்டது என்பதைச் சுட்டிக்காட்டி விளக்கியிருந்தேன்.

26.11.1990 அன்று நடைபெற்ற சென்னை பெரியார் திடலில் நடந்த “இன எழுச்சி நாள்’’ பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு எழுச்சி மிகுந்த உரை நிகழ்த்தினேன்.

விடுதலைப் புலிகளை வெளிப்படையாக இனத்தின் அடிப்படையில் ஆதரிப்பது திராவிடர் கழகம்; இதைக் கொச்சைப்படுத்தி, மிரட்டுகிறார்கள். தனிமைப்படுத்தப்படும் காலம் வரும் என்றும், அராபத்தையும் மண்டேலாவையும் ஆதரிப்பதற்கான நியாயங்கள் பிரபாகரனை ஆதரிப்பதற்கும் பொருந்தும்! அன்றும் _ இன்றும் _ நாளையும் நாங்கள் புலிகளையே ஆதரிப்போம்! மிரட்டிப் பார்க்க வேண்டாம்; ‘விபீடணர்களுக்கு’ என்றும், விடுதலைப் புலிகளின் லட்சியப் பயணத்தை எந்தச் சக்தியாலும் தடுத்து நிறுத்தி விட முடியாது. உலகத் தமிழர்களின் உள்ளத்திலே எல்லாம் உயர்ந்து நிற்கிறான் மாவீரன் தம்பி பிரபாகரன். புதிய புறநானூற்றைப் படைத்துக் கொண்டிருக்கிறான். அந்த மாவீர்களுக்கு தமிழர்களாகிய நாம் துணை நிற்போம் என்று எடுத்துரைத்தேன்.

29.11.1990 அன்று ஒடுக்கப்பட்ட மக்களுடைய உரிமை சாசனமான மண்டல் கமிஷன் அறிக்கையை அமல்படுத்தியதற்காக தன்னுடைய ஆட்சியையே இழந்த சமூகநீதிக் காவலர் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் அவர்கள் கொள்கைக்காகப் பதவியைத் துறந்த பின், முதன்முறையாக தமிழகம் வருகின்றபோது அவருக்கு அனைத்துக் கட்சி மற்றும் அனைத்து சமூக அமைப்புகள் சார்பாக வரவேற்பு, பாராட்டு அளிக்க ஆலோசனைக் கூட்டம் மாலையில் சென்னை பெரியார் திடலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிகழ்ச்சிக்குத் தலைமையேற்று உரையாற்றினேன்.

நிகழ்ச்சியில், -ஜஸ்டிஸ் திரு.பி.வேணுகோபால் (தென்னக சமூக அமைப்பின் தலைவர்), அப்துல் லத்தீப் எம்.எல்.ஏ., (இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்), சா.சுப்பிரமணியம் (வன்னியர் சங்கத் தலைவர்), வல்லரசு எம்.எல்.ஏ., (அகில இந்திய பார்வார்டு பிளாக் கட்சி பொதுச் செயலாளர்), எம்.பி.சுப்பிரமணியம் (அஇஅதிமுக), தே.தீனதயாளன் (காங்கிரஸ். (எஸ்) பொதுச்செயலாளர்), வன்னிய அடிகளார் (வன்னிய சங்கம்), எம்.வெங்கடாசலம் (தமிழ்நாடு முத்தரையர் சங்கத் தலைவர்), இனமான இயக்குநர் வ.செ.குகநாதன் (தமிழர் அய்க்கிய முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர்), எம்.கே.டி.சுப்பிரமணியம் (தமிழர் தேசிய இயக்கப் பொதுச் செயலாளர்), பேராசிரியர் வி.கலைமணி (தமிழ்நாடு யாதவ் மகாசபை), சி.ஆர்.கோலப்பா (பொதுச்செயலாளர், தமிழ்நாடு மிகப் பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் முன்னேற்றச் சங்கம்), டாக்டர் ராமகிருஷ்ணன் (தேவர் பேரவை நிறுவனர்) உள்ளிட்ட ஏராளமான சமூக அமைப்புகளும், அரசியல் கட்சிப் பிரமுகர்களும் பெருந்திரளாகக் கலந்துகொண்டார்கள்.

முன்னாள் பிரதமர் வி.பி.சிங் அவர்களின் சுற்றுப் பயணத் திட்டத்தை தமிழக முதல்வர் அவர்கள் எடுத்துரைத்த அடிப்படையில் 7.12.1990 அன்று இரவு சென்னையில் வி.பி.சிங் அவர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் அனைத்து ஒடுக்கப்பட்ட அமைப்புகள், சமூகரீதியில் அக்கறையுள்ள அனைத்து அரசியல் கட்சிகள் சார்பாக மகத்தான வரவேற்பு அளிக்க முடிவு செய்யப்பட்டது.

மேலும், திரு.வி.பி.சிங் அவர்கள் செல்லும் இடங்களில் எல்லாம் ஒடுக்கப்பட்ட மக்கள் பெருமளவில் திரண்டு சிறப்பாக முறையில் வரவேற்பு அளிப்பது என்றும், தமிழ்நாட்டில் சமூகநீதிக் கொள்கையில் _ அனைவரும் ஒன்றுபட்டு நிற்கிறோம் என்று காட்ட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

பல்வேறு சமூக சங்கங்கள் சார்பாக வரவேற்புச் சுவரொட்டிகள் அச்சிட்டு வி.பி.சிங் செல்லும் இடங்களில் எல்லாம் ஒட்டி ஒடுக்கப்பட்ட மக்களின் உணர்வை வெளிப்படுத்துவது என்று அந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

3.12.1990 அன்று தனியார் மருத்துவமனை ஒன்றில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டிருந்தேன். இதனை அறிந்த தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் ஆலோசனைப்படி அன்று இரவே சென்னை பொது மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு எனக்கு மருத்துவ உதவிகள் அளிக்கப்பட்டன. மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் சாமிநாதன் அவர்களின் தலைமையில், பேராசிரியர் டாக்டர் லட்சுமிகாந்தன், டாக்டர் தணிகாசலம், டாக்டர் தாஜ்மல் உசேன் (மூத்த இருதய நோய் நிபுணர்கள்) ஆகியோர் என் உடலைப் பரிசோதித்துத் தேவையான மருத்துவ உதவிகளை அளித்தனர்.

ஜஸ்டிஸ் திரு.பி.வேணுகோபால், சுலோசனா சம்பத், முன்னாள் அமைச்சர் ராகவானந்தம், ஆலடி அருணா, சட்டமன்ற உறுப்பினர் மு.க.ஸ்டாலின், டாக்டர் சத்தியவாணிமுத்து மற்றும் கல்வி அமைச்சர் பேராசிரியர் க.அன்பழகன், ஜி.கருப்பையா மூப்பனார், அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன் சமூகநலத்துறை அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன், தேவர் பேரவைத் தலைவர் டாக்டர் வி.ராமகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில பொதுச்செயலாளர் ஏ.நல்லசிவன்,  செங்கம் ஜப்பார், வன்னியர் சங்கத் தலைவர் டாக்டர் ச.இராமதாஸ் ஆகியோர் நலம் விசாரித்தனர்.

திராவிடர் கழகத்தின் சார்பில் வி.பி.சிங் அவர்களுக்கு மாபெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. 7.12.1990 அன்று இரவு 7:30 மணிக்கு சென்னை காமராஜர் விமான நிலையம் வந்த முன்னாள் பிரதமர் வி.பி.சிங் அவர்களுக்கு தமிழக முதலமைச்சர் மாண்புமிகு டாக்டர் கலைஞர், மாண்புமிகு பேராசிரியர் க.அன்பழகன் மற்றும் அமைச்சர் பெருமக்கள், திராவிடர் கழகத்தின் சார்பில் கழகத் துணைப் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் கோ.சாமிதுரை, சட்டத்துறைச் செயலாளர் வழக்கறிஞர் எஸ்.துரைசாமி, தலைமை நிலையச் செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன் ஆகியோர் வி.பி.சிங் அவர்களுக்குப் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர். என் உடல்நலம் பற்றி வி.பி.சிங் கேட்டறிந்தார்கள்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவமனையில் இருந்ததால், என்னால் விமான நிலையம் செல்ல இயலவில்லை. விமான நிலையத்தின் வெளி வாயில் அருகே திராவிடர் கழகத் தோழர்கள் பெரும் அளவில் திரண்டு நின்று கழகக் கொடியை ஏந்தி சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் வாழ்க! தந்தை பெரியார் வாழ்க! என்று முழக்கங்களை முழங்கி அன்புடன் வரவேற்பை அளித்தனர்.

திராவிட கழகத்தின் சார்பில் வைக்கப்பட்ட

வரவேற்பு பதாகை

வி.பி.சிங்குடன் ஜனதா தளத் தலைவர் எஸ்.ஆர்.பொம்மையும் உடன் வந்திருந்தார். வி.பி.சிங் தமிழகத்தில் செல்லும் இடங்களில் எல்லாம் திராவிடர் கழகத்தின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்திலிருந்து தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயம் வழிநெடுக மக்கள் எழுச்சியுடன் வரவேற்றனர். முதலமைச்சர் கலைஞர் விமானம் அருகே சென்று வி.பி.சிங்குக்கு ஜரிகை மாலையும், பட்டாடையும் அணிவித்து கட்டித் தழுவி வரவேற்றார்கள். அங்கு கூடியிருந்த மக்கள் அனைவரும் “மண்டல் கமிஷன் நாயகன் வி.பி.சிங் வாழ்க! மாவீரன் வி.பி.சிங் வாழ்க!’’ என்று உணர்ச்சிப் பெருக்குடன் முழக்கமிட்டனர்.

தாம்பரம் பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் முன்னாள் பிரதமர் வி.பி.சிங், கலைஞர் கருணாநிதி

மற்றும் எஸ்.ஆர்.பொம்மை

விமான நிலையத்துக்கு வெளியே தேசிய முன்னணி, இடதுசாரி கட்சிகள், திராவிடர் கழகம், முஸ்லிம் லீக், காங்கிரஸ் (எஸ்), உள்ளிட்ட பல கட்சித் தொண்டர்களும் கட்சிக் கொடிகளுடன் வரவேற்றனர். வைகோ., மு.க.ஸ்டாலின் போன்ற முக்கிய தலைவர்களும் வரவேற்றனர்.

8.12.1990 அன்று என்னை சென்னை பொது மருத்துவமனை  (Intensive Care Unit -Cardiac) வந்து சந்தித்து உடல்நலம் விசாரித்தார்கள்.

வி.பி.சிங் அவர்களுடன் ஜனதா தள தலைவர் எஸ்.ஆர்.பொம்மை, ஜனதா தள பிரச்சாரக் குழுத் தலைவர் இரா.செழியன், கர்நாடக முன்னாள் மாநில அமைச்சர் ரகுபதி, தமிழக ஜனதா தள கட்சியைச் சார்ந்த ஜெகவீரபாண்டியன் மற்றும் பலர் வந்திருந்தனர்.

அப்போது சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்கள் என்னிடத்தில் சிறிதுநேரம் உரையாடினார். அப்போது, “தாங்கள் சமுதாயம் மேம்பட உழைக்கின்ற தலைவர். தாங்கள் உடல்நலம் குன்றி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கின்ற செய்தியை அறிந்து வந்தேன். விரைவில் குணமடைய விரும்புகிறேன்’’ என்று வி.பி.சிங் அவர்கள் கூறினார்கள்.

“தங்களுக்கிருக்கின்ற பல்வேறு கடுமையான பணிகளுக்கிடையே வந்திருக்கின்றீர்களே! உங்களுக்கு எதற்கு வீண் சிரமம்? நேற்று இரவு உங்களை வரவேற்க வருகிறேன் என்றபொழுது டாக்டர்களும், முதல்வர் கலைஞரும் அதற்கு அனுமதி தர மறுத்து விட்டார்கள்’’ என்று பதில் அளித்தேன்.

சென்னை அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை வி.பி.சிங், எஸ்,ஆர்.பொம்மை நலம் விசாரித்தனர்.

அதற்கு வி.பி.சிங் அவர்கள், “உங்களுடைய உடல்நிலை முழுமையாகக் குணம் அடைந்த பிறகு சமுதாயப் பணியில் மீண்டும் ஈடுபடலாம். அதுவரை ஓய்வெடுங்கள்’’ என்று கூறினார்.

“நீங்கள் இன்று பிரதமராக இல்லாமல் இருக்கலாம். ஆனால், புத்தர், தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர், அறிஞர் அண்ணா, லோகியா ஆகிய தலைவர்களுடைய ஒட்டுமொத்தமான சமூகநீதித் தத்துவத்தின் சின்னமாக விளங்குகின்றீர்கள். அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமுதாய மக்கள் – நாங்கள் அனைவரும் என்றென்றைக்கும் உங்களுடைய பணிகளுக்கு உறுதுணையாக இருப்போம்’’ என்று சிரமத்திற்கிடையே மகிழ்வோடு கூறினேன். வி.பி.சிங் அவர்கள் என்னுடன் 15 நிமிடங்கள் அமர்ந்து இருந்தார்கள்.

தாம்பரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் வி.பி.சிங் அவர்கள், “சமூக நீதியை நிலைநாட்டுவதற்காக ஆயிரம் நாற்காலிகளை இழக்கத் தயார்!’’ என்று முழங்கினார்கள்.

26.12.1990 அன்று “நிச்சயம் நன்றிக் கடனை திருப்பிச் செலுத்திடுவேன்’’ என்னும் தலைப்பில் முக்கிய அறிக்கை வெளியிட்டிருந்தேன். அதில் கடந்த 1.12.1990 அன்று இரவு எனக்கு ஏற்பட்ட நோயினின்றும் பெருமளவுக்கு நான் மீண்டிருக்கிறேன். காப்பாற்றப்பட்டதற்கு பெரிதும் நமது பாசத்திற்கும் மரியாதைக்கும் உரிய முதல்வர் கலைஞர் அவர்களும், அவரது ஆணைப்படி செயல்பட்ட நிலையில் அமைக்கப்பட்ட டாக்டர்கள் குழுவான பாராட்டுக்குரிய டாக்டர் எஸ்.லட்சுமிகாந்தன், டாக்டர் எஸ்.தணிகாசலம், டாக்டர் தாஜ்மல் உசேன், குழுத்தலைவர் DME, டாக்டர் திரு. சாமிநாதன் அவர்களும், எனது குடும்ப டாக்டர் ஞானசுந்தரம், டாக்டர் திருமலை ஆகியவர்களும், டாக்டர் திரு.சொக்கலிங்கம் அவர்களும் எனக்கு மருத்துவ சிகிச்சை அளித்தனர். அதுபற்றி மிகுந்த ஆர்வம்கொண்டு வந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள், அமைச்சர் பெருமக்கள், கட்சி வேறுபாடு, கருத்து வேறுபாடு இன்றி மனிதநேய அடிப்படையில் வந்து குணமடைய விரும்பி நேரில் கூறிய அனைத்துக் கட்சி தலைவர்கள், தோழர்கள், பெருமக்கள் முதல்வரின் துணைவியார்கள், திருமதி தயாளு அம்மாள், ராசாத்தியம்மாள், சகோதரர் முரசொலி மாறன், செல்வம், சகோதரர் பாலு ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டேன்.

30.1.1991 அன்று தமிழக மக்களால் 1989ஆம் ஆண்டு தேர்ந்து எடுக்கப்பட்ட 141 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட தி.மு.க. ஆட்சியைக் கலைத்து தமிழக மக்களின் அடிப்படை உரிமையும் மறுக்கப்பட்டது. அரசியல் சட்டம் 356ஆவது பிரிவின் கீழ் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுவிட்டது.

இதனைக் கண்டித்து 3.2.1991 அன்று மத்தியிலும் மாநிலத்திலும் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் மறுக்கப்பட்ட சமூகநீதியை நிலைநாட்ட பாடுபட்ட ‘சூத்திர ஆட்சிகள்’ வீழ்த்தப்பட்டுள்ளன. இது ஒரு தற்காலிக இழப்புதான் என்று அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டியிருந்தேன்.

தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்ட நிலையில் 20.2.1991 அன்று ‘மக்கள் நேசன்’ நாளேடு என்னிடத்தில் பேட்டி கண்டது. அதனை அன்றே விடுதலையில் 21.2.1991 விரிவாக வெளியிட்டது. அதிலிருந்து சில பகுதிகள் இங்கே தருகின்றேன்.

ஈழத்தில் இனப் படுகொலை தீவிரமாகிறது என்பதனை எடுத்துக் கூறும் விதமாக பிரதமர் சந்திரசேகருக்கு ‘அவசரத் தந்தி’ கொடுத்தேன். அதில், விடுதலைப் புலிகளை வேட்டையாடுவதாக கூறிக்கொண்டு, இலங்கையின் சிங்களப் பேரினவாத ஆட்சி தமிழர்களுக்கு எதிரான இனப் படுகொலைகளைத் தொடர்ந்து முழு மூச்சுடன் நடத்தி வருகிறது. தமிழ்நாட்டு மக்கள் மிகவும் கவலை அடைந்தார்கள். தீவிர நடவடிக்கை எடுத்து இலங்கை அரசை எச்சரியுங்கள் என்று அந்தத் தந்தியில் கேட்டுக் கொண்டேன்.

இராமதாஸ்

வன்னியர் சங்க நிறுவனரும் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனருமான மரியாதைக்குரிய டாக்டர் இராமதாஸ் அவர்கள், “பெரியார் வழி நடக்கும் தொண்டர்களுக்கு திறந்த மடல்’’ என்று தலைப்பிட்டு 22.2.1991 அன்று நாளிட்ட ‘தினப்புரட்சி’ நாளேட்டில் கடிதம் ஒன்று எழுதியிருந்தார்.

அதற்கு முன்பு 31.1.1991 நாளிட்டு, “பெரியாரின் தன்மான உணர்வுள்ள தி.மு.க.வினர் பாட்டாளி மக்கள் கட்சியில் இணைய வேண்டும்’’ என்று அழைப்பு விடுத்திருந்தார். ஷெட்யூல்டு இன மக்கள் அவ்வாறே பாட்டாளி மக்கள் கட்சியில் இணைய வேண்டும் என்றும் அவரால் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

1.3.1991 அன்று டாக்டர் இராமதாஸ் அவர்களுக்கு மனந்திறந்த மடல்’’ என்னும் தலைப்பில் ‘விடுதலை’யில் நான்கு பக்க அளவில்  விரிவான, விளக்கமான பதிலை பதிவு செய்திருந்தேன். டாக்டர் அவர்களின் கடிதத்தின் பெரும்பகுதி தி.மு.க., தி.மு.க. ஆட்சி, அதிலும் குறிப்பாக முதலமைச்சராக இருந்த டாக்டர் கலைஞர் மீது படிக்கப்படும் குற்றப் பத்திரிகையாகத்தான் இருந்தது. திராவிடர் கழகத்தைப் பற்றியும் குறைகூறிய பகுதி உண்டு.

தி.மு.க. மீது டாக்டர் அவர்கள் வைத்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்ல வேண்டியது நமது பொறுப்பல்ல. அதேநேரத்தில் இனநலக் கண்ணோட்டத்தில் தொடர்புடைய சில குற்றச்சாட்டுகளைக் கண்டுகொள்ளாமல் ஒதுங்கிப் போவதும் நமது குற்றமாகிவிடும். அந்த முறையில் சில இடங்கள் சில பிரச்சினைகளுக்குப் பதில் கூற நமக்கு அருகதையும், கடமையும் உண்டு என்று அதில் தெரிவித்து அதன் பதிலும் எழுதியிருந்தேன்.

டாக்டர் கலைஞரைப் பாராட்டிய டாக்டர் இராமதாஸ்

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் தீரன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு நடைபெற்று வரும் ‘தினப்புரட்சி’ ஏட்டில் ‘செய்தி விமர்சனம்’ என்ற தலைப்பில்,

“மண்டல் குழு பரிந்துரையை வாபஸ் பெற்றால் இன்று இந்தியா குலுங்குகிறது. நாளைய இந்தியா இருக்காது.’’ என்று பதவிபோய் விடுமோ என்று அச்சத்தை சற்று ஒதுக்கி வைத்துவிட்டு துணிகரமாகக் கூறிய தமிழக முதல்வர் கலைஞருக்கு எனது பாராட்டுகள். தென்னிந்தியாவில் உள்ள அனைத்து முதல்வர்களும் இதுபோன்று துணிச்சலான அறிவிப்புகளை வெளியிட்டால் தான் வட மாநிலங்களில் உள்ள பார்ப்பனர், பனியாக்கள் அடங்குவர்.

தேசிய ஒருமைப்பாடு என்பது மண்டல் குழு அறிக்கையை முழுவதும் அமல்படுத்துவதில் தான் இருக்கிறது! என்று எழுதியிருந்தேன்.

தேர்தல் கூட்டணி பற்றி டாக்டர் இராமதாஸ் கூறியது என்ன?

அடுத்து, முதலில் தேர்தல் கூட்டணி என்பதைப் பற்றி பாட்டாளி மக்கள் கட்சியின் கருத்து என்ன? ‘சாணக்கியன்’ என்னும் ஏட்டுக்கு டாக்டர் இராமதாஸ் அவர்கள் அளித்த பேட்டி, ‘தினப்புரட்சி’ ஏட்டில் (9.6.1990) வெளிவந்துள்ளதை அப்படியே கீழே தருகிறோம்.

“தேர்தல் கூட்டு, முற்போக்குக் கூட்டணி என்று அரசியல் கட்சிகள் கூறுவதெல்லாம் சுத்த கயவாளித்தனம்; மக்களை மோசடி செய்யும் வேலை. தேர்தலில் கூட்டு ஏன்? ஒரு கட்சிக்கும் அதன் கொள்கைக்கும் எவ்வளவு மக்கள் ஆதரவும், நம்பிக்கையும் உள்ளதோ அவர்கள்தான் அரசு அமைக்க வேண்டும். இதைக் கண்டுபிடிக்க நடத்தப்படுவதான் தேர்தல். இதைத் தெளிவுபடுத்த கட்சிகள் தனித்தனியாக நின்றால்தான் யாருக்கு உண்மையான மக்கள் ஆதரவு என்பது தெரியும். தனித்துப் போட்டியிட முடியாத கட்சிகளை அதன் தலைமைகள் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக் கூடாது; அல்லது கட்சியைக் கலைத்துவிட வேண்டும். மற்ற பெரிய கட்சிகளின் தயவில் சட்டசபைக்குள்ளும், பார்லிமெண்டுக்குள்ளும் நுழைய மட்டுமே இந்தத் தேர்தல் கூட்டு பயனளிக்கிறது. இந்தத் தேர்தல் கூட்டு என்கிற மோசடியை பாட்டாளி மக்கள் கட்சி எதிர்க்கிறது. வெற்றி வாய்ப்புப் பறிபோனாலும் தேர்தல் கூட்டணியை ஒருபோதும் ஏற்கமாட்டோம்.’’ என்ற டாக்டர் இராமதாஸ் அவர்கள், இப்பொழுது மூன்றாவது அணி என்று கூறிக்கொண்டு கூட்டணி அமைத்து வெளியில் வருகிறார்கள் என்றால், கூட்டணி அமைப்பானது கயவாளித்தனம் என்று கூறியதிலிருந்து ஒவ்வொரு எழுத்துக்கும், வரிக்கும் விளக்கம் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். பெரியார் தொண்டர்களுக்குத் திறந்த மடல் எழுதியுள்ளதால், அதன் அடிப்படையில் இந்த விளக்கங்களைக் கேட்க நமக்கு உரிமை உண்டல்லவா?

“பதவிக்கு ஆசைப்பட்டு இருந்தால் கூட்டணி வைத்திருப்போம். எங்கள் நோக்கம் மக்களை விழிப்படையச் செய்வதுதான். அறிஞர்கள் அரசியலை சாக்கடை என்கிறார்கள். எங்கள் நடத்தையால் அதை மாற்றிக் காட்டுவோம். காரைக்காலில் மக்கள் காவலர் கொள்கை முழக்கம்.’’

டாக்டர் இராமதாஸ் அவர்கள் பேசியதும் முதற்பக்கம் செய்தியாகத் “தினப்புரட்சி’’யில் (13.3.1990) வெளிவந்திருந்தது.

வி.பி.சிங்கை வரவேற்க மறுத்ததேன்?

மண்டல் குழு பரிந்துரையை நடைமுறைக்குக் கொண்டுவந்த பிரதமர் வி.பி.சிங் அவர்கள் தமிழகத்திற்கு வரும்பொழுது அனைத்துக் கட்சி, அனைத்து ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூக சங்கங்கள் சார்பாக மாபெரும் வரவேற்பு ஒன்றினை அளிக்க வேண்டும் என்று முடிவு செய்து திராவிடர் கழகம் அதற்கான கலந்துரையாடல் கூட்டத்தை 29.11.1990 அன்று சென்னை பெரியார் திடலில் கூட்டியது. வன்னியர் சங்க மாநிலத் தலைவர் சா.சுப்பிரமணியம் அய்ஏஎஸ் (ஓய்வு) அவர்கள் உள்பட பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு, பிரதமர் வி.பி.சிங் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது என்று தீர்மானிக்கப்பட்டது. அந்தத் தீர்மானத்தின் அடிப்படையில் வன்னியர் சங்க மாநிலத் தலைவர் சா.சுப்பிரமணியம் அவர்கள் உள்பட பல முக்கியத் தலைவர்கள் அன்று இரவே தமிழக முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்களை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து தீர்மான விவரத்தைப் பற்றி எடுத்துக் கூறப்பட்டது. சென்னை விமானத் திடலில் சிறப்பான வரவேற்பு அளிக்கலாம் என்றும், மேலும் பிரதமர் வி.பி.சிங் தமிழகத்தில் செல்லும் இடங்களில் எல்லாம் ஒடுக்கப்பட்ட மக்கள், சமூக நீதியில் அக்கறை உள்ள அனைத்து அரசியல் கட்சிகள் சார்பாக மகத்தான வரவேற்பு அளிப்பது என்றும், முதலமைச்சரின் கருத்தையும் அறிந்து முடிவு எடுக்கப்பட்டது.

ஆனால், 1.12.1990 நாளிட்ட பா.ம.க. நிறுவனர் டாக்டர் இராமதாஸ் அவர்கள் என்ன அறிக்கை வெளியிடுகிறார்.

“இன்றைய சூழ்நிலையில் எதிர்வரும் 7, 8, 9, தேதிகளில் கருணாநிதியுடன் வி.பி.சிங் பங்கேற்கும் தமிழ்நாட்டு நிகழ்ச்சிகளின்போது பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கத்தினர் விலகியே நிற்க வேண்டும்; வேடிக்கை பார்க்கக்கூட வீதிக்கு வரக்கூடாது’’ (கதவுகளை மூடிக்கொள்வோம்.) என்று கேட்டுக் கொள்கிறேன். 

இவ்வாறு அறிக்கை வெளியிட்டவர்தான் டாக்டர் அவர்கள். இதற்கு என்ன காரணம் சொல்கிறார் அந்த அறிக்கையில்?

“தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் தேசிய முன்னணியின் அங்கமாக இருக்கிற திமுக கட்சியின் தலைவர் கருணாநிதி மற்றும் அவரது தோழமை கட்சியினர் இன்று மேற்கொண்டுள்ள காரியங்கள் பற்றியும் நாம் இசைவான கருத்து கொண்டு இருக்கவில்லை.’’ இதுதான் டாக்டர் கூறும் காரணம்.

வன்னிய சங்க மாநிலத் தலைவர் மதிப்பிற்குரிய பெரியவர் சா.சுப்பிரமணியம் அவர்கள் உள்பட பல ஒடுக்கப்பட்ட அமைப்புகள் கலந்து ஆலோசித்து தீர்மானிக்கப்பட்ட சமூகநல கண்ணோட்டத்துடன் கூடிய ஒரு முடிவை எடுத்தேன், கவிழ்த்தேன் என்ற பாணியில் அதிரடி அறிக்கை வெளியிடுவது சரிதானா?

ஒடுக்கப்பட்டோரின் பொதுநலம், சமூகநீதிக் கருத்து இவற்றையெல்லாம் பின்னுக்குத் தள்ளி பிரதமர் வி.பி.சிங் உடன் முதலமைச்சர் கருணாநிதி பங்கேற்கிறார் என்பதை முதன்மைப்படுத்தி தனிமனித வெறுப்போடு எதையும் அணுகும் முறை ஒரு சமுதாயத்துக்கு நன்மை பயக்கக் கூடியதாகுமா? “வேடிக்கை பார்க்கக் கூட வீதிக்கு வரக்கூடாது’’ என்று விசித்திர கட்டளையிடுவது ஒரு விபரீதமான ஆத்திரகுணம் அல்லவா? (அதற்கு எவ்வளவு மரியாதை இருந்தது என்பது வேறு விஷயம்) மண்டல் குழு பரிந்துரையும் அதனை அமல்படுத்திய பிரதமரையும் மதிக்கும் பாங்கும் பண்பாடும் இதுதானா?-

வி.பி.சிங் பற்றிய கணிப்பு

பாட்டாளி மக்கள் கட்சியின் முரண்பாடுகளை அடுக்கிக் கொண்டே போகலாம். இன்றைய தினம் வி.பி.சிங் அவர்களைப் பலபட புகழ்கிறார்களே… இடஒதுக்கீடு, மதச்சார்பின்மைக் கொள்கைக்காக ஒரு ஆட்சியையே வி.பி.சிங் பலி கொடுத்துள்ளார். அவரது துணிவைப் பாராட்டுவதுடன், வி.பி.சிங் அவர்களுக்கு மண்டல் பரிந்துரை அடிப்படையில் நிபந்தனையற்ற ஆதரவு வழங்க இந்த 34 சமூகங்கள் அடங்கிய கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. (‘தினப்புரட்சி’ 28.11.1990 பக்கம் 3) என்று பாராட்டுடன் கூடிய ஆதரவை நல்கியுள்ளார் டாக்டர்.

 

இதே வி.பி.சிங் அவர்களை _ செல்லாத நாணயத்தின் மறுபக்கம் என்று தலைப்பிட்டு ‘தினப்புரட்சி’ தலையங்கம் தீட்டியதா இல்லையா? (10.6.1989)

“மேல்ஜாதி (ராஜபுத்திரர்) வெறிபிடித்த வி.பி.சிங்! அழுகிக் கொண்டிருக்கும் இந்திய அரசியல் பழத்தில் அழுகாதது போல் தோற்றமளிக்கும் பகுதிதான் வி.பி.சிங். செல்லாத நாணயத்தில் ராஜீவ் ஒரு பக்கம் என்றால் வி.பி.சிங் மறுபக்கம் ஆவார்.

இவையெல்லாம் டாக்டர் இராமதாஸ் அவர்களின் ‘தினப்புரட்சி’ ஏட்டுத் தலையங்கத்தின் சிதறல்கள்; அவரது ‘திருவாசகங்கள்’.

அன்று சென்னை பெரியார் திடலில் பேசியது என்ன?

மேலும், சென்னை பெரியார் திடலில் மக்கள் காவலர் ஆவேசப் பேருரை என்ற தலைப்பில் வந்துள்ள ஒரு கருத்தை டாக்டர் அவர்களுக்கு நினைவூட்டுவது பொருத்தமானது.

“ஒருவிதத்தில் பார்க்கப்போனால் இந்த வந்தேறிகளுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். காரணம், பிற்படுத்தப்பட்ட செடியூல்டு இன சிறுபான்மை மக்களை ஒற்றுமைப்படுத்தியவர்கள் அவர்கள். அதுவும் இப்பொழுது இந்திய அளவில் பார்ப்பனர் பார்ப்பனர் அல்லாதார் என்கிற வகையிலே ஒருபுறம் 8 சதவிகிதம் பேர்களாகவும், மறுபுறம் 92 சதவிகித பேர்களாகவும் அணியாகத் திரண்டு வருகிற சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது. இதை வந்தேறிகள் நமக்கு போதித்தது போல் உள்ளது. அதற்காக அவர்களுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். நாமும் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு நெருங்கிக் கொண்டிருக்கிறோம். பொது எதிரியை அடையாளம் காட்டியிருக்கிறார்கள்.’’ என்றும் பேசியிருக்கிறார்.

(‘தினப்புரட்சி’ 27.11.1990 பக்கம் 2)

டாக்டர் இராமதாஸ் அவர்களே! நீங்கள் பேசிய பேச்சு உங்களுக்கே வழிகாட்டியாக அமைந்துள்ளது. 92 சதவிகிதம் பேர் ஒரு பக்கம், 8 சதவிகித பேர் ஒரு பக்கம்; இதை நீங்களேதான் குறிப்பிட்டுள்ளீர்கள். நீங்கள் சொன்ன கருத்தை நீங்களே பின்பற்ற வேண்டாமா? என்றுதான் பெரியார் தொண்டர்கள் கேட்கிறார்கள்.

“நாம் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு நெருங்கிக்கொண்டு இருக்கிறோம்’’ இதுவும் நீங்கள் பெரியார் திடலில் சொன்ன கருத்துதான் என்று அவருடைய குற்றச்சாட்டுகளுக்கு அவர் கூறிய இதுபோன்ற கருத்துகளாலே பதில் கூறியிருந்தேன். அவருக்கு உணர்த்த வேண்டியதை உணர்த்தி இடித்துரைத்ததோடு நில்லாமல், அவரின் நல்ல செயலையும் வரவேற்று வாழ்த்தும் தெரிவித்தேன்.

வன்னியர் – ஆதிதிராவிடர் மாநாடு வெற்றி பெறட்டும்!

வன்னியர் _ ஆதிதிராவிடர் ஒற்றுமையை வலியுறுத்தும் மாநாடுகளை மாவட்டந்தோறும் டாக்டர் அவர்கள் முனைப்பாக நடத்த முற்பட்டு இருப்பது பெரியார் தொண்டர்களால் பெரிதும் போற்றி வரவேற்கத் தகுந்த ஒன்றாகும். இம் முயற்சியில் டாக்டர் அவர்கள் வெற்றி பெற அன்பான வாழ்த்துகள்! தேவைப்பட்டால் ஒத்துழைப்பும் உண்டு. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அயராது பாடுபடும் இளையபெருமாள் அவர்களோடு கைகோத்துப் பவனி வருவது வரவேற்கத் தகுந்ததேயாகும்.

ஆனால், இதே இளையபெருமாள் அவர்களை டாக்டர் அவர்கள் எப்படி வருணித்தார்கள்?

“இளையபெருமாள்_வை.பாலசுந்தரம் மோசடிகளை ஷெட்யூல்டு இளைஞர்கள் உணர்ந்து வருகிறார்கள்.’’

(டாக்டரின் பேச்சு, ‘தினப்புரட்சி’ 5.6.1989)

அன்று ஏன் இவ்வளவு கடுமையான சொற்களைப் பயன்படுத்த வேண்டும்? எதிலும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசும் போக்கு டாக்டர் அவர்களிடம் இருக்கிறது என்பதைச் சுட்டிக் காட்டத்தான் இந்த எடுத்துக்காட்டே தவிர, பழையதைச் சுட்டிக்காட்டிப் புதிய முயற்சிக்கு முட்டுக்கட்டை போடுவதல்ல நமது நோக்கம்’’ என்றும் எழுதியிருந்தேன்.

(நினைவுகள் நீளும்…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *