சாதனைகள் குறிப்பிட்டவர்களுக்கு மட்டுமானதல்ல; வாழ்வில் எதிர்நீச்சல் போட்டு முன்னேறத் துடிக்கும் ஒவ்வொரு மனிதருக்கும் உண்டானது என்பதை மெய்ப்பிக்கும் வகையில் நம்பிக்கை ஒளிவீசி வருகிறார் மாணவி ரோஜா. இவர் பழங்குடி இருளர் சமுதாயத்தின் முதல் முனைவர் பட்டம் பெறப்போகிறவர்.
திண்டிவனம் அருகே மரூர் இருளர் குடியிருப்பைச் சார்ந்த ரோஜாவின் பெற்றோர் இருவருமே செங்கல்சூளையில் கூலிவேலை செய்பவர்கள். பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு பிஹெச்.டி சேர்ந்திருக்கிறார் ரோஜா.
“சின்ன வயசுல வீட்ல ஒரு கல்யாணப் பத்திரிகையில் மாப்பிள்ளை பெயரின் பின்னாடி, `பிஹெச்.டி-ன்னு
போட்டிருந்ததைப் பார்த்தேன். அப்படின்னா என்னன்னுகூட எனக்குத் தெரியாது’’ என்று பேசத் தொடங்கும் இவரின் இந்த வார்த்தைகளே இருளர் சமூகப் பெண்களின் ஒற்றை சாட்சி.
“அம்மா, அப்பா ரெண்டு பேருமே செங்கல்சூளையில் வேலை பார்க்கறாங்க. அதுவும் ஆறு மாசத்துக்கு வேற ஊர்ல தங்கி வேலை பார்க்கணும். அப்புறம் சில மாதங்கள் எங்களோட இருப்பாங்க. அதுவரைக்கும் நான் எங்க சொந்தக்காரங்க வீட்ல இருப்பேன். நான் பக்கத்து வீட்டுப் பிள்ளைங்க ஸ்கூலுக்குப் போறதைப் பார்த்துட்டு அவங்களோடவே நானும் போயிடுவேன். பள்ளியிலும் நான் ஆர்வமா இருக்குறதைப் பார்த்துச் சேர்த்துக்கிட்டாங்க. அப்படியே பத்தாவதுவரைக்கும் படிச்சிட்டேன். பத்தாம் வகுப்பில் 50 சதவிகிதத்துக்கும் குறைவான மதிப்பெண் எடுத்து பாஸ் ஆனேன். என் பள்ளிப் படிப்பை நிறுத்திட்டு, கல்யாணம் பண்ணிவெக்க என் பெற்றோர் நினைச்சாங்க. நான் படிக்கணும்னு அடம்பிடிச்சேன். ஸ்கூல் படிப்பை முடிக்கவே இவ்வளவு போராட்டம்.
ப்ளஸ் டூ முடிச்சிட்டு கல்லூரியில் சேர முயற்சி பண்ணும்போது ஜாதிச் சான்றிதழ் இல்லைன்னு பிரச்சினை வந்துச்சு. ஜாதிச் சான்றிதழ் வாங்கப் போனப்போ, `உங்களைப் பார்த்தா, இருளர் சமூகம் மாதிரியே இல்லையே… எப்படி சான்றிதழ் கொடுக்க முடியும்?னு கேட்டு அவமானப்படுத்தினாங்க. `இருளர் சமூகம்னா இப்படித்தான் இருக்கணும்னு ஏதாச்சும் இருக்கா… நான் கல்லூரியில் சேரப் போறேன்னு அதுக்கு ஏத்த மாதிரி என்னை மாத்திக்கிட்டேன். இதில் என்ன தப்பு?ன்னு கேட்டேன். இன்னும் நிறைய அவமானப்படுத்திப் பேசினாங்க. தொடர்ந்து படிக்கிறதே கேள்விக்குறியாச்சு. அப்புறம் பேராசிரியர் கல்யாணி அய்யா உதவியோட ஜாதிச் சான்றிதழ் கிடைச்சுது. விழுப்புரம் அரசுக் கல்லூரியில் பி.எஸ்ஸி தாவரவியல் படிச்சேன். அப்போ எனக்கு சுத்தமா ஆங்கிலம் வராது, தெரியாது. அதனால படிக்க ரொம்பக் கஷ்டப்பட்டேன். அரியர்ஸ் வேற வெச்சிட்டேன். அந்தச் சமயத்துல வீட்ல வேற பணக் கஷ்டம். அதனால வேலைக்குப் போகலாம்னு முடிவு பண்ணி லேப் டெக்னீஷியன் வேலையில் சேர்ந்தேன். வேலை பார்க்கும்போதும், `எனக்கு எப்படியாச்சும் மேல படிக்கணும். எம்.எஸ்ஸி படிக்கணும்னு ஆசையா இருந்துச்சு. அப்புறம் அம்மாகிட்ட கேட்டேன். அவங்களும் சம்மதிச்சாங்க. பிறகு எம்.எஸ்ஸி சேர்ந்து, கல்லூரியிலேயே முதல் மாணவியா தேர்ச்சிபெற்றேன்.’’
எம்.எஸ்ஸி முடிச்சதும், அந்தக் கனவு மறுபடியும் துளிர்க்க ஆரம்பிச்சுது. கல்யாணி அய்யா, ராஜேஷ் சார் வழிகாட்டுதலோடு லயோலாவில், கடந்த ஜனவரி மாசம் பிஹெச்.டி சேர்ந்தேன். என் கல்லூரியிலும் நிறைய உதவி பண்ணினாங்க.
மரங்களுக்கும் உயிர் இருக்கு. அதை ஆழமா நம்புறேன். இப்போ பிஹெச்.டி-யிலும் தாவரங்களோட மருத்துவ குணங்கள் பத்திதான் ஆராய்ச்சி பண்ணப் போறேன் – குறிப்பாக சர்க்கரை நோய்க்கு மூலிகையால் சிகிச்சை கொடுப்பது குறித்து.
“எங்க சமூகத்துல ஒரு பொண்ணு பிஹெச்.டிவரை படிக்கிறதெல்லாம் பெரிய விஷயம். இப்பவும் அப்பா, அம்மா செங்கல்சூளையில கூலிகள்தான். அவங்களுக்காகக் கண்டிப்பா முனைவர் பட்டம் வாங்குவேன். இது என்னோட முடிஞ்சிடாது. என்னைப் பார்த்து, என் சமூகத்துலேயே ‘ரோஜா அக்கா மாதிரி படிங்கன்னு’ பெற்றோர்கள் சொல்ல ஆரம்பிச்சிருக்காங்க. இன்னும் நிறைய ரோஜாக்கள் வருவாங்க, வர வைப்பேன்’’ என்கிறார் நம்பிக்கையுடன்.
தகவல் : சந்தோஷ்