முகப்புக் கட்டுரை : திருவள்ளுவரை விழுங்கத் துடிக்கும் காவிகள்!

நவம்பர் 16-30 2019

மஞ்சை வசந்தன்

1.11.2019 அன்று வ.உ.சி, பாரதியார் ஆகியோரின் படங்களோடு, காவி உடுப்பு, கழுத்தில் ருத்திராட்சக் கொட்டை, கை,  நெற்றியில் பட்டை என திருவள்ளுவரை இந்துச் சாமியாரைப் போலக் காட்டும் படம் ஒன்றையும் சேர்த்து வெளியிட்டது தமிழக பாஜக. நவம்பர் 2 அன்று திருவள்ளுவர் படத்தை மட்டும் தனியாக வெளியிட்டு, திருவள்ளுவர் மதச்சார்பற்றவர் அல்ல, அவர் ஓர் இந்து என்று கூறியுள்ளது.

திருவள்ளுவரைக் காவிமயமாக்கும் இந்த முயற்சியைக் கண்டித்து சமூக வலைத்தளத்தில் (ஙியிறி மிஸீsuறீts ஜிலீவீக்ஷீuஸ்ணீறீறீuஸ்ணீக்ஷீ) என்னும் ஹேஷ்டேக்கை ட்ரெண்டிங் செய்தனர். பலரும் திருவள்ளுவரை மதக் குறியீடாக்கத் துடிக்கும் பாஜகவின் முயற்சிக்குக் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் கடந்த நவம்பர் 3 ஞாயிறு அன்று இரவு தஞ்சை மாவட்டம் வல்லத்திற்கு அருகில் உள்ள பிள்ளையார்பட்டி என்-னும் ஊரில் அமைக்கப்பட்டிருந்த திருவள்ளுவர் சிலையின் மீது, சாணியை வீசியெறிந்து அவமதித்திருக்கிறது ஒரு கும்பல். காலையில் இதனை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் இதனைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சையில் திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டதைக் கண்டித்து தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். திமுக, விசிக, இடதுசாரிகள் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் இதனைக் கடுமையாகக் கண்டித்துள்ளன.

திருவள்ளுவரையும் ஒரு சனாதனச் சாமியாராக்குவதற்கான காவிக் கும்பலின் முயற்சியே இது. ஏற்கெனவே இந்து மதத்தையும் பார்ப்பனியத்தையும் சனாதனத்தையும் தத்துவார்த்த ரீதியில் ஆய்ந்து அம்பலப்படுத்திய அம்பேத்கரையே காவிமயமாக்கிய இக்கும்பல் திருவள்ளுவரையும் எளிமையாக தூக்கி விழுங்கிவிடலாம் என எண்ணுகிறது.

இதற்கான அடித்தளம் இடுவதை 6 ஆண்டுகளுக்கு முன்னரே தருண் விஜய் என்கிற ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர் மூலம் முயற்சித்தது காவிக் கும்பல். கடந்த 2013ஆ-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், தமிழகத்தில் களமிறக்கி விடப்பட்ட தருண் விஜய், தமிழின் பெருமை பற்றிப் பேசி, வட மொழி திணிப்பு தவறானது என்றும் கம்பு சுழற்றினார்.

தமிழகத்தில் இப்படிப் பேசிய இதே தருண் விஜய் அதே மாதத்தில் வட இந்தியாவில் “டைம்ஸ் ஆஃப் இந்தியா’’ பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், சமஸ்கிருதத்தை நீக்கினால் இந்திய தேசிய உணர்வே அழிந்து விடும், சமஸ்கிருதம்தான் இந்தியா; இந்தியாவை ஒருங்கிணைக்கும் சக்தி அதுதான். உயர்பதவிகளையும், சமூக அந்தஸ்தையும் பெறுவதற்கு சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்கிற நிலை முன்னொரு காலத்தில் நிலவியதே, அதனை மீண்டும் நாம் உருவாக்க வேண்டும்.’’ (‘டைம்ஸ் ஆப் இந்தியா’, ஆக-ஸ்ட் 23, 2013) என்று கூறியுள்ளார்.

தற்போது மோடி இதே வேலையைச் செய்துவருகிறார். தனது அமெரிக்கப் பயணம், அய்.நா.சபை, ஆசியான் மாநாடு என அனைத்து இடங்களிலும் தனது உரையில் தமிழையும் திருக்குறளையும் புகழ்ந்து பேசி, தனது தமிழ்க் காதலை வெளிப்படுத்தி வருகிறார் மோடி.

அதே நேரத்தில், பள்ளிக்கூடங்கள் முதல், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகள் வரையில் சமஸ்கிருதத்தையும், இந்தியையும் திணிப்பதற்கான சித்து வேலைகளையும் செய்து வருகிறார் மோடி.

தாமிரபரணி புஸ்கரம், அத்திவரதர் திருவிழா, வைகைப் பெருவிழா என இந்து மத நிகழ்ச்சிகள் மூலம் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற முயற்சிக்கும் ஆர்.எஸ்.எஸ். கும்பல், தமிழ் கலாச்சாரத்தை இந்துக் கலாச்சாரமாகத் திரிக்கும் முயற்சியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.

“விதை நெல்லுக்குப் பெருச்சாளியை காவல் வைத்ததுபோல், தமிழ் வளர்ச்சித் துறைக்கும் தொல்லியல் துறைக்கும் மாஃபா பாண்டியராஜனை அமைச்சராக்கியிருக்கிறது _ காவிக் கூட்டத்தின் கட்டளைக்கேற்ப செயல்படும் அ.தி.மு.க. ஆட்சி!

அவர், வள்ளுவர் இந்து சாமியாராக்கப்பட்ட மோசடிக்குக் கண்டனம் தெரிவிக்காமல், “திருவள்ளுவர் எல்லோருக்கும் பொதுவானவர். அதனாலேயே நான் அவ்வாறு திருநீறு போட வேண்டுமானால் போட்டுக் கொள்ளுங்கள். கிறித்துவர்கள் அவருக்கு ஒரு சிலுவை போட வேண்டும் என்றால் போட்டுக் கொள்ளுங்கள். எனக்கு ஒன்றும் பிரச்சினையில்லை. எல்லா மதத்தவரும் தம்மவர் என்று சொல்லக்கூடியவர் தெய்வப்புலவர் திருவள்ளுவர். எந்த மதத்தவரும் அவரை எம்மவர் என்று கூறவேண்டும் என்பதே எங்கள் கருத்து’’ என்று கூறியிருக்கிறார்.

இது எப்பேர்ப்பட்ட பித்தலாட்டம்! திருவள்ளுவரை எந்த மதத்தவர் வேண்டுமானாலும் ஏற்கலாம். ஆனால், அவரை எங்கள் மதத்தவர் என்று கூற எவருக்கும் உரிமை இல்லை. இந்த வேறுபாடு கூட புரியாத ஒருவர் அமைச்சர். அந்த நாள் ஆர்.எஸ்.எஸ்.காரர் அல்லவா? அதன் வெளிப்பாடுதான் இது.

நடப்பது அ.தி.மு.க. ஆட்சியல்ல. பி.ஜே.பி.யின் பினாமி ஆட்சி என்பதற்கு இது சரியான சான்று.

உருவமற்று இருந்த வள்ளுவனுக்கு முதன்முதலில் தூரிகை மூலம் உயிர்கொடுத்து நம் மனதில் பதியவைத்தவர் ஓவியர் கே.ஆர்.வேணுகோபால் சர்மா.

கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான வள்ளுவர் உருவங்களை வரைந்தவருக்கு, திடீரென, தான் எதிர்பார்த்த திருவள்ளுவர் உருவம் மனக்கண்ணில் தோன்ற, அதை வரைந்தார். அந்த நேரத்தில் தற்செயலாக அங்கு சென்ற பாவேந்தர், கே.ஆர்.வேணுகோபால் சர்மா வரைந்த படத்தைப் பார்த்து, ‘அட… நம்ம வள்ளுவர்தானே!’ எனச் சிலிர்த்துக் கேட்டிருக்கிறார். அதன் பிறகு தந்தை பெரியார், அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், கக்கன், தோழர் ஜீவா, நாவலர் நெடுஞ்செழியன், கிருபானந்த வாரியார், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, மு.வரதராசனார், எஸ்.எஸ்.வாசன் என பலர் இந்த வள்ளுவர் படத்தைப் பார்த்து அங்கீகரித்திருக்கிறார்கள்.

1964ஆம் ஆண்டு பக்தவத்சலம் முதல்வராக இருந்தபோது, அன்றைய துணை ஜனாதிபதியாக இருந்த ஜாகீர் உசேனால் அந்தப் படம் சென்னை சட்டமன்றத்தில் திறக்கப்பட்டது. அதுதான் தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்டு நாட்டுடைமை யாக்கப்பட்டது. அதை, மத்திய அரசு அஞ்சல்தலையாகவும் வெளியிட்டது. திருவள்ளுவர் படமாக உருப்பெற்றதற்கான நுட்பமான காரணங்களை கே.ஆர்.வேணுகோபால் சர்மா புத்தகமாகவே எழுதியிருக்கிறார். சென்னைப் பல்கலைக்கழகமும் அந்த நூலை ஆராய்ந்து, 2012ஆ-ம் ஆண்டு பதிப்பித்து வெளியிட்டிருக்கிறது. திருவள்ளுவரின் உருவத்தை அவர் திருக்குறளின் தரவுகளிலிருந்துதான் வரையவே செய்திருக்கிறார் என்பதும் அந்த நூலில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறார்.

ஓவியர் வேணுகோபால் சர்மா

நெற்றி, கழுத்து, மார்பு… என ஒவ்வொரு பாகமும் வரையப்பட்டதற்கான காரணங்களை எழுதியுள்ள வேணுகோபால் சர்மா, அந்த உருவத்தில் ஏன் மதச்சாயங்களோ, சமயக்குறிகளோ இல்லை என்பதற்கு வைத்த பதில்… ‘உலகப் பற்றிலிருந்தும் சமயப் பற்றிலிருந்தும் திருவள்ளுவர் விலகித்தான் இருந்திருக்க வேண்டும். ஏனெனில், ஏதாவது மதத்தையோ, சமயத்தையோ தழுவிய நன்மொழிகள் திருக்குறளில் எங்கும் தென்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

ஆனால், திருவள்ளுவர் படம் முன்னர் காவி மற்றும் பட்டையோடு இருந்தது; அதை பின்னர் மாற்றிவிட்டனர் என்று பித்தலாட்டமாய் மோசடியாய் கூறுகிறது ஆர்.எஸ்.எஸ். கும்பல். காவிக் கூட்டத்தின் மோசடிச் செயலை உலகெங்கும் உள்ள மக்கள் இனம், மொழி பாராது கண்டித்துள்ளனர்.

தலைவர்கள் கண்டனம்

தமிழர் தலைவர் ஆசிரியர்

“புரட்சியாளர் அம்பேத்கரையும், அண்ணல் காந்தியாரையும் காவி வண்ணம் பூசிக் கவர்ந்திட முயன்ற காவிக்கூட்டம், “ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து கடைசியில் மனிதனைக் கடித்த கதைபோல’’ இப்பொழுது சங் பரிவார்க் கும்பல் உலக தத்துவ ஞானியான திருவள்ளுவரையே காவிக்குள் கொண்டு வர முயற்சிக்கின்றன.

பி.ஜே.பி.யின் சமூக வலைதளத்தில் திருவள்ளு வருக்கு காவி உடை அணிவித்து, நெற்றியில் பட்டையும் போட்டு, உருத்திராட்சத்தையும் அணிவித்து _ திருவள்ளுவரை இதற்குமேல் எந்த அளவும் கொச்சைப்படுத்த முடியாது என்னும் அளவுக்குத் தங்களின் பார்ப்பனிய மோசடிக் குணத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டனர்.

கவுதம புத்தரையே அவதாரம் ஆக்கி, மகாவிஷ்ணுவின் அவதாரம் என்று சொன்னவர்கள் அல்லவா!

ஒன்றை ஒழிக்க முடியாவிட்டால், ஆலிங்கனம் செய்து அழிப்பது, ஊடுருவுவது, திரிபுவாதம் செய்வது என்பதெல்லாம் பார்ப்பனியத்திற்கே உரித்தான கல்யாண திருக்குணங்களாகும்.

ஆரிய எதிர்ப்பு நூலே திருக்குறள்

திருக்குறள் என்பது அய்யப்பாட்டுக்கு சற்றும் இடமில்லாத ஆரியத்துக்கு எதிரான கோட்பாடுகளைக் கொண்ட சமூக சமத்துவ நூலாகும். அறம் பொருள், இன்பம்பற்றி எழுதிய திருவள்ளுவர் வீடுபற்றி எழுதாததிலிருந்தே அவர்தம் உள்ளம் எத்தகைய உள்ளம் என்பது வெளிப்படை.

தமக்கு எதிரான கருத்தினைக் கூறும் வள்ளுவரை அவமானப்படுத்துவது என்பது ஒன்று – இன்னொரு வகையில் உட்கிரகித்து அழிப்பது என்பது இவர்களின் தந்திரமாகும்.

மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேக ரேந்திர சரஸ்வதி என்பவர், ‘ஆண்டாளின் தீக்குறளை சென்றோதோம்’ என்னும் வரிக்கு ‘தீய திருக்குறளை ஓதமாட்டோம்’ என்று சொன்னாரே!

நாகசாமிகளின் விஷமம்!

மனுதர்மத்தின் சாரம் திருக்குறள் என்று அண்மையில் நாகசாமி என்னும் பார்ப்பனர் ஆங்கிலத்தில் நூல் ஒன்றை வெளியிட்டபோது, அதனைக் கண்டித்தும், மறுத்தும் சென்னை பெரியார் திடலில் சிறப்புக் கூட்டம் ஒன்றை நடத்தினோம். (7.11.2018).

‘பயிர்த் தொழிலைப் பாவத் தொழில்’ என்று சொன்ன மனுதர்மம் எங்கே? (அத்தியாயம் 10, சுலோகம் 84).

‘உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்’ என்று சொன்ன திருவள்ளுவர் எங்கே?

தாய்லாந்தில் திருக்குறள் பெருமை பேசும் பிரதமர்

இந்த இலட்சணத்தில் தாய்லாந்து மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டு, திருக்குறளைப்பற்றிப்  புகழ்ந்து தள்ளியுள்ளார்.

இரட்டை வேடமும், ஊடுருவி அழிக்கும் தந்திரமும் இந்த சங் பரிவார்களுக்குக் கைவந்த கலையே!

ஆனாலும், தமிழ்நாடு ஏமாந்துவிடாது _ வேட்டி கட்டினாலும், வீதியிலே சிரசாசனம் போட்டாலும் இந்தப் பெரியார் பூமி ஒருபோதும் ஏமாந்துவிடாது. முன்பு ஒரு எம்.பி.யைக் கொண்டு வந்து முன்னோட்டம் விட்டு மூக்கறுபட்ட பிறகுமா இப்படிப்பட்ட ஏமாற்று யுக்திகள்?

திருவள்ளுவர்மீது சாணி வீச்சு!

இந்தச் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் இதே காலகட்டத்தில், தஞ்சை பிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலையின்மீது குறிப்பாக முகத்தில் சாணியை வீசியுள்ளனர் என்று செய்தி வெளிவந்துள்ளது.

சங் பரிவார் முகத்திரையைக் கிழிக்க இதுவே சரியான சந்தர்ப்பம்

பாரதீய ஜனதா, சங் பரிவார் என்பது தமிழுக்கும், தமிழர்களுக்கும், தமிழ்ப் பண்பாட்டுக்கும் எதிரானது என்று திராவிடர் கழகம் தொடர்ந்து கூறி வந்திருக்கிறது – வருகிறது. இவையெல்லாம் நூற்றுக்கு நூறு உண்மை – உண்மையிலும் உண்மை என்பதை கண்கூடாகத் தெரிந்துகொள்வதற்கு  இவற்றைவிட வேறு ஆதாரங்கள் தேவையா?

மதச்சார்பற்ற சக்திகளும், தமிழ் உணர்வாளர்களும் இந்த சந்தர்ப்பத்தை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு பி.ஜே.பி. – சங் பரிவார்க் கூட்டத்தின் முகத்திரையைக் கிழித்தெறிய முன்வர வேண்டியது புத்திசாலித்தனமாகும்.

பி.ஜே.பி. – சங் பரிவார்க்குள் இருக்கும் தமிழர்களே! இதற்கு மேலும் இந்த அமைப்புகளில் இருப்பது குறித்து சிந்திப்பீர்களாக!’’ என்று தமது உணர்வுபூர்வமான அறிக்கையில் கூறியுள்ளார்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்:

“தஞ்சாவூர் – பிள்ளையார்பட்டி பகுதியில், திருவள்ளுவர் சிலையை சாயத்தைக் கொண்டு அசிங்கப்படுத்தக்கூடிய ஒரு கேவலமான செயலை நடத்தியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.

நேற்று பா.ஜ.க., தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில், திருவள்ளுவர் படத்திற்கு காவி உடை அணிவித்து, காவி நிறத்துடன் வெளியிட்டிருப்பதற்கும், இன்றைக்கு தஞ்சை – பிள்ளையார்பட்டியில், திருவள்ளுவர் சிலை களங்கப்படுத்தப்பட்டிருப்பதற்கும் ஏதும் தொடர்பு இருக்குமோ? என்கிற சந்தேகம் எல்லோருக்கும் ஏற்பட்டிருக்கிறது.

எனவே, உடனடியாக இது குறித்து உரிய விசாரணை நடத்தி, இந்தக் கொடுமையை, அக்கிரமத்தை, கேவலத்தைச் செய்திருக்கக்கூடிய நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ

“தஞ்சாவூர் பிள்ளையார் பட்டியில், உலகப் பொதுமறை தந்தவரும், மனித குலத்துக்கே வழிகாட்டக்கூடிய ஒளிச் சுடரை வழங்கிய வருமான திருவள்ளுவர் சிலை மீது சாணத்தைக் கொட்டி இருக்கின்றார்கள்.

முக்கடல் சங்கமத்தில் விண்முட்டும் திருவள்ளுவர் சிலை எழுப்பினார் டாக்டர் கலைஞர் அவர்கள். இது உலகின் பல நாடுகளில், பல மொழி பேசுவோர் திருவள்ளுவர் சிலை எழுப்பி தங்களை வாழ வழிகாட்டும் அறநெறி மாண்பாளராகப் போற்றுகின்றனர். இக்கொடியோர் செயலால் தமிழகம் வெட்கித் தலைகுனிகின்றது.

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போல தம்மை இகழ்வாரைப் பொறுத்தல் தலை என்றார் வள்ளுவர். தன்னை வெட்டிக்குழி பறிப்பவனையும் தாங்கி நிற்கின்றது நிலம் என்றார்.

அதுபோல இகழ்ச்சியையும் தாங்கிக்கொள்ள வேண்டும் என்றார். எனினும் மன்னிக்க முடியாத இம்மாபாதகச் செயலைச் செய்தவர்கள் தண்டிக்கப்பட்டாக வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்

“ஆர்.எஸ்.எஸ். பரிவார அமைப்புகள் இந்தியாவை மொழிவாரி மாநிலங்களாக பிரித்ததையோ, கூட்டாட்சித் தத்துவத்தையோ ஏற்றுக் கொண்டவர்கள் அல்லர். தற்போது மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்ட நவம்பர் 1 தினத்தையொட்டி அவர்கள் வெளியிட்டுள்ள முகநூல் பதிவுகள் இதற்கு சொந்தம் கொண்டாட முயற்சிப்பதோடு அதில் பதிவிட்டுள்ள திருவள்ளுவர் படத்துக்கு, காவி உடையும், திருநீறு பூசியும் இழிவு செய்திருக்கிறார்கள்.

திருவள்ளுவரை ஜாதி, மதம், மொழி, தேசிய எல்லை கடந்து உலகம் முழுவதும் பலரும் கொண்டாடி வருகிறார்கள். கடந்த காலத்தில் திருவள்ளுவரைக் கொண்டாடிய யாரும் அவரை ஓர் அரசியல் இயக்கம் சார்ந்து சித்தரிக்க முயன்றதும் கிடையாது. பா.ஜ.வுக்கு சொந்தமான பெருமிதங்களும், வளமான வரலாறுகளும் எப்போதும் இல்லாத நிலையில் பெருமைக்குரிய ஆளுமைகளை வண்ணம் பூசி, சில அடையாளங்களை மாற்றி தங்களுக்கான வர்களாகச் சித்தரிப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது’’ என்றார்.

பேரா.அருணன்

“திருவள்ளுவர் குறித்தான சர்ச்சைகள் முதலில் எச்.ராஜா டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்ததிலிருந்துதான் தொடங்கியது. அந்தப் படத்தில் திருவள்ளுவர் காவி உடையிலும், கைகளில் பட்டையும், கழுத்தில் கொட்டையும் அணிந்திருந்தார். இது ஒரு சரித்திர மோசடி. திருவள்ளுவரை கட்டாய மதமாற்றம் செய்யும் செயல்தான் அவரை காவி உடைக்கு மாற்றியதன் பின்னணி.

திருவள்ளுவர் காலத்தில் இந்து மதம் என்று ஒன்று கிடையாது. மாறாக சமணமும், பவுத்தமும், வேத மதமும்தானிருந்தன. வேத மதத்தில் பின்பற்றப்படும் வேள்வி முறைக்கு எதிராக வள்ளுவர் தனது குறளில் “ஆயிரம் வேள்விகளை வளர்ப்பதைக் காட்டிலும் ஒரு உயிரினைக் காப்பது மேலானது’’ என்று குறிப்பிட்டிருக்கிறார். அதேபோல, ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்கிற குறளையும், பகவத் கீதையில் உள்ள கருத்தையும் சமமென நியாயப்படுத்துகிற வேலையினை பா.ஜ.க.வினர் செய்து வருகின்றனர்.

பிறக்கும்போது எல்லோரும் சமமெனக் கூறிய திருவள்ளுவர், மனிதனை நான்கு வர்ணங்களாகவே பிறக்கும்போதே பிரிக்கின்ற பகவத் கீதைக்கு எதிரானவர்தான். மேலும் வள்ளுவர் மனு தர்மத்திற்கு எதிராகவும், வாழ்வியல் கூறுகளை உள்ளடக்கியவாறும் திருக்குறளை இயற்றியுள்ளார். பா.ஜ.க.வில் தமிழ் மரபை உயர்த்தியவர்கள் என்று சொல்ல ஆள் இல்லை. ஆகவே, வள்ளுவரை தங்கள் பக்கம் இழுக்கின்றனர்’’ என்று வன்மையாகக் கண்டித்துள்ளார்.

திருமுருகன் காந்தி, ஒருங்கிணைப்பாளர், மே பதினேழு இயக்கம்

திருவள்ளுவர் சிலை மீது தாக்குதல் நடத்தப்பட்டதென்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. வெளிப்படையாகவே திருவள்ளுவரை இந்து மத அடையாளத்திற்குள் கொண்டு செல்வதற்கான வேலைகளை பா.ஜ.க. செய்து வருகிறது. இவர்களுடைய கண்களுக்கு திருக்குறள் இத்தனை நாள்கள் தெரியவில்லையா? இது முழுக்க முழுக்க தமிழர்களுடைய அடையாளத்தினைத் திருட முயற்சிக்கும் செயலாகும்.

திருவள்ளுவர் அடிப்படையில் மதம், கடவுள் நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்டவர். அவர் அனைவருக்கும் பொதுவானவர். அவரை ஒரே ஒரு மதத்திற்குள் மட்டும் சுருக்க நினைப்பது என்பது பா.ஜ.க.வின் மோசடியான செயல். வள்ளுவரை அனைவரும் கொண்டாடலாம். காவி உடைகளுடனும், இந்து மத அடையாளங்களுடனும் வள்ளுவரைத் திரித்து அடையாளப்படுத்துவது பா.ஜ.க.வினுடைய குறுகிய அரசியல் நோக்கத்திற்கு வேண்டுமானாலும் பயன்படலாம்.

ஆனால், மக்கள் இந்தத் திரிபுகளை விரைவில் புரிந்துகொள்வார்கள். பா.ஜ.க.வின் இந்த முயற்சிகள் நீண்ட நாள்களுக்குப் பயன்தராது. கடந்த காலங்களிலும் இதேபோல தமிழர்களுடைய அடையாளங்களை முற்றிலுமாக அழிக்கவும், திரித்து அடையாளப் படுத்தவும் வேலைகள் நடந்து வந்திருக்கின்றன. ஆனால், அவையெல்லாவற்றையும் மக்கள் முறியடித்தனர் என்பது வரலாறு.’’

தமுஎகச மாநிலத்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய  சு.வெங்கடேசன், பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா:

சு.வெங்கடேசன் எம்.பி.,

“இன்றளவும் நாட்டின் வளர்ச்சிக்கும் மக்கள் ஒற்றுமைக்கும் எதிர்மறை பங்களிப்புகளை மட்டுமே செய்து வந்துள்ள சங்பரிவாரத்தினர் மக்களிடையே புதிய  ஆதரவுத் தளங்களை உருவாக்கிக் கொள்வதற்காக பல மோசடிகளை மேற்கொண்டுள்ளனர். கடந்த காலத்திலோ சமகாலத்திலோ சமூகத்தின் மதிப்பிற்குரிய ஆளுமைகள் எவரையும் தமது கருத்தியல் முன்னோடிகளாகக் கொண்டிராத இந்த சங் பரிவாரத்தினர் தமது கருத்தியலுக்கு நேரெதிர் நிலைப்பாடுகளையும் செயற்பாடுகளையும் கொண்ட ஆளுமைகளை உட்செரித்து, தமது நோக்கங்களுக்கேற்ப திரித்து, தம்மவராக முன்னிறுத்திக் காட்டிக்கொள்ளும் இழிசெயலில் ஈடுபட்டு வருகின்றனர். திருவள்ளுவரைக் கைப்பற்றும் அவர்களது முயற்சி இதனொரு பகுதிதான்.

தருண் விஜய் என்பவரை வைத்து திருவள்ளுவரின் மேதமையைக் கொண்டாடப் போவதாக தோற்றம் காட்டிய அவர்கள், ஹரித்துவாரில் நிறுவப்போவதாகச் சொல்லி 2016ஆம் ஆண்டு கொண்டுசெல்லப்பட்ட திருவள்ளுவர் சிலை ஜாதிவெறியேறிய புரோகிதக் கும்பலின் எதிர்ப்பால் நிறுவப்படாமல் தரையிலே நீண்டநாள்களாக கிடத்தி வைக்கப்பட்டிருந்தது. அறம் தோய்ந்த கருத்துகளுக்காக உலகத்தாரின் போற்றுதலைப் பெற்றவரான வள்ளுவரின் சிலை ஆதிசங்கரர் சிலையருகே வைப்பதற்கு தகுதியற்றதென்றும் ஹரித்துவாருக்கும் வள்ளுவருக்கும் என்ன தொடர்பு என்றும் இந்தக்  குறுமதியினர் சிறுமைப்படுத்துவதற்கு எதிரான கண்டனம் வலுப்பெற்றதால் அச்சிலை பிறிதோர் இடத்தில் நிறுவப்பட்டது.

இந்தச் சீர்குலைவு வேலைக்கு வலுசேர்க்கும் வகையில் தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ்ப் பண்பாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ள கருத்தை அவர் திரும்பப்பெற வேண்டும் என்று தமுஎகச வற்புறுத்துகிறது. திருவள்ளுவரைக் கைப்பற்றும் சங்பரிவாரத்தினரின் இழிமுயற்சிக்கு எதிராக எழும் கண்டனத்தை திசைதிருப்பும் விதமாகவே தஞ்சாவூர் அருகே பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டிருக்கிறதோ எனச் சந்தேகிக்க வேண்டியுள்ளது.

திருவள்ளுவர் படத்தை, அவரது கருத்துகளை, சிலையை அவமதித்தவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமுஎகச தமிழக அரசை வற்புறுத்துகிறது.’’ இவ்வாறு கண்டனம் தெரிவித்துள்ளது தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம்.

‘முரசொலி’ தலையங்கம்

கட்சியை வளர்க்க எந்த வகைதொகையும் தெரியாதவர்கள் திருவள்ளுவருக்கு காவிச் சாயம் பூசி மனப்பால் குடித்திருக்கிறார்கள்.

திருவள்ளுவருக்கு காவி உடை உடுத்துவதாலோ, நரேந்திர மோடி மாமல்லபுரத்தில் வேட்டி கட்டி நிற்பதாலோ, ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று பேசுவதாலோ, ஆறு மாதத்துக்கு ஒருமுறை, ‘தமிழ் பழமையான மொழி’ என்று சொல்லுவதாலோ, அய்ந்தாண்டுக்கு ஒருமுறை தேர்தல் பரப்புரை மேடைகளில், நன்றி வணக்கம்! சொல்லுவதாலோ தமிழகத்தில் பா.ஜ.க.வை வளர்க்க முடியாது.

திருவள்ளுவருக்கு காவி உடை உடுத்திவிட்டால், தமிழ்நாட்டு மக்கள் மனதில் வாழும் வள்ளுவன், தாமரைக்கு வோட்டுப் போடும் எண்ணத்தை உருவாக்கி விடும் என்று நினைக்கிறார்கள்.

குறள் நெறிமுறைகளைப் பின்பற்றுவதால் மக்கள் மனங்களை வெல்ல முடியுமே தவிர, வள்ளுவருக்கு வேட்டி மாற்றி விடுவதால் அல்ல!

‘நமது நெறி குறள் நெறி’ என்றார் தந்தை பெரியார். ‘திருக்குறள் முன்னேற்றக் கழகம்’ என்று பாடியவர்கள் என்.எஸ்.கிருஷ்ணனும், உடுமலை நாராயணகவியும். வள்ளுவருக்குத் தலைநகர் சென்னையில் கோட்டம் கட்டியவர் முதல்வர் கலைஞர். வள்ளுவருக்கு தென்முனையில் 133 அடியில் சிலை அமைத்தவர் முதல்வர் கலைஞர். குறளோவியமும் தீட்டினார். குறளுக்கு பொழிப்புரையும் தந்தார். குறளுக்கு மாநாடு நடத்திய இயக்கம் திராவிட இயக்கம்.

இந்த வள்ளுவரை கபளிகரம் செய்யப் பார்க்கிறார்கள். வள்ளுவர் எழுதியது மூல நூல் அல்ல. வேதத்தில் இருக்கிறது என்று நாகசாமிகள் விஷப் படமெடுத்து ஆடியபோது துடித்து எதிர்த்தவர் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின். எதிர்த்துக் கூட்டம் போட்டவர் தி.க. தலைவர் ஆசிரியர் கி.வீரமணி. நாகசாமிகளுக்கு எதிராக புத்தகம் போட்ட இயக்கம் திராவிட இயக்கம்.

இந்த நாகசாமிகள் விஷப் படமெடுத்து ஆடும்போது மகுடி ஊதிக் கொண்டிருந்த ஒரு கூட்டம், இன்றைக்கு வள்ளுவருக்கு காவி வேட்டி வாங்கி வருகிறது என்றால் இவர்களைச் சரியாக அடையாளம் காண வேண்டியது மக்கள்தான்.

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் இப்படி ஒரு கூட்டம் வரும் என்பது வள்ளுவருக்கும் தெரியும். அதனால்தான் 1071ஆவது குறளாக எழுதினார்.

“மக்களே போல்வர் கயவர்; அவரன்ன

ஒப்பார் யாம்கண்ட தில்’’ _ என்று!

கயவர்களும் மக்களைப் போலவே இருப்பார்கள். ஆனால், அவர்கள் மக்களல்ல; கயவர்கள்!’’ என்று ‘முரசொலி’ தமது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

பெரியார் மீது கைவைத்தபோது ஒட்டுமொத்தத் தமிழர்களும் கொதித்தெழுந்த போது, காவிக்கும்பல் அதிர்ந்து அடங்கியது. தற்போது வள்ளுவரை விழுங்க முயற்சித்துக் கொண்டே வள்ளுவர் சிலையை அவமதித்திருக்கிறது. நாத்திகர்களையும் இந்து மதத்திற்குள் அடக்கியவர்கள் அல்லவா? புத்தரையே அவதாரமாக்கியவர்கள் அல்லவா? இந்து மதத்தைக் கடுமையாகத் தாக்கி, இந்து மதத்தைவிட்டு வெளியேறிய அம்பேத்கரை இந்துத்துவா அம்பேத்கர் என்றவர்கள் அல்லவா? பெரியார் என்னும் பெருநெருப்பை நெருங்க முடியாத காவிக்கூட்டம்; வள்ளுவரை விழுங்கப் பார்க்கிறது. விளைவு, விழுங்க நினைப்பவர்கள் விரைவில் அழிவர் என்பதை எதிர்காலம் உணர்த்தும்!

தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் அ.தி.மு.க. அரசு தன் நிலைப்பாட்டை உடனேஅறிவிக்க வேண்டும். மாஃபா பாண்டியராஜனின் நிலைப்பாடுதான் அ.தி.மு.க. அரசின் நிலைப்பாடா என்பதை விளக்க வேண்டும். அவரது கருத்து தப்பு என்றால், அதை அறிவித்த அவர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தமிழுக்கும் தமிழர்களுக்கும் திருவள்ளுவருக்கும் துரோகம் செய்து பதவியைக் காப்பாற்றிக்கொள்ள முயன்றால், அதற்கான விலையை இந்த ஆட்சி கட்டாயம் கொடுக்க வேண்டி வரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *