பீமா கோரேகான் பேஷ்வாக்களை வீரவரலாறு

நவம்பர் 01-15 2019

மகாராஷ்டிர மண்ணின் பூர்வகுடிகளான ஒடுக்கப்பட்ட மகர்கள் மீது பார்ப்பன பேஷ்வா ஆட்சியாளர்கள் தொடுத்த தீண்டாமைக் கொடுமைகளையும், அதையடுத்து அவர்கள் ஆங்கிலேயர்களின் படையில் இணைந்து ஜாதிவெறிக்கு எதிராகப் போரிட்டு வெற்றி பெற்ற வரலாற்றையும் விளக்குகிறது இந்நூல்.

“மராட்டிய நாட்டில் பேஷ்வாக்களின் ஆட்சியில், இந்துக்களின் தெருவில் வரும்போது, தீண்டத்தகாதவர் அத்தெருக்களில் நடமாடக் கூட அனுமதிக்கப்பட்டதில்லை. ஏனென்றால், அவர்களது நிழல்பட்டால்கூட இந்துக்களுக்கு தீட்டாகிவிடுமாம். இந்து ஒருவர் தவறாகக் கூட தம்மைத் தொட்டு தீட்டு ஏற்படுத்திக் கொள்ளக் கூடாதென்பதற்காக தீண்டத்தகாத மக்கள் தமது மணிக்கட்டிலோ, கழுத்திலோ கருப்பு சரடு அணிந்து தம்மை அடையாளம் காட்டிக்கொள்ள வேண்டும். பேஷ்வா தலைநகரான பூனாவின் தெருக்களில் தீண்டப்படத்தகாதவர்கள் வரும்போது தங்கள் இடுப்பில் ஒரு துடைப்பத்தைக் கட்டிக்கொண்டு வரவேண்டும். தங்கள் காலடி பட்ட மண்ணைப் பெருக்கி அப்புறப்படுத்திக்கொண்டே செல்ல வேண்டும். ஏனெனில், அம்மண்ணின் மீது நடக்க நேரிட்டால் கூட இந்துக்களுக்குத் தீட்டு ஏற்பட்டு விடுமாம். மேலும் பூனாவில் எங்கு சென்றாலும் தனது கழுத்தில் ஒரு மண்பாண்டத்தைக் கட்டிக்கொண்டுதான் செல்ல வேண்டும். அதில்தான் துப்ப வேண்டும், தெருவில் துப்பினால் அதன் மீது கால்பட நேரும், இந்துக்கள் தீட்டுக்குள்ளாவராம்’’ என்பதை புரட்சியாளர் அம்பேத்கர் குறிப்பிட்டுள்ளார். (டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் பேச்சும், எழுத்தும், நூல் தொகுதி 37)

இப்படிப்பட்ட கொடுமைகளை எதிர்த்து, மகாராஷ்டிரா மாநில பூனா மாவட்டத்தின் பீமா ஆற்றின் ஓரத்தில் அமைந்துள்ள கோரேகான் என்னும் சிற்றூரில் நடைபெற்ற வீரமிக்க போரிலே தங்களை அடிமைப்படுத்திய பார்ப்பன பேஷ்வாக்களுக்கு பதிலடி தரும் விதமாக 500 வீரர்களை மட்டுமே கொண்ட சிறந்த படையணியின் முதன்மை வீரர்களான மகர் இன வீரர்களின் வீரஞ்செறிந்த போர் வெற்றியே இந்த வரலாற்று நூல்.

(ஆசிரியர்)

அணிந்துரை

“எங்கள் தந்தையார் கோரேகானிலிருந்து எங்களுக்கு கடிதங்கள் அனுப்புவார். எங்களை கோரேகானுக்கு வரும்படி ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். கோரேகானுக்கு தொடர்வண்டியில் போகப் போகிறோம் என்கிற நினைப்பே என்னை உற்சாகமடைய வைத்தது’’ என்று மகிழ்ச்சியுடன் தொடங்கும் டாக்டர் அம்பேத்கரின் நினைவலைகள் கடும் சோகத்துடன் முடிகின்றன: “எப்படியோ அந்த இரவை மலைப் பொந்துகளுக்கிடையே கழித்துவிட்டு, விடிந்த பிறகு மீண்டும் கோரேகானுக்கு பயணப்பட்டோம். ஒரு வழியாக அடுத்த நண்பகலில் அலுத்துக் களைத்து கோரேகான் போய் சேர்ந்தபோது, உடம்பில் பாதி உயிர்தான் இருந்தது.’’

பேஷ்வாக்களின் ஆட்சியின்போது சமூகம் எப்படி இருந்திருக்கும் என்பதை டாக்டர் அம்பேத்கரின் ஓரிரவுப் பயண அனுபவங்களே நமக்கு உணர்த்துகின்றன. ஒரு சிறுவனாக அவர் சந்தித்த தீண்டாமைக் கொடுமைகளையும் பாகுபாடுகளையும் அவமரியாதைகளையும் அறிந்து கொள்ளும் ஆவலுடையவர்கள் ‘விசாவுக்காகக் காத்திருத்தல்’ என்னும் அவருடைய கட்டுரையை தேடிப் படிக்க வேண்டும்.

தோழர் மு.இனியவன் எழுதும் முதல் நூலாக இது இருந்தாலும் பீமா கோரேகான் போரின் வெற்றியை ஆவணப்படுத்த வேண்டும் என்பதற்காக அவர் எடுத்துக்கொண்ட தீவிர முயற்சிகள் நம்மை வியப்படைய வைக்கின்றன. போர் நடைபெற்ற இடத்திற்கு நேரில் சென்று பார்த்த அந்த உணர்வு குன்றாமல் அது தொடர்புடைய பல்வேறு ஆதாரங்களையும் தரவுகளையும் கண்டெடுத்து, நீண்ட ஆய்வுகளை மேற்கொண்டு _ பதினொன்று தலைப்புகளில் _ ஓர் அரிய வரலாற்றை நம் கண்முன்னால் நிறுத்தி விடுகிறார். மகர்களின் வரலாறு, மராட்டிய மண்ணில் பேஷ்வாக்களின் கொடூர ஆட்சி முறை, சிவாஜி பார்ப்பனர்களால் பழி வாங்கப்பட்ட வரலாறு, ஆர்.எஸ்.எஸ். எவ்வாறு சித்பவன் பார்ப்பனர்களுக்காகவே உருவாக்கப்பட்டது என்கிற உண்மையையும்; தலித் மக்களுக்கு எதிரான மத்திய, மாநில அரசுகளின் வன்மம் என ஒரு நீண்ட சதி வரலாற்றை எளிமையான தன் எழுத்துகளால் சிறப்பாகப் பதிவு செய்துள்ளார்.

கோரேகான் போர் ஏற்படுவதற்கான சமூகக் காரணிகள் பற்றி நூலாசிரியர் விளக்கியிருப்பது இங்-கு குறிப்பிடத்தகுந்தது: “பேஷ்வா ஆட்சி என்பது முழுமையாக சித்பவன் என்னும் பார்ப்பன பட் குடும்பத்தின் ஆட்சியாக மட்டுமே இருந்தது. ஆட்சியின் அனைத்து நகர்வுகளிலும் பார்ப்பன சடங்குகள், பூஜைகள், யாகங்கள் மற்றும் பார்ப்பனர்களுக்கு தானங்கள் செய்வதும் முதன்மையான இடத்தைப் பிடித்தன. போருக்குச் செல்லும் முன்னர் அதில் வெற்றி பெறுவதற்காகவும் போரில் வெற்றி பெற்றால் வெற்றியைக் கொண்டாட; தோல்வி அடைந்தால் தோல்வியால் வந்த மனக் கவலையைத் தீர்க்கும் விதமாக; போரில் செய்த கொலைகளுக்குப் பாவம் தீர்க்க; போரில் இறந்த வீரர்களின் ஆன்மா சாந்தியடைய என எல்லா வகைகளிலும் சடங்குகளைக் கொண்டு வந்து முன்னிறுத்தி பார்ப்பனர்கள் பொருள் ஈட்டினர்.

“மக்கள் பாடுபட்டு உழைத்துச் சேர்த்த பொருள்களுக்கு வரி போட்டு அந்தப் பணத்தில் பெருமளவு பார்ப்பனச் சடங்குகளுக்காகவே செலவிடப்பட்டது. பிறப்பு முதல் இறப்பு வரை, இறந்த பின்பும் நீத்தார் காரியம், எட்டாம் நாள் சடங்கு, அதனைத் தொடர்ந்து வரும் ஆண்டுகளில் நீத்தார் திதி, பரிகாரங்களின் பெயரில் உழைக்கும் மக்களின் பொருளாதாரத்தை _ உடல் உழைப்பு இல்லாமல் _ பார்ப்பனியம் சுரண்டிக் கொழுக்கிறது. சமூகவியல் நோக்கில் உற்பத்தி உறவுகளில் எந்தவிதப் பங்களிப்பையும் செலுத்தாமல் மக்களிடையே கருத்தியல் ரீதியில் பிரிவினையை ஏற்படுத்தி, மக்களின் உழைப்பைச் சுரண்டி பொருள் ஈட்டும் பார்ப்பனியம் என்பது, சுரண்டல்வாத தத்துவத்தின் இந்தியப் பதிப்பு.’’

அரசதிகாரத்திற்கு எதிரான போராட்டங்களைக் காட்டிலும் சமூகத் தளங்களில் திட்டமிட்டு உருவாக்கப் பட்டிருக்கும் ஜாதிய ஏற்றத் தாழ்வுகளை அழித்தொழிப்பதற்கு முன்னுரிமை கொடுத்துப் போராட வேண்டும் என்பதை மேற்கூறிய வரிகள் மெய்ப்பிக்கின்றன. மகாத்மா புலே, டாக்டர் அம்பேத்கர் மற்றும் பெரியார் வரை சமூக முரண்களை வேரறுப்பதற்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்ததன் நோக்கத்தை இந்தக்  கோணத்திலிருந்து புரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில் இந்துத்துவம் இன்று அரசியலில் தொடர்ச்சியான வெற்றிகளை ஈட்டுவதற்கு அடித்தளமாக இருப்பது பேஷ்வா காலத்திற்கு முன்பிருந்தே கட்டியமைக்கப்பட்ட பார்ப்பனர்களின் சமூக, மத, பண்பாட்டுச் சுரண்டல்கள்தான். இந்து மதத்தின் மீதான ஒவ்வொரு விமர்சனத்திற்கும் அவர்கள் பதற்றப்படுவதற்குக் காரணம், தங்கள் ஆதிக்கம் தகர்ந்துவிடுமோ என்கிற அச்சம்தான். படிநிலைப் படுத்தப்பட்ட ஏற்றத்தாழ்வுகள்தான் பார்ப்பனர்களின் கருத்தியல் முதலீடு. அதன் மீதுதான் அவர்களுக்கான அரசியல் தளம் கட்டியெழுப்பப்பட்டுள்ளது.

உண்மை நிலை இவ்வாறிருக்க, இங்கிருக்கும் அரசியல் இயக்கங்களும், கட்சிகளும் இந்துத்துவத்தை அரசியல் தளத்தில் மட்டுமே எதிர்ப்பதை தங்கள் நோக்கமாகக் கொண்டிருக்கின்றன. சமூக, மத, பண்பாட்டுத் தளத்தில் பார்ப்பனர்களின் அடிமைகளாக இருந்து கொண்டு, அவர்களின் ஆதிக்கத்திற்கு எதிராகக் குரல் கொடுக்காமல், அவர்கள் உருவாக்கியிருக்கிற இந்து நம்பிக்கைகளையும் கடவுளர்களையும் பண்டிகைகளையும் இன்னபிற குறியீடுகளையும் எவ்வித விமர்சனமும் இன்றி ஏற்றுக் கொண்டு, அதன் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு எதிராகவும் செயல்பட்டுக் கொண்டு _ அரசியல் தளத்தில் மட்டும் _ அவர்களை வீழ்த்த நினைப்பது தோல்வியில்தான் முடியும்.

‘பார்ப்பனர்கள் நம்முடைய எதிரிகள் அல்லர்; அவர்கள் நம்மீது நேரடியான தாக்குதல்களை நிகழ்த்துவதில்லை’ என்றொரு கருத்து குறிப்பாக தலித் மக்கள் மத்தியில் ஆழமாக வேரூன்றப்பட்டுள்ளது. ஆனால், ஒடுக்கப்பட்ட மக்களை கீழ் ஜாதிகளாக்கி, அம்மக்களின் உழைப்பைச் சுரண்ட மதம் என்னும் பெயரில் ஒரு சுரண்டல் தத்துவத்தை பார்ப்பனர்கள் உருவாக்கி வைத்திருக்கிறார்கள். இச்சுரண்டல் தத்துவம் உருவாக்கப்பட்டு ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகிறது. இந்த வர்ணாசிரம பாகுபாட்டைப் புரிந்து கொள்ளாததால்தான் நம்மீது இன்றளவும் தொடர்ச்சியாக தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. ஜாதிப் படிநிலையில் எந்த இரு ஜாதிகளும் இணையானவை அல்ல என்று நுட்பமாக வடிவமைக்கப்பட்டிருப்பதால் ஒவ்வொரு ஜாதியும் _ தங்களுக்கு மேல் நிலையில் இருப்பவர்களை மட்டுமே _ எதிர்க்கின்றனர். இதற்கு மூலகாரண மானவர்களுக்கு எந்த சேதாரமுமின்றி அவர்களின் ஆதிக்கம் நிரந்தரமாக்கப் பட்டுள்ளது.

இந்த ஆபத்தை மிகச் சரியாக கண்டறிந்ததால்தான் ஆங்கிலேயர்கள் நடத்திய பார்ப்பன பேஷ்வாக்களுக்கு எதிரான போரில் _ தலித் மக்கள் தங்களை இணைத்துக் கொண்டு _ திறமையாக சண்டையிட்டு வெற்றியைப் பெற்றுத் தந்தனர் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்தியாவின் சமூகத் தளம் சமமற்று இருந்ததால்தான் அந்நியர்களின் படையெடுப்பும் இங்கு அடிக்கடி நிகழ்ந்தது. டாக்டர் அம்பேத்கர் அரசமைப்புச் சட்டத்தை அறிமுகப்படுத்தி நாடாளுமன்றத்தில் 25.11.1949 அன்று ஆற்றிய முக்கிய உரையில் இதுகுறித்துதான் பெரிதும் கவலைப்பட்டார்: “என்னைப் பெரிதும் கலக்கமுறச் செய்வது என்னவென்றால் ஒரு காலகட்டத்தில் இந்தியா தன் சுதந்திரத்தைப் பறிகொடுத்துவிட்டது என்பது மட்டுமல்ல; அப்படி பறிகொடுத்ததற்குக் காரணமே அதன் சொந்த மக்களுடைய நாணயமற்ற தன்மையும் நம்பிக்கைத் துரோகமும்தான். முகம்மது பின் காசிம் சிந்து பகுதியின் மீது படையெடுத்து வந்தபோது, காசிம்மின் முகவர்களிடமிருந்து கையூட்டுப் பெற்றுக் கொண்டு அரசன் தாகருக்கு எதிராகப் போரிட மறுத்துவிட்டார்கள் அவனது படைத் தளபதிகள்.

“முகம்மது கோரியை இந்தியாவின் மீது படையெடுக்குமாறு தூண்டியதோடு பிருதிவிராஜனோடு மோதுவதற்கு தானும் சோலங்கி அரசர்களும் உதவியாக இருப்பதாகவும் சொன்னவன் ஜெயச்சந்திரன். இந்துக்களின் விடுதலைக்காக சிவாஜி போராடிக் கொண்டிருந்த வேளையில், முகலாயர்களுக்கு ஆதரவாகப் போர்க்களத்தில் நின்றார்கள் ஏனைய மராட்டிய உயர்குடியினரும் ராஜபுத்திர அரசர்களும்.

“சீக்கிய அரசர்களை பிரித்தானியர்கள் அழிக்க முயன்றபோது, அவர்களைக் காப்பாற்ற எந்தவொரு முயற்சியும் எடுக்காமல் அமைதியாக இருந்தார் சீக்கியர்களுடைய முதன்மைத் தளபதியான குலாப் சிங். 1857இல் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் இருந்து சுதந்திரப் போர்க்குரல் எழுந்தபோதும் எந்தச் சலனமுமின்றி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர் சீக்கியர்கள்.

“இந்த வரலாறு மீண்டும் திரும்பி விடுமா? இந்த ஒரு சிந்தனைதான் எனக்குள் பதற்றத்தை ஏற்படுத்துகிறது. ஜாதி, பழைய நம்பிக்கை என்னும் பெயர்களில் ஏற்கெனவே இங்கே நிலவிக் கொண்டிருக்கும் நம்முடைய பழைய பகைவர்களோடு சேர்த்து, பல்வேறுபட்ட நலன்களை இலக்காகக் கொண்டு நாளை இங்கே அமையப் போகிற அரசியல் கட்சிகளையும் நினைத்தால் எனக்கு பதற்றம் இன்னும் அதிகமாகிறது. இந்தியர்கள், தன்னலத்தை விட நாடே உயர்ந்தது என்று எண்ணப் போகிறார்களா? அல்லது நாட்டைவிட தன்னலமே உயர்ந்தது என்று எண்ணப் போகிறார்களா? எனக்குத் தெரியாது. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், அரசியல் கட்சிகள் நாட்டின் நலனைவிட தங்களுடைய தனிப்பட்ட நலனே உயர்ந்தது என்று கருதுவார்களே யானால், நம்முடைய சுதந்திரம் இன்னொரு முறை கைவிட்டுப் போகலாம் அல்லது இனி எப்போதும் கிட்டாத வகையில் தொலைந்து போகலாம். அப்படி ஏதும் நடந்து விடாமல் பாதுகாப்பது நம்முடைய கடமை. கடைசித் துளி ரத்தம் இருக்கும்வரை சுதந்திரத்தைப் பாதுகாப்போம் என்று நாம் உறுதியெடுத்துக் கொள்ள வேண்டும்.’’

கோரேகான் வெற்றியைக் கொண்டாடும் இத்தருணத்தில் நாம் முக்கியமானதொரு கேள்விக்கு பதில் சொல்ல கடமைப் பட்டிருக்கிறோம். பேஷ்வாக்களுடைய ஆட்சி முற்றாக முடிவுக்கு வந்துவிட்டதா என்பதே அது. இன்றைக்கு நடப்பது யாருடைய ஆட்சி?

மகர் வீரர்களை உள்ளடக்கிய ஆங்கிலேயப் படையினரின் போரில் (1818_19ஆம் நூற்றாண்டு) அன்றைய பேஷ்வாக்களின் அரசு மட்டுமே வீழ்த்தப்பட்டிருக்கிறது. அந்த இடத்தில் அதற்குப் பிறகு ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக (1818_1947 _ 20ஆம் நூற்றாண்டு) ஆங்கிலேயர்கள்தான் அரசதிகாரத்தில் இருந்தனர். அந்த காலகட்டத்தில்தான் புலே, அம்பேத்கர் கால தீண்டாமைக் கொடுமைகள் நடந்தேறியிருக்கின்றன. இன்று இந்தியா சுதந்திரம் பெற்று எழுபது ஆண்டுகள் கடந்த நிலையிலும் கோரேகான் வெற்றியை நினைவு கூரும் தருணத்திலும் (2018_21ஆம் நூற்றாண்டு) தலித் மக்கள் துப்பாக்கிச் சூட்டுக்கு இரையாகிறார்கள். அரசு அடக்குமுறை மட்டுமல்ல, சமூக பண்பாட்டுத் தளங்களில் கயர்லாஞ்சி போன்ற எண்ணற்ற உயிரை உலுக்கும் படுகொலைகளும்; தலித் மக்களின் உணவுக்கான அடிப்படை உரிமையும் கூட (மாட்டிறைச்சிக்கான தடை) பறிக்கப்படுகின்றன.

ஆக, பார்ப்பன பேஷ்வாக்களின் அரசு மட்டுமே தோற்கடிக்கப்பட்டது. அவர்கள் சமூக, பண்பாட்டுத் தளங்களில் கட்டிக் காப்பாற்றி வந்த ஜாதிய, சமூக அமைப்பு உயிர்ப்புடனேயே இருக்கிறது. அதனால்தான் நூற்றாண்டுகள் கடந்தும் பேஷ்வாக்களின் ஆட்சி பற்றிய பதற்றம் அதிகரிக்கிறது.

இது எதை உணர்த்துகிறது? ஆட்சி மாற்றங்களால் ஜாதி _ தீண்டாமைக் கொடுமைகள் மறைந்துவிடாது. இத்தகு பாகுபாடுகள் ஆழமாக நீடித்திருப்பதால்தான் மீண்டும் பேஷ்வாக்களால் ஆட்சிக்கு வரமுடிகிறது. அவர்களின் ஆட்சிக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டுமெனில், ஜாதி அமைப்பு வேரோடு தகர்க்கப்பட வேண்டும். இந்துக்களாக இருந்துகொண்டு ஜாதி அமைப்பை வீழ்த்திவிட முடியாது என்கிற பேருண்மையையும் உணர வேண்டிய தருணமிது.

பீமா கோரேகான் தீ திக்கெட்டும் பரவ, நூலாசிரியர் முன்வைக்கும் முக்கியத் தீர்வு இன்றைய செயல்பாட்டுக்கான பாதையைச் செம்மைப்படுத்துவதாக இருக்கிறது: “ஜாதி என்பது உளவியல் ரீதியில் இந்திய சமூகத்தின் இயங்கு நிலையாக அனைத்து காலங்களிலும் நீடித்து வருவதை யாராலும் மறுக்கவியலாது. பார்ப்பனிய ஜாதிய கருத்தாக்கம்தான் இந்திய ஓர்மையின் முதன்மைக் கருப்பொருளாக இயங்கி வருகிறது. இதனால்தான் ஜாதிக்கு எதிரான எந்த ஒரு செயல்பாட்டையும் இந்துத்துவ தேசியம் அனுமதிப்பதில்லை.

“இந்தியாவின் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் சமூகநீதிக்கான குரல் தமிழ்நாட்டிலிருந்து ஓங்கி ஒலிப்பதற்கான உந்துசக்தியாக இருப்பது தந்தை பெரியார் உருவாக்கிய பார்ப்பனியத்திற்கு எதிரான கருத்தியலே என்பது வரலாற்று உண்மை. இந்திய அரசியலை இந்துத்துவ அரசியலாக மாற்ற முயலும் வலதுசாரிகளின் தாக்கத்தால் தமிழகத்தில் சற்றே தணிந்திருந்த ஜாதிய பூதம் சோம்பல் முறித்து மீண்டும் எழுந்துள்ளது. இதன் வெளிப்பாடாகவே ஜாதியப் படுகொலைகளும் ஜாதிய அடிப்படையிலான அரசியல் ஆதிக்கமும் வெகுவாகப் பரவி வருகிறது. இந்தப் போக்கை வீழ்த்திட முன்னைக் காட்டிலும் வீரியமான கருத்தியல் போரை நடத்துவதுடன், ஜாதி ஒழிப்புப் போராட்டத்தைப் பெருந்திரளாக நடத்த வேண்டியதும் அவசியமாகிறது.’’

அண்மைக்காலமாக ஒடுக்கப்பட்ட மக்களிடையே தங்களுடைய தொன்மைக்காலப் பெருமிதங்களை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும் என்கிற சிந்தனை மேலோங்கியிருக்கிறது. அக்காலத்தில் கடவுளர்களாக, அரசர்களாக, போர்ப் படைத் தளபதிகளாக, அதிகாரமிக்க ஆட்சியாளர்களாக இருந்த வரலாறுகளை நினைவு கூர்வதன் மூலம் மக்களை கிளர்ந்தெழச் செய்துவிட முடியும் என்று கருதுகிறார்கள். இந்நூல் எழுதப்படுவதற்கும் அது ஒரு காரணமாக இருக்கக்கூடும். நமக்கு என்னென்ன வரலாற்றுப் பெருமிதங்கள் இருந்தனவோ அவை எல்லாம் எதனால் கைநழுவிப்போயின? வெறும் அரசு/அதிகாரத்துடன் இணைந்த பெருமிதங்களைத்தான் நாம் கொண்டாட  எத்தனிக்கிறோம். ஒரு சமூகத்தின் அல்லது ஜாதியின் அரசனாக/தலைவனாக ஒருவர்தான் இருக்க முடியும்; அதன்பலனை ஒட்டுமொத்த சமூகமும் அனுபவிக்க இயலாது.

கொண்டாடப்பட வேண்டிய பெருமிதங்கள் எவை? ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களிடையே இருந்த _ இருக்கும் சமத்துவமிக்க பண்பாடே நாம் போற்றத்தக்கவையாக இருக்க முடியும்; ஆட்சிகளும் அதிகாரங்களும் அல்ல. இந்த மண் சமத்துவ மண்ணாகப் பரிணமித்ததற்கு _ பவுத்தம் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் செழித்தோங்கியதற்கு (ஆட்சி அதிகாரத்தில் அல்ல) பவுத்தர்களாகிய நாம்தான் காரணமாக இருந்தோம். வர்ணதர்மம் தொல்குடி மக்களை பிளவுபடுத்தி பல்வேறு பாகுபாடுகளை ஏற்படுத்தியது. அதற்கு எதிராக புத்தரின் வழியில் இச்சமூகத்தை பகுத்தறிவு மிக்க, சமத்துவ விழுமியங்களைக் கொண்ட, அறநெறி சமூகமாக மாற்ற, ஊருக்கு வெளியே தள்ளப்பட்டும் _ வர்ணத்திற்கு எதிராகப் போராடி _ சமத்துவத்தை மீட்டெடுத்த அந்தப் பெருமிதங்களே கொண்டாடப்பட வேண்டியவை; மீட்டுருவாக்கம் செய்யப்பட வேண்டியவை. அதுதான் இன்றைய இன்றியமையாத தேவையாக இருக்கிறது; ஆண்ட பரம்பரை பெருமிதங்கள் அல்ல!

 – புனித பாண்டியன், ‘தலித் முரசு’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *