நூல்: ‘இந்து மதம் எங்கே போகிறது?’
ஆசிரியர்: அக்னிஹோத்ரம்
ராமானுஜ தாத்தாச்சாரியார்
வெளியீடு: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்,
சென்னை- 600014.
தொலைபேசி: 28482424
பக்கங்கள்: 352 விலை: ரூ.175/-
காஞ்சிப் பெரியவாள் கண்ணீர் விட்டு கதறினார்! ஏன் தெரியுமா?
“பல ஆச்சார அனுஷ்டானங்களின் அடிப்படையில் பகவானை விக்ரகங்களில் இருத்தி வைத்திருக்கிறோம். இந்தப் புனிதமான கோயில்களுக்குள் சூத்ரனோ, பஞ்சமனோ ஒரு அடியெடுத்து வைத்தால்கூட அனுஷ்டானங்கள் கறைபட்டு விடும். அதனால்… அந்த விக்ரகங்களில் இருந்து பகவான் ‘பட்’டென ஓடிப் போய்விடுவார்.
அதனால்… சூத்ரனோ, பஞ்சமனோ கோயிலுக்குள் பாதம் எடுத்து வைத்தால்… விக்ரகம் வெறுங் கல்லாகி விடும். பகவான் அதில் க்ஷணம்கூட தங்கமாட்டார். எனவே, அவர்களை கோயிலுக்குள் விடாதே… என்கிறது ஆகமம்.
ஒருவேளை அப்படி நுழைந்து விட்டால்…?அதற்குப் பரிகாரம் தான் சம்ப்ரோக்ஷணம். அதாவது கும்பாபிஷேகம். அதாவது குடமுழுக்கு… என பரிகாரமும் பண்ணி வைத்திருக்கிறது ஆகமம்.
ஆகம உத்தரவு இருந்தாலும் ஆலய நுழைவு போராட்டங்கள் சூடுபிடித்துக்கொண்டிருந்தன.
அந்த நேரத்தில் ஒரு தடவை மகாபெரியவர் என்னை அழைத்தார். சில நிமிடங்களில் அழுதே விட்டார்… துறவி அழலாமா?…
* * *
துறவி அழலாமா? அனைத்தையும் துறந்த சங்கராச்சாரியாரின் கண்களில் வழிந்த கண்ணீர், என் கண்களையும் உறுத்தியது.. என்ன செய்வதென்று தெரியாமல் பார்த்துக் கொண்டிருந்தேன்.
ஆறுதலும், ஆசியும் சொல்ல வேண்டியவரின் கண்களே கலங்கி நிற்கும்போது நாம் என்ன செய்ய முடியும்? சில நிமிடங்கள் அந்த ஞானக்கண்கள் உப்புநீரை உற்பத்தி செய்தபடியே இருந்தன.
பின்… அவரது காவி வஸ்திரத்தை எடுத்து துடைத்துக் கொண்டார். ‘கஷ்டமாயிருக்கு’ என்றபடியே மவுனமானார். அவர் அழுவதற்குக் காரணமான அந்த சம்பவத்தை அவரிடம் சொன்னதை நினைத்து எனக்கும் கஷ்டமாக இருந்தது.
அது ஸ்ரீரங்கத்து சம்பவம். ஆலய நுழைவுப் போராட்டங்கள் ஆங்காங்கே அதிர்வேட்டுகள் போல நடந்து கொண்டிருந்தன. கூட்டம் கூட்டமாய் ஆலயவாசல் முன் நின்று தெய்வத்தைத் தரிசிக்க தங்களுக்கும் உரிமை வேண்டும் என போராடிக் கொண்டிருந்தனர் _ அனுமதி மறுக்கப்பட்டவர்கள்.
அப்படித்தான், -ஸ்ரீரங்கத்திலும் ஸ்ரீரங்கநாதர் கோயிலில் சஞ்சரிக்க அனுமதி வேண்டும் என்றும், ரங்கநாதரைத் தரிசிக்க அனைவருக்கும் உரிமை உண்டு என்றும் கோஷங்கள் காற்றை பயமுறுத்திக் கொண்டிருந்தன.
காந்திஜியால் ஹரிஜன்கள் என அன்போடு அழைக்கப்பட்ட ஜனங்கள் தங்கள் குடும்பங்களோடு அங்கே குழுமியிருந்தனர்.
அவர்கள் ஸ்ரீரங்கம் கோயில் அருகே கூடிக் கொண்டிருக்கும்போதே.. இந்த ஆலய நுழைவுப் போராட்டத்தைத் தடுத்து நிறுத்த வேண்டுமே எப்படி என அக்ரஹாரத்தில் கூடி பிராமணர்கள் ஆலோசித்தனர். ஆளாளுக்கு ஒரு யோசனையை அள்ளித் தெளித்தனர்.
நாமெல்லாம் போகலாம், கோவில் வாசல்ல நின்னுப்போம். அவா வந்தா அடிச்சு வெரட்டிடலாம்- என இளம் பிராயத்து பிராமணர்கள் குதித்தனர்.
ஓர் நடுத்தர வயதுக்காரர் எழுந்து… ‘அபிஷ்டூ… அவாமேல நம் கைபடாம வெரட்டணும்டா…’ என ஆச்சாரமான யோசனையை ஆவேசமாக எடுத்துரைத்தார்.
கடைசியில் அக்கூட்டத்தில் வித்தியாசமான ஒரு முடிவெடுக்கப்பட்டது.
“இப்ப ஆம்பளைகள் நாம ரொம்பபேர் போக வேண்டாம். நம்மாத்து பொம்மனாட்டிகளை அனுப்புவோம். கோயிலுக்குப் போறாமாதிரி இவா போகட்டும். அங்க கோயிலுக்குள்ள போறதுக்காகப் போராடிண்டிருக்காளே… அவா பக்கத்துல போயி… அர்ச்சனைத் தட்டுல மறைச்சி எடுத்துண்டு போன மிளகாய்ப் பொடியை தூவிட்டு கூட்டத்தைக் கலைச்சிடணும்…’’
“இதுதான் முடிவு. இம்முடிவு ஒவ்வொரு ‘ஆத்து’க்கும் சென்று சொல்லப்பட்டது. அதேபோல் மடிசார் கட்டிக்கொண்டு முப்பதுக்கும் மேற்பட்ட அக்ரஹார மாமிகள் கோயிலுக்கு அர்ச்சனைத் தட்டுகளோடு கிளம்பினார்கள். அவர்கள் தட்டில் இருந்தது சுத்தமான மிளகாய்ப் பொடி.
ரங்கநாதன் சந்நிதியை நோக்கி கூட்டமாகப் போய்க்கொண்டே இருந்தவர்கள்… திடீரென்று ‘ஹரிஜன்கள்’ பக்கம் சட்டெனத் திரும்பி தாங்கள் கொண்டு வந்த மிளகாய்ப் பொடியை எல்லாம் விசிறி அடிக்க… ஒரே தும்மல் சத்தம், இருமல் சத்தம். பல ஹரிஜன்கள் அவசர அவசரமாய் பதறியபடி ஓடினார்கள். அவர்களின் கண்களில் மிளகாய்ப் பொடி விழுந்து கதறி அழுதபடி கலையப் பார்த்தார்கள்.
“கோயிலுக்குள் போய் சாமியை பாக்கணும்னு நெனச்சேன். இனி கண்ணே தெரியாது போலிருக்கே…’’ என அந்த நொடியிலும் சிலர் சொல்லியபடி ஓடினார்கள்.
இப்போராட்டத்தை அறிந்து அங்கு வந்திருந்த போலீஸ்காரர்கள் இதைப் பார்த்துவிட்டு ‘அந்த பொம்மனாட்டிகளை அப்புறப்படுத்தணும்ப்பா…’ என சொல்லிக் கொண்டே லத்திகளை ஓங்கிக் கொண்டுவர… சில ‘மிளகாய்ப்பொடி’ மாமிகளுக்கு போலீஸ் அடி விழுந்துவிட்டது. இதுதான் சிறீரங்கத்து சம்பவம்.
இதனை நான் சங்கராச்சாரியாரிடம் சொன்னபோதுதான்… “அய்யய்யோ, அபச்சாரம், பொம்மனாட்டிகளை போலீஸ்காரா அடிச்சுட்டாளா… கஷ்டகாலமே’’ சட்டென அழுதுவிட்டார். அவர் அழுது, நான் அதுவரை பார்த்ததில்லை.
இந்த சம்பவத்தை அவரிடத்திலே தெரியப்படுத்தியிருக்க வேண்டாமோ… என்கிற கேள்வியும் எனக்குள் எழுந்து அடங்கியது.
ஆனாலும்… இது போன்ற ஆலய நுழைவுப் போராட்டங்கள் மற்றும் சமய சம்பந்தம் உடைய காரியங்களைப் பற்றி தெரிந்துகொள்வதில் மகாபெரியவருக்கு ஓர் இஷ்டம். ஏனென்றால், சிருங்கேரி மடத்துக்காரர்கள் பல விஷயங்களில் சமய சம்ப்ரதாய விஷயங்களோடு சமுதாய விஷயங்களிலும் தலையிடுவார்கள்.
அவர்களுக்கு அவ்வப்போது பதில் தர மகாபெரியவரும் இதுபோன்ற சமுதாய விஷயங்களில் தலையிடுவது அவசியமாய் இருந்தது. இது ஒரு சிறிய காரணம் என்றாலும்… அனைத்து வர்க்க மக்களிடத்திலும் அவர் வைத்திருந்த அக்கறைதான் பெரிய காரணம்.
இந்த நிலைமையில்தான்… பண்டித ஜவஹர்லால் நேருஜியின் மந்திரி சபையில் ‘ஹிந்து கோடு பில்’ கொண்டு வருவதுபற்றிய ஆலோசனையில் இறங்கினார்கள்.
ஸ்மிருதியில் பெண்களுக்கு சொத்து பாத்யம் கிடையாது என கண்டிப்பாய் கூறப்பட்டிருக்கிறது.
பாரத தேசத்துக்குள் பிராமணர்கள் வரும்போது அவர்களுடன் வந்த ஸ்திரீகள் மிகக் குறைவானவர்கள் என்பதை இக்கட்டுரைத் தொடரின் தொடக்க அத்யாயத்தில் நான் குறிப்பிட்டிருந்ததை இங்கு ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்.
இங்கு வந்த பிராமணர்கள் இங்குள்ள பெண்களோடு கூடி வாழ ஆரம்பித்தாலும்… பெண்களை சூத்ரர்களுக்கு சமமாகவே வைத்தனர். அதனால்தான் பெண்களுக்கு எவ்வித சமய சமஸ்காரங்களும், சடங்குகளும் கிடையாது. இதோடு கூட பெண்களுக்கு வித்யா அதாவது கல்வி தேவையில்லை என்றும் ஸ்மிருதியில் விதித்தனர்.
இதன் ஒரு பகுதியாகத்தான் பெண்களுக்கு சொத்தில் பங்கு கிடையாது என்றும்… அவள் எப்போதும் ஆணுக்கு அடங்கியிருக்க வேண்டுமென்றும் ஸ்திரீகளுக்கு ஸ்மிருதி பயங்கர கட்டுப்பாடுகள் வைத்திருந்தது.
இந்த ஸ்மிருதியின் பிடியிலே பெண்கள் இருந்த சமயத்திலேதான்… நேருஜி அறிவித்தார். எல்லார்க்கும் சொத்துரிமை உண்டு. அதாவது பெண்களுக்கும்.
இவ்விஷயம் சங்கராச்சாரியார் சுவாமிகளுக்கும் எட்டியது. பெண்களை போலீசார் தாக்கியதற்காகக் கண்ணீர் விட்ட சங்கராச்சாரியார், பெண்களுக்குச் சொத்து பாத்யம் உண்டு என கேட்டதும்…
ஆலயப்பிரவேச போராட்டத்தைத் தடுத்த பெண்கள் தாக்கப்பட்டதற்காக அழுத சங்கராச்சாரியார்… பெண்களுக்கு சொத்துரிமை கொடுக்கப்பட்டதற்கு சந்தோஷப்பட்டிருக்க வேண்டும். ஆனால்?…
டில்லியில் நேரு ‘ஹிந்து கோடு பில்’லில் பெண்களுக்கும் சொத்தில் பங்கு கொடுக்க வேண்டும் என கொண்டுவந்த செய்தி பேப்பர்களில் வந்தது.
அப்போது மடம் காஞ்சிக்கு வந்துவிட்டது. கும்பகோணத்தில் இருந்த எனக்கு ஒரு தந்தி பறந்து வந்தது. ‘உடனே காஞ்சிபுரத்துக்கு புறப்பட்டு வரவும்’ -_ இதுதான் தந்தி வாசகம் கொடுத்திருந்தவர் சங்கராச்சாரியார்.
நான் புறப்பட்டு காஞ்சி போன சமயம்… காஞ்சிபுரத்துக்கு அருகே உள்ள எசையனூர் என்னும் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண் தனது குடும்பச் சொத்துகளை எல்லாம் மடத்துக்குக் கொடுப்பதாகச் சொல்லியிருந்தார். அவற்றைப் பார்வையிட எசையனூருக்குச் சென்றிருந்தார் மகாபெரியவர்.
என்ன ஸ்வாமி? என்றேன் நான். அன்றைய பேப்பரை எடுத்து என்னிடத்தில் காட்டிய மகா பெரியவர், ‘லோகமே அழியப்போறது ஓய்… அழியப் போறது…’ என படபடப்பாகப் பேசினார்.
“இதப்பார்த்தீரா… ஸ்திரீகளுக்கு சொத்துல பாத்யம் கொடுக்கப் போறாளாம். அவாளுக்கு சொத்துல பங்கு கொடுத்தா என்ன ஆகும் தெரியுமா? இஷ்டப்பட்டவா கூட ஸ்த்ரீகள் ஓடிப்போயீடுவா… அபாண்டமா அபச்சாரமா போயிடும்’’ _ என அந்த பேப்பரை தட்டியபடி வியாக்யானம் தந்து கொண்டிருந்தார் மகா பெரியவர்.
நான் சிரித்தபடியே பதில் சொன்னேன். ‘எனக்கு நல்லதுதான் ஸ்வாமி… என் மாமனாருக்கு நிறைய சொத்துகள் இருக்கு. ஒருவேளை என் ஆத்துக்காரிக்கு பங்கு வந்தால் எனக்கும் நல்லதுதான்.
இந்தப் பதிலைக் கேட்டதும்… “அசட்டுத்தனமாகப் பேசாதீர். இந்த சட்டம் வந்தா ஸ்திரீ தர்மமே பாழாயிடும். ஸ்தீரிகளுக்கு பாத்யமோ, சம்பாத்யமோ இருக்கக்கூடாதுன்னு மநு ஸ்மிருதி சொல்லியிருக்கு. ஆம்படையானுக்கு அடிமையாக இருக்கறதுதான் ஸ்த்ரீக்கு அழகு.
இப்படிப்பட்ட ஸ்த்ரீ தர்மத்தை நேரு நொறுக்கிட்டார். நாம இதை எதிர்த்து போராட்டம் நடத்தணும். ஸ்த்ரீ தர்மத்தை பாதுகாக்கறதுக்காக அந்த ‘பில்’லை எதிர்த்து ஊரெல்லாம் கூட்டம் போடணும். அதுக்கு ஸ்த்ரீகளை நிறைய திரட்டணும்…’’ என்றெல்லாம் அவசர ஆணைகளைப் பிறப்பித்தார் மகாபெரியவர்.
வேத தர்ம சாஸ்திர பரிபாலனசபை கூட்டங்களின்போதே ஸ்த்ரீ தர்மத்தைப் பற்றியும் நான் நிறைய பேசியிருப்பதால் இந்தக் கூட்டம் நடத்துவது எனக்கும் எங்கள் சகாக்களுக்கும் கஷ்டமாகத் தெரியவில்லை.
மகா பெரியவர் சொன்னதன்படி திருநெல்வேலி ஜில்லாவில் உள்ள கல்லிடைக்குறிச்சிக்குப் போனோம். அங்கே தேவி உபாசனை செய்யும் ஓர் அம்மா இருந்தார். அவரிடம் போய், ‘இதுபோல சர்க்கார் ஒரு சட்டம் கொண்டு வந்திருக்கு. பெண்களுக்கும் சொத்து பாத்யம் உண்டுனு சர்க்கார் கொண்டு வந்திருக்கிற சட்டத்தை பெண்கள் மூலமாகவே எதிர்க்கணும்னு மகாபெரியவர் சங்கராச்சாரியார் சொல்லியிருக்கார். அதனால இங்க ஸ்த்ரீகள் கூட்டம்போட வந்திருக்கோம். கூட்டத்துக்கு நீங்களும், ஸ்த்ரீகளைக் கூட்டி வரணும்’ என்றேன்.
அந்த தேவி உபாசகரோ மறுத்துவிட்டார். பிறகு ஒவ்வொரு வீடாய் போய் பெண்களை பெரிய முயற்சிக்குப் பிறகு கூட்டத்துக்கு அழைத்து வந்து… ‘எங்களுக்கு சொத்துரிமை வேண்டாம். மனு ஸ்மிருதியில் உள்ளபடி ஸ்த்ரீ தர்மம் பாதுகாக்கப்படணும். சர்க்கார் இந்த பில்லை வாபஸ் வாங்கணும்’ என பெண்களை வைத்தே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தத் தீர்மானத்தை நகல் எடுத்து டில்லி சர்க்காருக்கு அனுப்பி வைத்தோம். இது மட்டுமா?
திருநெல்வேலி ஜில்லாவிலிருந்து தமிழ்நாட்டின் பல ஊர்களில் இப்படி ஸ்த்ரீகள் கூட்டம் சங்கராச்சாரியாரின் உத்தரவுப்படி நடந்தது. என்ன ஏதென்றும் தெரியாமலேயே பல பெண்கள் இதில் கலந்து கொண்டு எங்களுக்கு சொத்து பாத்யம் வேண்டாம் என சொன்னார்கள்.
கும்பகோணத்தில் நடந்த ஸ்த்ரீகள் கூட்டத்துக்கு ஹைகோர்ட் ஜட்ஜ் திருவேங்கடாச்சாரியாரின் தங்கை செண்பகத்தம்மாளை அழைத்து வந்தோம். அவரோடு இன்னும் பல ஸ்த்ரீகளும் வந்து எங்களுக்கு சொத்து பாத்யம் வேண்டாம் என தீர்மானம் போட்டார்கள்.
கிட்டதட்ட ஒருமாதம் தமிழ்நாடு பூராவும் 100 ஸ்த்ரீ கூட்டங்கள் நடந்தன. தீர்மான நகல்கள் தவிர சர்க்கார் இந்த பில்லை வாபஸ் வாங்கணும் என்று டில்லிக்கு பல தந்திகளும் அனுப்பிக் கொண்டே இருந்தோம்.
இந்தக் கூட்டங்கள் நடந்து கொண்டிருக்கும் போதே சங்கராச்சாரியார் மறுபடியும் என்னை அழைத்தார். “இங்கேயே கூட்டம் நடத்திக் கொண்டிருந்தால் சரிப்பட்டு வராது போலிருக்கிறது. டில்லிக்கே போய் எதிர்ப்பைத் தெரிவிக்கணும். அதுக்கு நீர் டில்லி கிளம்பணும்’’ என்றார்.
டில்லியில் Constitution Club-இல் ஸ்த்ரீகளுக்கும் சொத்து பாத்யம் பில் பாஸ்பண்ணலாமா, வேண்டாமா என நடந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு பெரிய அளவில் பெண்களை திரட்டிக் கொண்டு போனோம்.
அங்கே, பெண்களுக்கு சொத்துரிமை வேண்டும் என வலியுறுத்த கமலாதேவி சட்டோபாத்யாய தலைமையில் பல பெண்கள் கூடியிருந்தனர்.
நாங்கள் கூட்டிப்போயிருந்த பெண்கள், நேரு அங்கே வருவதற்கு முன்னரே கலைந்து விட்டதால் பயன் இல்லாமல் போய்விட்டது.