உள்ளாட்சியில் பணமழை – கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையமும் ஊடகங்களும்
உள்ளாட்சித் தேர்தல்கள் நடந்து முடிந்துவிட்டன. வழக்கம் போல ஆளுங்கட்சிக்குச் சாதகமான முடிவுகள் வந்திருந்தாலும், கீழ்மட்டத்தில் பணமழை பெய்திருக்கிறது. சென்னை போன்ற பெரு நகரங்களில் அதிகார துஷ்பிரயோகம் நடந்துள்ளது. இரண்டு செய்திகளையும் நடுநிலை ஊடகங்கள் கண்டுகொள்ளவில்லை. ஆளுங்கட்சிக்கு ஜால்ரா தட்டுவதில் கவனமாக இருந்தன. தமிழக மாநிலத் தேர்தல் ஆணையர் சோ.அய்யர் 2006 போல இல்லாமல் அமைதியாகத் தேர்தலை நடத்தி முடித்தோம் என்று திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டே இருந்தார். ஆனால், 2006அய்விட அதிக அளவில் அத்துமீறல்கள் நடந்தன. அது குறைந்த அளவிலேயே ஊடகங்களால் சொல்லப்பட்டன. பல இடங்களில் தி.மு.க. மற்றும் சுயேச்சைகள் வெற்றிபெற்ற இடங்களில்கூட முடிவை அறிவிக்காமல் மேலிடத்தின் ஆணைக்காகக் காத்திருந்தனர். அவற்றில் சில இடங்களில் வெற்றி பெற்ற தரப்பு ஆர்ப்பாட்டங்கள் செய்த நிலையில் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்கள். கடந்த சட்டமன்றத் தேர்தலில் ரியல் எஸ்டேட், தங்க நகைக் கடைகள் போன்றோரின் கணக்கில் காட்டப்படாத பணம் பிடிக்கப்பட்டு நியாயமாகத் தேர்தல் நடத்தப்படுவதாகக் காட்டப்பட்டது. ஆனால், இந்த முறை அதுபோல தீவிரமெல்லாம் காட்டப்படவில்லை. ஏன் தெரியுமா? இந்த முறை பல ஊர்களில் ஆளும் அ.தி.மு.க. பணப்பட்டுவாடா செய்ய வேண்டுமே அதற்காகத்தான்.
இதுமட்டுமல்ல, வசதியுள்ள சுயேச்சை வேட்பாளர்கள் பலரும் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கே லட்சக்கணக்கில் செலவு செய்துள்ளார்கள். இது பரவலாக தமிழகம் முழுதும் நடந்துள்ளது. உதாரணத்திற்கு, நமக்குத் தெரிந்து சிவகங்கை மாவட்டத்தில் 4000 வாக்குகள் உள்ள ஒரு ஊராட்சியில் ஓட்டுக்கு ரூ.1,500 அளிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலுக்கும் பணப்பட்டுவாடா நடந்துள்ளது.
நக்கீரன் இதழ் மட்டும் இந்தப் பணப்பட்டுவாடா குறித்து எழுதியுள்ளது. குறைந்த பட்சம் 25 ஆயிரம் கோடி அளவுக்குப் பணப் புழக்கம் நடந்திருக்கிறது என்று ஒரு கணக்கைச் சொல்லியுள்ளது.
சென்ற 5 ஆண்டுகளில் ஓட்டுக்குப் பணம் கொடுக்கிறார்கள் என்று வாய்கிழியப் பேசியவர்கள் இப்போது எங்கே போனார்கள் என்று தெரியவில்லை. அப்போது எழுதிய நடுநிலைப் (?) பத்திரிகைகளின் பேனாக்களில் இப்போது மை இல்லாமல் போய்விட்டதோ?
*************
வழிகாட்டும் பெரியார் தொண்டர்கள்
96 விடுதலை சந்தாக்கள்
தமிழகத்தில் பல முன்னுதாரணங்களைப் பெரியார் பெருந் தொண்டர்களே படைத்திருக்கிறார்கள். அந்த வரிசையில் இரண்டுபேர் பற்றிய செய்தி இது.
ஒருவர் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.எஸ்.மணியம். இன்னொருவர் மதுரை தமிழக எண்ணைப் பலகாரம் அங்காடி நிறுவனர் பே.தேவசகாயம் அவர்களின் துணைவியார் அன்னத்தாயம்மாள் அவர்கள்.
அய்யா எஸ்.எஸ்.மணியம் அவர்கள் கடந்த அக்டோபர் மாதம் 11 ஆம் நாள் 96 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடினார். எப்படித் தெரியுமா? நம்முடைய பகுத்தறிவு நாளேடான விடுதலைக்கு ஆண்டு சந்தாக்களை அளித்துக் கொண்டாடினார். 96 ஆண்டு சந்தாக்களுக்கு 96 ஆயிரம் ரூபாய் அளித்தார். அந்த விடுதலை இதழ்கள் 96 கிராமங்களுக்கு அனுப்பப்பட இருக்கின்றன. காசைக் கரியாக்கும் வெற்று டாம்பீக பிறந்த நாள்கள் பலவற்றைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால், பெரியார் பெருந்தொண்டரின் பிறந்த நாள் 96 கிராமங்களுக்குப் பகுத்தறிவைப் பரப்பப் பயன்பட்டிருக்கிறது.
மறைந்த பின்னும் பெரியார் பணி
தமிழகத்தில் உடல் தானம் என்பது கடந்த சில ஆண்டுகளாகச் செய்யப்படுகிறது. ஆனால், இந்த உடல்தான முறையை அறிமுகப்படுத்தியவர்கள் பெரியார் தொண்டர்கள்தான் என்பது பலருக்குத் தெரிய வாய்ப்பில்லை. கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பே காஞ்சிபுரம் பெரியார் தொண்டர் கே.டி.எஸ்.மணி அவர்கள் இறப்புக்குப் பிறகு தனது உடலை மருத்துவ ஆய்வுக்கு அளித்துவிட வேண்டும் என்று அறிவித்தார். அதன்படியே அவரது உடல் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பல பெரியார் தொண்டர்கள் தமது உடலை அளித்துள்ளார்கள்.
உடல் தானம் குறித்த அரசின் சட்ட நடைமுறைகளும், அதற்கான விண்ணப்பப் படிவமும் முதல்முறையாக பெரியார் பகுத்தறிவாளர் நாட்குறிப்பில்தான் வெளியிடப்பட்டது. உடல்தானம் குறித்த விழிப்புணர்வை அதிகம் பேசியதும் பெரியார் தொண்டர்கள்தான்.
நமது உண்மை இதழைத் தொடர்ந்து படிப்பவர்களுக்கு அறிமுகமான பெயர் மதுரை, தமிழக எண்ணெய் பலகாரம். இந்த அங்காடியின் நிறுவனர் பெரியார் பெருந்தொண்டர் மதுரை பே.தேவசகாயம். வாழ்நாளெல்லாம் பெரியார் கொள்கையைப் பரப்பி வந்தவர். இவர் மட்டுமல்ல, இவரது துணைவியார் அன்னத்தாயம்மாள் அவர்களும் தமிழகம் முழுவதும் சுற்றிச் சுற்றிப் பெரியார் கொள்கையைப் பரப்பிய வீராங்கனையாகத் திகழ்ந்தவர். கழகக் குடும்பத்தவர்களைக் காணும்போதெல்லாம் வாஞ்சையுடன் நலம் விசாரிப்பார். தமது அங்காடி உணவுப் பொருட்களையெல்லாம் அனைவருக்கும் வாரி வாரி வழங்குவார். எந்நேரமும் கருப்பு ஆடையிலேயே காட்சி அளிப்பார். இத்தகைய உயர்குணம் கொண்ட அன்னத்தாயம்மாள் அவர்கள் வயது முதிர்வால் கடந்த அக்டோபர் 3 ஆம் நாள் தமது 82 ஆவது வயதில் காலமானார்.
மறையும் வரை பெரியாரின் கொள்கைகளைப் பரப்பி வந்த அன்னத்தாயம்மாள், மறைவுக்குப் பின் தமது உடலை மதுரை மருத்துவக் கல்லூரிக்குத் தானமாக அளிக்க வேண்டும் என விருப்பப்பட்டுள்ளார். அவர் விருப்பப்படியே அவரது மகன் தே.எடிசன்ராசா அவர்களால் அன்னத்தாயம்மாளின் உடல் தானம் செய்யப்பட்டது. மதுரைக்குத் தெற்கே ஒரு சின்னஞ்சிறு கிராமத்தில் பிறந்த அன்னத்தாயம்மாள் பெரியாரின் கொள்கை வயப்பட்டதால், இன்று மதுரை மருத்துவக் கல்லூரியில் படிக்கும் மருத்துவ மாணவர்களுக்குப் பாடமாகியுள்ளார்.
*************
பொது ஒழுக்கக்கேட்டை உருவாக்கும் பட்டாசு
உலகில் பல நாடுகளில் பட்டாசுகள் கொளுத்துகிறார்கள். அது பெரும்பாலும் வாணவேடிக்கையாக மட்டுமே இருக்கும். அவர்கள் ஊரின் மய்யப்பகுதிகளில் ஒரே இடத்தில் கூடி ஒரே நேரத்தில் அந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறார்கள். ஆனால், நம் நாட்டில் எப்படி? தெருவுக்குத் தெரு, வீட்டுக்கு வீடு, ரோட்டுக்கு ரோடு கண்ட இடத்திலும் பட்டாசைக் கொளுத்திப் படபடக்க வைக்கிறார்கள். தீபாவளியை ஒட்டிய இரண்டு மூன்று நாட்கள் இதய நோய் உள்ள பெரியவர்கள் வெளியே வரமுடிவதில்லை. சிறு சிறு தெருக்களிலும் பெரிய அளவு ஓசை எழுப்பும் வெடிகளை வெடிக்கின்றனர். அது உடலில் பல அதிர்வுகளை ஏற்படுத்துகிறது.
இந்த நாள்களில் வழக்கம்போல சாலைகளில் நடந்து போக முடிவதில்லை. திடீர் திடீரென வெடிகள் வெடிக்கின்றன. வாகனத்தில் போவோரும் திடீரென வெடி வெடிப்பதால் விபத்துக்கு உள்ளாகிறார்கள். இந்தப் போக்கை மாற்ற சில ஆண்டுகளாக தீ அணைப்புத் துறையும், காவல் துறையும் சில பாதுகாப்பு வழிமுறைகளைப் பயிற்றுவிக்கிறார்கள். பள்ளிக்கூட மாணவ .மாணவியருக்கும் பட்டாசு வெடிப்பது குறித்த விழிப்புணர்வை ஊட்டிவருகின்றனர்.
நடைபாதைகள், பொது இடங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பட்டாசுகளை இருப்பு வைக்கவோ, விற்கவோ கூடாது. அவ்வாறு செயல்படுபவர்கள் மீது குற்ற வழக்குத் தொடரப்பட்டு, பட்டாசுகளும் பறிமுதல் செய்யப்படும். பட்டாசு விற்பனையாளர்கள், கடை அமைப்பதற்கான தற்காலிக உரிமங்களைக் கண்டிப்பாகப் பெற வேண்டும் எனவும், சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும். 125 டெசிபலுக்கு மேல் சத்தம் ஏற்படுத்தும் பட்டாசுகளை விற்கவோ, வெடிக்கவோ கூடாது எனவும் காவல்துறை எச்சரித்திருப்பது பாராட்டுக்குரியது.
இந்த ஆண்டு சென்னை உயர் நீதி மன்றமும் நல்ல உத்தரவு ஒன்றைப் பிறப்பித்திருக்கிறது. சென்னையில் மக்கள் அதிகம் கூடும் முக்கியக் கடை வீதிகளில் பட்டாசுகள் விற்பதைத் தடை செய்து, தீவுத்திடலில் பட்டாசுக் கடைகளை அமைக்க வேண்டும் என்று ஆணையிட்டுள்ளது வரவேற்கத்தக்கது.
பட்டாசு வெடிப்பதில் இன்னொரு தீமையும் இருக்கிறது. மரங்களில் வசிக்கும் பறவைகள் பட்டாசு வெடிக்கும் ஓசையால் தமது வழக்கமான இடங்களைவிட்டு தீபாவளிக் காலங்களில் வேறு இடங்களுக்குச் சென்று விடுகின்றனவாம். குறிப்பாக வவ்வால், கொக்கு, நாரை போன்றவைதான் இதனால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனவாம். எனவே, மரங்கள் அதிகம் உள்ள பகுதிகளில் பட்டாசுகளை வெடிக்காதீர்கள் என்று இயற்கை ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பட்டாசுகளை விற்பதற்கும், எப்படிப் பாதுகாப்பாக வெடிக்கலாம் என்பதற்கும் வழிமுறைகள் வந்துவிட்டன. ஓசோன் படலத்தை மாசுப்படுத்தி சுற்றுச் சூழலைக் கெடுப்பதோடு, அநியாயத்திற்குக் குப்பைகளை உண்டாக்கும் பட்டாசுகளைக் கொளுத்துவதையே தடுக்க விழிப்புணர்வைச் செய்ய வேண்டியது அடுத்த பணி என்பதை ஆட்சியாளர்களும், நீதிமன்றங்களும் சிந்திக்க வேண்டும்.
– அன்பன்