பெண்ணால் முடியும்! : ஜாதியை ஒழிக்க அய்.நா.வில் பேசிய மதுரை மாணவி!

நவம்பர் 01-15 2019

மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு குக்கிராமம் கார்சேரி. இங்கே ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து அரசுப் பள்ளியில் படித்த மாணவி பிரேமலதா, அய்.நா.சபையில் உரையாற்றியிருப்பதன் மூலம் தமிழகத்துக்கு மட்டுமல்ல; மனித உரிமைக்காக உழைக்கும் ஒவ்வொருவருக்கும் பெருமை சேர்த்திருக்கிறார்.

அய்.நா. மனித உரிமைக் கல்விக்கான உலகத் திட்டத்தின் கீழ், தமிழ்நாடு ஆதிதிராவிட நலப் பள்ளிகளில், 2002 முதல், 12 ஆண்டுகளுக்கு மனித உரிமைக் கல்வி ஒரு பாடத்திட்டமாகச் சேர்க்கப்பட்டிருந்தது. அந்தப் பாடத்திட்டம் நடைமுறையில் இருந்த பள்ளிகளில் மதுரை மாவட்டம் இளமனூர் அரசு ஆதிதிராவிடர் நலப் பள்ளியும் ஒன்று. அந்தப் பள்ளியில்தான், 6, 7 மற்றும் 8ஆம் வகுப்பு படித்தார் பிரேமலதா. அந்த மூன்றாண்டுகளும் மனித உரிமைக் கல்வியையும் பயின்றார்.

2010-11ஆம் கல்வியாண்டின்போது, மனித உரிமைக் கல்வியின் தாக்கம் எப்படியிருக்கிறது என்று அறிந்துகொள்வதற்காக இந்தியா வந்திருந்தார் – அய்.நா. சபையின் மனித உரிமை கவுன்சில் அதிகாரியான எலினா. அந்த அனுபவத்தை மாண்புக்கான பாதை (A Path to Dignity: The Power of Human Rights Education) என்னும் பெயரில் ஆவணப்படமாகவும் எலினா தயாரித்தார். அதில் இந்தியாவில் உள்ள ஜாதிய வேறுபாடுகள் பற்றியும் ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் வெவ்வேறு கல்வி முறைகள் நடைமுறையில் இருப்பது பற்றியும் வலி நிறைந்த வார்த்தைகளுடன் பேசியிருந்தார் பிரேமலதா. அப்போது அவர் 8ஆம் வகுப்பு மாணவி. உலகம் முழுவதும் திரையிடப்பட்டு, பலரது மனசாட்சியை உலுக்கிய அந்தப் படத்தை, இந்த ஆண்டு ஜெனீவாவில் நடந்த அய்.நா. சபைக் கூட்டத்தின்போது திரையிடத் திட்டமிடப்பட்டது. அக்டோபர் 1 மற்றும் 2ஆம் தேதியில் நடைபெற்ற அந்நிகழ்வில் பங்கேற்க பிரேமலதாவுக்கு அய்.நா. அழைப்பு விடுத்தது. “நான் மதுர ஜில்லாவைத் தாண்டி வெளிய போனதில்ல சார். என் பையன்களோ, பேரன் பேத்திங்களோ தமிழ்நாட்டைக்கூட தாண்டுனது கிடையாது. ஆனா, என் பேத்தி பிரேமலதா அய்.நா.சபைக்கே போயிட்டு வந்துட்டா” என்று பொக்கைவாய்ச் சிரிப்புடன் சொன்னார் சுப்பையா தாத்தா.

தைரியமான, தெளிவான குரலில் பேசத் தொடங்கினார் பிரேமா”. மனித உரிமைக் கல்வி படிச்சதுதான் என் துணிச்சலுக்குக் காரணம்னு நினைக்கிறேன். அந்த ஆவணப்படம் எடுத்து 10 வருஷம் ஆகிடுச்சி. திடீர்னு அவங்க என்னை அய்.நா.சபைக்குக் கூப்பிட்டப்ப என்கிட்ட பாஸ்போர்ட்கூட இல்ல. வீட்ல தயங்குனப்ப என்னோட சகோதரர்கள்தான் சப்போர்ட் பண்ணுனாங்க. மக்கள் கண்காணிப்பகம் ஹென்றி சார், ஜெனீவா வரைக்கும் நீ தனியாத்தான் போகணும். அதனால அதற்கான பயிற்சியா டெல்லிக்குத் தனியா விமானத்தில் போய்ட்டு வான்னு என்னை ஊக்கப்படுத்தினார்.

ஜெனீவாவிலிருந்து அய்.நா.சபை செல்கையில் என்னை வரவேற்க அய்.நா. அலுவலர்களும், ஈழத் தமிழரான ஜாஸ்மின் அக்கா குடும்பத்தினரும் வந்திருந்தாங்க என்று சொல்லும் பிரேமலதா, “அந்த நிகழ்ச்சியில கலந்துக்கிட்ட மாணவிகள்ல நான் ஒருத்தி மட்டும்தான் இந்தியப் பெண். அதனால், சேலை கட்டிக்கொண்டு போனேன். அந்த ஆவணப் படம் திரையிடப்பட்டதும், அதைப் பார்த்துட்டு என்னைப் பலர் சந்திக்க வந்தாங்க. என்னோட அப்பா லாரி டிரைவர், குடும்பத்தின் முதல் பட்டதாரி நான்தான்னு சொன்னதும் அவங்க மனசாரப் பாராட்டினாங்க’’ என்கிறார் பெருமிதப் புன்னகையுடன்.

மனித உரிமைகள் கவுன்சிலில் ஆங்கிலத்திலும், பிறகு தனியாக நடந்த நிகழ்வில் தமிழிலும் உரையாற்றியிருக்கிறார் பிரேமலதா. இந்தியாவில் நிலவும் ஜாதிய முறையால் பாதிக்கப்பட்ட பெண் நான். ஏற்கெனவே ஜாதி ஏற்றத்தாழ்வுகள் உள்ள இந்தியக் கல்வி முறையில், நீட் தேர்வு முறையானது ஏழை – பணக்காரர் வித்தியாசத்தை அதிகரித்திருக்கிறது. தமிழகத்தில் நீட் தேர்வால்  மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். எங்களைப் போன்ற பிள்ளைகள் பள்ளி இறுதித் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றிருந்தும் ‘நீட்’ தேர்வால் உயிரை மாய்த்துக் கொள்ளும் நிலை இருக்கிறது எனும் இவரது உரை பல தரப்பிலிருந்தும் பாராட்டுகளைப் பெற்றுத் தந்தது. தற்சமயம் சட்டப்படிப்பு படிக்க நுழைவுத் தேர்வை எழுதிவிட்டுக் காத்திருக்கிறார் பிரேமலதா.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *