ஒவ்வொரு நாள் செய்திகளிலும் குறைந்தது இரண்டு விபத்துச் செய்திகளைப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. வாரத்திற்கொரு மிகப் பெரிய சாலை விபத்து / இரயில் விபத்து/விமான விபத்து என்னுமளவில் நம் வாழ்வின் நிச்சயமற்ற தன்மையை நினைவூட்டிக் கொண்டேயிருக்கின்றன விபத்துச் செய்திகள். இவற்றை வெறும் செய்திகளாக மட்டுமே பார்த்துப் பழகிவிட்ட நம் மனமும் எளிதில் கடந்துவிடுகிறது. பெருகிவரும் விபத்துகளைக் குறிப்பது அரசுகளின் கைகளில் மட்டுமல்லாமல், நமது நடவடிக்கைகளிலும் இருக்கிறது என்பதனைக் குறைந்தபட்சம் வாகன ஓட்டிகள்கூட உணர முடிவதில்லை. திரைப்படங்களில் பறந்துவிழும் பைக்குகளும், கார்களும் நமக்கு ஷோக்குகளாகிப் போனதாலும், இரத்தம் தெறிக்க அடி வாங்குவதும் உறுப்புகள் சிதைவதும் ரசிக்கத்தக்க காட்சிகளானதாலும் அவற்றின் கொடூரத்தை நம்மால் உணர முடிவதில்லை. இந்தச் சூழலில்தான் மற்ற ஊடகங்களிலிருந்தும் திரைப்படங்களிலிருந்தும் மாறுபட்டு நிற்கிறது எங்கேயும் எப்போதும்.
நேருக்கு நேர் மோதிக் கொண்டு பெரு விபத்தில் சிக்கிக் கொள்ளும் இரண்டு பேருந்துகளின் பயணிகள்தான் கதை மாந்தர்கள்! சென்னையிலிருந்து திருச்சிக்கும் திருச்சியிலிருந்து சென்னைக்குமாக நாள்தோறும் பயணிக்கும் ஆயிரக்கணக்கான பயணிகளையும் வெவ்வேறுபட்ட அவர்களின் உணர்வுகளையும் எண்ணிச் சொல்லிவிட முடியாது. அவற்றுள் சில மனங்களைக் கண்முன் உலவ விட்டிருக்கிறார் இயக்குநர்.
திருச்சியிலிருந்து சென்னைக்கு வேலை தேடி வந்த அனன்யா – வழிகாட்டி உதவும் இளைஞன் சரவ் ஆகியோரிடையே தோன்றும் இயல்பான ஈர்ப்பு – மெதுவாகக் காதலாக மாறும் முதல் காதல் கதை நொடிக்கு நொடி மகிழ்ச்சியைத் தரும் கவிதை என்றால் அடுத்த காதல் கதை இன்னொரு துருவம்.
எதிரெதிர் மாடியில் நின்று பார்வையால் தொடங்கியதாகச் சொல்லப்பட்ட காதலை, பல்வேறு சோதனைகளுக்குட்படுத்தி, உரசலும் நடிப்பும் அல்ல காதல்; தொடர்ந்து வாழப்போகும், இணையரைப் பற்றிய முழுமையான புரிதல் வந்த பிறகே காதல் என்று தெளிவான பார்வையோடு காதலையும், காதலனையும் அணுகும் அஞ்சலி – அச்சம் கலந்த அப்பாவித்தனத்தோடு, காதலியின் நோக்கங்களைப் புரிந்துகொண்டு அதன்படி நடக்கும் காதலனாக ஜெய் என்று திருச்சியில் நடக்கும் காதல் கதை அறிவார்ந்த அணுகுமுறை.
வெளிநாட்டு வேலைக்குச் சென்று 5 ஆண்டுகளுக்குப்பின் நாடு திரும்பி, முதல் முறையாகத் தன் குழந்தையைப் பார்க்கச் செல்லும் தந்தை, விளையாட்டுப் போட்டியில் வென்ற கோப்பையுடன் ஊர் செல்லும் மாணவிகள், திருமணமான பின்னர் முதல்முறை மனைவியைப் பிரிய முடியாமல் உடன் பயணிக்கும் புதுமாப்பிள்ளை, பேருந்தில் முளைக்கும் புதிய காதல் ஜோடி என எண்ணற்ற குட்டிக் கதைகளாய் பேருந்துகளுக்குள் அமர்ந்திருக்கும் மனிதர்களுடன் பயணிக்கிறது எங்கேயும் எப்போதும்!
இப்படி இருவேறு காதல் கதைகளுக்கிடையில், செத்து ஒரு நாளானால், நாத்தமெடுத்து, மண்ணுக்குப் போய் புழு திங்கப்போற உடம்பை மத்தவங்களுக்குப் பயன்படுத்துனா என்ன? என்ற தார்மீகக் கோபத்தோடு உடல் உறுப்புதானம் பற்றி காதலனுக்குப் புரிய வைத்து, விண்ணப்பத்தில் கையொப்பம் வாங்கும் அஞ்சலி, அதை ஜெய்க்கு மட்டும் சொல்லவில்லை என்பதைப் படம் பார்க்கிறவர்கள் எளிதில் உணரமுடியும். இது மட்டுமல்ல, படத்தின் பல்வேறு கதாபாத்திரங்களும் மனிதத்துடன் உலவுகின்றன. எங்கு சுற்றினாலும் பணம் தேடி அலையும் மனிதர்கள், அரிவாளோடு சுத்தும் வில்லன்கள் என எதிர்மறைப் பண்பு கொண்டோரையே காட்டிப் பயமுறுத்தும் திரைப்படங்களுக்கு மத்தியில், கையிடுக்கில் பாட்டிலைச் செருகி, சிரமத்துடன் கை கழுவும் நடத்துனருக்கு, உதவும் எளிய மனிதமும் மனதில் நிற்கிறது. அதற்காகவே இயக்குநருக்குத் தனியாக நன்றி சொல்ல வேண்டும்.
ஆஞ்சநேயர் வேடமிட்டு உலவும் ஆசாமியிடம் சான்றிதழ்களைக் கொடுத்து ஆசி வாங்கும் அனன்யா. அடுத்த காட்சியில் அதே ஆசாமி வாயை மறைத்திருக்கும் மூடியை எடுத்துவிட்டுப் புகைப்பிடிப்பதைக் காட்டும் காட்சி வணக்கம்மா படத்துக்கு எதிராகக் கலாட்டா செய்த காவி(லி)க் கும்பலுக்கு ஒரு சவுக்கடி!
திருமணத்துக்குமுன் எந்த ஜாதி என்று கேட்காமல் இரத்தப் பரிசோதனை செய்து உடல்நிலையை முதன்மைப்படுத்தும் காட்சி; பெண்களுக்கு ஆதரவான குரலை எழுப்பும் பெரியவராக கருப்புச்சட்டை, துண்டுடன் ஒருவர் செல்லும் காட்சி; டிஸ்யூ தாளைப் (ஜிவீமீ ஜீணீஜீமீக்ஷீ) பயன்படுத்தாமல், துணியால் முகம் துடைத்துக் கொள்ளும் எளிமையைக் காட்டும் காட்சி என சின்னச்சின்னதாய் சீரிய சிந்தனையை விதைத்துச் செல்கிறார் இயக்குநர்.
மனிதத் தவறுகளாலும் அதீத வேகத்தாலும், கவனக் குறைவுகளாலும் பெருகும் விபத்துகளைத் தடுக்கும் ஆற்றல் மனிதனுக்கே உண்டு. அப்பா… பயமாயிருக்குப்பா… மெதுவாப் போங்கப்பா என்று ஒரு குழந்தையின் குரல் படத்தின் கடைசியில் (பெயர்கள் ஓடும்போது) ஒலிக்கும்போது திரையரங்கத்தைவிட்டு வெளிச் செல்லுகிற ஒவ்வொருவருக்கும் காதுகளின் வழியாக மூளைக்கு அந்தச் செய்தி எட்டுகிறது. நொடிப் பொழுதில் நொறுங்கிப் போகும் ஆபத்து நிறைந்த வாழ்க்கைப் பயணத்தை எச்சரிக்கையோடு அணுகும் உணர்வை படம் நிச்சயம் உண்டாக்குகிறது.
படத்தின் இளம் இயக்குநர் எம். சரவணன், தயாரிப்பாளர் ஏ.ஆர்.முருகதாஸ், அனைத்துப் பாத்திரங்களிலும் நடித்த நடிகர்கள், இனிய இசையை வழங்கிய இசையமைப்பாளர் சத்யா, இரண்டு பேருந்துகள் மட்டுமே என்றாலும் சலிப்புத் தட்டாதபடி கோணங்களைப் பயன்படுத்தி யிருக்கும் ஒளிப்பதிவாளர் என ஒட்டுமொத்தக் குழுவிற்கும் நம் பாராட்டுகள் – நன்றிகள்!
இந்தப் படத்தின் தலைப்பு எங்கேயும் எப்போதும் – விபத்து நிகழலாம் என்பதை மட்டும் சொல்லவில்லை. எங்கேயும் எப்போதும் கவனத்துடன், எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்; என்ற உணர்வை அழுத்தமாகப் பதியவைக்கிறது. அதனால் எங்கேயும் எப்போதும் நினைவில் நிற்க வேண்டிய படம்!
– இளைய மகன்