அறிவியல் வளர்ச்சி உச்சத்தில் உள்ள நிலையிலும் அறிவுக்கு அறவே பொருந்தாத மூடநம்பிக்கை விழாக்களைக் கொண்டாடும் நிலை மிகவும் வருந்தத்தக்கது மட்டுமல்ல; கண்டித்து களையத் தக்கதும் ஆகும்.
சரஸ்வதி பூஜை, நவராத்திரி கொலு, தீபாவளி, சூரசம்காரம் போன்ற விழாக்களால் எவ்வளவு பொருள் இழப்பு, பொழுது இழப்பு, அறிவு இழப்பு?
எடுத்துக்காட்டாக சூரசம்கார கதையைப் பாருங்கள்.
“சூரபதுமன் செலுத்திய பாணங்களை எல்லாம் முருகப் பெருமான் செயலிழக்கச் செய்தார். கோபம் கொண்ட சூரபதுமன் சக்கரவாகப் பறவை வடிவில் பூதப் படைகளைத் தாக்கிக் கொன்றான்.
முருகன் ரதத்தை விட்டு இறங்கி மயில் வடிவில் உள்ள இந்திரன் மீது ஏறிக் கொண்டார்.
நான்கு நாள்கள் சூரபதுமனுக்கும், சுப்பிரமணியனுக்கும் இடையே கடும் போர் நடந்தது. சூரபதுமன் எடுத்த பல உருவங்களையும் முருகன் அழித்துவிட அவன் மாத்திரமே நின்றான்.
முருகன் சூரனிடம் பல வடிவங்கள் எடுத்து அவனைத் தன் வடிவங்களைப் பார்க்குமாறு தனது விசுவரூபத்தைக் காட்டினார்.
சூரபதுமனின் உள்ளத்தில் ஞானம் உதயமாக முருகப் பெருமானின் விசுவரூபம் கண்டு மகிழ்ந்தான்.
உடனே முருகன் தன்னுடைய ஞானத்தை அகற்றி பழைய வடிவில் தோன்றினார். சூரனும் பழைய நிலையில் கோபம் கொண்டு முருகனை எதிர்த்திட பல வடிவங்கள் எடுத்தான்.
தேவர்களைக் காக்க முருகன் வேல் கொண்டு வீசினார். சூரபதுமன் மாமரமாக நின்று அனைவருக்கும் தொல்லை கொடுக்க முருகன் மாமரத்தை நெருங்கிட அவன் சுய உருவத்துடன், சக்தியுடன் வெளிப்பட்டான்.
அப்போது முருகன் அவன் மீது வேலை எறிய, அது அவன் மார்பைப் பிளந்து அவனை இரு கூறாக்கியது. அவ்விரண்டு கூறும் மயிலும், சேவலுமாக மாறி முருகப் பெருமானை எதிர்த்திட, சண்முகன் அவற்றைக் கருணையுடன் நோக்கிட அவை அமைதி அடைந்தன.
சேவலைக் கொடியாக இருக்குமாறு பணித்தார். அதுவரையில் சேவலாக இருந்த அக்கினிக்குப் பதில் சேவல் அங்கே அமர்ந்தது.
மயிலாக இருந்த இந்திரனை விட்டு இறங்கிய முருகன் சூரனின் மயிலான கூறின் மீது ஏறி அமர்ந்து அதனைத் தன் வாகனம் ஆக்கிக் கொண்டார்.
இவ்வாறு சூரபதுமனை வதம் செய்து அழிக்காமல் கருணை காட்டி சேவலைக் கொடியாகவும், மயிலை வாகனமாகவும் கொண்ட சண்முகநாதனின் அருளை எல்லோரும் போற்றி மகிழ்ந்தனர்.’’ என்கிறது புராணம். இதைக் கொண்டாட திருச்செந்தூரில் விழா. ஆயிரக்கணக்கில் கூடி வேடிக்கை பார்க்கின்றனர்.
மனிதன் மரமாக மாறுவானா?
பிளக்கப்பட்ட மரம் சேவலாக, மயிலாக வருமா?
வராது! வரவே வராது!
வராது என்று தெரிந்தும் அதைக் கொண்டாடக் கூடுவது அறிவுக்கு உகந்த செயலா?
சிந்திக்க வேண்டும்!