பிறப்பு: 5.10.1823
வள்ளலார் என்று உள்ளம் உருக ஏற்றிப் போற்றப்படும் வடலூர் இராமலிங்க அடிகளார் மனுதர்மம், வருணதர்மம், ஆசாரம், ஆகமம், சாத்திரம் என்னும் சகதியில் உருண்டு புரண்டு கிடந்தார். இவர், பிற்காலத்தில் தெளிவு பெற்று, இந்தப் பார்ப்பனியப் பாழும் சாக்கடையிலிருந்து, தாம் வெளியேறியது மட்டுமல்லாமல், மற்றவர்களையும் கரைசேர்க்க, கருத்துச் சூடத்தை வழங்கிய ஒப்பிலா மணியாக ஒளி வீசினார்.
உருவ வழிபாடு செய்து கிடந்த மக்கள் மந்தையிலே ஒளி வழிபாடு என்கிற உருவமற்ற ஒன்றை வெளிச்சமாகக் காட்டி ஆயிரம் ஆயிரம் காட்டுவிலங்காண்டித் தனத்திற்கு மூடுவிழா நடத்தினார். அந்த வகையிலே அது அக்கால கட்டத்திலும் ‘புரட்சி’தான்! அதைக்கூடப் பொறுக்க மாட்டாமல்தான் அவரது மரணம் ஒரு சதிப் பின்னலில் நிகழ்ந்திருக்கிறது.
எந்த உருவ வழிபாடு கூடாது – ஒளி வழிபாடுதான் தேவை – என்று ‘அருள் பிரகாசர்’ செயல்படுத்தினாரோ, அவர் உருவாக்கிய சத்தியஞான சபையிலே பார்ப்பனப் புரோகிதன் உள்ளே புகுந்து, இந்து மத உருவ வழிபாடுகளை நடத்தி, வள்ளலாரின் வேட்கையைச் சுட்டுப் பொசுக்கினான். நீண்டகால போராட்டத்திற்குப் பிறகே மானமிகு கலைஞர் ஆட்சியில் அந்தப் புரட்டன் வெளியே தள்ளப்பட்டு அடிகளாரின் ஆசை நிறைவேற்றப்பட்டது. இராமலிங்கனாரின் கடைசி காலச் சிந்தனைகளைக் காயடித்து, தொடக்கத்தில் அவர் கூறியதை எடுத்துக்காட்டி வழக்கம்போல வரலாற்று உண்மைகளின் மேல் காவிச்சாயம் பூசக் கிளம்பினர்.
மனுநூலைப் பற்றி பிற்காலத்தில் வடலூரார் எழுதிய குறிப்பு இதோ:
மயிலாடுதுறை முன்ஷீப் வேதநாயகம் பிள்ளை (1826-1889) எழுதிய நீதி நூலுக்கு இராமலிங்கனார் கொடுத்த சாற்றுக்கவியில் மனு நூலைப்பற்றி என்ன சொல்கிறார்?
“வேதநாயகம் படைத்த இந்த நீதி நூலுக்கு முன் மனுநீதி எல்லாம் வெறும் கயிற்று நூலே’’ என்று பாடியுள்ளார்.