(தமிழர் தலைவர் கி.வீரமணி)
– பெரு.மதியழகன்
எண்பத்தாறு அகவையில்
எழுபத்தைந்தாண்டுப் பொதுவாழ்வில்
இனமானம் மீட்கவே
இயம்பிட்ட தலைவர்!
எங்கள் தமிழர்தம்
எழுச்சித் தலைவர்போல்
எவருண்டு வையத்தில்?
யாரேனும் சொல்லுங்கள்!
பாலின நிகர்நிலை
பாவையர் பெற்றிடப்
பாடுபட்டார் இவரளவு
பாரெங்கும் வேறெங்கும்…
பார்த்தீரா சொல்லுங்கள்!
கண்சாடை கணநேரம்
காட்டி இருந்தாலே
மாண்புமிகு பதவிகள் – இவரை
மண்டியிட்டுத் தொழுதிருக்கும்!
அணுவளவும் பதவியாசை
அண்டா அனல்மலை!
தொண்டர்க்குத் தொண்டரிவர்
தொண்டறத்தின் வடிவமிவர்!
எந்நாட்டுத் தலைவரும்
எட்டித் தொடமுடியா
விளம்பரம் விரும்பா
விடுதலைச் சூரியன்!
கண்டதுண்டா இவரனையர் – எம்
காதோரம் ஓதுங்கள்!
உண்டென்றால் எங்கென்று
ஒருவரேனும் காட்டுங்கள்!
அறியாமை அழிக்கும்
அன்றாட இதழின்
ஆசிரியராக அறப்பணி
அய்ம்பது ஆண்டுகள்
அயராது பாடுபட்டார்
ஆரேனும் ஆரேனும்
அகிலத்தில் உண்டென்றால்
அடையாளம் காட்டுங்கள்!
எந்த வேடமிட்டு
இன எதிரிகள் வந்தாலும்
சட்டெனச் சங்கநாதம் முழங்கிச்
சமர்க்களம் புகும் – இனமானச்
சக்கரவர்த்தி!
அறிவியல் போர்த்துவரும்
அறியாமையின் பொய் முகத்தையும்
அகிலத்திற்கு உரைக்கும்
அறிவுமணி!
மாநிலம் தாண்டியும்
மதவாதிகள் மரணித்தாலும்
மனமுருகி இரங்கல்
மரியாதை செலுத்தும்
மனிதநேய இமயம்!
அருந்தமிழர்க் கெதிரான
ஆரியத்தின் – சூழ்ச்சிக்
காரியத்தின் வீரியத்தை
வேரோடு அழித்திட
வெண்தாடி வேந்தர்
அய்யா பெரியார்
ஆய்ந்து தேர்ந்த
அணு உலை!
அய்யா புகழ் பரப்புதலில்
அலைகடலுக்கு அப்பால்
அயலகத்தில் இருந்தாலும்!
தொல்தமிழ் இனத்திற்குத்
தொலைவில் வரும்
தொல்லை தனையும்
நிலையிலிருந்தே காட்டும்
தொலை நோக்கி!
வேதியர்தம் வேடங்களை
வெடுக்கெனத் தோலுரிக்கும்
எலக்ட்ரானிக் லேசர்!
முழிப்பில் நாமறியா
மூடநம்பிக்கையின்
மூலத்தையும் – தன்
விழிவீச்சில் வெளிப்படுத்தும்
மின்னணு எக்ஸ்ரே!
எண்பத்தாறு வயதிலும்
இமைப்போதும் சோராது
தன்னலம் துளியுமின்றித்
தமிழர் நலனுக்கே உழைக்கும்…
ஒப்பிட்டுச் சொல்ல
ஒருவருமில்லா – எங்கள்
சொக்கத் தங்கமே!
சுயமரியாதையின் சூத்திரமே!
இனமானத்தின் இலக்கணமே!
என்றென்றும் வாழ்க!
இனம்வாழ நீ வாழ்க!