இயக்க வரலாறான தன் வரலாறு(235) : திருப்பத்தை ஏற்படுத்திய ‘திராவிடர் மாநாடு’

அக்டோபர் 01-15 2019

அய்யாவின் அடிச்சுவட்டில்…

கி.வீரமணி

1.10.1989 அன்று மயிலாடுதுறையில் மா.கந்தசாமி_க.தனம் ஆகியோரின் மகள் தமிழ்ச்செல்வி, திருச்சி கே.ஏ.இராமு_பட்டு ஆகியோரின் மகன் கோவிந்தன் ஆகியோருக்கும், மயிலாடுதுறை க.நாகராசன்_பட்டுரோசா ஆகியோரின் மகள் புகழேந்தி, தஞ்சாவூர் ஆர்.நடேசன்_சொர்ணம்மாள் ஆகியோரின் மகன் சந்திரன் ஆகியோருக்கும் வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த விழா என் தலைமையில் நடைபெற்றது.

மணமக்களை வாழ்த்தி உரையாற்றும்போது, நல்ல குடும்பம் ஒரு பல்கலைக்கழகம் என்றார் புரட்சிக்கவிஞர். இது நல்ல குடும்பம் மட்டுமல்ல; இது கொள்கைக் குடும்பமும்கூட! எனவே, இங்கே பல்வேறு கோணங்களிலே கட்சிகளை மறந்து, ஜாதி மதங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டு தமிழ்ச் சமுதாயத்தினுடைய ஒரு தனித்தன்மை வாய்ந்த வாழ்க்கை ஒப்பந்தத்திற்கு அடையாளமாக இந்தத் திருமண நிகழ்வு இருக்கிறது என்று குறிப்பிட்டு உரை நிகழ்த்தினேன்.

சீர்காழியில் 1.10.1989 அன்று தந்தை பெரியார் சிலை திறப்பு விழாவும், மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலமும் நடைபெற்றது. சீர்காழி தென்பகுதி புதிய பேருந்து நிலையம் அருகில் கம்பீரமாக அமைக்கப்பட்டிருந்த தந்தை பெரியார் அவர்களது சிலையைத் திறந்து வைத்தேன். விழாவில் சுயமரியாதை வீரர் மன்னை நாராயணசாமி அவர்களும் கலந்துகொண்டார். சீர்காழி நகரக் கழகத் தலைவர் ச.மு.ஜெகதீசன் வரவேற்புரை ஆற்றினார். தஞ்சை மாவட்டக் கழகத் தலைவர் எஸ்.எஸ்.மணியம், நகரக் கழக முன்னாள் தலைவர் சொ.நடராசன், சீர்காழி ஒன்றிய கழகத் தலைவர் இரா.செல்வராசு, குழந்தை வேலு, வீ.மோகன், தங்க.இராசேந்திரன், எம்.என்.கமால், ஞான.இராசசேகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்ட விழாவில்,  சிறப்புரை ஆற்றினேன். எதிரிகளின் சலசலப்பை முறியடித்து மக்கள் சமூகத்தின் உணர்ச்சி அலைகளைக் காண நேர்ந்தது.

மன்னை நாராயணசாமி

கழகப் பொறுப்பாளர்கள் கவிஞர் கலி.பூங்குன்றன், கா.மா.குப்புசாமி,  கோ.சாமிதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தஞ்சை மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியம் மூவர் கோட்டையில் தந்தை பெரியார் சிலையை 2.10.1989 அன்று திறந்துவைத்து உரையாற்றினேன். மூடநம்பிக்கை ஊர்வலமும் நடைபெற்றது. தந்தை பெரியார் அவர்களின் 111ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவையொட்டி மூவர் கோட்டையில் திராவிடர் சமூகம், கிராமவாசிகள் சார்பில் உருவாக்கப்பட்ட தந்தை பெரியார் சிலை வரலாற்றுச் சிறப்புவாய்ந்த நிகழ்வாகும்.

இந்த விழாவில் முன்னாள் அமைச்சரும், சுயமரியாதை வீரருமான மன்னையார், கழகப் பொருளாளர் கா.மா-.குப்புசாமி, மாவட்டக் கழகத் தலைவர் ஆர்.பி.சாரங்கன், மாவட்ட கழகச் செயலாளர் ராசகிரி கோ.தங்கராசு மற்றும் நிருவாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.

பெரியார் முழுஉருவச் சிலை பீடத்தில், கடவுள் மறுப்பு வாசகமும் தந்தை பெரியார் அவர்களின் பொன்மொழிகளும் இடம் பெற்றிருந்தன.

மயிலாடுதுறையில் தமிழ்ச்செல்வி – கோவிந்தன், புகழேந்தி –  சந்திரன் ஆகியோரின் வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த விழா ஆசிரியர் தலைமையில் நடைபெற்ற காட்சி

திருச்சியிலும் ராணிப்பேட்டையிலும் சிறப்பாக தொழிலகங்களை நடத்தும் பிரபல தொழிலதிபரும், பொறியாளரும், ‘வீகேயென்’ நிறுவனத்தின் உரிமையாளருமான திரு.கண்ணப்பன் அவர்களது மாமனார்  திரு.ராமநாதன் (செட்டியார்) அவர்கள் 10.10.1989 அன்று தனது 77ஆவது வயதில் சென்னை ஸ்டான்லி பொது மருத்துவமனையில் காலமானார். அதனைக் கேள்வியுற்றதும் கழகத் தோழர்களுடன் சென்று மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினேன். என்னுடன் துணைவியார் திருமதி.மோகனா, வடசென்னை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் க.பலராமன், திருவொற்றியூர் நகர பொறுப்பாளர்கள் பலரும் வந்திருந்தனர்.

காரைக்கடி பெ.சோலைமலை _ சோ.சரசுவதி ஆகியோரின் மகன் சோ.இலக்குமணசாமி  (டாக்டர் இலக்குவன் தமிழ்) (இவர் இப்போது டெக்சாஸ் பல்கலைக்கழகப் பேராசிரியர்) அவர்களுக்கும், சென்னை ஆ.பரதராசன்_ ப.துளசிதேவி ஆகியோரின் செல்வி வி.ப.பிரசன்னா அவர்களுக்கும் வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த விழா நிகழ்ச்சி 23.10.1989 அன்று சென்னை பெசன்ட் நகர் மக்கள் மன்றத்தில் என் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. மண விழாவில் உரையாற்றிய போது, தந்தை பெரியாரின் போராட்டங்களையும், அதனால் எளிய மக்களுக்குக் கிடைத்த பலன்களையும் எடுத்து விளக்கினேன்.

மணவிழாவின் இறுதியில் மணமகன் வீட்டாரும் மணமகள் வீட்டாரும் கழகத்திற்கு நிதியாக ரூ.4,000/_ (நான்காயிரம் ரூபாய்க்கான காசோலையினை நன்கொடையாக வழங்கினார்கள்.)

மணவிழாவில் என்னுடைய துணைவியார் திருமதி மோகனா, கவிஞர் கலி.பூங்குன்றன் உள்ளிட்ட கழக நிருவாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.

ஆச்சாரியார்(ராஜாஜி) அவர்களின் மகன் சி.ஆர்.நரசிம்மன் 3.11.1989 அன்று தமது 81ஆம் வயதில் சென்னை பஸ்லுல்லா சாலையில் உள்ள அவரது இல்லத்தில் மறைவுற்றார்.

4.11.1989 அன்று காலை 10:30 மணிக்கு சி.ஆர்.நரசிம்மன் அவர்களது உடலுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினோம். ‘விடுதலை’யில் இரங்கல் செய்தியைப் பதிவு செய்திருந்தேன்.

2.12.1989 அன்று இந்தியாவின் ஏழாவது பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள வி.பி.சிங், துணைப் பிரதமர் தேவிலால் ஆகியோரைப் பாராட்டி வாழ்த்து தெரிவித்து தந்தி அனுப்பினேன். நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜார்ஜ் பெர்னாண்டஸ், உன்னிக்கிருஷ்ணன், ராம்விலாஸ் பஸ்வான் ஆகியோருக்கும் நான் வாழ்த்துத் தந்தி செய்தி அனுப்பினேன். முன்பாகவே நான், ஆளுநர் மாளிகையில் தங்கியிருந்த துணைப் பிரதமர் தேவிலால் அவர்களைச் சந்தித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்தினேன்.

குறிப்பாக பத்தாண்டு காலமாகக் கிடப்பில் கிடந்த மண்டல் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைக்குக் கொண்டுவருவதன் மூலம் இந்தியத் துணைக் கண்ட மக்கள் தொகையில் 52 விழுக்காடு கொண்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு ஒரு சமூகநீதியை வழங்கியவராவார். இதன் மூலம் நாட்டின் பெரும்பான்மை மக்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிமையைக் கிடைக்கச் செய்வதன் மூலம் ஒரு ஜனநாயகக் கடமையைச் செய்த மனநிறைவுக்கு ஆளாக முடியும்.

அந்த வகையில், திராவிடர் கழகத்தின் ஆதரவு நிச்சயம் இந்த அரசுக்கு உண்டு என்று வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டிருந்தேன். புதிய அமைச்சரவையை வாழ்த்தியும், 27 முறை தமது அமைச்சரவையை மாற்றி அமைத்தும் தமிழகத்திற்கு ஒரு ‘கேபினட்’ அமைச்சர் பதவிகூடத் தராதவர் ராஜீவ். அ.இ.காங்கிரஸ் செயலாளர் பதவியிலிருந்து ஜி.கே.மூப்பனாரைப் பதவி இறக்கியவர் ராஜீவ். ‘முரசொலி’ மாறன் அவர்களுக்கு ‘கேபினட்’ அமைச்சர் பதவி தந்து தமிழகத்திற்கே பெருமை சேர்த்தவர் பிரதமர் வி.பி.சிங் என்று வாழ்த்து தெரிவித்து இருந்தேன்.

தென்னார்க்காடு மாவட்டம் திட்டக்குடி வட்டம் வடகரையில் தந்தை பெரியார் முழு உருவச் சிலை திறப்பு விழா 12.12.1989 அன்று நடைபெற்றது. மாலையில் வடகரையில் தந்தை பெரியார் முழுஉருவச் சிலை திறப்பு விழா எழுச்சியோடு தொடங்கியது. முன்னதாக வடகரை நடுநிலைப் பள்ளிக் கட்டடத்தில் தந்தை பெரியார் படத்தைத் திறந்து வைத்து சிற்றுரையை நிகழ்த்தினேன்.

24.12.1989 அன்று திருச்சியில் நடந்த பார்ப்பனர் சங்க மாநாட்டில், நடைபெற்ற ஊர்வலத்தில் ஒரு பகுதியினர் நம் தோழர்களை வலிய ஆத்திரமூட்டி வன்முறையில் ஈடுபடச் செய்ய வேண்டுமென்று திட்டமிட்டு, என்னையும், எனது இணையர் மோகனாவைப் பொது உடைமையாக்குவாயா? என்றும் மிகவும் கேவலப்படுத்தி பார்ப்பனர்கள் கோஷமிட்டனர்.

இதற்குப் பதிலடியாக, 25.12.1989 அன்று நடைபெற்ற “திராவிடர் மாநாட்டில்’’ கண்டனத்தைத் தெரிவித்தோம். தமிழ்நாட்டில் ஒரு சூத்திரர் ஆட்சி நடக்கிறது. இந்த ஆட்சியைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உண்டு. அதன் காரணமாக நாங்கள் இந்தப் பிரச்சனையில் மிகவும் அமைதியாகப் போகவேண்டியிருக்கிறது. வேறு ஆட்சி இங்கு நடைபெற்று இருந்தால் இந்நேரம் ரத்த ஆறு ஓடியிருக்கும். பார்ப்பனர்களே! எங்கள் அமைதியைப் பலவீனமாகப் பார்க்காதீர்! என்று பதில் அளித்தேன்.

25.12.1989 அன்று திருச்சியில் நடைபெற்ற ‘திராவிடர் மாநாடு’ மாபெரும் திருப்பத்தை ஏற்படுத்திய மாநாடாகும். திருச்சி நகரையே குலுக்கிய ஊர்வலம் அனைத்து தரப்பு மக்களாலும் மிகச் சிறப்பான அளவுக்கு பாராட்டப்பட்டது.

மாநாட்டில் 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இடஒதுக்கீடு எதிர்ப்புக் கிளர்ச்சி, மத்திய, மாநில அரசுகளைக் கவிழ்க்கும் சதித்திட்டம், மற்றும் பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீட்டுக் கோரிக்கை எனும் பார்ப்பனர்களின் சூழ்ச்சிப் பொறியை முறியடிக்கவும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டில் சிறப்புரை ஆற்றும்போது, அய்யா அவர்கள் இந்தச் சுயமரியாதை இயக்கத்தை _- திராவிடர் கழகத்தைத் தொடங்கியதனுடைய அடிப்படை என்ன? ஒன்று பிறவி பேதம்; ஒருவன் பார்ப்பான்; இன்னொருவன் பறையன் என்று சொல்லக்கூடிய பிறவி பேதம் இருக்கின்றதே, அந்த பேதம் ஒழிக்கப்பட வேண்டும் என்பதுதான் முதல் கொள்கை; பிறவி பேதமான இன்னொரு பேதம் இருக்கின்றது. ஆண்_பெண் என்கிற பேதமும் ஒழிக்கப்பட வேண்டும் என்றும், பெண்ணுரிமைக்காகப் பாடுபடுகின்ற இயக்கம் இந்த இயக்கம் என்றும் உரையாற்றினேன்.

மனித சமுதாயத்தில் ஆண்டான்_அடிமை, உயர்ந்தவன்_தாழ்ந்தவன் என்கிற பேதமிருக்கக் கூடாது. எங்கு ஆதிக்கம் செலுத்தினாலும் அந்த ஆதிக்கத்தை அடித்து நொறுக்குகின்ற பணி நம் பணியாகும் என்று எடுத்துரைத்தேன். 24.12.1989இல் திருச்சி பார்ப்பன சங்க மாநாட்டில் கூடியவர்கள் நேரில் பார்த்தவர்கள் தகவல்படி 10 ஆயிரம் முதல் 15 ஆயிரத்தை தாண்டாத அளவுதான் என்றாலும், பார்ப்பனரே செய்தியாளர்களாக இருப்பதால், ‘எக்ஸ்பிரஸ்’, ‘இந்து’, ‘தினமணி’ போன்ற ஏடுகளில் சுமார் 1 லட்சம் பேர் திரண்டனர் என்று செய்தி வெளியிட்டனர்.

சீரிய பெரியார் பெருந்தொண்டரும், சிங்கப்பூரில் திராவிடர் கழக முன்னோடிகளில் ஒருவரும், சென்னை மயிலையில் வெண்ணிலா பல்பொருள் அங்காடியின் உரிமையாளருமான அருமைச் சகோதரர் கொள்கை மாவீரன் மானமிகு மா.ஜெகதீசன் அவர்கள் 9.1.1990 அன்று மறைவுற்றார் என்கிற செய்தி தாங்கொணாத துயரத்தையும் தரக்கூடிய செய்தியாகும்.

அவர் எப்படிப்பட்ட லட்சிய வீரர் என்பதற்கு அவர் கைப்பட அவர் மரணப் படுக்கையில் இருந்தபோது எழுதியுள்ள ஒரு கடிதமே போதும். நம்மைப் பொருத்தவரையில் அது ஓர் வெறும் கடிதம் அல்ல; லட்சிய விளக்கம்! சுயமரியாதை வாழ்வு என்னும் சுகவாழ்வினைப் பெற்ற பெரியார் பெருந்தொண்டர்கள் எவ்வளவு சிறப்பான மானிடப் பற்றாளர்கள் என்பதையும் விளக்கிடும் இலக்கியமாகும்!

மறைந்த மானமிகு ஜெகதீசனுக்கு கழகத்தின் சார்பில் நமது வீரவணக்கத்தினைத் தொடர்ந்து ‘விடுதலை’யில் இரங்கல் அறிக்கையை 9.1.1990 அன்று வெளியிட்டிருந்தோம்.

பேராவூரணியில் 16.1.1990 அன்று தந்தை பெரியார் சிலை திறப்பு விழாவும், ஆர்.எஸ்.எஸ். எதிர்ப்பு விளக்க மாநாடும் மிகச் சிறப்பாக நடைபெற்றது. மூடநம்பிக்கை ஊர்வலம் சோழன் போக்குவரத்துக் கழகத்திலிருந்து புறப்பட்டு அண்ணா சாலை, பட்டுக்கோட்டை சாலை உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து நடைபெற்றது. கழகத் தோழர்களின் பெரும் முழக்கங்களுக்கிடையே அய்யா சிலையைத் திறந்து வைத்தேன்.

இரவு 7 மணி அளவில் ஆர்.எஸ்.எஸ். எதிர்ப்பு விளக்க மாநாடு: மாவட்ட கழகத் தலைவர் ஆர்.பி.சாரங்கன் தலைமையில் கழகப் பொருளாளர் கா.மா.குப்புசாமி, மாவட்ட தி.க. செயலாளர் இராசகிரி கோ.தங்கராசு முன்னிலையில் நடைபெற்றது.

3.2.1990 அன்று சென்னை வந்த பிரதமர் வி.பி.சிங் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு கழகத்தின் சார்பில் அளிக்கப்பட்டது. விமானத் திடலில் தமிழக ஆளுநர், முதல்வர் டாக்டர் கலைஞர் உள்ளிட்டோர் வரவேற்க வந்திருந்தனர். வி.பி.சிங் அவர்களுடன் அவரது துணைவியாரும் தனி விமானத்தில் வந்தனர்.

மாலை 6 மணி அளவில் சென்னை பெரியார் திடலுக்கு பிரதமர் வந்தடைந்தார். ஏராளமான திராவிடர் கழகத் தோழர்கள் பெரியார் திடலில் திரண்டிருந்து வரவேற்றனர். “மண்டல் குழு பரிந்துரைகளை அமலாக்கும் வி.பி.சிங் வாழ்க’’ என்று உற்சாகக் குரல் கொடுத்தனர். நடிகவேள் ராதா மன்ற வாசலில் வந்து இறங்கிய பிரதமர் வி.பி.சிங் அவர்களை  பொன்னாடை போர்த்தி அன்புடன் வரவேற்றோம்.

பிரதமர் மற்றும் முதல்வர் ஆகியோர்க்கு திராவிடர் கழகத்தின் சார்பில் மண்டல் குழு பரிந்துரைகளை அமலாக்கக் கோரிய முக்கிய விவரங்களுடன் தயாரிக்கப்பட்ட அறிக்கையினை _ மனுவினை மேடையில் அளித்தேன்.

மேடையிலேயே பிரதமர் அவர்கள் அந்த அறிக்கையின் சில பகுதிகளைப் படித்துக் கொண்டிருந்தார். பிரதமர் தன் உரையில் குறிப்பிடும்பொழுது _ மண்டல் குழுவின் பரிந்துரைகள் செயலாக்கப்படும் என்று அறிவித்தார். கடற்கரைக் கூட்டத்திலும் இந்த உறுதிமொழியை அளித்தார்.

விழாவில், தமிழக மூதறிஞர் குழுத் தலைவர் ஜஸ்டிஸ் திரு.பி.வேணுகோபால், தலைமைக் கழக செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன், பெரியார் பெருந்தொண்டர் திருச்சி சி.ஆளவந்தார் ஆகியோர் உடனிருந்து வரவேற்றனர்.

 

மிரட்டலாக ஆசிரியருக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒட்டப்பட்ட சுவரொட்டி

5.2.1990 அன்று நடைபெற்ற கழகப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினேன். திருவாரூருக்கு நான்  வருவது தெரிந்துகொண்ட பார்ப்பனர்கள் திருவாரூர் நகரின் ஓடம்போக்கி ஆற்றுப் பாலத்தில் சுவரில் 4.2.1989 அன்று கையால் எழுதப்பட்டு ஒட்டப்பட்டிருக்கும் சுவரொட்டியில் “நாங்கள் நினைத்ததை முடிப்போம், குறிவைத்து தீர்த்துக் கட்டுவோம், எங்கள் திறமையை அறியாமல் சாகாதே! வீரமணி நீ எங்களுக்கு ஒரு கொசு; நசுக்கினால் உறு தெரியாது!’’ என்று எழுதப்பட்டிருந்தது.

இதற்கு நான் பதில் அளித்து, திருவாரூரில் நடைபெற்ற கூட்டத்தில் பதில் அளித்தேன். என் உயிர் எனக்கு முக்கியமல்ல; தமிழர்களுக்காக இந்த உயிரை இழக்கத் தயாராகத்தான் உள்ளேன்’’ என்று அழுத்தமாகக் குறிப்பிட்டேன்.

7.2.1990 அன்று சட்டக் கல்லூரி கழக மாணவரணி நடத்திய சிறப்புக் கூட்டத்தில்  கலந்துகொண்டு உரையாற்றினேன். அப்போது, “இடஒதுக்கீடு பற்றி அய்ந்து நீதிபதிகள், அய்ந்து வாதங்களைக் கேட்டு வழங்கிய மிகப் பெரிய கருத்துரைத் தொகுப்புதான் ஒன்று உண்டு.

வழக்குரைஞர்களுக்குப் படிக்கின்ற அத்துணை இளைஞர்களும் தெரிந்துகொள்ள வேண்டிய மிக முக்கியமான வழக்கு அது. இடஒதுக்கீடு பற்றி தனித்தனியே தீர்ப்புகள் வழங்கத் தேவையில்லை.

எல்லாமே இதில் விமர்சிக்கப்பட்டுவிட்டன. தலைமை நீதிபதியாக அப்போது இருந்த சந்திரசூட் அவர்கள் மற்றும் அவரோடு இருந்த நீதிபதிகள் எல்லோரும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

இந்தச் சமுதாயத்தை உருவாக்க வேண்டுமானால் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள்தான் பலன் பெற வேண்டும். அப்படியே செய்ய வேண்டுமானால் அவர்களுக்கு என்ன தேவை?

இதுதான் நிரம்பக் கோடிட்டுக் காட்ட வேண்டிய விசயம் என்று விரிவாக எடுத்துரைத்தேன். சேலம் அரசினர் கலைக்கல்லூரியில் மாணவர் பேரவை நினைவு விழா மற்றும் விளையாட்டுப் போட்டி நிறைவு விழா ஆகிய இரு விழாக்களும் 12.2.1990 அன்று மிகச் சிறப்பாக நடைபெற்றன. இந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பேசும்போது, இடஒதுக்கீடு, சமூகநீதிக்கு எதிராக எங்கே குரல் எழுந்தாலும் கிள்ளி எறியாவிடில் இளைஞர்கட்கு எதிர்காலம் இல்லை என்று எச்சரித்து விளக்க உரையாற்றினேன்.

5.3.1990 அன்று “ராமன் கோயிலுக்காக வசூலித்த பல கோடி ரூபாயில் முஸ்லிம்களுக்கு எதிராக ஆயுதப் போராட்டத்திற்குச் சதி’’ என்பதை 3.3.1990 அன்று பம்பாயிலிருந்து வெளிவந்த ‘கரண்ட்’ (Current) ஏடு வெளியிட்டிருந்தது. அதனைச் சுட்டிக்காட்டி முக்கிய அறிக்கையை எழுதியிருந்தேன். மேலும், ‘நரேதரா’ என்கிற பார்ப்பான், பாரதீய ஜனதா கட்சியின் தீவிரத் தலைவர்களில் ஒருவரும், “வீர் அர்ஜுன்’ உரிமையாளருமான திரு.அனில் நரேந்தரா என்பவர் 150 கோடி ரூபாய் வசூலித்து (Misappropriation) கொடுத்துள்ளார். ‘ராமஜென்ம பூமி’ பிரச்சினையைப் பயன்படுத்தி ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பது அவர்களின் திட்டம் என்பதை விளக்கியிருந்தேன்.

சி.பி.இராசமாணிக்கம்

செங்கை அண்ணா மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் காஞ்சி சி.பி.இராசமாணிக்கம் அவர்கள் 24.2.1990 அன்று சென்னை இராயப்பேட்டை மருத்துவமனையில் தமது 74ஆம் வயதில் காலமானார். நான் கோவை மாவட்டத்தில் சுற்றுப்பயணத்தில் இருந்தபோது எனக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இரங்கல் செய்தியை அவரது குடும்பத்தாருக்குத் தெரிவித்து இருந்தேன். “கடைசி மூச்சு அடங்கும்வரை கழகத்தின் கட்டுப்பாடு அரணாக வாழ்ந்துகாட்டிய கொள்கைச் செம்மல் அவர் என்று அந்த இரங்கல் செய்தியில் குறிப்பிட்டிருந்தேன்.

(நினைவுகள் நீளும்…)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *