பெரியார் மண்ணில், அண்ணா பல்கலைக்கழகத்தில் ‘பகவத் கீதை’ விருப்பப் பாடமாக வைக்கப்படும் என்று துணைவேந்தர் சொல்வதா? ஒரு மாதத்திற்குள் இந்த அறிவிப்பைப் பின்வாங்காவிடில், தமிழ்நாடு முழுவதும் அறப்போர் கிளர்ச்சி – தொடர் போராட்டம் நடைபெறுவது உறுதி! உறுதி!! என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
அண்ணா பல்கலைக் கழகம் தனியார் பல்கலைக் கழகமல்ல!
அண்ணா பல்கலைக்கழகம் தனியார் பல்கலைக்கழகம் அல்ல. முழுக்க முழுக்க தமிழ்நாடு அரசின் பல்கலைக்கழகம். மத்திய அரசின் நிதி உதவியை – பல்கலைக் கழக மானியக் குழு மற்றும் பல அமைப்புகளிடமிருந்து கோடிக்கணக்கான ரூபாய் நிதி உதவியும் பெறும் பல்கலைக்கழகம்.
இந்தப் பல்கலைக்கழகத்தில் உள்ள வெளிமாநிலத்தவர் – தமிழ் தெரியாத ஒருவர் துணைவேந்தராக தமிழ்நாடு அரசிடமோ, முதலமைச்சர், உயர்கல்வித் துறை அமைச்சர் போன்றவர்களிடமோ ஒப்புதல் ஏதும் பெறாமல், ஆளுநரால் தன்னிச்சையாக நியமனம் பெற்றவர்.
அப்போதே பலத்த எதிர்ப்புக் கிளம்பியது – யாருக்கும் மறந்துபோய்விடக் கூடிய ஒன்றல்ல.
விஷ உருண்டைக்குத் தேன் தடவியது போன்ற அறிவிப்பு
இந்நிலையில், தனது பச்சை இந்துத்துவா உணர்வை வேந்தர் தூண்டுதலோ அல்லது இவரது பதவியின் எதிர்காலக் கணக்குக்காகவோ, பகவத் கீதையை அப் பல்கலைக்கழகத்தில் விருப்பப்பாடம் என்று – விஷ உருண்டைக்குத் தேன் தடவியதுபோல் – அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இது வன்மையான கண்டனத்திற்குரியது. உடனடியாக இந்த அறிவிப்பு பின்வாங்கப்பட்டு, மாற்றி அமைக்கப்படல் வேண்டும்.
மற்ற மத நூல்களும் வைக்கவேண்டும் என்கிற குரல் எழுமே!
இதற்கான நியாயமான காரணங்கள் இதோ:
1. கீதை – ஓர் இந்து மத நூல் மட்டுமல்ல: ஜாதியை ஆதரித்து நியாயப்படுத்தும் நூல்.
“சதுர் வர்ணம் மயா ஸ்ருஷ்டம், குண – கர்ம விபாகச
தஸ்ய கர்த்தாரமபி மாம் வித்த்யாகர்த்தாரர மவ்யயம்”
(அத்தியாயம் 4, சுலோகம் 13)
அதாவது, ‘‘நாலு வருணங்களையும் நானே படைத்தேன். நானே அதனைப் படைத்தவனாக இருந்தாலும் அதனை மாற்றிட அல்லது திருத்தி அமைத்திட என்னால் முடியாது’’ என்று கூறும் நூல்.
2. சூத்திரர்களும், பெண்களும் ‘பாவயோனி’யில் பிறந்தவர்கள் என்று அவர்களைக் கேவலப்படுத்தும் நூல்.
“மாம் ஹி பார்த்த வ்யபாச்ரித்ய யேஸ்பி ஸ்யு, பா – யோன்ய
ஸத்ரியோ வைச்யாஸ் – ததா சூத்ராஸ் – தேஸ் பியாந்தி பராங்கதிம்‘’
(அத்தியாயம் 9, சுலோகம் 32)
அதாவது, ‘‘பெண்களும், சூத்திரர்களும் பாவ யோனியில் பிறந்தவர்கள். அதனால் அவர்கள் கீழானவர்கள்.
“பிராமணன், சத்திரியன், வைசியன் ஆகிய மூன்று வர்ணத்தாருக்கும் தொண்டூழியம் செய்வது ஒன்றே சூத்திரர்களின் இயல்பான கடமையாகும்” என்றும் கூறும் நூல் பகவத் கீதை.
மகளிரும் படிக்கும் ஒரு பல்கலைக்கழகத்தில் இப்படி இழிவுபடுத்தும் நூல் இடம்பெறலாமா?
3. இந்நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் மதச்சார்பின்மை(Secularism) கொள்கைக்கு முற்றிலும் முரணானது இது. இந்து மத நூலை இப்படி விருப்பப் பாடம் என்கிற போர்வையோடு பல்கலைக் கழகத்தில் வைத்தால், மற்ற மதவாதிகளான இசுலாமியரின் ‘‘குரான்’’, கிறித்துவர்களின் ‘‘பைபிள்’’, சீக்கியர்களின் ‘‘கிரந்தம்‘’, பவுத்தர்களின் ‘‘தம்மபதம்‘’, ஜொராஷ்டர்களின் ‘‘அவெஸ்தா’’, பகுத்தறிவாளர்களின் ‘‘கீதையின் மறுபக்கம்‘’ நூல் – இவற்றை அதேபோல் விருப்பப் பாடமாக வைக்கவேண்டும் என்ற குரல் எழுந்தால், அதை ஏற்று துணைவேந்தரோ – அவரது ‘அகாடமிக் கவுன்சில்’ என்னும் அமைப்போ தலையாட்டுமா?
4. கீதை வன்முறையைத் தூண்டும் ஒரு கொலைகார நூல்!
முன்னாள் நீதிபதி எழுதிய ‘மகாத்மாவின் கொலை’ நூல்
‘தேசப்பிதா’ என்று அழைக்கப்படும் அண்ணல் காந்தியாரை சுட்டுக்கொன்ற – தொடக்கத்தில் ஆர்.எஸ்.எஸ்.சிடம் பயிற்சி பெற்ற நாதுராம் விநாயக் கோட்சே, நீதிமன்றத்தில் கொடுத்த வாக்குமூலத்திலேயே, தான் இந்த கொலை முடிவுக்கு வருவதற்குப் பெரிதும் துணை நின்று தூண்டிய நூல் ‘பகவத் கீதை’ என்று கூறியுள்ள நிலையில்,
‘The Murder of the Mahatma’ – ‘மகாத்மாவின் கொலை’ என்னும் தலைப்பில் பஞ்சாப் உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஜஸ்டிஸ் ஜி.டி.கோஸ்லா 1963 இல் எழுதிய நூலில், 1977 வரை மூன்று பதிப்புகள் வெளியாகி – விற்பனையாகி – இக்கருத்தை அவர் பதிவு செய்துள்ளார்!
எவரே மறுப்பர்?
பகவத் கீதை வன்முறையைத் தூண்டும் நூல்!
கீதை கொலை நூல்தான் என்று சுவாமி சித்பவானந்தா எழுதிய விளக்கவுரையிலேயே குறிப்பிட்டுள்ளார்!
‘‘இந்து சாஸ்திரங்களில் சொல்லப்பட்டபடி நடந்துகொள்வதுதான் நல்ல மனிதன் ஒருவருடைய கடமை – தர்மம் ஆகும்‘’ என்பதே கோட்சே வாக்குமூலம். (அவர் கைப்பட எழுதியது ‘May it Please Your Honour’ என்னும் தலைப்பில் ஒரு நூலாகவும் (ஆங்கிலத்தில்) அது வெளிவந்துள்ளது).
‘‘…தாயகத்தைக் காப்பாற்ற உயிரைக் கொடுத்தும் போராடவேண்டும் என்று ஹிந்துக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
பகவத் கீதையிலிருந்து சில சுலோகங்களைச் சொல்லி உணர்ச்சிகரமாகத் தனது வாக்குமூல உரையை முடித்தார்….’’ – இப்படி நீதிபதி ஜி.டி.கோஸ்லா அந்த நூலில் குறிப்பிடுகிறார்!
‘‘கடமையைச் செய்; பலனை எதிர்பார்க்காதே’’ என்பதில் கடமை என்பது ஜாதி – வருணத்தைக் காப்பாற்றும் கடமையைச் செய்யவேண்டும் என்று வன்முறையைத் தூண்டும் ஒரு நூல் பகவத் கீதை ஆகும். இப்படிப்பட்ட நூலில் இருப்பதாகத் தவறான மேற்கோள்களைக் காட்டி மக்களை ஏமாற்றுகின்றனர்.
குறளை விருப்பப் பாடமாக வைக்கட்டும்!
திருக்குறள் போன்ற உலகப் பொது ஒழுக்க நூல் – ‘வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ் நாட்டில்’ அவரது குறளை விருப்பப் பாடமாக வைக்க வேண்டாமா?
அண்ணா பல்கலைக்கழகத்தில் அண்ணாவின் அரிய சிந்தனைக் கருவூலங்களை வைக்கவேண்டாமா? அவர் பெயரால் அமைந்த பல்கலைக்கழகம் அல்லவா அது?
தமிழ்நாடு முழுவதும் அறப்போர் கிளர்ச்சி உறுதி!
இன்னும் ஒரு மாதத்திற்குள் இதைப் பின்வாங்கி மாற்றாவிடில், தமிழ்நாடு முழுவதும் அறப்போர்க் கிளர்ச்சி தொடர் போராட்டமாக, அண்ணா பல்கலைக் கழகம் முன் தொடங்கி, தொடருவது உறுதி! உறுதி!!
பெரியார் மண்ணில் இப்படி உணர்ச்சிபூர்வ நெருப்புடன் நெருங்கும் முயற்சியில் இப்பல்கலைக் கழகத் துணைவேந்தர் ஈடுபடக் கூடாது.
ஒன்றுபட்டு கண்டனக் குரல் எழட்டும்!
தமிழக அரசும், முதலமைச்சரும் – மதச்சார்பின்மைக்கு எதிரான இதனை அகற்றிட முழு முயற்சியில் உடனடியாக ஈடுபடவேண்டும்!
ஒத்த கருத்துள்ள அனைவரும், அனைத்துக் கட்சித் தலைவர்களும், கல்வியாளர்களும் ஒன்றுபட்டு கண்டனக்குரல் எழுப்பிட முன்வரவேண்டும்.
கி.வீரமணி
ஆசிரியர்