சாதனை இளைஞர் : வீழ்ந்தும் எழுந்து சாதித்த சவுந்தர்ராஜன்

செப்டம்பர் 16-30 2019

மனிதர்களுக்கு இறக்கை இல்லையெனினும் அவனின் மனத்தின சிறகினை அசைத்தே உச்சத்தைத் தொடமுடியும் என்பதை பீனிக்ஸ் பறவையாய் செய்திருக்கிறார். சைக்கிள் பந்தயத்தில் உலக அளவில் சாம்பியன் பட்டம் வென்ற எம்.ஆர்.சவுந்தர்ராஜன் அவரின் வெற்றிப் பயணத்தின் நிகழ்வுகளை நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்.

“”நான் பிறந்தது திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம்  அருகேயுள்ள மாடநாடார் குடியிருப்பு  என்னும் சிறிய கிராமம். பள்ளிப்பருவம்  அங்குள்ள அரசுப் பள்ளியில் தான். நான் கலந்து கொண்ட பேச்சு போட்டி, ஓட்டப்பந்தயம் மற்ற அனைத்து விளையாட்டுப் போட்டிகளிலும் நான்தான் முதல் மாணவன்.  ஒன்பது வயது இருக்கும் போது சைக்கிளில் சென்ற போது விபத்து ஏற்பட்டது. அந்தக் காயத்தைச் சரியாகக் கவனிக்காமல் விடவே ஒரு கால் எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டேன்.

விளையாட்டில் நிறையச் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு எப்போதும் உண்டு. எனக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர்களிடம்,  கால் இல்லாமல் என்னால் ஓட முடியாதே என மிகவும் மனம் வருந்தினேன். செயற்கைக்

கால்களைப் பொருத்திய பின்பு நீ நடந்தே பல சாதனைகள் புரியலாம் என்றார்கள். செயற்கைக் கால் பொருத்திய பின் முதல் மூன்று மாதங்கள் மிகுந்த வலியால் கஷ்டப்பட்டேன். ஆனால், மனம் தளரவில்லை.

தொடர்ந்து சைக்கிள் போட்டிகளில் பங்கேற்றுச் சாதனை படைக்க வேண்டும் என விரும்பினேன். சென்னை வந்து ரப்பர் கம்பெனியில் பகுதி நேரமாக வேலை செய்து கொண்டே பட்டப்படிப்புப் படித்தேன். மாநில அளவில் நடைபெற்ற சைக்கிள் போட்டி, ஈட்டி எறிதல், ஷாட்புட்  மூன்றிலும் தங்கப் பதக்கம் வென்றேன். அந்தப் போட்டிக்கு பரிசு வழங்க வந்திருந்த காவல்துறை அதிகாரி வால்டர் தேவாரம், என்னைப் பற்றி விசாரித்துவிட்டு என்னை அவருடைய அலுவலகம் வந்து பார்க்கச் சொன்னார்.

விபத்து நடந்தது எப்போது எனக்கேட்டறிந்தார். என்னுடைய தந்தை உயிருடன் இல்லை என்பதையும் அவரிடம் சொன்னேன். “உன்னுடைய விவரங்களை எழுதி எனக்கு மனுவாகக் கொடு; அரசுக்கு அனுப்பி வைக்கிறேன்; நல்லதே நடக்கும். ஆனால், உன்னுடைய முயற்சிகளை ஒரு போதும் கைவிடாதே’ என ஆறுதல் சொன்னார். தமிழகம் முழுவதும் சைக்கிளிலே சுற்றி வர திட்டம் போட்டேன்.

அதன் படி உழைப்பாளர் சிலையில் எனது பயணம் தொடங்கியது. சென்னை, செங்கல்பட்டு, திண்டிவனம், மதுராந்தகம், கள்ளக்குறிச்சி, ஆத்தூர், சேலம், பழனி, திண்டுக்கல், விருதுநகர், கோவில்பட்டி, திருநெல்வேலி, நாங்குநேரி வழியாக கன்னியாகுமரி அடைந்தேன். திரும்பும் போது ராதாபுரம், திருச்செந்தூர், புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், கடலூர், பாண்டிச்சேரி வழியாக சென்னை கிண்டியை அடைந்தேன்.

அந்தப் பயணத்தின்படி 140 மணி நேரத்தில் 2850 கி.மீ சைக்கிளிலேயே பயணம் செய்து திரும்பினேன். அடுத்த திட்டமாக இந்தியா முழுவதும் சைக்கிளில் சுற்றிவந்தேன்.

சாதனையின் தொடர்ச்சியாக அப்போதைய முதல்வர் ஜெயலலிதா எனக்கு சமூக நலத்துறையில் இளநிலை உதவியாளராகப் பணி நியமனம் செய்தார். பணியில் சேர்ந்த பிறகும் சாதிக்க வேண்டும் என்கிற வெறி குறையவில்லை.

அதனைத் தொடர்ந்து பெல்ஜியத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான சைக்கிள் ஓட்டும் பந்தயதில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றேன். ஜெர்மனியில் நடந்த உலக சாம்பியன் ஷிப் போட்டியில் கலந்து கொண்டேன். சாம்பியன் பட்டம் வென்றேன். 2018ஆம் ஆண்டு என்னுடைய சாதனைகளைப் பாராட்டி “கிராண்ட் அச்சீவர் அவார்டு’ அமெரிக்காவில் வழங்கினார்கள்.  சிறு வயதில் எந்தப் பள்ளியில் என்னைக் கேலிப் பேசி கிண்டல் அடித்தார்களோ, அந்தப் பள்ளியில் நடத்தப்பட்ட விழாவிற்கே சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசினேன். முயன்றால் முடியாதது எதுவுமில்லை. தன்னம்பிக்கை இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பது தான் இன்றைய இளைய தலைமுறையினருக்கு அவர் சொல்லும் சொல்லும் சாதனையின் இரகசியம்.

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *