கவிதை : வெள்ளாடா வேங்கையை வீழ்த்தும்?

செப்டம்பர் 16-30 2019

அடிமைகளா தமிழரெலாம்? தன்மா னத்தை

                அடகுவைத்துத் திரிகின்ற இனமா நாமும்?

குடியாட்சி மாண்புதனை முடிந்த மட்டும்

                குழிதோண்டிப் புதைக்கின்ற கொடுமை என்னே!

அடியாட்கள், அதிகாரம் வரம்பு மீற

                அந்நாளின் உரிமையெலாம் பறித்தல் கண்டும்

நடிப்பாரை மிகநம்பிக் கெட்டார்; நாட்டின்

                நடப்பினையே உணராமல் தவிக்க லானார்!

 

தமிழகத்தைப் பாலைவனம் ஆக்கு தற்கே

                தடித்தனமாய் வடவரிங்கே முயலு கின்றார்;

தமிழரையே விலைகொடுத்து வாங்கு தற்கே

                தன்மானம் இல்லாரைத் தேடிக் கண்டு

தமிழ்நாட்டை வளைத்துவிட எண்ணு கின்றார்

                தக்கைகளா வெள்ளத்தைத் தடுக்கும்? நெஞ்சம்

நிமிர்ந்தெழுந்தே நெருப்பாகும்; நரிக்கூட் டத்தை

                நெருங்காமல் கதிகலங்க விரட்டு வார்கள்!

 

குற்றங்கள் இழைத்துவரும் கொடியர் தம்மைக்

                கூலிகளாய் வாலாட்டும் ஏவல் நாயாய்

முற்றாகத் தலையாட்டிப் பொம்மை யாக்கி

                முன்னேற்றக் கதவுகளை மூடி விட்டார்;

குற்றுமியை, நெற்பதரைத் துணையாய்க் கொண்டு

                குளிர்காய எண்ணுகிறார்; பெரியார் மண்ணில்

வெற்றர்தம் கனவனைத்தும் விழலுக்கு நீராகும்;

                வெள்ளாடா வேங்கையினை வீழ்த்தும்; வெல்லும்?

 – முனைவர் கடவூர் மணிமாறன்

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *