– முனைவர். ப. ஆசைத்தம்பி
இந்தியா முழுவதும்
நத்தையாக நகர்ந்து வந்த
ரத யாத்திரை
ராக்கெட்டாகப் பறந்தால்
அது பெரியார் மண்…
சரஸ்வதியின் தந்தை பிரம்மன் – ஆனால்
பிரம்மனின் மனைவி சரஸ்வதி
எப்படி என்ற பெரியாரின் கேள்வித் தீ
இன்னும் அணையாத் தீயாக ஆர்ப்பரிக்கிறது.
பெரியாரின் கேள்வித் தீயில் சாம்பலான
கும்பல்
தமிழருக்கும் திராவிடத்திற்கும்
சிண்டு முடிக்கிறது.
இது வரை
தமிழர்களை
எதிரிகள் வீழ்த்தியதில்லை.
துரோகிகளே வீழ்த்தியிருக்கிறார்கள்.
துரோகத்தைத் தூள் தூளாக்குவோம் – பெரியாரைத்
தோள் மேல் தூக்குவோம்
பெரியார் இன்னும் தேவைப்படுகிறார்
ஏன் தெரியுமா?
கருவறையில் காணாமல் போன
தங்கப் பொம்மைகள்
அர்ச்சகர்களின் அலமாரிகளில்
குலுங்கிச் சிரிக்கிறது
குபேரப் பொம்மைகளாய்!
எவரெஸ்டைத் தாண்டியவனும்
எங்களூர் மேலத் தெருவைத்
தாண்டமுடியவில்லை.
இனி நாட்டை
அம்பேத்கர், பெரியார் என்ற
இரு பிடி இல்லாமல்
ஒரு அடி கூட முன்னேற்ற முடியாது…
என்ன செய்தார் பெரியார்
என்று கேட்பவர்களுக்கு
ஒரே பதில்
‘பெரியார்’ என்று சொல்லிப்பார்!
நாடாளுமன்றமே நடுங்குகிறது…
140 ஆண்டுகள் ஆகியும்
ஒரு பெயர்ச்சொல்லே
வில்லம்பாய்ப் பாய்கிறது
என்றால்
அது
பிறப்பு அல்ல
இந்தியாவின் சிறப்பு…
Leave a Reply