கோவி.லெனின்
அந்தக் கிழவர் எப்படி உருப்பெருக்கும் ஆடியைக் கையில் வைத்துக் கொண்டு, தாளில் அச்சிடப்பட்டிருந்த வார்த்தைகளுக்கு இடையில் உள்ள உண்மையான அர்த்தத்தைத் தேடிக் கண்டடைந்து மக்களிடம் விளக்கி, தெளிவுபடுத்தினாரோ, அதுபோலவே அந்தக் கிழவரின் தொண்டறத்தை – சிந்தனையை – செயல்பாடுகளை இன்றைய காலக் கண்ணாடி கொண்டு கச்சிதமாகக் கவனித்து, அதிலிருந்து சமூகநீதிக்கும் மானுடநேயத்திற்குமான கருத்துகளைத் தேர்வு செய்து மனிதகுல எதிரிகளை நோக்கி எறிகணையாக வீசுகிறார்கள் இளைஞர்கள்.
கறுப்புச் சட்டை அணிந்திருக்கும் அந்த இளைஞர்கள் அத்தனை பேரும் திராவிடர் கழகத்தின் உறுப்பினர்களாக இருப்பதில்லை. திராவிடர் கழகத்திலிருந்து ‘விரிந்த’ இயக்கங்களில் இருப்பவர்கள் என்றும் உறுதியாகச் சொல்லிவிட முடியாது. மக்களின் உரிமைக்காகப் பாடுபடும் வேறு சில அமைப்புகளில் இருக்கலாம்; இல்லாமலும் இருக்கலாம்; அவர்கள் அத்தனை பேருக்குள்ளும் பெரியார் இருக்கிறார் என்பதே உண்மை.
மாவலி சக்கரவர்த்தி தங்களைக் காண வருகிறார் என்ற புராண நம்பிக்கைப்படி கேரளாவில் கொண்டாடப்படுகிற ஓணம் திருநாளை, வாமன அவதார நாளாகக் கொண்டாட வேண்டும் என்று பா.ஜ.க.வின் இன்றைய தலைவர் அருளுரை வழங்கியபோது, இது திராவிட மண். உங்கள் கருத்தை இங்கே திணிக்காதீர்கள் என்று திருப்பியடித்த மலையாள மண்ணின் சிந்தனையாளர்களிடம் எதிரொலித்தது பெரியாரின் குரல்.
டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களில் தொடங்கி, சென்னை அய்.அய்.டி மாணவர்கள் வரை பெரியார் பேசப்படுகிறார்; எடுத்துக்காட்டாக முன்வைக்கப்படுகிறார்; இன்றைய அரசியல் சூழலில் அவசியப்படுகிறார். அதன் விளைவுதான் – இந்தியாவின் பல மாநிலங்களில் உள்ள இளைஞர்களிடமும் கடல் கடந்து அமெரிக்கா வரையிலும் பரவியுள்ள அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம்.
போதை தலைக்கேறியவருக்கும், நஞ்சு கலந்த உணவை உண்டவருக்கும் அதனை முறிப்பதற்கு மூலிகைச்சாறு கொடுக்கப்படுவது வழக்கம். இந்தியாவில் ஜனநாயகத்தின் வாசல்வழியே சனாதனம் நுழைந்து அதிகாரப் பீடத்தில் அமர்ந்திருக்கிற நிலையில், அந்த அதிகாரத்தில் இருப்பவர்களின் தலையில் ஏறிய போதையையும், அவர்களால் ஆட்டிவைக்கப் படுகிறவர்களின் மனதில் கலந்துள்ள நஞ்சையும் முறியடிக்கும் வித்தகம் நிறைந்த தத்துவ மூலிகை பெரியார் என்பதை இளைஞர்கள் அறிந்திருக்கின்றனர்.
ஆரிய வழி அரசியல் அதிகாரம் – பிறப்பால் மனிதர்களைப் பேதப்படுத்துகிறது; பெரியாரின் தத்துவம் – வள்ளுவர் வழியில் ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்கிறது. ஆரிய வழி அரசியல் – ‘ஒரு மதம் மட்டுமே நிலைகொள்ள வேண்டும்’ என காய் நகர்த்துகிறது. பெரியாரின் தத்துவம் – ‘மனிதர்களுக்கு மதம் பிடிக்க வேண்டாம்’ என மனிதத்தை வலியுறுத்துகிறது.
ஆரிய வழி அரசியல் – தான் விரும்புகிற ஒற்றை மதத்திற்குள் ஆயிரக்கணக்கில் ஜாதிகள் இருப்பதைக் கட்டிக் காக்க விரும்புகிறது. பெரியாரின் தத்துவம் – ஜாதியை ஒழித்து சமூக விடுதலை காண நினைக்கிறது.
ஆரிய வழி அரசியல் – கடவுளின் பெயரால் கலகங்களை விளைவித்து, ரத்தம் குடித்து தாகம் தணிக்க நினைக்கிறது. பெரியாரின் தத்துவம் – கடவுளை மறந்து மனிதனை நினைக்கும் வழியைக் காட்டுகிறது. ஆரிய வழி அரசியல் – ஒவ்வொருவரையும் நீ இன்ன உணவுதான் சாப்பிட வேண்டும்; நாங்கள் விரும்பாததை நீ சாப்பிட்டால் அடித்துக் கொல்லுவோம் என உயிரைப் பறிக்கிறது. பெரியாரின் தத்துவம் – அவரவர் உடல் நலனுக்கும் வருவாய்க்கும் ஏற்ற உணவை உண்ணுகிற உரிமையை வலியுறுத்துகிறது.
ஆரிய வழி அரசியல் – பெண்களின் உரிமைகளை ஒடுக்குகிறது. பெரியாரின் தத்துவம் – ஆண்-பெண் என்கிற பாலின வேறுபாட்டைக் கடந்து பெண்களின் உரிமைகளை வென்றெடுக்கத் துணை நிற்கிறது.
ஆரிய வழி அரசியல் – ஒற்றை மொழியைத் திணித்து, மற்ற மொழிகளையும் அவற்றின் பண்பாட்டையும் சிதைக்கும் வகையில் செயல்படுகிறது. பெரியாரின் தத்துவம் – ஆதிக்க மொழிகளுக்கு எதிரான போர்முறையைக் கற்றுத் தருகிறது.
ஆரிய வழி அரசியல் – ஆன்மிகம் பேசிக்கொண்டே வழிபாட்டு உரிமைகளில் பேதம் கற்பிக்கிறது. பெரியாரின் தத்துவம் – நாத்திகம் பேசியபடியே, எல்லோருக்குமான வழிபாட்டு முறையை வலியுறுத்துகிறது.
சுருங்கச் சொன்னால், ஆரிய வழி அரசியல் மனிதர்களைக் கூறு போடுகிறது. பெரியாரின் தத்துவம் மானுட சமுதாயத்தை ஒருங்கிணைக்கிறது. அதனால்தான், சனாதன சக்திகளுக்கு எதிரான உரிமைப் போராட்டத்தில் இணைந்து நிற்கும் இளைஞர்கள், பெரியாரைத் துணைக் கொள்கின்றனர். பெரியாரின் கையில் இருந்த நுண் ஆடி போல இளைஞர்கள் தங்கள் சிந்தனைப் பார்வையைக் கூர்மையாக்கி, பகுத்தறிவு- சுயமரியாதைச் சிந்தனை வழியே, சமூக நீதியையும் மனித உரிமைகளையும் நிலைநாட்ட முயற்சிக்கின்றனர். மனுநீதிக்கு எதிராகத் திருக்குறளையும், விநாயகருக்கு எதிராகப் புத்தரையும், சமஸ்கிருதத்திற்கு எதிராக தமிழையும், ஆரியத்திற்கு எதிராக திராவிடத்தையும் நிறுத்துகிற இளைஞர்களின் வலிமையை சமூக வலைத்தளங்களிலும் போராட்டக் களங்களிலும் காண முடிகிறது. பெரியாரின் தத்துவங்களை எதிர்கொள்ள முடியாமல் அவருடைய தனிப்பட்ட வாழ்வு குறித்துக் கொச்சைப்படுத்த நினைக்கும் அவதூறு சக்திகளுக்கு பெரியாரின் அறிக்கைகளிலிருந்தே வார்த்தைகளை உருவி, திருப்பி அடிக்கும் சக்தியும் இளைஞர்களிடம் இருக்கிறது.
பெரியாரின் கைத்தடி இப்போது அவரது பேரன்களிடம் இருக்கிறது. பெரியார் உருவாக்கிய இயக்கம், பெரியார் பெயரிலான இயக்கங்கள், திராவிட அரசியல் அமைப்புகள் இவற்றையும் கடந்து பெரியாரின் தத்துவம் ஒட்டுமொத்த தமிழக அரசியலுக்கும் தலைமை தாங்குகிறது. 45 ஆண்டுகளுக்கு முன் இறப்பெய்திய பெரியாரை இன்றளவும் எதிர்கொள்ள முடியாமல், 40 ஆண்டுகளுக்கு முன் தண்ணீருக்குள் அமுக்கப்பட்ட அத்திவரதரை வெளியே எடுத்து அரசியல் செய்து பார்த்தது ஆரியம். பொருட்காட்சிக்கு வருவதுபோல மக்கள் வந்தார்கள். அவர்களுக்கு ஆன்மிக நம்பிக்கை உள்ள அளவுக்கு அரசியல் தெளிவும் உண்டு. அத்திவரதர் மீண்டும் அமுக்கப்பட்ட குளத்தில்கூட தாமரை மலர்வதற்கு தமிழ்நாட்டு மக்கள் உதவப் போவதில்லை.
அத்திவரதரை கண்காட்சிக்கு வைத்தால் கூடுகிற மக்கள் கூட்டத்தார்தாம், தமிழ்நாடு முழுவதும் நடத்தப்படுகிற புத்தகக் காட்சியில் தங்கள் புத்திக்குத் தேவை என பெரியாரின் நூல்களை அதிகம் வாங்குகிறார்கள். அதிலும் குறிப்பாக இளைய சமுதாயத்தினர் பலரும் கட்சி – ஜாதி- மதங்களுக்கு அப்பாற்பட்டு பெரியாரைப் படித்தறிவதில் பேரார்வம் கொண்டிருப்பதைக் காண முடிகிறது. அவர்கள் பெரியாரைத் தங்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்கான வழிகாட்டியாகவும், பொதுநலன் சார்ந்த போராட்டங்களுக்கான ஆயுதமாகவும் கைக்கொள்கிறார்கள்.
‘பெரியாரின் பெருமை, அவரது சிலைகளில் அல்ல; மண்டைச் சுரப்பை உலகு தொழும் சிந்தனைகளில்தான்’ என்பதை இளைஞர்கள் அறிந்திருக்கும் அதேவேளையில், பெரியாரின் கொள்கைகளுக்கு நேரெதிரான கொள்கை கொண்ட கூட்டத்தார் பெரியாரைக் கொச்சைப்படுத்தும்போதும், ‘அவரது சிலைகளை உடைப்போம்‘ எனக் கொக்கரிக்கும் போதும் ஒட்டுமொத்த தமிழ்நாடும் காட்டுகின்ற எதிர்ப்பு, எதிரிகளைத் தெறித்தோட வைக்கிறது. அய்யய்யோ… நாங்கள் பெரியாரைப் பேசவில்லை. எங்களுக்குத் தெரியாமல் எங்கள் அட்மின் செய்த வேலை இது எனப் பம்ம வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு ஏற்படும் வகையில், பெரியார், இளைஞர்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார். இளைஞர்கள் எதிர்பார்ப்பது உரிமைகளுடன் கூடிய ஒருங்கிணைந்த வாழ்வு. அது ஆரியவழி அரசியலால் முடியாது. பெரியாரின் தத்துவத்தால்தான் முடியும் என்பதை உணர்ந்திருப்பதால், தமிழகம் கடந்து இந்தியாவின் திசையெங்கும் அதனைக் கொண்டு செல்லும் வலிமை, அறிவியல் சிந்தனையும் தொழில்நுட்ப ஆளுமையும் கொண்ட இளையதலைமுறைக்கு இருக்கிறது. அந்த மழையைத்தான் இந்திய மண்ணும் எதிர்பார்க்கிறது.