உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற புதிய வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளார் பி.வி.சிந்து. சுவிட்சர்லாந்தின் பாசெல் நகரில் நடைபெற்ற பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் ஜப்பானின் நசோமி ஒகுஹாராவை 21-7, 21-7 என நேர் செட் கணக்கில் வீழ்த்தி உலக சாம்பியனாக உருவெடுத்துள்ளார்.
2017 மற்றும் 2018இல் நடைபெற்ற இதே உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் சிந்து இறுதிப் போட்டி வரை முன்னேறி தோல்வியைத் தழுவிய நிலையில்தான் இந்த வெற்றியை தன்வசமாக்கியுள்ளார்.
“எங்களது வீட்டிலிருந்து டிரெய்னிங் சென்டருக்கு செல்ல 60 கிலோ மீட்டர் தூரம் வரை பயணம் செய்ய வேண்டும். காலை 3 மணிக்கெல்லாம் எழுந்து சென்றால்தான் முறையாகப் பயிற்சி செய்துவிட்டு, பள்ளிக்கும் உரிய நேரத்தில் செல்ல முடியும். அதனால் தினந்தோறும் அதிகாலை 3 மணிக்கு அலாரம் வைப்போம். ஆனால், அலாரம் அலறுவதற்குள் எழுந்து என்னையும், அவரையும் எழுப்பி விடுவதோடு, அவளது ஸ்போர்ட்ஸ் கிட்டை எடுத்து ரெடியாக வாசலில் வைத்து விடுவாள். தினந்தோறும் அவளது அப்பாவோடுதான் பயிற்சி மய்யம் செல்வாள்’’ என கூறுகிறார் சிந்துவின் தாயார் விஜயா.
வெற்றி, வெற்றி, வெற்றியை மட்டுமே தாரக மந்திரமாகக் கொண்டிருந்த சிந்து, சீனாவில் நடைபெற்ற உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் பதினெட்டு வயதிலேயே வெண்கலம் வென்றுள்ளார். 2014இல் மட்டும் சர்வதேச அளவிலான போட்டிகளில் ஆறு பதக்கங்களை வென்றார் சிந்து. அந்த வெற்றிதான், சிந்து 2016 ஒலிம்பிக் போட்டியில் விளையாடுவதற்கான அடித்தளமாக அமைந்தது.
“ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்கு சில மாதங்களுக்கு முன்னர் (2015) சிந்துவுக்கு காலில் காயம் பட்டுள்ளது. இரண்டு மாதமாக தீராத வலியால் துடித்துள்ளார். எங்களிடம் காயம்பட்ட விவரத்தைச் சொன்னால் பயிற்சிக்கு மறுத்துவிடுவோம் என்பதால் சொல்லாமல் இருந்துவிட்டாள். அதனால் சீக்கிரமாக ஆறவேண்டிய காயம் எலும்பு முறிவுவரை கொண்டு சென்றது. மருத்துவர்கள் நடக்கவே கூடாது என சொல்லிவிட்டதால் பயிற்சியும் ஆறு மாத காலம் தடைபட்டது. அதன் பின்னர் மீண்டெழுந்து ஒலிம்பிக் போட்டியில் அசத்த அயராமல் எட்டு மணி நேரம்வரை பயிற்சி செய்திருக்கிறாள். அதன் பிரதிபலன்தான் ரியோ ஒலிம்பிக்கில் அவள் வெள்ளி வெல்ல காரணமாக அமைந்தது. இப்போதும் அதே நம்பிக்கையோடுதான் அவள் பயிற்சி செய்து வருகிறாள்’’ என சிந்துவின் தாயார் விஜயா குறிப்பிடுகிறார்.
2016 ஒலிம்பிக் போட்டிக்குப் பிறகு பேட்மிண்டனில் அடுத்த உயரத்தை எட்ட முயற்சி செய்த சிந்துவுக்கு அந்த முயற்சி அவ்வளவு சுலபமாக எட்டவில்லை. எட்டுக்கும் மேற்பட்ட அனைத்துலக பேட்மிண்டன் தொடர்களில் ஒற்றையர் பிரிவில் இறுதிச் சுற்று வரை முன்னேறியும் வெள்ளிப்பதக்கம் பெற்றுத் தோல்வியைத் தழுவியிருந்தார்.
தொடர் பயிற்சி மூலம் 2019ஆம் ஆண்டு பேட்மிண்டன் வோர்ல்டு டூர் பைனல்ஸில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்னும் சாதனைக்குச் சொந்தக்காரரானார் சிந்து. அந்தத் தங்கப்பதக்கம் கொடுத்த நம்பிக்கையோடு அண்மையில் சுவிட்சர்லாந்தில் லேண்டான சிந்துவுக்கு ஆரம்பம் முதலே அமர்க்களமான வெற்றிதான். குரூப் சுற்றில் அசால்ட்டாக விளையாடிய சிந்து கால் இறுதி, அரை இறுதி அனைத்தையும் அசால்ட்டாக அடித்து நொறுக்கிவிட்டு இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இறுதிப் போட்டியில் மீண்டும் ஜப்பானின் நசோமி ஒகுஹாராவை எதிர்கொண்டு நேர் செட் கணக்கில் அவரை வீழ்த்தி சிந்து வெற்றி பெற்றார். உலகளவில் பேட்மிண்டனில் நாட்டின் தங்க மங்கையாக ஒளிர்கிறார் சிந்து.
தகவல் : சந்தோஷ்