கே: மாநில நீதி மன்றத்தில், அரசியல் சட்டத்தின் 348(2) பிரிவின்படி, மாநில ஆட்சி, சட்டத்தை இயற்றி, குடியரசுத் தலைவருக்கு அனுப்பினால் போதும் என்கிறபோது, நம் சென்னை உயர்நீதிமன்றத்தின் கருத்தால்தான் கூடுதல் வழக்கு மொழியான தமிழுக்குத் தடை ஏற்பட்டுள்ளது எனக் கூறப்படுவது பற்றி…
– சொர்ணம் வேங்கடம், ஊற்றங்கரை
ப: உண்மைதான். 348(2) பிரிவு தெளிவாகவே கூறுகிறது. மேலும் அதற்கு ஏற்படுவது சென்னை உயர்நீதிமன்றத்தின் கருத்தால்தான் என்பது சரியான கருத்தே. தமிழ் தெரியாத பிற மாநில நீதிபதிகளை மாற்றி உயர்நீதிமன்றங்களுக்குக் கொண்டு வருவதால் இப்பிரச்சினையில் சிக்கல். வழக்குகள் தேக்கத்திற்கும் அதுவே காரணம். காரணம், மாவட்ட அளவில் நீதிமன்றங்களில் தமிழில் (மாநில மொழியில்) சாட்சியப் பதிவுகள், தீர்ப்புகள் முதலியவை மொழி புரியாத நீதிபதியின் முன் விசாரணைக்கு வந்தால், அவருக்கேற்ப ஆங்கில மொழிபெயர்ப்பு தேவை. அல்லது தமிழ் தெரிந்த நீதிபதிகள் விசாரிக்காததே காலதாமதத்திற்கு இதுவும் ஒரு காரணம்.
நிருவாக ரீதியாக ஒவ்வொரு உயர்நீதிமன்றத்திலும் உள்ள நீதிபதிகள், நியமனத் தகுதி படைத்த வழக்குரைஞர்கள் இவர்களை புதிய, வெளிமாநில நீதிபதிகள் புரிந்து கொள்வதற்கே பல மாதங்கள் பிடிக்கின்றன. அப்போது அவர்கள் மாற்றப்படவும் செய்கின்றனர்! இந்திய ஒருமைப்பாட்டினை இதில் தேடக்கூடாது.
நிர்மலா சீதாராமன்
கே: இந்தியா பொருளாதாரத்தில் மோசமான சரிவைச் சந்தித்துள்ளது என்று நிபுணர்கள் கூறினாலும், வேகமாக முன்னேறி வருகிறது என்று நிர்மலா சீதாராமன் கூறுவது பொய்யின் உச்சகட்டம்தானே? இதுபற்றி…
– பெ.கூத்தன், சிங்கிபுரம்
ப: அதிலென்ன சந்தேகம்?- சூரியனை, கையை விரித்து கண் அருகே வைத்து மூடிவிடுவது போன்ற பேதைமை அது!
விஜய் மல்லையா
கே: பண முதலைகளுக்குக் கொடுக்கும் பெரும் கடன் – பாட்டாளி ஏழை எளியோர் மீது ஏற்றும் சுமைதானே?
– தி.கணபதி, சிதம்பரம்
ப: நாட்டின் கடன் சுமை அனைவர் மீதும் ஏற்றப்படும் சுமை என்பதை எவரே மறுக்க முடியும்?
கே: யுபிஎஸ்சி தேர்வில் இனி உளவியல் கேள்விகள் அதிகம் இருக்கும் என்பது, தேர்வாளர்களுக்குக் கடினமான ஒன்றாகும். தங்கள் கருத்து?
– மகிழ், சைதை
ப: அதற்கேற்ப உளவியல் பற்றி அதிக ஆயத்தம் அவர்கள் செய்து, தேர்வைச் சந்திப்பதைத் தவிர வேறு வழி என்ன?
கே: சேலத்தில் நடைபெற்ற திராவிடர் கழக பவள விழா மாநாட்டு வெற்றி எதனைக் காட்டுகிறது?
– நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்
ப: சமூக நீதி பற்றி தங்களது கருத்தில் ஆர்.எஸ்.எஸ். பல்டி அடித்துள்ளது பவள விழா மாநாட்டின் வெற்றி _ அறுவடைகளில் முதன்மையானது. பவள மாநாட்டின் வெற்றி _ பெரியார் என்றும் வாழ்கிறார் என்பதை எடுத்துக்காட்டுவதாகும் இது!
கே: மத்திய ரிசர்வ் வங்கியில் உள்ள கை இருப்புத் தொகையையும் எடுத்துச் செலவிடும் மத்திய அரசின் செய்கையால் ஏற்படும் பாதிப்புகள் யாவை?
– முகமது, மாதவரம்
ப: விதை நெல்லைச் சமைத்து விருந்து வைத்து மகிழ்வது போன்றது!
கல்வெட்டு
கே: பெரியாரின் கடவுள் மறுப்பு வாசகங்களை எதிர்த்த வழக்கு முதலில் உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட பின்பு மீண்டும் அது சார்ந்த வழக்கு அனுமதிக்கப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஒரு முறை தள்ளப்பட்ட வழக்கை உயர்நீதிமன்றம் மீண்டும் ஏற்று விசாரித்தது சட்டப்படி சரியா?
– பா.ஆறுமுகம், சேலம்
ப: இந்த வழக்கு பழைய வழக்கினின்று மாறுபட்டது. பெரியார் அப்படிச் சொல்லவில்லை. வீரமணிதான் அப்படி ஆக்கிவைத்தார் என்று ஆதாரமற்ற புகார் வழக்கு. வழக்குப் போட்டு, ஒரு நல்ல தீர்ப்பினை, அதுவும் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, வழங்கும்படி வைத்தது _ நம் இயக்கத்திற்குக் கிடைத்த மகத்தான வெற்றி _ கொள்கை விளம்பரமும்கூட!
கே: தமிழ்த் தேசியம் பேசுவோர்தான் இன எதிரிகளுக்கு பெரிதும் பயன்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு சரிதானே?
– ம.ஜோசப், காரப்பாக்கம்
ப: நம் இன எதிரிகளின் பொய்மான்கள்தான் இந்த பார்ப்பனியப் பாதுகாப்புத் தமிழ்த் தேசியங்கள்! புரிந்துகொள்ளுங்கள்! ஏமாற வேண்டாம்! தமிழை நீச்ச பாஷை _ சமஸ்கிருதம் தேவ பாஷை என்கிற பார்ப்பனப் பண்பாட்டை எந்தத் தமிழ்த் தேசியமும் எதிர்ப்பதில்லை. ஜாடையாக நழுவிவிடுகிறார்களே!