தந்தை பெரியார்
இந்த நாட்டின் இன்றைய கஷ்ட நிலைகளையும், அடிப்படைகளைப் பற்றியும் விளக்கினேன். இந்த நாட்டு மக்கள் மனதில் அறிவுத் தெளிவும், பகுத்தறிவும், இன்றைய சமுதாயத்திலே இருக்கிற பிறவி, உயர்வு _ தாழ்வு நிலைமை ஒழிகிற வரையில் இந்த நாட்டில் இருக்கிற கஷ்டங்களுக்குப் பரிகாரம் காண முடியாது என்பதை விளக்கினேன்.
அது மட்டுமல்ல; சிலர் கருதுகிறார்கள், சொல்லவும் செய்கிறார்கள் _ அரசியல் மாறுதல் ஏற்பட்டு விட்டால் இந்த நிலைமை மாறிவிடும் என்று.
நான் சொல்லுகிறேன்: அரசியல் மாறுதல் ஏற்பட்டு விட்டால் மட்டுமே இந்த நிலைமை மாறிவிடாது; முடியாது.
500 வருட காலம் போல இந்த நாட்டை முஸ்லிம் ஆண்டான்; அந்த ஆட்சியின் காரணமாகப் பல கோயில்களை இடித்து உதவி பண்ணினான். 6 கோடி மக்களை இந்தக் கேடுகெட்ட இந்து மதத்திலிருந்து விலக்கி இஸ்லாத்தில் சேர்த்தான். இதனாலே என்ன லாபம் என்று கேட்டால், ஓர் இந்து எனப்படுபவன், இந்து சமுதாயத்தின்படி பிறவி கீழ் ஜாதி மகனாக, சூத்திரனாக, பஞ்சமனாக சட்டத்திலும் நடப்பிலும் கருதப்படுகிற மகன் ஒரு முஸ்லிமாகவோ, கிறிஸ்துவனாகவோ மாறிவிட்டானேயானால், அவனுடைய கீழ் ஜாதித் தன்மை, சூத்திரப்பட்டம் ஒழிந்து அவனும் மற்றவர்களைப் போல் மனிதன் என்கிற பட்டியலில் இடம் பெறுகிறான். இந்த ஞான பூமி என்கிறதிலே தோன்றிய ஞான மதம் என்கிற இந்து மதத்தைத் தவிர, வேறு எந்த நாட்டிலும், எந்த மதத்திலும் இந்தப் பிறவி ஜாதி, பேதம், உயர்வு தாழ்வு கிடையாதே!
அதுபோலவே முஸ்லிமுக்குப் பிறகு வெள்ளைக்காரன் வந்தான். அவனுடைய ஆட்சியினாலும் மக்களுக்குச் சமுதாயத்துறை விழிப்பு உணர்ச்சியும், நாகரிகமும், மேல்நாட்டு அறிவும், விஞ்ஞான வளர்ச்சியும் ஏற்பட்டன. ஏதோ 30, 40 லட்சம் பேர்கள் பிறவி பேதமில்லாத கிறிஸ்துவர்களாக மாறினார்கள்.
இப்போது என்ன ஆயிற்று? வெள்ளையன் ஆட்சியில் பெரிய அரசியல் புரட்சி ஏற்பட்டு, பெரிய அரசியல் மாற்றத்தைச் செய்தோம். வெள்ளைக்காரன் நமக்கு அரசன் மட்டுமல்ல; அரசர்க்கெல்லாம் அரசர் என்று சொல்லப்படுகிற சக்கரவர்த்தியாக இருந்தார். அதாவது Emperor of India ஆக இருந்து வந்தார். இதை நாம் நமக்கு ஒரு அவமானகரமான காரியமாகக் கருதினோம். ராஜாகூட அல்ல சக்கரவர்த்தியே நமக்குக் கூடாது என்பதாகக் கருதி, அதற்கு ஆகப் போராடினோம். சக்கரவர்த்தியை ஒழித்தோம். அது மட்டுமல்ல; இந்தியாவிலே இருந்த 563 சுதேச சமஸ்தானங்களும் அவற்றின் ராஜாக்களும் அவர்களின் அதிகாரங்களும் ஒழிக்கப்பட்டு, அவர்கள் வெறும் இஸ்பேட் ராஜாக்களாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள். இன்று இந்த நாட்டில் மருந்துக்குக் கூட அரசன் இல்லை.
உலகம் தோன்றிய காலந்தொட்டு நீங்கள் எடுத்துக் கொண்டால் இந்த அரசர்கள் என்பவர்கள் இருப்பார்கள்; எந்தக் கதை, இலக்கியத்தைப் பார்த்தாலும் ஒரு நாடு, நாட்டு மக்கள், அதை ஆளுகிற அரசன் என்பதாகத்தான் இருக்கும். இப்படி உலக வரலாறு ஆரம்ப காலத்திலிருந்து இருந்துவந்த அரசர்கள் இந்த ஒரு 50 வருடகால உணர்ச்சிக்குள் ஒழிக்கப்பட்டார்கள். இன்று இந்நாட்டில் அரசர்களே கிடையாது. இது விளையாட்டான காரியமல்ல; 563 சமஸ்தானங்களுக்குமேல் இருந்த அரசர்கள் ஒழிக்கப்பட்டார்கள். சக்கரவர்த்தி ஒழிக்கப்பட்டார். தனிமனித ஏகாதிபத்தியமான அரசும், அரசுரிமையும் ஒழிக்கப்பட்டு, மக்கள் ஆட்சி அமைக்கப்பட்டது என்று சொல்லப்படுகிறதே. அவ்வளவு மகத்தான புரட்சி நடைபெற்றும் இந்த நாட்டில் நமக்கு ஏதாவது காரியம் நடைபெற்றதா? நடைபெற்றது என்னமோ பெரிய அரசியல் புரட்சியாக இருந்தாலும் மக்களுக்கு இன்ன காரியம் ஏற்பட்டது என்று எதையாவது சொல்லக்கூடிய முறையில் ஏதாவது பலன் ஏற்பட்டதா என்றால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இன்னும் சொல்ல வேண்டுமானால் வெள்ளைக்காரன் காலத்தில், முஸ்லிம்கள் காலத்தில் இந்த நாட்டில், நாட்டுக்கு என்னென்ன நன்மைகள், லாபகரங்கள் ஏற்பட்டனவோ, சமுதாய உரிமைகள் கொடுக்கப்பட்டனவோ, அவைகள் எல்லாம் இன்று ஒழிக்கப்பட்டு வருகின்றன. பழையகால மனு, மாந்தாத காலத் தன்மைக்கு நிலைமை போய்க்கொண்டிருக்கிறது.
563 சமஸ்தானங்களையும் ஒழித்து, கொடி பறக்க விட்டிருக்கிறோம். பார்ப்பான் ஒழிந்தானா? பறையன் ஒழிந்தானா? அதற்கு மாறாக வாழவைக்கப்படுகிறதே இந்தச் ஜாதி அமைப்பு முறை?
இதிலிருந்து என்ன தெரிகிறது? அரசியல் மாறுதல் ஏற்பட்டாலும், அரசன், சக்கரவர்த்தி என்பவர்கள் ஒழிக்கப்பட்டால் மட்டுமே போதாது. அதனால் மட்டுமே இந்தப் பேதமும், தொல்லையும் ஒழிந்துவிடமாட்டா. இந்தப் பேதங்கள் எந்த அஸ்திவாரங்களின் மேல், ஆதாரங்களின் மேல் கட்டப்பட்டு, நிலைநிற்கின்றனவோ, அந்த அஸ்திவாரங்களான கடவுளையும் மதத்தையும், சாஸ்திரத்தையும் அடியோடு ஒழித்து ஒரு மாபெரும் சமுதாயப் புரட்சி செய்தால்தான் இன்றைய பேதங்கள், அவைகளின் காரணமான தொல்லைகள் தீரும்; ஒழியும்.
இன்றைய சமுதாயத்தின் 100க்கு 97 பேருக்கு அவர்களின் வாழ்வுக்கு, நலத்திற்கு, உயர்வுக்குச் சமுதாயப் புரட்சி மிக மிகத் தேவைப்படுகிறது.
– விடுதலை 7.5.1953