முகப்புக் கட்டுரை : உலகமே கொண்டாடும் பெரியாரின் 141 ஆம் பிறந்த நாள் விழா!

செப்டம்பர் 16-30 2019

பேசு சுயமரியாதை புதுவுலகு காண்போம்!

மஞ்சை வசந்தன்

தந்தை பெரியார் தொடக்கப்பள்ளி படிப்பையே முழுமையாக முடிக்காதவர். ஆனால், அவர் அளித்த அரிய சிந்தனைகள், தீர்வுகள், பிரச்சாரங்கள், போராட்டங்கள், வெற்றிகள் ஏராளம் என்பதோடு, எவரும் செய்யாதவை; செய்ய முடியாதவை.

நான்காம் வகுப்பு படித்த பெரியாரின் சிந்தனைகளை, போராட்டங்களை, பிரச்சாரக் கருத்துகளை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றோர் பலர். பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் கூறியதுபோல, அவரது மண்டைச் சுரப்பை இன்று உலகம் ஏற்கிறது. அவரது சிந்தனைகள் உலகமெங்கும் பரவி வருகின்றன. தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சொல்வதுபோல் பெரியார் உலகமயமாகி வருகிறார்.

உலகெங்கும் பெரியார் சிந்தனைகளைப் பேசும் கருத்தரங்குகள் மாநாடுகள் கடந்த சில ஆண்டுகளாகவே நடந்து வருகின்றன. அந்த விவரங்களை உண்மை இதழ்களில் நாம் விரிவாக முன்பு பதிவு செய்துள்ளோம்.

ஆண்டுக்கு ஆண்டு அகிலமெங்கும் நடக்கும் பெரியார் விழாக்களும், பெரியார் சிந்தனைகளை விவாதிக்கும் கருத்தரங்குகளும் அதிகரித்து வருவது ஆசிரியரின் கணிப்பை உறுதி செய்கின்றன.

கடந்த சில ஆண்டுகளாக உலகெங்கும் நடைபெற்ற பெரியார் விழாக்களை தொகுத்து நோக்கினால், இந்த உண்மையும், சிறப்பும் தெளிவாய் விளங்கும் .

2017 ஆம் ஆண்டு நடந்தவை

வட அமெரிக்காவில்…

சுயமரியாதை பயின்றோர் செல்லுமிட மெல்லாம் சிறப்பு! புலம்பெயர்ந்து சென்றாலும் தன் பாதை மாறாது நடப்பவர்கள் தந்தை பெரியாரின் பிள்ளைகள். வட அமெரிக்கா வாழ் தமிழ் மக்களை ஒருங்கிணைத்து வழி நடத்திச் செல்லும் அமைப்பு வட அமெரிக்கா தமிழ்ச் சங்கப் பேரவை. இந்த அமைப்பு ஆண்டு தோறும் பேரவை தமிழ் விழா என வட அமெரிக்காவில் வாழும் அனைவரும் பங்கேற்கும் நிகழ்வை நடத்தி வருகிறது.

தமிழர் வாழ்வியல் பற்றியும், உயர்வு குறித்தும், சிந்தித்தும், பேசியும் தன் வாழ்நாள் முழுதும் பணி செய்து தமிழர் நெஞ்சங்களில் நீங்காது வாழும் தந்தை பெரியார் அவர்களைப்  போற்றாத தமிழர் இல்லை; தமிழர் விழா இல்லை. இந்த மாபெரும் விழாவும் அதனைப் பின்பற்றியது. தந்தை பெரியார் பன்னாட்டு அமைப்பின் சார்பாக ஓர் இணையரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டு சீரோடும் சிறப்போடும் நடைபெற்றது. தேனைத் தேடி வரும் வண்டாக பகுத்தறிவு பயில தோழர்கள் பலர் திரண்டு வந்திருந்தனர். தந்தை பெரியார் பன்னாட்டு அமைப்பின் தலைவர் மானமிகு. மருத்துவர் சோம. இளங்கோவன் அனைவரையும் வரவேற்று, கருத்தரங்கக் கலந்துரையாடலை துவக்கி வைத்தார்.

இந்த இனிய நிகழ்வில் பேராசிரியர் உல்ரிக் நிக்லஸ், கவிஞர் அறிவுமதி, ஓவியர் மருது, பதிப்பாளர் ஒளிவண்ணன், பேரவை விழா ஒருங்கிணைப்பாளர் கால்டுவெல் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

அமெரிக்கா  கலிபோர்னியா

தந்தை பெரியாரின் 139 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவினை சேன்ஓஸ் பல்கலைக்கழக டாக்டர் மார்டின் லூதர் கிங் நூலக அரங்கில் பெரியார் பன்னாட்டமைப்பு, கலிபோர்னியா கிளை, பி.ஆர்.அம்பேத்கர் சீக்கியர் அமைப்பு, இந்திய சிறுபான்மையினர் கழகம், அம்பேத்கர் கிங்  படிப்பு வட்டம் ஆகிய அமைப்புகள் இணைந்து  பெரியாரின் சுயமரியாதை இயக்கம், மனித நேயம் (‘PERIYAR’S SELF-RESPECT & HUMANISM) எனும்  கருத்துரை நிகழ்வாக நடத்தியது.

வாசிங்டன்

17.09.2017 அன்று பெரியார் பன்னாட்டு மய்யத்தின் சார்பில் வாசிங்டன் வட்டாரத்தில் நடைபெற்ற தந்தை பெரியாரின் 139 ஆவது பிறந்தநாள் விழா வெர்ஜினியா, மேரிலாந்து, நியுஜெர்சி, பென்சில்வேனியா மாநிலங்களின் தமிழர்கள் பெருமளவில் கலந்துகொள்ள சிறப்புடன் நடைபெற்றது.

மருத்துவர் சோம.இளங்கோவன், முனைவர் சங்கரபாண்டி, வழக்குரைஞர் கனிமொழி, முனைவர் ஜெயந்தி சங்கரபாண்டி, பெங்களூரு குமரன், கிளாரா பீட்டர், சரோஜா இளங்கோவன், நாஞ்சில் பீட்டர், வாசிங்டன் தமிழ்ச் சங்கத்தலைவர் ராஜாராம் ஆகியோரின் உரைகளைத் தொடர்ந்து தமிழகக்  கவிஞர் நந்தலாலா சிறப்புரை ஆற்றினார்.

மிச்சிகன்

பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம்  அமெரிக்கா சார்பாக பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பிறந்தநாள் விழாவினை  மிச்சிகன் மாநிலத்தில் ஆபர்ன் ஹில்ஸ் நகரில் ‘யார் பெரியார்?’ ‘நான் பெரியார் பேசுகிறேன்!,’ ‘பெரியாரின் சமூகப் புரட்சி’, ‘பெரியாரின் பெண்ணியம் ஆகிய தலைப்புகளில் மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி நடத்தி பெரியார் – அம்பேத்கர் படிப்பு வட்ட உறுப்பினர்கள், அவர்தம் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மற்றும்  பெரியாரியல் கருத்தியலில் ஆர்வமுடைய பெருமக்கள் பங்கேற்க சிறப்புடன் கொண்டாடப்பட்டது.

நியூஜெர்சி

23.09.2017 அன்று அமெரிக்கா  நியூஜெர்சியில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவினை  பெரியார் – அம்பேத்கர் படிப்பு வட்ட தோழர்கள் சிறப்பாக ஒருங்கிணைத்தனர். பெரியார் பன்னாட்டு அமைப்பின் தலைவர் மருத்துவர் சோம.இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது.

சிகாகோ

சிகாகோ அருகில் உள்ள ப்ராஸ்பெக்ட் ஹெய்ட்ஸ்(Prospect Heights) எனும் நகரில் தந்தை பெரியாரின் 139ஆம் ஆண்டு பிறந்த நாள் மற்றும் அறிஞர் அண்ணா அவர்களின் 108ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா 28.09.2017 அன்று தந்தை பெரியார் பன்னாட்டு மய்யச் செயலாளர் அருள்செல்வி பாலு அவர்களின் வரவேற்புரையுடன் தொடங்கியது.

திராவிட இயக்கத் தமிழர் பேரவைப் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், கவிஞர் நந்தலாலா தங்களின் உரையினைப் பகிர்ந்திருந்தனர்.

அமெரிக்கா  கனெக்டிகட்டில்

தந்தை பெரியார் பிறந்தநாள் விழா 30.09.2017 அன்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. தோழர்கள் சுரேஷ் (வரவேற்புரை) சபரீஷ், பிரபு. ராமகிருஷ்ணன், சிவப்பிரியா, அஜோய்(வினாடி-வினா), வழக்குரைஞர் கனிமொழி, மருத்துவர் சரோஜா இளங்கோவன், பெரியார் பன்னாட்டு மய்யத்தின் தலைவர் மருத்துவர் சோம.இளங்கோவன், சாக்ரடீஸ் (நன்றியுரை) ஆகியோர் உரை ஆற்றினர்.

தென் ஆப்பிரிக்க கானாவில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா!

பன்னாட்டளவில் அதிகாரமளித்தல் மற்றும் மனிதநேயம், சமத்துவம் வழிகளில் தந்தை பெரியார் கொள்கைகளைப் பின்பற்றி நடக்கும் பெரியார் ஆப்பிரிக்கன் பவுண்டேசன் கானாவில் தந்தை பெரியார் பிறந்தநாள் நிகழ்வு சிறப்பாக நடந்தது.

சிங்கப்பூர்

சிங்கப்பூர் சையத் ஆல்வி சாலையில் உள்ள ஆனந்த பவன் உணவகத்தின் அரங்கில் தந்தை பெரியாரின் 139 ஆம் பிறந்தநாள் விழா வீ.கலைச்செல்வம் (தலைவர்) அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

பினாங்கு

பினாங்கு மாநிலத்தில் மலேசிய திராவிடர் கழக மாநிலத் தலைவர் ச.த.அண்ணாமலை தலைமையில் பெரியார் பிறந்தநாள் விழா நடைபெற்றது.

மலாக்கா

மாநில தேகேல் பொது அரங்கில் ம.தி.க மாநில துணைத் தலைவர் கு.பீட்டர் தலைமையில் பெம்பான் சட்ட மன்ற உறுப்பினர் டத்தோ எங் சூன் கூன் அவர்களின் சிறப்பு அதிகாரி புவான் சித்தி சலேகா, ம.தி.க பொதுச் செயலாளர் பொன். பொன்வாசகம் ஆகியோர் உரையாற்றினர்.

சிலாங்கூர்

சிலாங்கூர் மாநில இளைஞர், மகளிர் ஏற்பாட்டில் நடைபெற்ற பெரியார் பிறந்தநாள் விழா மாநில இளைஞர் பிரிவுத் தலைவர் கு.கோபி அவர்கள் தலைமையில் நாடகம், கவிதைகள், பாடல்கள், கட்டுரைகள் மாணவர்கள் படைத்தனர். கழகத்தின் தேசியத் தலைவர் எப். காந்தராஜ் சிறப்புரை ஆற்றினார்.

தைவானில் பெரியாரின் பெண் விடுதலைச் சிந்தனைக் குரல்

தைவான் தமிழ்ச் சங்கத்தின் 4ஆம் ஆண்டு விழா இலக்கிய அமர்வு 26.12.2017 அன்று நடைபெற்றது. அதில் ‘பெரியாரின் பெண் விடுதலைச் சிந்தனைகள்’ என்ற தலைப்பில் தேசிய சிங்ஹுவா பல்கலைக்கழத்தின் முனைவர் பட்ட மாணவி செல்வி பவித்ரா ஸ்ரீராம் பேசினார்.

இந்தியாவின் பிற மாநிலங்களில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா

மும்பை திராவிடர் கழகத்தின் சார்பில் தாராவி கலைஞர் மாளிகையில் தலைவர் பெ.கணேசன் தலைமையில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா நடைபெற்றது. செயலாளர் இ.அந்தோணி வரவேற்புரையும், பகுத்தறிவாளர் கழகத் தலைவர் அ.இரவிச்சந்திரன் தொடக்க உரையும் ஆற்றினர். பொருளாளர் அ.கண்ணன், பல்வேறு அமைப்பின் பொறுப்பாளர்கள், தமிழ் லெமூரியா இதழாசிரியர் சு.குமணராசன் ஆகியோர் உரையாற்றினர். செ.ரோபின் நன்றி கூறினார்.

பெங்களூரு

பெங்களூரு பெரியார் மய்யம், தலைவர் கி.வீரமணி அரங்கில் கருநாடக மாநில திராவிடர் கழகத் தலைவர் மு.ஜானகிராமன் தலைமையில் நடைபெற்றது.

கேரளா

வைக்கம்  தந்தை பெரியார் நினைவகத்தில் சேர்தலா அருகிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பொறியாளர்கள் இரா.சு.பாஸ்கர், மனோரஞ்சித், மணிகண்டன்,சிலம்பரசன், ரஞ்சித் ஆகியோர் தந்தை பெரியார் சிலைக்கு மலர்மாலை அணிவித்து உறுதிமொழி ஏற்றனர்.

ஆந்திரா மற்றும் தெலங்கானா

ஜி.டி.சாரய்யாவை தலைவராகக் கொண்டு இயங்கி வரும் பிரஜா நாஸ்திக சமாஜம் சார்பில் ஆந்திராவின் ராயலசீமா மற்றும் தெலங்கானாவின் விசாகபட்டினம், கரீம் நகர், உசாராபாத், பெல்லம்பள்ளி, வாராங்கல் மாவட்டங்களில் பவேறு கிராமங்களில் பெரியார் பிறந்த நாள் விழாவினை தெருமுனையில்  கொண்டாடினர்.

விசாகப்பட்டினம்

செப்டம்பர் 15,16,17 தேதிகளில் இந்திய நாத்திக சங்கம் சார்பில் விசாகப்பட்டினம் அம்பேத்கர் பவனில் பொதுக்கூட்டம், பேரணி, பெரியார், அறிவியலுக்கான ஓட்டம் என நிகழ்ச்சிகள் நடந்தேறின.

மேலே காட்டியவை சில நிகழ்வுகள் மட்டுமே. இதுபோன்று எத்தனையோ எழுச்சிமிகு நிகழ்வுகள் உலகெங்கும் ஒவ்வொரு நாளும் நடந்தவண்ணம் உள்ளன என்பதே உண்மை.

காரணம், பெரியார் ஒரு குறிப்பிட்ட இனம், மொழி, நாடு, பண்பாட்டுக்கு உரியவர் அல்லர்! அவர் உலகம் உய்ய, உலகில் சமத்துவம் நிலைபெற, மனிதம் தழைக்க, மனித உரிமை காப்பாற்றப்பட பாடுபட்ட, போராடிய, புரட்சி செய்த உலகத் தலைவர்! அவர் உலகெங்கும் பரவுவார்; பயன்படுவார்.

ஜெர்மன் மாநாடு 27,28,29 – 2017

ஜெர்மனி –_ கொலோன் பல்கலைக் கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட பெரியார் சுயமரியாதை இயக்கப் பன்னாட்டு மாநாட்டின் தொடக்க விழா 27.07.2017 அன்று மாலை 4:30 மணிக்கு (இந்திய நேரப்படி இரவு 8 மணி) எழுச்சியுடன் துவங்கியது.

வரவேற்புரை

மாநாட்டினை நடத்திடும் அமெரிக்க பெரியார் பன்னாட்டு மய்யத்தின் ஜெர்மனி நாட்டு கிளையின் தலைவர் பேராசிரியர் டாக்டர் உல்ரிக் நிக்லஸ் மாநாட்டுக்கு வருகை தந்தோர் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

தொடக்க உரை

லண்டன் நகர கிராய்டன் மாநகராட்சியின் துணை மேயர் வணக்கத்திற்குரிய மைக்கேல் செல்வநாயகம் மாநாட்டைத் திறந்துவைத்து சிறப்பானதொரு உரையினை வழங்கினார்.

புத்தகங்கள் வெளியீடு

பன்னாட்டு மாநாட்டில் வெளியிட ஜெர்மன் மொழியாக்கத்தில் இரண்டு நூல்களும், மூன்று ஆங்கில நூல்களும் அச்சிடப்பட்டன. கடவுளும் மனிதனும் (Gott und Mensch) எனும் தந்தை பெரியாரின் தமிழ் உரையினை உள்ளடக்கிய நூலினை கொலோன் பல்கலைக் கழகத் தமிழ் ஆராய்ச்சி வல்லுநர் கிளாடியா வெப்பர் ஜெர்மனியில் மொழி பெயர்த்துள்ளார். பெரியார் ஈ.வெ.ராமசாமி வாழ்க்கைச் சுருக்கம் (Periyar E.V.Ramasamy – Eine Kurzbiographie) நூலினை கொலோன் பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சியாளர் ஸ்வென் வொர்ட்மேன் ஜெர்மனியில் மொழிபெயர்த்துள்ளார். இந்த இரண்டு ஜெர்மனி மொழியாக்கங்களை பேராசிரியர் முனைவர் உல்ரிக் நிக்லஸ் வெளியிட, முதல் நூலினை ஸ்வீடன் பல்கலைக் கழகப் பேராசிரியர் உப்சல் மற்றும் கொலோன் பல்கலைக் கழகப் பேராசிரியர் முனைவர் ஸல்க் பெற்றுக் கொண்டனர். பேராசிரியர் அ. அய்யாசாமி எழுதிய பெரியார் சுயமரியாதை (Periyar Self-Respect-) எனும் ஆங்கில நூலினை பெரியார்  மணியம்மை பல்கலைக் கழக வேந்தர் தமிழர் தலைவர் கி. வீரமணி வெளியிட, முதல் நூலினை ஜெர்மனியில் சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்ட ஆராய்ச்சி மாணவர்கள் ராகுலன் – ஒலிவியா ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

“பெரியார் நினைவிடம்: கல்வெட்டுப் பொன்மொழிகள் (Inscriptions at Periyar memorial) (தமிழ், ஆங்கிலம்)  நூல்களை திராவிடர் கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி வெளியிட, பல்கலைக் கழக மாணவர் பாஸ்கல் பெற்றுக் கொண்டார்.

‘ரிவோல்ட்’, ஏட்டில் வெளிவந்த சுயமரியாதை தத்துவம், இயக்கம்பற்றிய கட்டுரைகளின் தொகுப்பான பெரியார் சுயமரியாதை இயக்கம் (Periyar Self-Respect) எனும் ஆங்கில நூலினை தமிழர் தலைவர் வெளியிட, வியட்நாம் நாட்டைச் சார்ந்த கொலோன் பல்கலைக் கழக ஆராய்ச்சி  மாணவர் சினா முதல் நகலினைப் பெற்றுக் கொண்டார். ஜெர்மன் மொழியாக்க நூல்களைப் படைத்த கிளாடியா வெப்பர், ஸ்வென் வொர்ட்மேன் ஆகியோருக்கு தமிழர் தலைவர் கி. வீரமணி சால்வை அணிவித்து சிறப்புச் செய்து பாராட்டினார்.

மாநாட்டு சிறப்புரை

நிறைவாக பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வேந்தர் டாக்டர் கி. வீரமணி மாநாட்டு சிறப்புரையினை ஆற்றினார். சுயமரியாதைத் தத்துவம் பற்றி ஆங்கிலத்தில் அரியதொரு சொற்பொழிவினை வழங்கினார். தந்தை பெரியார் தோற்றுவித்த சுயமரியாதை இயக்கத்தின் சாதனைகள்  ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் வாழும் மக்களுக்குப் பயன்பட்டன. ஆனால், பெரியாரின் சுயமரியாதைத் தத்துவம்  அனைத்து நாட்டினருக்கும், ஒட்டு மொத்த மானிடருக்கும் உரியது. பெரியார் சுயமரியாதைத் தத்துவம், உலகளாவிய தத்துவம் எனக் குறிப்பிட்டுக் கூறி  தமது உரையில் விரிவாக விளக்கிப் பேசினார்.

அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் இதர அய்ரோப்பிய நாடுகளிலிருந்து பேராளர்கள் பலரும் மாநாட்டுக்கு வருகை தந்திருந்தனர். தமிழ்நாட்டிலிருந்து வருகை தந்த பேராளர்களும் மாநாட்டில் பங்கேற்றனர்.

ஆய்வுக் கட்டுரைகள் அரங்கம்

பன்னாட்டு மாநாட்டின் இரண்டாம் நாள் (28.07.2017) நிகழ்வுகளாக, பெரியார் சுயமரியாதைத் தத்துவம் மற்றும் இயக்கம் பற்றிய ஆய்வுக் கட்டுரை அரங்க நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன.

முதல் ஆய்வரங்கின் தலைவரான தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் ஆய்வரங்கக் கட்டுரைகள் பற்றிய செய்திகளுடன் சுயமரியாதை இயக்க வரலாற்றுப் பதிவுகளைப் பற்றிய ஓர் ஆய்வுரையினை தொடக்கத்தில் வழங்கினார்.

பின்னர் சென்னை பல்கலைக் கழகத்தின் வரலாற்றுத் துறைத் தலைவரான பேராசிரியர் முனைவர் எஸ்.எஸ்.சுந்தரம் “சுயமரியாதை : சமூக மற்றும் மனித விடுதலைக்கான சிறந்த தனித்துவக் கருவி ஒரு வரலாற்று ஆய்வு“ எனும் தலைப்பில் தனது ஆய்வுக் கட்டுரை உரையினை வழங்கினார். அடுத்து சுவீடன் நாட்டுப் பல்கலைக் கழகப் பேராசிரியர் டாக்டர் பீட்டர் ஸால்க் சுயமரியாதை எனும் தலைப்பில் பல்வேறு வரலாற்றுப் படைப்புக் குறிப்புகள் உள்ளடக்கிய உரையினை ஆற்றினார். பின்னர் ஜெர்மனி கொலோன் பல்கலைக் கழக டாக்டர் பட்டம் பெற்ற ஆராய்ச்சி மாணவி டாக்டர் சிர்.உன்ரா அரசர் வெளிப்படையாக இருக்கிறார் – பகுத்தறிவு, விமர்சனம் மற்றும் வீரிய அரசியல் செயல்பாடு எனும் தலைப்பில் ஆழமான ஆய்வுரையினை வழங்கினார்.

இரண்டாம் ஆய்வரங்க அமர்விற்கு அமெரிக்கா – பெரியார் பன்னாட்டு மய்யத்தின் இயக்குநர் டாக்டர் சோம. இளங்கோவன் தலைமை வகித்துப் பேசினார்.

கொலோன் பல்கலைக் கழகத்தைச் சார்ந்த ஆராய்ச்சி மாணவரும், மாநாட்டில் வெளியிடப்பட்ட பெரியார் ஈ.வெ.ராமசாமி வாழ்க்கைச் சுருக்கம் நூலின் ஜெர்மன் மொழி பெயர்ப்பாளருமான ஸ்வென் வொர்ட்மன் வரலாற்றுக் காலங்களில் இந்தியாவில் பகுத்தறிவு எனும் தலைப்பில் தமது ஆய்வினை வழங்கினார். கொலோன் பல்கலைக் கழக அரசியல் அறிவியல் துறையின் பேராசிரியர் டாக்டர் உல்ப்காங்க் லைட்டோல்டு அரசியல் அமைப்பு சாசனம் – அய்ரோப்பிய “அரசியல் எண்ணங்கள்“ எனும் தலைப்பில் தாம் வெளியிட உள்ள ஆராய்ச்சி நூலின் சுருக்கத்தினை உரையாக முழங்கினார். அடுத்து புலம் பெயர்ந்த ஈழத் தமிழரும், தமிழீழப்போர் நடைபெற்ற காலங்களில் யாழ்ப்பாணத்தில் இருந்தவருமான டாக்டர் எஸ்.ஜே. இமானுவேல் “சுயமரியாதையும் மானுடமும்” எனும் தலைப்பில் தமது அனுபவங்களை ஆய்வுரையாக அளித்தார். பின்னர் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் பெரியார் சிந்தனை உயராய்வு மய்யத்தின் உதவிப் பேராசிரியர் டாக்டர் த.ஜெயக்குமார் சுயமரியாதைக் கோட்பாடு  பெரியாரின் மனிதநேயப் பார்வை எனும் தலைப்பில் பெரியாரது பொது வாழ்க்கை பற்றிய சுருக்கத்தினை ஆய்வுக் கட்டுரையில் வழங்கினார்.

நண்பகல் உணவு இடைவேளைக்குப் பின்னர் ஆய்வரங்கத்தின் மூன்றாம் அமர்வு தொடங்கியது. அமெரிக்கா – பெரியார்  பன்னாட்டு மய்யத்தின் இயக்குநர் பேராசிரியர் டாக்டர் இலக்குவன் தமிழ் தலைமை உரையாற்றினார். அமெரிக்கா வாழ் மருத்துவர் சரோஜா இளங்கோவன், “பெரியாரும் மகளிர் அதிகாரத்துவமயமும்’’ எனும் தலைப்பில் தமது ஆய்வினை வழங்கினார். அடுத்து பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் திட்டமிடல் மற்றும் வளர்ச்சித்துறை ஆலோசகர்  பேராசிரியர் டாக்டர் எஸ்.தேவதாஸ் “பெரியார் சுயமரியாதை இயக்கம் -சமூக மாற்றத்திற்கான கருவி’’ எனும் தலைப்பில் கட்டுரையினை சமர்ப்பித்து உரையாற்றினார். பின்னர் திராவிடர் கழகத்தின் வெளியுறவுச் செயலாளர் வீ.குமரேசன், “நாத்திக தத்துவ அறிஞர்கள்: பெரியார் ஈ.வெ.ராமசாமி மற்றும் பிரெட்ரிக் நீட்சே, – ஓர் ஒப்பீட்டு ஆய்வு’’ எனும் தலைப்பில் ஓர் ஆய்வினை உரையாக அளித்தார்.

நிறைவாக கழகத்தின் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி வரலாற்றுக் குறிப்புகளுடன் தமது தலைமை உரையினை உணர்ச்சிப் பெருக்குடன் வழங்கினார். நிகழ்ச்சியினை பெரியார் பன்னாட்டு மய்யத்தின் இயக்குநர் டாக்டர் சோம. இளங்கோவன் தொகுத்தளித்தார்.

29.07.2017 அன்று பெரியார் சுயமரியாதை இயக்க பன்னாட்டு மாநாட்டின் 3ஆம் நாள் நிகழ்வு நடைபெற்றது. நேற்றைய தினம் 3 அமர்வுகளில் ஆய்வுக் கட்டுரைகள் அரங்கம் நடைபெற்றது. இன்றும் தொடர்ந்து 4ஆவது அமர்வாக ஆய்வுக் கட்டுரைகள் அரங்க நிகழ்வு நடைபெற்றது. இந்த அமர்வுக்கு ஜெர்மனி கொலோன் பல்கலைக்கழகப் பேராசிரியர் டாக்டர் உல்ரிக் நிக்லஸ் தலைமையேற்று வழிநடத்தினார்.

பெரியார் சுயமரியாதை இந்திய வரலாற்றில் ஓர் எழுச்சிமிகு தாக்கம் என்னும் பொருளில் திராவிடர் கழகத்தின் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி தமது ஆய்வுரையினை வழங்கினார். அடுத்து, தென்னிந்தியாவில் சுயமரியாதை இயக்கத்தின் தாக்கம் என்னும் தலைப்பில் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக டாக்டர் பட்ட ஆராய்ச்சி மாணவர் எம்.விஜயானந்த் உரையாற்றினார். பகுத்தறிவாளர் கழகத்தின் துணைத்தலைவர் கோ.ஒளிவண்ணன் சமூகநீதி என்னும் தலைப்பில் தமது ஆய்வுக் கட்டுரையினை அளித்தார்.

இளைஞர்களுக்கான கட்டுரைப் போட்டி

இம்மாநாட்டின் சிறப்பம்சமாக 32 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கான பன்னாட்டு கட்டுரைப் போட்டியினை அமெரிக்கா _ பெரியார் பன்னாட்டு மய்யம் நடத்தியது.

வரப்பெற்ற கட்டுரைகளை அலசி ஆய்வு செய்து பரிசுக்குரியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

தீர்மானம் நிறைவேற்றம்

தீர்மானம்: தந்தை பெரியாரின் சிந்தனைகளான சுயமரியாதை _ மனிதநேய வாழ்க்கை முறை பரந்துபட்ட, உலகளாவிய அளவில் உணரப்பட்டு வருகிறது. இந்தச் சூழலில் சுயமரியாதையுடன் எல்லா வகையிலும் சமத்துவம் மிக்க வாழ்க்கை முறையினை வலியுறுத்தும் தந்தை பெரியாரின் மானுட நேயத்துடன் கூடிய சுயமரியாதை பகுத்தறிவுத் தத்துவத்தை உலகமயமாக்குவது என பெரியார் சுயமரியாதை பன்னாட்டு மாநாடு தீர்மானிக்கிறது.

இந்தத் தீர்மானத்தினை நடைமுறைப்படுத்த உலகின் அனைத்துப் பகுதிகளிலும் ஈராண்டுக்கு ஒருமுறை இத்தகைய பன்னாட்டு மாநாட்டை நடத்துவது என ஒருமனதாகத் தீர்மானித்தது.

இத்தீர்மானத்தை டாக்டர் சோம.இளங்கோவன் அவர்கள் முன்மொழிய, வருகை தந்திருந்த பேராளர்கள் நீண்ட கரவொலி எழுப்பி வழிமொழிந்தனர்.

சமூக நீதிக்கான கி.வீரமணி விருது வழங்கும் விழா

டாக்டர் சோம.இளங்கோவன் அவர்கள் லண்டன் கிராய்டன் மாநகராட்சித் துணை மேயர் வணக்கத்திற்குரிய மைக்கேல் செல்வநாயகம் அவர்களுக்கு, சமூகநீதிக்கான கி.வீரமணி விருதினை வழங்கினார்.

விருதுக்கான பட்டயத்துடன் விருதுத் தொகையான ரூபாய் 1 லட்சமும் வழங்கப்பட்டது. தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சால்வை அணிவித்துப் பாராட்டினார். திருமதி மோகனா வீரமணி அவர்கள் நினைவுப் பரிசு ஒன்றை மைக்கேல் செல்வநாயகத்துக்கு வழங்கினார்.

16.9.2018 அமெரிக்காவில் தந்தை பெரியார் 140 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாக்கள்:

வாசிங்டன்: அமெரிக்க தலைநகர் வாசிங்டனில் மேரிலாண்டில் பேராசிரியர் அரசு செல்லையா தலைமையில் நடைபெற்றது.

டாக்டர் சஞ்சீவ், சிறீராம், பேராசிரியர் யூரேமுன்,  பேராசிரியர் கேன்னேத்மார் செலக், காவியாகுமாரன், வடஅமெரிக்க தமிழ்ச் சங்கத் தலைவர் சுந்தர் குப்புசாமி, வாசிங்டன் தமிழ்ச் சங்கத் தலைவர் நாஞ்சில் பீட்டர், வாசிங்டன் தமிழ்ச் சங்க முன்னாள் தலைவர்கள் சிவா, கல்பனா, பேராசிரியை மீனா செல்லையா ஆகியோர் முன்னிலை வகித்த விழாவில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரன் சிறப்புரையாற்றினார்.

கலிபோர்னியா:  தந்தை பெரியாரின் பிறந்தநாளை கூப்பேர்டினோ நகரில் அம்பேத்கர் – கிங் படிப்பு வட்டம், அசோசியேசன் ஃபார் இந்தியா டெவலப்மென்ட்  பே ஏரியா,  சான் ஜேரிஸ் அமைதி மற்றும் நீதி மய்யம், அம்பேத்கர் அசோசியேசன் ஆஃப் நார்த் அமெரிக்கா, கபிலர்  பாரி நட்பு படிப்பு வட்டம், அம்பேத்கர் இன்டர்நேசனல் சென்டர், அமெரிக்கத் தமிழ் வானொலி மற்றும் அம்பேத்கர் இன்டர்நேசனல் மிஷன் ஆகிய அமைப்புகள் கூட்டாகச் சேர்ந்து கருத்தரங்கு, கேள்வி – பதில், இந்திய எழுத்தாளர் வ.கீதா (காணொளி வழியாக), முனைவர் மா.சோ.விக்டர், உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றத்தின்  (INFITT) நிறுவன உறுப்பினர் எம்.மணிவண்ணன் ஆகியோரின் உரைகள் என  சிறப்பாகக் கொண்டாடியது.

நியூ ஜெர்சி: நியூ ஜெர்சி பெரியார், அம்பேத்கர் படிப்பு வட்டத்தின் சார்பில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க சிறப்புடன் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. தோழர் ஆசிப், பேராசிரியர் செல்லையா உள்ளிட்டோரின் உரைவீச்சு, பறை இசை, அண்ணாவின் சிவாஜி கண்ட இந்து இராஜ்யம் சுருக்கமான நாடகம், பெரியார் பிஞ்சுகள் தலைவர் வேடத்தில் அணிவகுப்பு, ஓவியப்போட்டி என நிகழ்ச்சிகள் சிறப்புடன் நடந்தேறின.

டெலவர்: தமிழ் நண்பர்கள் இணைந்து தந்தை பெரியார்  அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழாவினை தந்தை பெரியாரின் உருவப்படத்தை மய்யப்படுத்தி ஓவியப் போட்டி, பேச்சுப் போட்டி பறையிசை,  கும்மி, கருத்தரங்கம், பெண் ஏன் அடிமையானாள்? நூல் வழங்கல் என நிகழ்ச்சிகள் நடந்தேறின.

பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்ட ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் கனிமொழி ‘தமிழகத்தின் விடிவெள்ளி பெரியார்’ எனும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். இரமா ஆறுமுகம் மற்றும் ஜெசிபிரியா இணைப்புரையும், ஒருங்கிணைப்பாளர் துரைக்கண்ணன் அவர்கள் நன்றியுரையும் ஆற்றினர்.

டெட்ராய்ட் : பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்ட ஒருங்கிணைப்பாளர் கா.பிரபாகரன் தலைமையில் வினோத் சந்தர் வரவேற்புரையுடன் தொடங்கியது. எழில், தீனாபிரேம், அன்புச்செழியன் ஆகியோர் முன்னிலையில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரன் சிறப்புரை ஆற்றினார்.

சிங்கப்பூர்: சிங்கப்பூர் சமூக சேவை மன்றம் சார்பில் ஸ்ரீ நாராயணகுரு மிஷன் முதியோர் இல்லத்தில் காலை உணவும், மளிகைப் பொருள்களும் வழங்கி தந்தை பெரியார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

குவைத்: 17.9.2018 அன்று தந்தை பெரியார் நூலகத்தில் தோழர்கள் புத்தாடை அணிந்து தந்தை பெரியார் 140  ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவினை உறுதி மொழி ஏற்றும், கேக் வெட்டியும் கொண்டாடி மகிழ்ந்தனர். தூத்துக்குடி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் சு.காசி அவர்கள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று உரையாற்றினார்.

மஸ்கட்: மஸ்கட் நண்பர்கள் குழு சார்பில் பெரியார், அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

மலேசியா: கோலாலம்பூர்: மலேசிய தேசியத் தலைவர் ச.த.அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற விழாவில் தமிழ் மலர் நாளிதழின் ஆசிரியர் டத்தோ எம்.ராஜன் சிறப்புரையாற்றினார்.  பள்ளி மாணவர்களுக்கு கவிதை, பேச்சுப்போட்டி நடைபெற்றன.

காப்பார், புக்கிட்பெருந்தோங், கிள்ளான் நகரங்களிலும் பள்ளி மாணவர்கள் பங்கேற்க சிறப்புடன் கொண்டாடப்பட்டது.

கருநாடகா : கருநாடக மாநில திராவிடர் கழகத்தின் சார்பில் பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் திருவள்ளுவர் பேரரங்கில்  தந்தை பெரியார் பிறந்த நாள் விழாக் கூட்டம் நடைபெற்றது. கழக, தி.மு.க, தமிழ்ச்  சங்கப் பொறுப்பாளர்கள் மற்றும் தமிழர்கள் பெருமளவில் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் ம.தி.மு.க அமைப்புச் செயலாளர்           ஆ.வந்தியத்தேவன் மற்றும் திராவிடர் கழகப் பேச்சாளர் தஞ்சை பெரியார்செல்வன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

உத்தரப் பிரதேசம் : அலகாபாத் உயர்நீதிமன்ற வளாகத்தில் தந்தை பெரியார், பகுத்தறிவாளர் ராம் ஸ்வரூப் வர்மா ஆகியோரின் பிறந்த நாள் விழா சோஷித் சமாஜ் தள் என்னும் அமைப்பின் சார்பில் கொண்டாடப்பட்டது. பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் சிறுபான்மை அமைப்புகளைச் சேர்ந்த பிரமுகர்கள், கல்வியாளர்கள் மற்றும் வழக்குரைஞர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தெலங்கானா, ஆந்திர பிரதேசம், கரீம் நகர், வாராங்கல், உஸ்மானியா பல்கலைக்கழகம், வேமண்ணா பல்கலைக் கழகம்,பெல்லம்பள்ளி  ஆகிய இடங்களில் நாத்திக மக்கள் சங்கம் பெரியார் பிறந்த நாள் விழாக்களை மாணவர்கள் பெருமளவில் பங்கேற்க   கொண்டாடியது.

புதுடில்லி பெரியார் மய்யம், குஜராத் மத்திய பல்கலைக் கழகம் அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு,  டில்லி டி.சி.ஏ.சி கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள், பீகார் தலைநகர் பாட்னாவில் எஸ்.இ.டபிள்யூ.ஏ அமைப்பு, தெலங்கானா அய்தராபாத்தில் அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் அமைப்பு, மும்பை திராவிடர் கழகம் ஆகிய அமைப்புகளின் சார்பில் தந்தை பெரியார் படத்திற்கு மாலை அணிவித்தும், கருத்துரை ஆற்றியும் கொண்டாடினர்.

இவ்வாண்டு அமெரிக்காவில் (21,22 செப்டம்பர், 2019) நடைபெறவுள்ள மனிதநேயம் மற்றும் சுயமரியாதை  மாநாடு, நிகழ்வுகள்

செப்டம்பர் 21, 2019, முதல் நாள் நிகழ்வு

வரவேற்புரை: டாக்டர் சோம.இளங்கோவன்

பங்கேற்போர் அறிமுகம்: ராய் ஸ்பெக்கார்ட்

பங்கேற்போர்; பிலிப் மோலர்_ மதமில்லாச் சிறப்பு

டோனி வான் பெல்ட்_மனிதயநேய நோக்கில் பெண்ணியம்

பிரடு எட்வோர்ட்ஸ்_மனச் சுதந்திரத்துடன் மகிழ்வான வாழ்வு,

பெரியார்_அம்பேத்கர் வாசகர் வட்டத்தில் அமெரிக்கா_ மனிதநேயமும் சுயமரியாதையும்,

சிறுவர் மற்றும் இளைஞர் நிகழ்வுகள்

டாக்டர் உல்ரிக் நிக்லஸ்_உலகளாவிய மனிதநேயம்,

டாக்டா மாத்வி பொட்லூரி_ஜாதிமுறையும் மரபணு சோதனையும்,

நார்ம் ஆர்.ஆலன் ஜூனியர்_விளிம்பு நிலையினர்க்கான சமூகநீதி,

டாக்டர் கேரி பெர்க்_கிராஸ், பிரடு எட்வோர்ட்ஸ் _ வாழ்க்கைச் சிக்கல்களும் மனிதநேயத் தீர்வுகளும்

டாக்டர் ஆர்.பிரபாகரன்_திருக்குறளில் மனிதநேயம்

விருது வழங்கல்

இசை மற்றும் கலைநிகழ்வு யுடியூப் காட்சிகள்

செப்டம்பர் 22, 2019 இரண்டாம் நாள் நிகழ்ச்சி நிரல்

அறிமுகம்: அரசு செல்லையா

அறிமுகவுரை: டாக்டர் கி.வீரமணி_சுயமரியாதையுடன் கூடிய மனிதநேயம்.

பேரா.ஜியார்ஜ் எல்.ஹார்ட்_தொன்மைத் தமிழரிடம் மனிதநேயம்.

டாக்டர் கண்ணபிரான் ரவிசங்கர்_மனித நேயமும் திராவிடர் கழகமும்

ப.திருமாவேலன்_மனிதநேயமும் பெரியாரும்

டாக்டர் ஸ்வென் வோர்ட்மேன்_மனிதநேய வளர்ச்சி

தமிழகத்தில் மனிதநேயமும் சுயமரியாதையும்

குழு நடவடிக்கை: ப.திருமாவேலன் மற்றும் நாஞ்சில் பீட்டர் குழு

டாக்டர் தொல்.திருமாவளவன்: மனிதநேயமும் சமூகநீதியும்

குழு நடவடிக்கை: டாக்டர் கி.வீரமணி மற்றும் விருந்தினர்கள்

மனிதநேயத்தைச் செயற்படுத்தல்

மனிதநேயச் சமுதாயத்தை அமைத்தல்.

பொழிவு: ரையான் பெல்_மனிதநேயக் கொள்கையில் இளைஞர்களை பங்குகொள்ளச் செய்வதெப்படி?

நிறைவுரை: டாக்டர் சோம.இளங்கோவன், மற்றும் ராய் ஸ்பெக்கார்ட்.

இந்த மாநாடு உலக அளவில் மனிதநேய அடிப்படையில் உலக சமத்துவத்தை நிலைநாட்டுவதற்கான முயற்சிகளை முன்னெடுக்கவுள்ளது.

அமெரிக்காவில் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் பங்கொள்ளும் நிகழ்வுகள்:

மேற்கண்ட மாநாடு முடிந்த பின்னர் தமிழர் தலைவர் பங்குகொள்ளும் நிகழ்வுகள் அமெரிக்காவின் மூன்று மாநிலங்களில் நடைபெறவுள்ளன. அமெரிக்காவில் ஒரு கோடியிலிருந்து, மறுகோடி வரை சென்று பெரியார் கொள்கை பற்றி பரப்புரை செய்யும் வகையால் இந்த மூன்று நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன என்பது சிறப்பிற்குரியது.

பங்கேற்கும் அறிஞர் பெருமக்கள்

 

கி.வீரமணி

 

பேரா.டாக்டர் ஜார்ஜ்

எல் ஹார்ட்

 ஜாமி ரஸ்கின்

பிலிப் மோலர்

உல்ரிக் நிக்லஸ்

ரையான் பெல்

டெப்பீ ஆலன்

டாக்டர் கண்ணபிரான் ரவிசங்கர்

டோனி வான் பெல்ட்

 ப.திருமாவேலன்

டாக்டர் ஸ்வேன் வோர்ட்மேன்

டாக்டர்  ஆர்.பிரபாகரன்

ராய் ஸ்பெக்கார்ட்

 டாக்டர்

சோம.இளங்கோவன்

பாஸ்டன்: முதல் நிகழ்வாக 28.09.2019 அன்று பாஸ்டன் நகரில் தமிழர் தலைவரின் சிறப்புரையுடன் கூடிய பெரியார் பிறந்த நாள் விழா நடைபெறவுள்ளது.

சிகாகோ: இரண்டாம் நிகழ்வு பெரியாரின் பிறந்த நாள் கொண்டாட்டமாகவும் கொள்கைப் பிரச்சாரமாகவும் 06.10.2019 அன்று சிகாகோவில் நடைபெறவுள்ளது. தமிழர் தலைவர் தந்தை பெரியாரின் கொள்கைகளை விளக்கி சிறப்புரையாற்றவுள்ளார்கள்.

சான்பிரான்ஸ்கோ (ஃபிரிமாண்ட்)

12.10.2019 அன்று ஃபிரிமாண்டில் தந்தை பெரியாரின் பிறந்தநாள் விழாவில் தமிழர் தலைவர் அவர்கள் தந்தை பெரியாரின் சிறப்புகள் பற்றியும் உலகம் உள்வாங்கும் தந்தை பெரியாரின் கொள்கைகள் பற்றியும் உரையாற்றவுள்ளார்கள்.

உலகமே கொண்டாடும் பெரியாரின் 141 ஆம் பிறந்தநாள்

இந்தியாவில்: கடந்த ஆண்டுகளைவிட இந்தியாவில் பெரியாரின் பிறந்தநாள் கொண்டாட்டாங்கள் பன்மடங்கு கூடுதலாகக் கொண்டாடப்படவுள்ளன. சனாதன, பாசிச, ஆர்.எஸ்.எஸ். ஆல் இயக்கப்படும் பி.ஜே.பி. அதிகப்பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சி  அமைத்து, அவர்களுடைய ஒற்றைக் கலாச்சாரத்தைத் திணிப்பதன் விளைவாய், இந்தியா முழுவதும் பெரியாரின் தேவை அதிகம் உணரப்பட்டு, பெரியாரின் பெருமை அதிகம் பேசப்படும் நிலை உருவாகியுள்ளது. இதனால், இந்தியா முழுவதும் பெரியாரின் கொள்கைகளைப் பரப்பும் விழாவாக பெரியார் 141 ஆம் பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது.

உலகம் முழுவதும்: கடந்த சில ஆண்டுகளாக உலகம் முழுவதும் பெரியார் சிந்தனை பரப்பும் விழாக்கள் நடந்து வரும் நிலையில், இந்த ஆண்டு மேலும், பன்மடங்கு பெருகி பெருமளவில் கொண்டாடப்படும் நிலை உருவாகியுள்ளது. அது சார்ந்த செய்திகள் உலகில் பல்வேறு இடங்களிலிருந்து வந்த வண்ணம் உள்ளன. “இது பெரியாரை உலகம் உள்வாங்குகிறது; பெரியார் உலகை உள்வாங்குகிறார்’’ என்று தமிழர் தலைவர் கூறியதை உறுதிப்படுத்துகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *