மானமிகு ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம். “செம்மொழித் தமிழே உலகின் தொன்மொழி’’ என்று, படிக்கத் தூண்டும் அட்டைப் படத்தோடு கூடிய உண்மை (ஆகஸ்ட் 16_31, 2019) இதழ் படித்தேன்.
ஆக்டோபஸ் கரங்களைப் போல, பல முனைகளிலிருந்தும் கொடிய ஆர்.எஸ்.எஸ்.சின் கரங்கள், தமிழ்ச் சமுதாயத்தையே அழிக்க நெருங்கும் ஆபத்தை, இளைஞர்களுக்கு விளக்கி எச்சரிக்கை செய்திருக்கும் தங்களின் தலையங்கம் எதிரிகளின் ஆணவக் கோட்டைகளை, சூழ்ச்சி அரண்களைத் தகர்த்தெறியும், ஏவுகணை! இளைஞர்களின் விழிப்புணர்வுக்கோர் தூண்டுகோல்!!
ஜாதியை வளர்த்து, மக்களை சுரண்டிப் பிழைக்க எண்ணுவோரின் இழிநிலையை தோலுரித்துக் காட்டும் அய்யாவின் கட்டுரை, (7.8.1950)இல் எழுதியது இன்றைக்கும் பொருந்துவதாகவே உள்ளது! ஆம்! என்றும் தேவை தந்தை பெரியார்!!
‘அர்த்தமுள்ள இந்துமதம்’ எழுதிய கண்ணதாசனுக்கு, வரிக்குவரி பதிலடி கொடுக்கும் வகையில், ‘அர்த்தமற்ற இந்துமதம்’ எழுதி, இளைஞர்களின் இதயம் கவர்ந்த எழுத்தாளர் மஞ்சை வசந்தனின், ‘செம்மொழி பற்றிய ஆய்வுக் கட்டுரை, இந்தி, சமஸ்கிருத மொழிகளைத் திணித்து தமிழ் மொழியை அழிக்க எண்ணும் ஆரியர்களின், வஞ்சகத்தை அப்படியே படம் பிடித்துக் காட்டுகிறது. செல்லாக்காசான, இந்தியை, சமஸ்கிருதத்தை செல்லுபடியாக்கச் செய்யும் மோசடியை, இனியும், செம்மொழித் தமிழர்கள் பொறுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டுதான் இந்த ஆய்வுக் கட்டுரை.
தமிழிலிருந்த சொற்களைத் திருடுவது, பிறகு தமிழ் மூலநூல்களை, நெருப்புக்கும் நீருக்கும் இரையாக்குவது, அதன் பிறகு, வடமொழியிலிருந்துதான், தமிழ், சொற்களைக் கடன் வாங்கியது என கதை கட்டுவது, இப்படிப்பட்ட இழிபண்புகளே ஆரியர்களின் இலக்கணமாக இருந்திருக்கிறது என்பதை _ பல வரலாற்றாசிரியர்கள் கூறியிருப்பதை _ ஏரி நீரை ஒரு குடத்திற்குள் அடக்குவதைப் போல மஞ்சை வசந்தன் சுருங்கச் சொல்லி விளங்க வைத்துள்ளார். தமிழர் ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய பயனுள்ள ஆய்வுக் கட்டுரை!
தங்களின் தன் வரலாறான ‘அய்யாவின் அடிச்சுவட்டில்…’(232) என்னும் வரலாறு இளைய சமுதாயத்தின் எழுச்சிக்கு வித்து! தொடர் பயண கொள்கைப் பரப்புரை வியக்க வைக்கிறது! இன்றும் தொடர்வது வியப்பின் உச்சியே!
‘தாழ்வு மனப்பான்மை’ மனிதனை அழிக்கும் என்பதை ஆண்டன் செக்காவின் ‘சிறுகதை’ நன்கு விளக்குகிறது. புலவர் நன்னனின் ‘அகமும் புறமும்’, மாணவர்களே எத்தகைய கொள்கைப் பற்றோடு இருந்திருக்கிறார்கள் என்பதற்கோர் எடுத்துக்காட்டு. இந்தி எதிர்ப்பும், ஜல்லிக்கட்டும் வெற்றி பெற்றதற்கு இளைஞர்களின் எழுச்சியே காரணம்! அத்திவரதரின் தரிசனம் எத்தகைய மோசடி என்பதை, ஈரோடு அறிவுக்கன்பன் வரலாற்றுக் குறிப்புகளோடு தந்திருப்பது அருமை!
ஆழ்ந்த கருத்துகளை, குறள்போல் வெளிப்படுத்தும் ‘கேள்வி_பதில்’ இதழுக்கே சிறப்பு சேர்க்கிறது. மற்றும் அறிவியல் விளக்கங்களும், வாழ்வியல் அறிவுரைகளும், முகநூலில் வரும் கருத்தைக் கிளறும் செய்திகளும், ‘உண்மை’ இதழ் ஒரு ‘கருத்துக் களஞ்சியம்’ என்பதை உறுதிப்படுத்துகிறது! வெல்க உண்மையின் சீரிய அறிவுக் கிளர்ச்சி!!
– நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்